Published:Updated:

`வடசென்னை வெற்றியால் எங்களுக்கு எனர்ஜி' - `சகா' சீக்ரெட்ஸ் பகிரும் இயக்குநர் முருகேஷ்!

`வடசென்னை வெற்றியால் எங்களுக்கு எனர்ஜி' - `சகா' சீக்ரெட்ஸ் பகிரும் இயக்குநர் முருகேஷ்!
`வடசென்னை வெற்றியால் எங்களுக்கு எனர்ஜி' - `சகா' சீக்ரெட்ஸ் பகிரும் இயக்குநர் முருகேஷ்!

செல்லி சினிமாஸ் சார்பாக செல்வகுமார் மற்றும் ராம் பிரசாத் தயாரிக்கும் படம் ‘சகா’. பல முன்னணி விளம்பரங்களில் பணியாற்றிய முருகேஷ் முதன் முறையாக இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார். இந்தப் படத்தின் ஹீரோவாக வடசென்னை தனுஷின் மச்சானாக, ஜில்லா படத்தில் விஜய்யின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்த சரண் அறிமுகமாகிறார். அவருடன் `கோலி சோடா', பசங்க புகழ் கிஷோர், ஸ்ரீராம், பாண்டி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். முதல்முறையாக நடிகர் பாண்டியராஜனின் மகன் பிரித்திவி இதில் வில்லன் வேடம் ஏற்றுள்ளார். 18 வயது முதல் 22 வயதுக்குள் சிறையில் உள்ள இளைஞர்களின் நட்பு, காதல், ஏமாற்றம், பழி வாங்குதல் போன்றவற்றை கதைக் களமாக கொண்ட இந்த “சகா” உருவாகியுள்ளது. படம் விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில் படம் குறித்து இயக்குநரிடம் பேசினோம்...

விளம்பரத்துறையில் இருந்து வருவதால் உங்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில் சிரமம் ஏதும் இருந்ததா?

கண்டிப்பாக விளம்பரத்துறையில் இருந்து சினிமாவுக்குள் நுழையும்போது தயாரிப்பாளர் கிடைக்காது. நம்மை நம்பமாட்டார்கள். நிறைய பேருக்கு இந்த அனுபவங்கள் உண்டு. போதாக்குறைக்கு தற்போது சினிமாவில் போதுமான அளவுக்குத் தயாரிப்பாளர் கிடையாது. என்னோட பிரதர்தான் இந்தப் படத்துக்கு தயாரிப்பாளர். வாய்ப்பு தேடுவதைவிட, வாய்ப்பை நாமளே உருவாக்குவோம் நினைத்து நாங்கள் தயாரித்திருக்கிறோம். 

படத்தில் நான்கைந்து ஹீரோக்கள் உள்ளார்களே?

ஆமாம்... ஆனால் சரண் தான் சகா படத்தின் லீடு கேரக்டர். அவரைத் தொடர்ந்து கோலி சோடா பசங்களான கிஷோர், ஸ்ரீராம், பாண்டி முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்கள். அதேபோல் பாண்டியராஜ் சார் பையன் பிரித்திவி நடித்திருக்கிறார். அவர்தான் வில்லன் வேடம். இந்தப் படம் அவருக்கு ஒரு கம்பேக்காக இருக்கும். அந்த அளவுக்கு இந்தப் படத்தில் அவருக்கு ஸ்கோப் இருக்கும்.

குழந்தை நட்சத்திரமாக இருந்து வந்தவர் சரண். அவர் இந்தப் படத்துக்கு பொருத்தமாகியுள்ளாரா?

சரணை எனக்கு ஒரு எட்டு வருடங்களாகவே தெரியும். கடல் படத்தில் நடித்தபோது இருந்தே எனக்கு அவரைத் தெரியும். நிறைய முறை சரணை வைத்து ஷார்ட் பிலிம் எடுக்கலாம் என முடிவு செய்து இருக்கிறேன். அது முடியாமல் போய்விட்டது. ஆனால், இந்தப் படத்தில் அவரை நடிக்க வைத்துவிட்டேன். படம் பார்க்கும்போது உங்களுக்குத் தெரியும். அவருடைய கதாபாத்திரம் ஒரு லைவ் கேரக்டர். அதை உணர்ந்து ரொம்ப நன்றாக நடித்துள்ளார். கண்டிப்பாக வருங்காலத்தில் பெரிய ஹீரோவாக சரண் வருவார். நல்ல நடிகரை அறிமுகப்படுத்திய சந்தோசம் இருக்கிறது.

வடசென்னை படத்துல சரணோட நடிப்பு பேசப்பட்டது. நீங்கள் வடசென்னை பார்த்து என்ன சொன்னீர்கள்?

வடசென்னை படத்தினால் சரணுக்கு நல்ல ரீச் கிடைத்துள்ளது. அதைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அதேபோல் வடசென்னை படத்தின் வெற்றி உற்சாகமடைய வைக்கிறது. தற்போது தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் வேறு மாதிரி இருந்து வருகிறது. இப்படியான நேரத்தில் வடசென்னை மாதிரியான கேங்க்ஸ்டர், ஆக்ஸன் படங்கள் வெற்றிபெறுவது வரவேற்புக்குரியது. இந்தப் படத்தின் வெற்றி என்னை மாதிரி ஆக்ஷன் படம் இயக்கும் இயக்குநர்களுக்கு ஒரு நல்ல எனர்ஜியை கொடுத்திருக்கிறது.

ஹீரோயின்கள் பற்றி...

ஆயிரா, நீரஜா என மொத்தம் இரண்டு ஹீரோயின்கள். ஆயிரா, நீரஜா இரண்டுபேருமே நன்றாக நடித்துள்ளார்கள்.

படத்தின் யாயும் பாடல் இளைஞர்களிடம் செம ரீச் ஆகியுள்ளதே?

யாயும் பாடல் வெற்றி நாங்கள் எதிர்பாராத ஒன்று. இளைஞர்களின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ், காலர் டுயூன்களாக இடம்பிடித்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது. எங்களை மாதிரியான ஒரு சின்ன டீம் படம் ரிலீஸுக்கு முன்பே இந்த அளவுக்கு ஒரு பாடலை ஹிட்டாக கொடுத்தில்லை என நினைக்கிறேன். இதற்கெல்லாம் காரணம் மியூசிக் டிரைக்டர் ஷபீர். என் 10 வருட நண்பர். இந்தப் படத்துக்கு நிறைய மெனக்கெடுத்துள்ளார்.

அடிப்படையில் ஷபீர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர். அங்கு நிறைய ஆல்பம் பண்ணியிருக்கிறார். ஷபீரை முதலில் நிறைய இயக்குநர்கள் தங்களின் படத்துக்காக  அணுகினார்கள். ஆனால், என் படத்தில் பண்ண வேண்டும் என்பதற்காக அந்த வாய்ப்புகளை மறுத்துவிட்டார். சினிமாவில் இந்த மாதிரியான நண்பர்களைப் பார்ப்பது அரிதானது. தற்போது மூன்று படங்களுக்கு மேல் கமிட்டாகியுள்ளார். நிச்சயம் வருங்காலத்தில் நல்ல இசையமைப்பாளராக வருவார். இவரைப் போல் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ள நிரன் சந்தரும் எனது நெருங்கிய நண்பர். நாங்கள் எல்லாரும் பல வருட நண்பர்கள் தான். டைட்டிலுக்கு ஏற்றாற்போல் சகாக்கள் இணைந்து படத்தை எடுத்துள்ளோம். 

படத்தின் சென்சாரில் பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்பட்டதே?

ஆம். முதலில் படத்தை சென்சார் பண்ணும்போது பிரச்னை இருந்தது. இதனால் இரண்டு முறை படத்தை ரீ-ஷூட் எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். நடிகர்கள் வேறு வேறு படங்களில் பிஸியாகிவிட்டார்கள். இருந்தாலும் எங்களுக்காகத் திரும்பவும் வந்து எந்தச் சிரமும் பார்க்காமல் நடித்துக் கொடுத்தார்கள். இருப்பினும் எந்தவித பிரச்னையும் இல்லாமல் விரைவில் போகிறது. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.