பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

சீமராஜா - சினிமா விமர்சனம்

சீமராஜா - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சீமராஜா - சினிமா விமர்சனம்

சீமராஜா - சினிமா விமர்சனம்

தை..? நீங்கள் ரஜினி படங்களை ஓரளவுக்கு ரெகுலராகப் பார்ப்பவரா? அப்படியென்றால் ‘சீமராஜா’ கதை கேட்கத் தேவையில்லை.

சீமராஜா - சினிமா விமர்சனம்

ஒருகாலத்தில் ஆள் அம்பு சேனைகளோடு கோலோச்சிய சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் வாரிசு நெப்போலியன். அவர் மகன் சிவகார்த்திகேயன் வேலைவெட்டி பார்க்காமல், சமந்தாவைக் காதலிக்கிறார். விண்ட் மில் வைத்து வில்லத்தனம் செய்யும் லால் - சிம்ரன் தம்பதி, அப்பாவி விவசாயிகளின் நிலங்களை அபகரிக்கப் பார்க்க, அதை சீமராஜா தடுத்து சமந்தாவை எப்படிக் கைப்பிடிக்கிறார் என்பதே கதை.

சீமராஜா - கடம்பவேல் ராஜா என இரட்டை வேடங்களில் சிவகார்த்திகேயன். சமகால ராஜாவோடு ஒப்பிடும்போது சரித்திர ராஜா ‘பரவாயில்லை’ ரகம்.  வழக்கமாக சூரி எந்தப் படத்தில் சொதப்பினாலும் சிவகார்த்திகேயனோடு சேரும்போது பட்டையைக் கிளப்புவார். ஆனால் இந்தமுறை ஏகப்பட்ட சொதப்பல். அதிலும் மூன்று மனைவிகள்,  ‘நல்லாசிரியர்’ காமெடி ஆகியவை ரசனைக்குறைவை மட்டுமல்ல, கற்பனைப் பஞ்சத்தையும் காட்டுகிறது. ‘நல்லாசிரியர் விருது’ என்பது அரசால் வழங்கப்படுவதே தவிர, பள்ளி ஆண்டுவிழாவில் வழங்கப்படுவதில்லை என்ற சின்னத் தகவல்கூட சீமராஜா பரிவாரங்களுக்குத் தெரியாமற்போனது சோகம்.

சீமராஜா - சினிமா விமர்சனம்பக்கத்து ஊர் சிங்கம்பட்டி சீமராஜா யாரென்றே தெரியாத சிலம்ப ஆசிரியையாக சமந்தா. க்ளைமாக்ஸ் காட்சியைத் தவிர வேறெங்கும் சிலம்பத்துக்கும் வேலையில்லை, சமந்தாவுக்கும் வேலையில்லை. நெப்போலியன் மற்றும் கீர்த்திசுரேஷ் காட்சிகள் மனதை ஈர்க்கவில்லை. லால், தமிழ் சினிமாவின் வழக்கமான வில்லன். காதுகளைப் பஞ்சர் ஆக்கும் சிம்ரன்... சவுண்டு சைரன். ‘தொட்டித் தாத்தா’ பாத்திரத்தை அறிமுகப் படுத்தும்போது, ‘ஏதோ புதுமை’ என்று நினைத்தால், ஃப்ளாஷ்பேக் சொல்லிவிட்டு, தாத்தா தொட்டிக்குள் சுருங்கிக்கொள்கிறார்.

எல்லோரும் படத்துக்குத்தான் பார்ட் 2, பார்ட் 3 எடுப்பார்கள். ஆனால் இமானோ சிலபல ட்யூன்களுக்கே பல பார்ட்டுகள் கொடுத்து ‘சரித்திரம்’ படைக்கிறார். பாலசுப்ரமணியெம்மின் ஒளிப்பதிவு கண்களுக்கு இதமாக வண்ணங்களை எல்லாக் காட்சிகளிலும் அள்ளித் தெளித்திருக்கிறது. 

சீமராஜா - சினிமா விமர்சனம்

ராஜ வம்சத்தில் நடக்கும் இறப்புச் சடங்குகள், ஃப்ளாஷ்பேக் காட்சிகளின் பிரமாண்டம் ஆகியவை மட்டுமே ஓரளவுக்கு ஈர்க்கின்றன.

மன்னராட்சி ஒழிந்துவிட்டது; ஜமீன்தாரி முறையும் ஒழிந்துவிட்டது; பழைய கதை, பழைய காட்சி, பழைய நகைச்சுவை, பழைய இசை என்று பாடாய்ப்படுத்தும் கொடுமை எப்போது ஒழியுமோ?

- விகடன் விமர்சனக் குழு