Published:Updated:

"ரஜினி சமத்தாவும், சூப்பராவும் ஆடியிருக்கார்!" - 'உல்லாலா' பாபா பாஸ்கர் 

"ரஜினி சமத்தாவும், சூப்பராவும் ஆடியிருக்கார்!" - 'உல்லாலா' பாபா பாஸ்கர் 
"ரஜினி சமத்தாவும், சூப்பராவும் ஆடியிருக்கார்!" - 'உல்லாலா' பாபா பாஸ்கர் 

`பேட்ட' படத்தில் இடம்பெற்ற `உல்லால' பாட்டுக்கு டான்ஸ் கொரியேகிராப் அமைத்திருக்கும் பாபா பாஸ்கர் பாட்டு குறித்த சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

`பேட்ட' படத்தின் 'உல்லாலா' ட்ரெண்டிங் வரிசையில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கும்போதே படத்தின் டீசர் இன்று வெளியாகி ஹிட் அடித்துக்கொண்டிருக்கிறது. விவேக் வரிகளில் வெளியாகியிருக்கும் இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது. மேலும் ஸ்பாட்டில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை தெரிந்துகொள்ள, பாடலின் நடன இயக்குநர் பாபா பாஸ்கரிடம் பேசினேன். 

"ரஜினி சமத்தாவும், சூப்பராவும் ஆடியிருக்கார்!" - 'உல்லாலா' பாபா பாஸ்கர் 

``ரஜினி சார்கூட தொடர்ந்து வேலை பார்த்துட்டே வர்றேன். ரொம்ப சந்தோஷம். அவர்கூட எப்போ ஒர்க் பண்ணாலும், முதல்முறை பார்த்த `சிவாஜி' பட ஷூட்டிங் ஸ்பாட்தான் ஞாபகம் வரும். ராஜு சுந்தரம் மாஸ்டர்தான் அந்தப் படத்துக்கு நடன இயக்குநர். நான் அவருடைய அசிஸ்டன்ட். ஒரு நாள் நாங்க எல்லாரும் ஸ்பாட்ல டான்ஸ் ரிகர்சல் பார்த்திட்டு இருந்தோம். வாக்கிங் போகும்போது அப்படியே ஸ்பாட்டு வந்தார், தலைவர். நாங்க எல்லாரும் 'தலைவர்... தலைவர்...'னு கத்த ஆரம்பிச்சிட்டோம். அப்புறம் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ரெடியாகி வந்தார். அப்போ ராஜு சுந்தரம் என்னைக் கூப்பிட்டு, `ரஜினி சார் ரூம்ல இருக்கார். அவருக்கு டான்ஸ் ஸ்டெப்ஸ்லாம் சொல்லிக் கொடுத்துட்டு இரு'னு சொன்னார். இந்த வார்த்தைகளைக் கேட்ட உடனே எனக்கு ரெண்டு காதும் அடைச்சிருச்சு. ஏன்னா, நான் சின்ன வயசுல இருந்தே ரஜினி சாருடைய தீவிர ரசிகன். அவரை பக்கத்துல பார்க்கப் போறேன்னு சந்தோஷம் தாங்கலை. அவர் ரூம் போனதுக்கு அப்புறம், என்னைப் பக்கத்துல உட்கார வெச்சுப் பேசினதை என்னால மறக்கவே முடியாது" என நெகிழ்ந்துபோய் பேசத் தொடங்கினார், பாபா பாஸ்கர். 

``அப்போ என்கிட்ட எப்படி இருந்தாரோ அதே மாதிரிதான் இப்போ வரைக்கும் இருக்கார். `பேட்ட' படத்துல எல்லாப் பாட்டுக்குமே நான்தான் நடன இயக்கம் பண்ணணும்னு ஆசை. ஆனா, கார்த்திக் சுப்புராஜ் எனக்கு ஒரு பாட்டு மட்டும்தான் கொடுத்தார். என்கூட பசங்க ரெண்டு பேர், அக்கா, அவங்களுடைய கணவர், அக்கா பசங்கனு ஒரு பெரிய படையே தலைவரைப் பார்க்க வந்திருந்தாங்க. ரஜினி சார் எல்லார்கிட்டேயும் நல்லாப் பேசினார். அப்புறம், `உல்லாலா' பாட்டை கேட்கச் சொன்னாங்க. `தலைவரை எப்படி எல்லாம் ஆட வைக்கலாம்'னு மனசுல ஓடிக்கிட்டே இருந்தது. 

"ரஜினி சமத்தாவும், சூப்பராவும் ஆடியிருக்கார்!" - 'உல்லாலா' பாபா பாஸ்கர் 

கார்த்திக் சுப்புராஜ், `இந்தப் பாட்டை சென்னையிலதான் எடுக்கணும், நைட் ஷூட்'னு சொன்னார். இந்தப் பாட்டு ஏதோ மொட்டை மாடியிலதான் இருக்கும்னு நினைச்சேன். ஆனா, செட்டை பயங்கர பிரமாண்டமாப் போட்டிருந்தாங்க. கொஞ்ச நேரம் கழிச்சு, செட்டைவிட பிரமாண்டமா தலைவர் வந்து நின்னார். ரொம்ப இளமையா தெரிஞ்சார். இத்தனை வருஷத்துக்கு அப்புறமும் `தளபதி' படத்துல வர்ற சூர்யாவாதான் என் கண்ணுக்குத் தெரிஞ்சார். ஸ்டெப் என்னவா இருந்தாலும், `சூப்பர் பாஸ்கர்'னு உற்சாகமா ஆடுவார். ரொம்ப சமத்தாவும், சூப்பராவும் ஆடிட்டுப் போயிட்டார். மானிட்டர்ல தலைவரோட ஆட்டத்தைப் பார்த்துட்டு மொத்த யூனிட்டுமே கை தட்டினாங்க. கண்டிப்பா ஆடியன்ஸும் பாட்டை ரசிப்பாங்க, ஆடுவாங்க. ரஜினி சார் மட்டுமல்ல, பெரிய பட்டாளமே இந்தப் பாட்டுல இருக்கும். பாட்டுடைய ஷூட் ரெண்டு நாள் போச்சு. ஃபைனல் பார்த்துட்டு, `சூப்பர் பாஸ்கர். நல்லா ஒர்க் பண்ணியிருக்கீங்க'னு சொல்லி என் தோள்ல ரெண்டு தட்டு தட்டினார். அந்த ரெண்டு தட்டுதான் எனக்கு மிகப் பெரிய சம்பளமே. 

பாட்டுடைய ஒளிப்பதிவும் ரொம்ப நல்லா வந்திருக்கு. `ஜிகர்தண்டா' படத்துக்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ்கூட இந்தப் படத்துலதான் ஒர்க் பண்றேன். என்ன கேட்டாலும் `நீங்க பார்த்துக்கங்க மாஸ்டர். உங்க விருப்பம்'னு சொல்லிடுவார். அதே சமயம் செட்ல இவர் 'சைலன்ட்'னு சொன்னாப் போதும். மொத்த யூனிட்டும் அமைதியாகிடும். அந்த அளவு கமாண்டிங் பவர் இவர்கிட்ட இருக்கு. `பேட்ட' படம் கண்டிப்பா ஹிட் ஆகும்னு நம்பிகை இருக்கு. ஏன்னா, அங்க இருக்கிற எல்லாரும் ரொம்ப லவ் பண்ணி அந்த வேலையைப் பார்க்கிறாங்க. நான் இருந்த ரெண்டு நாளும் இதைத்தான் பார்த்தேன்." ஆரம்பத்திலிருந்த அதே நெகிழ்வோடு பேட்டியை முடித்தார், பாபா பாஸ்கர். 

அடுத்த கட்டுரைக்கு