Published:Updated:

``பெண் வேஷத்துல அவர் என்னைவிட அழகு'' - உமா ரியாஸ்

``பெண் வேஷத்துல அவர் என்னைவிட அழகு'' - உமா ரியாஸ்

``கணவர் என்னைத் திட்டி, இப்போ காரம் சேர்க்கிறதை குறைச்சுக்க வெச்சுட்டார். 45 வயசாகிடுச்சு. இனிமேலாவது உடல்நிலை மேல அதிகம் கவனம் செலுத்தலாம்னு முடிவெடுத்திருக்கிறேன். இப்போ ஜிம் போக ஆரம்பிச்சுட்டேன்."

``பெண் வேஷத்துல அவர் என்னைவிட அழகு'' - உமா ரியாஸ்

``கணவர் என்னைத் திட்டி, இப்போ காரம் சேர்க்கிறதை குறைச்சுக்க வெச்சுட்டார். 45 வயசாகிடுச்சு. இனிமேலாவது உடல்நிலை மேல அதிகம் கவனம் செலுத்தலாம்னு முடிவெடுத்திருக்கிறேன். இப்போ ஜிம் போக ஆரம்பிச்சுட்டேன்."

Published:Updated:
``பெண் வேஷத்துல அவர் என்னைவிட அழகு'' - உமா ரியாஸ்

டிகை உமா ரியாஸ், சன் டிவி `சந்திரகுமாரி' சீரியல் மூலம் புதிய பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். தன் நடிப்பு மற்றும் குடும்ப வாழ்க்கை பற்றி உற்சாகமாகப் பேசுகிறார். 

`` `சந்திரகுமாரி' சீரியலில் நடிக்கிறீங்க. புதுப் பயணம் எப்படி இருக்குது?"

``சின்னத்திரையில நீண்டகால அனுபவம் எனக்கு உண்டு. ஆனா, இந்த சீரியல் ரொம்ப ஸ்பெஷல். இந்த மெகா சீரியல் புராஜெக்ட்ல நடிக்கிறது மகிழ்ச்சியான அனுபவம். எனக்கு ராதிகா மேடத்தின் நடிப்பு ரொம்பப் பிடிக்கும். இப்போ அவங்களோடவே டிராவல் பண்ற மாதிரியான ரோல். தவிர, தினமும் மக்கள் மனசுல இடம்பிடிக்கலாம் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி."

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``உங்க ரோலுக்காக முன்தயாரிப்பு ஏதாவது தேவைப்பட்டதா?"

``இதுவரை இல்லை. கதைப்படி, கடந்தகால வரலாற்று நிகழ்வுகளும், நிகழ்காலச் சம்பவங்களும் கலந்து இருக்கும். சீரியலின் நாயகியான ராதிகாவின் பிரதான வில்லியாக நான் நடிக்கிறேன். எங்க இருவருக்குள்ளும் சண்டைக்காட்சிகள் உண்டு. ராதிகா மேடம் குதிரையில் வந்து சண்டை போடுற மாதிரியான காட்சிகளைப் பார்த்திருப்பீங்க. எனக்கும் அப்படியான காட்சிகள் இனிமேல் வரும். சின்ன வயசுலயே குதிரைப் பயிற்சியெல்லாம் கத்துக்கிட்டேன். அதனால, அத்தகைய சவாலான கேரக்டர்ல நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். இப்போவரை எந்த முன்தயாரிப்பும் எனக்குத் தேவைப்படலை."

``கணவரும், மகனும் ஃபிட்னஸ் பிரியர்கள். உங்களுக்கு ஆர்வம் உண்டா?"

``சுத்தமா இல்லை. கணவர் பெரிய ஃபிட்னஸ் பிரியர்னு எல்லோருக்கும் தெரியும். பெரிய பையன் ஷாரிக்கும் அப்படிதான். சின்னப் பையன் சமர்த், ஃபுட் பால் பிளேயர். இவங்க மூவருக்கும் சிக்ஸ் பேக் உண்டு. இளமைப் பருவத்துல நானும் ஸ்போர்ட்ஸ் பிளேயர் என்பதால, ரொம்ப ஃபிட்டா இருந்தேன். கல்யாணமான பிறகு, வீட்டு வேலைகள் செய்றது, நடிக்கிறதுக்கே நேரம் சரியா இருக்கு. ஜிம்முக்குப் போக எனக்கு நேரமில்லை. `குறிப்பிட்ட வயசுக்கு மேல, நம்ம உடம்பு நம் பேச்சைக் கேட்காது; வழு குறைந்துடும். அதனால, உடற்பயிற்சி முக்கியம்'னு கணவர் அடிக்கடி சொல்வார். என்னையும் ஜிம்முக்குக் கூப்பிடுவார்; ஃபிட்னஸ் டிப்ஸ் கொடுப்பார். உணவுப் பிரியையான நான், காரமான உணவுகளை விரும்பிச் சாப்பிடுவேன். கணவர் என்னைத் திட்டி, இப்போ காரம் சேர்க்கிறதை குறைச்சுக்க வெச்சுட்டார். 45 வயசாகிடுச்சு. இனிமேலாவது உடல்நிலை மேல அதிகம் கவனம் செலுத்தலாம்னு முடிவெடுத்திருக்கிறேன். இப்போ ஜிம் போக ஆரம்பிச்சுட்டேன். வெஜிடபிள் உணவுகளைச் சாப்பிட ஆரம்பிச்சிருக்கிறேன்."

``சினிமா குடும்பம். குடும்ப வாழ்க்கை எப்படிப் போகுது?"

``அப்பா காமேஷ், சினிமா இசையமைப்பாளார். அம்மா கமலா காமேஷ், நடிகை. காதல் கணவர் ரியாஸ் கானும், மகன் ஷாரிக்கும் நடிகர்கள். அன்பான, அமைதியான குடும்பம். கணவரும் நானும் குளோஸ் ஃப்ரெண்ட்ஸ். அடிக்கடி சண்டைப் போடுவோம்; சமாதானம் செய்துப்போம். கருத்து மோதல் வரும்போது அவர்கூட கைகலப்பு சண்டைபோட ஆசைப்படுவேன். ஆனா, முதல்லயே அவர் விட்டுக்கொடுத்து, மேற்கொண்டு சண்டை வளராமல் தடுத்துடுவார்."

``உங்க திறமைக்கு ஏற்ற ஆக்டிங் வாய்ப்புகள் வரலையேனு ஆதங்கம் உண்டா?"

``நிச்சயம் உண்டு. `நீ சிறந்த நடிகை. ஆனா, உனக்கான வலுவான மற்றும் சரியான கேரக்டர்கள் வருவதில்லை'னு நண்பர்கள் பலரும் சொல்வாங்க. `உங்களுக்கு மட்டும் தெரிஞ்சு என்ன பண்ண முடியும்?'னு சொல்லிச் சிரிப்பேன். எந்த மொழியிலயும் இல்லாத வகையில, தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரையில மட்டும்தான், வேற்றுமொழி நடிகர்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படுது. இதனால, இங்க இருக்கிறவங்களுக்கு வாய்ப்புகள் வருவதில்லை. எனக்கு வரும் கேரக்டர்களில் பெஸ்டா நடிக்கிறேன். இப்போ `சந்திரகுமாரி' சீரியல்ல தேவிகானு பவர்ஃபுல் ரோல்ல நடிக்கிறதில் மகிழ்ச்சி."

`` `நந்தினி' சீரியல்ல உங்க கணவர் திருநங்கை ரோல்ல நடிக்கிறார். நீங்க என்ன ஆலோசனை கொடுத்தீங்க?"

``சூப்பரா நடிக்கிறார்! அந்த சீரியல்ல நடிக்க ஆரம்பிக்கும்போது, எங்கிட்டதான் அதிகம் ஆலோசனை கேட்பார். அவர் நடிப்பைத் தொடர்ந்து கவனிச்சு, பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விஷயங்களைச் சொல்வேன். அந்த கேரக்டருக்காக ரொம்பவே மெனக்கெட்டு நடிச்சார். அதைவிட, ஒரு பொண்ணா பொறாமையுடன் சொல்றேன். பெண் வேடத்துல அவர் என்னைவிட அழகு!"

`` `பிக் பாஸ்'க்குப் பிறகு ஷாரிக் எப்படி மாறியிருக்கிறார்?"

``அந்நிகழ்ச்சி ஷாரிக்கை ரொம்பவே மாத்தியிருக்குது. வாழ்க்கையைப் பத்தியும், தனக்குனு ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக்கணும்னும் உணர்ந்திருக்கிறார். அவரோட திறமையை நிரூபிச்சு, புதுசா ரெண்டு படங்கள்ல ஹீரோவா நடிச்சுகிட்டு இருக்கார்."

``நடிப்பைத் தவிர பிறருக்குத் தெரியாத உங்க திறமை பற்றி..." 

``நல்லா ஓவியம் வரைவேன். இந்த விஷயம், அது ஒருசில நண்பர்களைத் தவிர, யாருக்கும் தெரியாது." 
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism