
UTURN - சினிமா விமர்சனம்
ஆங்கில நாளிதழில் பயிற்சிப் பத்திரிகையாளர் சமந்தா. வேளச்சேரிப் பாலம் பற்றிய ஒரு உப்புச்சப்பில்லாத அசைன்மென்ட்டைக் கையில் எடுக்கிறார். அது அவரையே குற்றவாளியாக்கிக் கைது வரை கொண்டு செல்ல... அவர் சந்திக்கும் பிரச்னைகளும், அடுத்தடுத்து நடக்கும் திக் திகில் சம்பவங்களும்தான் யூடர்ன்!

காம்பஸால் வட்டம் போட்டதுபோல மொத்தக் கதையும் சமந்தாவைச் சுற்றியே நகர்கிறது. ஆரம்பக்காட்சிகளில் குறும்பு கொப்பளிக்க... பின் பயத்தில் நடுங்க... தைரியம் காட்ட... பதறி அழ... என ஒட்டுமொத்தப் படத்தையும் சமந்தாவே தோள்களில் சுமக்கிறார்.
எந்தப்பக்கம் தொட்டாலும் குழப்புகிற வழக்கை மனம் தளராமல் விசாரிக்கும் துடிப்பான போலீஸாக ஆதி ஃபிட்டான தேர்வு. பரபர விசாரணைக்கு நடுவில் இயல்பாக மலரும் சமந்தாவுக்கும் ஆதிக்குமான நட்பு `அட!’

பூமிகா, ஆடுகளம் நரேன் ஆகியோர் அதிக காட்சிகளில் வராவிட்டாலும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். சமந்தாவுக்கு ஜோடியாக வரும் ராகுல் ரவீந்திரனின் செயற்கையான நடிப்பும், கவின் பாலாவின் ஏனோதானோ வசனங்களும் படத்தின் பலவீன ஏரியா.
தலைகீழ் கேமராக்காட்சிகள்... காவல்நிலையம், ரகசிய விசாரணை அறை, அப்பார்ட்மென்ட் மற்றும் சம்பந்தப்பட்ட அந்தப் பாலத்தின் இரவுக் காட்சிகள் போன்றவற்றில் த்ரில்லருக்கு ஏற்ற கோணங்களிலும் ஒளியமைப்பிலும் நம்மை பயமுறுத்துகிறது நிக்கத் பொம்மிரெட்டியின் கேமரா. அதற்கு செமையாய் ஒத்துழைத்திருக்கிறது சுரேஷ் ஆறுமுகத்தின் நேர்த்தியான எடிட்டிங். பாடல் இல்லாத படமென்றாலும் பின்னணியில் திகில் கூட்ட மெனக்கெட்டிருக்கிறது பூர்ண சந்திர தேஜஸ்வியின் `திரில்’ இசை!
படத்தின் பலமே நிற்கவோ யோசிக்கவோ அவகாசம் கொடுக்காமல் விறுவிறுவென ஓடும் திரைக்கதைதான். அடுத்தடுத்த திருப்பங்களோடு நகரும் படம் டக்கென ஓரிடத்தில் U turn போட்டு ஜானர் மாறி நம்மை ஜில்லிட வைக்கிறது. ஆனால் நீண்டுகொண்டே போகும் அந்த ‘வேற ஜானர்’ எபிசோடே சலிப்பையும் ஏற்படுத்துகிறது!

வேளச்சேரி J 7 போலீஸ் ஸ்டேஷன்... முதன்மைக் கதாபாத்திரங்களின் வாயசைவு போன்றவை தமிழில் இருந்தாலும், துணை நடிகர்களின் உடல்மொழியும் வாயசைவும் `பைலிங்குவல்’ என்பதையெல்லாம் தாண்டி `டப்பிங்’ படம் பார்த்த உணர்வைத் தருகின்றன.
நம் சின்னச் சின்னத் தவறுகள்கூட பிறருடைய வாழ்வில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைச் சொன்னவிதத்தில் இந்த `U turn’ நல்ல பாடம்!
- விகடன் விமர்சனக் குழு