Published:Updated:

``பரதம், ஜிம்னாஸ்டிக், குவாண்டோ, சிலம்பம்... பக்கா மெட்டீரியல்!" - பிரசாந்த் - தியாகராஜன்

``பரதம், ஜிம்னாஸ்டிக், குவாண்டோ, சிலம்பம்... பக்கா மெட்டீரியல்!" - பிரசாந்த் - தியாகராஜன்
``பரதம், ஜிம்னாஸ்டிக், குவாண்டோ, சிலம்பம்... பக்கா மெட்டீரியல்!" - பிரசாந்த் - தியாகராஜன்

ரிலீஸுக்கு ரெடியாக இருக்கும் `ஜானி' படம் குறித்த சுவாரஸ்யங்கள், பாலிவுட்டில் உருவாகவிருக்கும் அடுத்த படம்...  எனப் பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள், பிரசாந்த் - தியாகராஜன்.

``பிரசாந்த்தை டாக்டர் ஆக்கணும்னு ஆசைப்பட்டோம். ஆனா, நடிகர் ஆக்கிட்டோம். இவர் ஆசைப்பட்டு நடிக்க வந்த பிறகு, நான் நடிக்கிறதை நிறுத்திக்கிட்டேன். ஏன்னா, என் நிழல்ல இவர் வளர்ந்தார்னு யாரும் சொல்லிடக் கூடாது. ஆனா, பையனோட வளர்ச்சிக்கு என்னால முடிஞ்சதைச் செய்றேன். இப்போவும் இவருக்காகப் படங்களைத் தயாரிக்கிறேன், இயக்குறேன். வெற்றி, தோல்வியைத் தாண்டி சினிமாவுல இவர் நினைச்சதைப் பண்ணட்டும். ஏன்னா, இது பிரசாந்த் ஆசைப்பட்ட வாழ்க்கை. ஷூட்டிங் முடிஞ்சா பார்ட்டி, ஃபங்ஷன்னு சுத்தாம, கிசுகிசுக்களில் சிக்காம, சினிமாவுல புதுசு புதுசா எதையாவது கத்துக்கிட்டே இருக்கிற என் பையனை நினைச்சா, ஒரு அப்பாவாக எனக்கு சந்தோஷம்!" - மகன் பிரசாந்த் குறித்து இப்படியாக நெகிழ்கிறார், அப்பா தியாகராஜன். `ஜானி' பட ரிலீஸில் பரபரப்பாக இருந்தவர்களை சந்தித்தேன்.

``உன் வாழ்க்கையை நீதான் வடிவமைச்சுக்கணும்; அப்படி வடிவமைச்சுக்கிற வாழ்க்கை எங்களுக்குக் கெட்ட பெயரைக் கொடுத்துடக் கூடாது'னு சொன்னார், அப்பா. கல்லுக்குள் ஈரம்னு சொல்வாங்க... இவருக்கு உடம்பு முழுக்க ஈரம். அன்பான அப்பா. இவரை மாதிரி ஒரு பாசிட்டிவ் ஆளை நான் பார்த்ததே இல்லை!" என மகன் பிரசாந்த், அப்பாவுக்காக வார்த்தைகளை உருக்கியவர், தொடர்ந்தார்.
``ஹீரோவா நிறைய விஷயங்களை முயற்சி பண்ணியிருந்தாலும், `சோஷியல் மீடியாவுல ஒரு ஹீரோவுக்கு அதிக பாசிட்டிவ் கமென்ட்ஸ் இருக்குனா, அது உங்களுக்குத்தான்'னு யாரோ ஒருத்தர் சொன்ன கமென்ட்டைக் கேட்டப்போ, எனக்கு அவ்ளோ சந்தோஷம். பலரும் நான் ஃபேஸ்புக்ல போட்டோ போட்டு கமென்ட் கொடுக்கிறதைக் கலாய்க்கிறாங்க. அது எனக்குக் கவலை இல்லை. நான் எப்படி இருக்கேனோ, அப்படியே ரிஃப்லெக்ட் பண்றேன். அதைப்பத்தி எல்லாம் கவலைப்படாம, பல புது முயற்சிகளைப் பண்ண ஆசை. தவிர, எனக்குக் கத்துக்கிற ஆர்வம் அதிகம். நான் வொர்க் பண்ண இயக்குநர்கள், டெக்னீஷியன்ஸ் எல்லோரும் பெரிய பெரிய ஜாம்பவான்கள்.

பல விஷயங்களை சேர்ந்துதான் பண்ணோம். அதனாலதான், நடிக்க ஆரம்பிச்ச ரெண்டு வருடத்துல `ஐ லவ் யூ'ங்கிற பாலிவுட் படத்துல நடிக்க முடிஞ்சது. பாலு மகேந்திரா சார்கூட `வண்ண வண்ணப் பூக்கள்', மணிரத்னம் சார்கூட `திருடா திருடா', ஷங்கர் சார்கூட `ஜீன்ஸ்' இப்படிப் பல படங்களைச் சொல்லலாம். `ஆணழகன்'ல லேடி கெட்டப்ல நடிக்க சான்ஸ் கிடைச்சது. ஹாரர், காமெடி, வரலாறு... இப்படி எல்லா ஜானர் படங்களையும் பண்ணோம். ஹீரோயினே இல்லாம நடிச்ச `அடைக்கலம்' அப்போ எனக்குப் புது அனுபவம். இதையெல்லாம் ஏன் சொல்றேன்னா... இந்தப் பயணத்துல என் பங்கு மட்டுமே இல்லை. சினிமா 24 கலைகளோட கூட்டு முயற்சி. `நான்தான் இதெல்லாம் பண்ணேன்'னு சொன்னா, அந்த நிமிடம் சினிமாவுல நான் காணாமப்போயிடுவேன்." என்கிறார், பிரசாந்த்.

`` `பார்த்தேன் ரசித்தேன்' படம் பண்ணும்போது, உதவி இயக்குநரா இருந்த ஹரியைப் பத்திச் சொன்னார், `தமிழ்' படத்தைப் பண்ணோம். மணிரத்னம் படத்துல வொர்க் பண்றப்போ, சுசி கணேசனைப் பத்திச் சொன்னார், `விரும்புகிறேன்' பண்ணோம். `வின்னர்' ரிலீஸ் டைம்ல பிரச்னையைச் சந்திச்சப்போ, பண உதவி பண்னேன். இப்படி, இவருக்கு சர்ப்போர்ட் பண்ண எப்போவும் நான் தயங்கியதில்லை." - என்கிறார், தியாகராஜன்.

``வீட்டுல சினிமா குறித்த உரையாடல்கள் எப்படி இருக்கும்?" - இருவருக்குமான கேள்வி இது.

``ஒரு படம் முடிஞ்சா, அடுத்த படத்தைப் பற்றிதான் பேசுவோம். எங்க உரையாடல்ல காஸிப் இருக்காது. படத்தின் வெற்றி, தோல்வி குறித்த விவாதம் இருக்காது. வருத்தமோ, கோபமோ இருக்காது."

`` `பொன்னர் சங்கர்' சமயத்துல கருணாநிதிக்கும் உங்க இருவருக்குமான அனுபவத்தைச் சொல்லுங்க?"

``கலைஞர் கொடுத்த கதைகளில் ஒண்ணு, பொன்னர் சங்கர். அவருக்குப் `பாயும்புலி பண்டாரக வன்னியன்' கதையைப் படமாக்கணும்னு ஆசை. ஆனா, சரித்திரப் படங்களைப் பண்ண பெரும் உழைப்பு தேவை. `பொன்னர் சங்கர்' பண்ணும்போது, 5 வருடம் அதுக்காக உழைச்சோம். இப்போதைக்கு `ஜானி' மாதிரி கமர்ஷியல் படங்களைப் பண்ணவே விரும்புறோம். ஆனா, கலைஞரோட ஆசையை நிறைவேற்ற காலம் வரும். ஏன்னா, கலைஞர் எங்கமேல ரொம்பப் பாசமா இருப்பார். அவருடைய கதை வசனத்துல, பிரசாந்த் நடிச்சிருக்கிறது பெருமை. பரபரப்பான அரசியல்வாதியா வலம் வந்தாலும், `பொன்னர் சங்கர்' ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஆர்வமா வருவார். குழந்தை மாதிரி, `இன்னைக்கு என்னென்ன காட்சிகள் எடுத்தீங்க; காட்டுங்க'னு பார்ப்பார். அவருடைய கற்பனையை நாங்க படமாக்கியதில், அவருக்கு சந்தோஷம். எங்க வீட்டுல நடந்த எல்லா விசேஷத்துக்கும் கலைஞர் இருந்திருக்கார். கலைஞர் ஐயா மட்டுமல்ல... ஜெயலலிதா அம்மாவும், எங்க குடும்பம்மேல பாசமா இருந்தாங்க." என்ற தியாகராஜனிடம், பிரசாந்த் கரியரின் சரிவு குறித்தும் பேசினேன்.

``என்னைப் பொறுத்தவரை பிரசாந்த்துக்குச் சரிவுனு எதுவும் இல்லை. `பொன்னர் சங்கர்', `மம்பட்டியான்' படங்களுக்குப் பிரசாந்த் போட்ட உழைப்பு அதிகம். அந்தச் சமயத்துல வேற படங்கள்ல கமிட் ஆக முடியலை. . தவிர, வருடத்துக்கு இத்தனை படங்கள்ல நடிக்கணும்ங்கிற கட்டாயம் இவருக்கு இல்லை. தவிர,  நான் நினைச்சிருந்தா, தொடர்ந்து பெரிய பெரிய இயக்குநர்களுடைய படங்களில் மட்டுமே பிரசாந்த்தை நடிக்கச் சொல்லி, கமிட் பண்ணிக் கொடுத்திருக்கவும் முடியும். ஆனா, அப்படிப் பண்ண எனக்கு விருப்பம் இல்லை. `ஜானி'க்குப் பிறகு பெரிய இயக்குநர்களோடும் வொர்க் பண்ற சூழல் வரும். பிரசாந்த் பண்ற காமெடி, ஆக்‌ஷன் ரொம்பப் பிடிக்கும். சின்ன வயசுலேயே டேக் குவாண்டோவுல பிளாக் பெல்ட், ஜிம்னாஸ்டிக் கத்துக்கிட்டார். சிலம்பம் தெரியும். பரதநாட்டியம் அரங்கேற்றம் வரைக்கும் பண்ணியிருக்கார். அவர்கிட்ட இருந்து நீங்க எதையும் எதிர்பார்க்கலாம்... அப்படித் தயார்படுத்தி வெச்சிருக்கோம். பப்ளிசிட்டியை விரும்பாத ஹீரோ. ஏன்னா, ஜல்லிக்கட்டு சமயத்திலும் சரி, இப்போ கஜா புயல் சமயத்திலும் சரி... தன்னால முடிஞ்ச உதவியைப் பண்ணார். வீட்டுலேயே இப்படிச் சிங்கம் இருக்கும்போது, இன்னொரு சிங்கத்தைத் தேடிப் படமெடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அதனால, வேற ஒரு ஹீரோவை வெச்சு நான் படமெடுத்து, நேரத்தை வீணாக்க விரும்பலை." என்கிறார், தியாகராஜன்.

``நடிக்கத் தொடங்கிய ரெண்டு வருடத்துல நேரடி பாலிவுட் படத்துல நடிச்சீங்க. மறுபடியும் அப்படி ஒரு வாய்ப்பு அமையலையா?" - இது பிரசாந்த்துக்கான கேள்வி.

``தமிழ்ல அறிமுகம். பிறகு, மலையாளத்துல நடிச்சேன். அப்போதான், பாலிவுட் வாய்ப்பும் வந்தது, தெலுங்கு படத்திலும் நடிச்சேன். ஆனா, என் முழு கவனமும் தமிழ் சினிமாவுலதான் இருந்தது. `ஜானி' ரிலீஸுக்குப் பிறகு, ஒரு நேரடி பாலிவுட் படத்தை நாங்களே தயாரிக்கிறோம். நான் நடிக்கிறேன். அதுக்கான வேலைகள் நடந்துக்கிட்டிருக்கு. தமிழ்ல விஜய் ஆண்டனி நடிச்ச `நான்' படத்தின் ரீமேக் அது." 

நடிகர் பிரசாந்த் பேட்டியை இந்த வீடியோவில் பார்க்கலாம்!
 

அடுத்த கட்டுரைக்கு