சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

இசை இங்கே இருந்துதான் வருது!

இசை இங்கே இருந்துதான் வருது!
பிரீமியம் ஸ்டோரி
News
இசை இங்கே இருந்துதான் வருது!

இசை இங்கே இருந்துதான் வருது!

‘MUSIC THE LIFE GIVER’- `ஜானி’ படத்தின் ரஜினி துள்ளிக்குதிக்க ‘என் வானிலே ஒரே வெண்ணிலா’ பாட்டு மியூஸிக் சேனலில் ஓடிக் கொண்டிருந்த ஒரு அலுவல் நாளின் மதிய வேளை அது. ஆறு இசையமைப்பாளர்கள் அடையாறுக்கு வந்திருந்தார்கள். இன்றைய இளம் இசையமைப்பாளர்கள் அவர்கள்.  நம் எல்லோரின் ப்ளே லிஸ்ட்டிலும் நீக்கமற நிறைந்திருப்பவர்கள். ‘குலேபா’ தந்த விவேக்-மெர்வின், 96-ன் `காதலே காதலே’ தந்த கோவிந்த் வசந்தா, ‘பிசாசு’ அரோல் கரோலி, ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ரதன், ‘விக்ரம் வேதா’ புகழ்  சாம்.சி.எஸ் ஆகியோரின் அரட்டைக் கச்சேரி... மன்னிக்கவும்... இசைக் கச்சேரி!

இசை இங்கே இருந்துதான் வருது!

முதல் கேள்வியே அவர்களின் ஒரிஜினல் பெயரில் இருந்து ஆரம்பமானது. ``உங்க எல்லோருக்கும் இதுதான் ஒரிஜினல் பெயரா?’’ எனக் கேட்டதற்கு, மூன்று பேரிடம் ‘இல்லை’ என்ற பதில் சுதி மாறாமல் வந்து விழுந்தது.

``என் உண்மையான பெயர் அருள் முருகன். மிஷ்கின் சார்தான் ‘பிசாசு’ படத்துல அரோல் கரோலினு வெச்சார்.’’.

 ``என் ஒரிஜினல் பெயரை நான் வெளியே சொல்ல விரும்பலை. என் அம்மா பேர் ராதா. கூட ‘ன்’ சேர்த்து ‘ரதன்’னு வெச்சுக்கிட்டேன்’’.

``என் ஒரிஜினல் பேர் கோவிந்த் மேனன். ஆனா, ஜாதிப் பேரை வெச்சுக்கப் பிடிக்கலை. அதனால, அம்மா பேரை சேர்த்து கோவிந்த் வசந்தானு வெச்சுக்கிட்டேன்’’ என்று மூவரும் தங்களின் பெயர்க்காரணத்தைப் பகிர்ந்துகொள்ள மற்றவர்கள் ‘`பேரா முக்கியம்... இசையைப் பாருங்க!’’ என்று புன்னகைத்தார்கள். 

``நானும் மெர்வினும் கல்லூரி நண்பர்கள். சினிமாவுக்குப் போகணும்னு யோசித்ததே இல்லை. ஆனா, இசையைப் பத்தி மட்டுமே பேசிக்குவோம். சின்னச்சின்னதா ஆல்பம் முயற்சி பண்ணினோம்.. ஒரு வாய்ப்பு வர அப்படியே சினிமாவுக்குள்ள வந்துட்டோம்’’ என விவேக் - மெர்வின் சொன்ன அடுத்த நிமிடம், ``சின்ன வயசில இருந்தே வயலின், கர்நாடிக் மியூசிக் கத்துக்கிட்டேன். மியூசிக்தான் எதிர்காலம்னு சொன்னதுக்கு அப்பாதான் `அதுல ரொம்ப போட்டிகள் இருக்கும். நீ படிச்சுக்கோ. அது கண்டிப்பா உனக்கு பயன்படும்’னு சொன்னார். சரினு அப்பா பேச்சை கேட்டு சி.ஏ முடிச்சேன். ஆனாலும் என் மனசு இங்கயேதான் இருந்தது. அதான், உடனே வந்துட்டேன்’’ என அரோல் கரோலி தன் `யூ டர்ன்’ கதையைச் சொல்ல, ``ஹே நானும் அப்படிதான்பா...’’ என சியர்ஸ் சொல்லி தன் கதையைச் சொன்னார் சாம்.

இசை இங்கே இருந்துதான் வருது!``எனக்கும் சினிமாவுக்கும் சம்பந்தமே இல்லை. சர்ச் கொயர்ல இருந்தேன். அங்க இருக்கிற தபேலாவைத் தெரியாம தட்டி பார்க்கிறதுனு விளையாட்டா இருந்தேன். ஐ.டியில வொர்க் பண்ணிட்டு இருந்தப்போ ஆல்பம் பண்ற ஒரு மியூசிக் டைரக்டரை சந்திக்க வாய்ப்பு கிடைச்சது. அவர் கம்போஸ் பண்ணிட்டு இருந்தார். எனக்கும் அதுல ஆர்வம் இருக்கிறதுனால வீட்ல சும்மா பண்ண ஆரம்பிச்சதுதான். ஒரு படத்துல பின்னணி இசையமைப்பில் வேலை பண்ண வாய்ப்பு கிடைச்சது. அப்படியே உள்ளே வந்துட்டேன். ஈஸினு நினைச்சு உள்ளே வந்துட்டேன். இது எவ்வளவு பெரிய கடல்னு வந்த பிறகுதான் தெரியுது’’ என்றார்.

``நீங்கெல்லாம் இப்படி சொன்னா நான் அழுதிடுவேன்.’’ - செம லந்தாய் பேச ஆரம்பித்தார் ரதன்.  ``நான் சினிமாவுக்குப் போகணும்னுதான் சவுன்ட் என்ஜினியரிங்கே படிச்சேன். இத்தனைக்கும் பிறகு, குறும்படங்களுக்கு மியூசிக் பண்ணேன். அப்படியே, சினிமாவுக்குள்ள வந்துட்டேன்.’’ என்றார். மலையாளம் கலந்த தமிழில்தன் ஃப்ளாஷ்பேக்கை பகிர்ந்துகொள்கிறார் கோவிந்த் வசந்தா.

``சின்ன வயசுல இருந்தே இன்டிபென்டன்ட் மியூசிக் எனப்படும் தனியிசைதான் அதிகமா கேட்டு வளர்ந்தேன். கீ போர்டு புரொகிராமிங் கத்துக்கிட்டேன். அப்போதான் பாலாஜி தரணிதரன் அண்ணாவோடு பழக்கம் ஏற்பட்டு ‘ஒரு பக்கக் கதை’ படம் பண்ணேன். இதுக்கு நடுவுல ‘தைக்குடம் பிரிட்ஜ்’னு ஒரு பேண்ட் ஆரம்பிச்சு அது ஒரு பக்கம் போயிட்டு இருக்கு. அப்பவும் இப்பவும் என்னுடைய முன்னுரிமை என் பேண்டுக்குதான். அப்புறம்தான் சினிமா’’ என பேசும்போதே இன்டிபென்டன்ட் இசைமீது அவர் வைத்திருக்கும் தனிப்பெருங்காதலை நம்மால் உணர முடிகிறது.  

‘யார் உங்கள் ஆதர்சம்?’ என்ற கேள்விக்கு சடசடவென மழையாய்ப் பொழிந்தனர் பதில்களை!

``நான் இளையராஜா சாருடைய பெரிய ரசிகன். ‘இளையராஜா 1000’னு விஜய் டிவியில ராஜா சாருக்கு முன்னாடி எங்க பேண்ட் பெர்ஃபார்ம் பண்ணோம். 1000 நிகழ்ச்சி முடிஞ்ச பிறகு ராஜா சாரே எங்ககிட்ட வந்து மலையாளத்துல பேசினார். அவர் பிறந்த நாளுக்கு அவர் வீட்டுக்கு வரச் சொல்லிட்டுப் போனார். எங்ககிட்ட அவர் பேசின அந்த மொமன்ட் வாவ்!’’ என கோவிந்த் மெய்சிலிர்த்தைத் தொடர்ந்து ஒவ்வொருவராக தங்களின் `ஃபேன்பாய் மொமன்ட்’டை சிலிர்ப்புடன் ஷேர் செய்தனர். 

``நான் பத்தாவது படிக்கும்போது பேண்ட் ஹன்ட் போட்டி நடந்தது. கர்நாட்டிக் ஃப்யூஷன் மியூசிக்தான் வாசிப்போம். இறுதிப் போட்டியில ரஹ்மான் சார்தான் நடுவர்.  அப்போதான் அவரை முதல்ல பார்த்தேன். அதுவும் நாங்க ஜெயிச்சவுடன் அவர்கூட போட்டோ எல்லாம் எடுத்துக்கிட்ட நிகழ்வை மறக்கவே முடியாது. கொஞ்ச மாதங்கள் கழிச்சு, ‘அழகிய தமிழ்மகன்’ படப் பின்னணி இசையில வேலை பார்க்க வாய்ப்பு வந்தது. அப்போ நான் அவர் ஸ்டூடியோல அவர்கூடவே நிக்கும்போது இருந்த பதட்டம் கலந்த சந்தோஷம் இருக்கே... அதை என்னால விவரிக்க முடியலை!’’ என்ற விவேக்கைத் தொடர்ந்த மெர்வின், ``குலேபா’ பாட்டை கேட்டுட்டு ‘நல்லா இருக்கே பாட்டு’னு அவர் சொன்னதா அவரோட ஸ்டூடியோவுல இருந்தவங்க சொன்னாங்க. அதே எனக்கு ஆனந்தம். அவர் ஸ்டூடியோல நிறைய முறை ரெக்கார்ட் பண்ணியிருக்கோம். அப்போ அவர் வேகமா வந்து `நகருங்க நகருங்க’னு சொல்லி லிஃப்ட்ல ஏறி நம்ம கூட நிக்கும்போதே அந்த மியூசிக்கல் வைப்ரேஷனை நம்மால உணர முடியும்’’- சொல்லும்போதே சிலிர்க்கிறார்.

இசை இங்கே இருந்துதான் வருது!

 ``எனக்கு ராஜா சார், ரஹ்மான் சார் ரெண்டு பேரும்தான் இன்ஸ்பிரேஷன். மீட் பண்ணியிருக்கேன். ஆனா, இதுவரை பேசினது இல்லை. சீக்கிரம் பேசுவேனு நம்பிக்கை இருக்கு. அந்த மொமன்ட்டுக்காக ஐ ஆம் வெயிட்டிங் !’ என அரோல் சொல்லும்போது அவருக்குள் இருக்கும் பரவசம் நமக்கும் பரவுகிறது.  ‘‘நான் சவுன்ட் என்ஜினியரா இருக்கும்போது ரஹ்மானோட சகோதரி  ரெஹானா மேம் சொல்லி அவர்கிட்ட ஒரு ஆடியோ பைட் வாங்கப் போனோம். அவர் பேசி முடிச்சவுடனே நீங்க சவுன்ட் இன்ஜினியரானு கேட்டு, `மியூசிக் பண்ணுங்களேன்’னு சொன்னார். அவர் ஏன் சொன்னார், எதுக்கு சொன்னார்னு தெரியலை. ஆனா, அன்னிக்கே சவுன்ட் இன்ஜினீயர் வேலையை ரிசைன் பண்ணிட்டு வந்துட்டேன். அடுத்த கொஞ்ச வாரத்துலேயே ஒரு தெலுங்குப் படத்துல கமிட்டாகிட்டேன். அதைச் சொல்லலாம்னு நினைச்ச போதெல்லாம் அவரைப் பார்க்கமுடியலை. அவருடைய போன பிறந்தநாளுக்குதான் ரசிகர்களோட ரசிகரா வரிசையில் நின்னு அவரைப் பார்த்துப் பேசினேன். அப்போ எப்படியாவது சொல்லிடணும்னு ப்ளான் பண்ணி, ``சார் நான் மியூசிக் டைரக்டர் ஆகிட்டேன்’’னு சொன்னேன். ``ஓ அப்படியா? நானும் மியூசிக் டைரக்டர்தான்’’னு சொல்லி ஒரு ஸ்மைல் பண்ணார். அந்த ஸ்மைல் ஒண்ணு போதும்’’ என ரதன் சொன்னவுடன் அங்கிருந்த அனைவர் முகத்திலும் புன்னகை!

``ஒரு முறை ஏவிஎம் ஸ்டூடியோவுல நைட் ரெண்டு மணிக்கு மிக்ஸிங் போயிட்டு இருந்தது. அப்போ எனக்கு செம தூக்கம். சரினு அங்கிருந்த சோஃபாவில படுத்துத் தூங்கிட்டேன். நான் வாழ்க்கையில பாக்கணும்னு நினைச்ச ரஹ்மான் வந்து என்னை எழுப்பினார். எனக்குத் தூக்கத்துல அவர்னு தெரியலை. அவர் நகர்ந்த அடுத்த நிமிஷம் எனக்கு அவர்தான்னு க்ளிக்காச்சு. அப்புறம் உடனே எழுந்து போய் `சாரி சார்...’னு சொன்னேன். `ஐயோ பரவாலைங்க... ஒரு மனுஷனுக்குத் தூக்கம்தான் ரொம்ப முக்கியம். நான்லாம் தூங்குறதே இல்லை’னு சொல்லி சிரிச்சிட்டுப் போனார்’’ என்று சிரிக்கிறார் சாம்.

``மியூசிக் எப்படி வரப்போகுதுனு ஒரு ஐடியா எங்களுக்கு இருக்கும். அதை நாலு பேரை வெச்சுப் போட்டு கேட்டுட்டு ‘அது மாதிரி இல்லையே இது’, ‘கொஞ்சம் இறங்குதே கொஞ்சம் திரும்புதே’னு சில இயக்குநர்கள் சொல்வாங்க.’’ என்றவரை இடைமறித்த ரதன்,  `` ‘விக்ரம் வேதா’ மாதிரி பிஜிஎம் வேணும்னு சொல்வாங்க. நான் சாம்கிட்டேயே கேட்டிடவா சார்னு கலாய்ச்சுடுவேன். புதுசா ஒரு விஷயம் பண்னணும்னு முடிவு பண்ணிட்டா அதைப் புதுசாதான் அணுகணும். அதுக்கு ஒரு ரெஃபரென்ஸ் எடுத்துட்டு வரவே கூடாது.’’ என்றார்.

அதனை ஆமோதித்துத் தொடர்ந்த மெர்வின், ``எங்களுக்கு ‘குலேபா’ ஹிட். இதுக்கு அப்புறம் ‘குலேபா’ வேணும்னு அடிச்சுக் கேட்டாலும் வராது’’ என்றவரை இடைமறித்த சாம், “ ‘குலேபா’ உங்ககிட்ட கேட்டா பரவாயில்லையே என்கிட்ட கேட்குறாங்களே .. நான் என்ன பண்றது?’’ என்ற சாமின் பதிலுக்கு செம ரெஸ்பான்ஸ்!

``எங்ககிட்ட குலேபா கேட்ட மாதிரி சாம்கிட்ட எத்தனை பேர் இன்னொரு விக்ரம் வேதா கேட்டிருப்பாங்கனு தெரியாது. ஒரு பாட்டு ஹிட் ஆகிடுச்சுனு மறுபடியும் அதே மாதிரி கம்போஸ் பண்ணா, `இது அதுல்ல...’னு மீம் போட்டு கலாய்க்க ஆரம்பிச்சிடுறாங்க. மக்கள் ரொம்ப ஷார்ப். அதனால, எப்பவும் கவனமா... இல்லை ரொம்ப கவனமா இருக்கணும்’’ என மெர்வின் சொன்னதற்கு ``சூப்பர்பா...!’’ என கைத்தட்டி ஹை-ஃபை அடித்துக் கொண்டனர்.

அவரவர் மெட்டமைக்கும் வித்தையை ஒருவருக்கொருவர் ஷேர் செய்தனர்.

``எனக்குப் பல் துலக்கும்போதும் பாத்ரூம்ல இருக்கும்போதுதான் ட்யூன் க்ளிக்காகும். அதை போன்ல ரெக்கார்ட் பண்ணி வெச்சிடுவேன். ஆனா, அதை பியானோ முன்னால உட்கார்ந்து யோசிச்சா வரவே வராது. ‘டசக்கு டசக்கு’ மெட்டு கார்ல வரும்போது சும்மா போட்டதுதான். நான் போட்ட நிறைய ட்யூன் ஏற்கெனவே கம்போஸ் பண்ணி வெச்சதுதான். 2010 - 2013 ஐடி வேலையை விட்டுட்டுப் பட வாய்ப்புக்காக காத்திருந்த சமயத்துல இங்கிலீஷ் படம், மணிரத்னம் சார் படம் ஓடவிட்டு அதுக்கு நான் ஒரு மியூசிக் போட்டு பார்ப்பேன். அப்படி ‘மங்காத்தா’ அஜித் என்ட்ரிக்கு கம்போஸ் பண்ணதுதான் வேதா தீம்’’ என்ற சாம்க்கு கைதட்டலைப் பரிசளித்தனர் எல்லோரும்.

``ஒரு படத்துக்குனு மியூசிக் பண்ண மாட்டோம். தினமும் எதாவது பண்ணிட்டு இருப்போம். அப்போ தோணுறதை ரெக்கார்ட் பண்ணி வைப்போம். அவ்ளோதான். ‘குலேபா’ ட்யூனே கிரிக்கெட் விளையாடும்போது வந்ததுதான்’’ என்ற விவேக் மெர்வினைத் தொடர்ந்த அரோல் கரோலி, ``சீனை ஞாபகம் வெச்சுட்டு பைக் எடுத்துகிட்டு ரவுண்ட் போவேன். நாலஞ்சு ட்யூனோடு வருவேன்.  பைக்தான் எனக்கான உற்சாக ஊற்று!’’ என்றவுடன் மீண்டும் கைதட்டல் சேர்ந்து கொள்கிறது.

ஆர்.சரண், உ.சுதர்சன் காந்தி - படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்