சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“பாம்புப் படம்தான்... ஆனா பழிவாங்காது!”

“பாம்புப் படம்தான்... ஆனா பழிவாங்காது!”
பிரீமியம் ஸ்டோரி
News
“பாம்புப் படம்தான்... ஆனா பழிவாங்காது!”

“பாம்புப் படம்தான்... ஆனா பழிவாங்காது!”

“எனக்குப் பூர்வீகம் கும்பகோணம். சட்டம் படிச்சுட்டு வழக்குரைஞரா பயிற்சி எடுத்தேன். பாலுமகேந்திரா சார்கூட இருந்தப்போ, சரத்குமாரின் 100-வது படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது. ஆனா, என் கதையைக் கேட்ட ராதிகா மேடம், ‘கதை பிடிச்சிருக்கு. ஆனா, வேறொரு இயக்குநரை வெச்சுப் பண்ணிக்கிறோம்’னு சொன்னாங்க. நான் கதையை விற்கிறதுக்கா சினிமாவுக்கு வந்தேன்?! அதனால, மறுத்துட்டேன். இன்னொரு தயாரிப்பாளர் ஒருத்தர் சரத்குமார் படத்துக்காக என்னைக் கமிட் பண்ணி அட்வான்ஸ் கொடுத்திருந்தார். ராதிகா மேடமும், ‘சரி, 100-வது படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க’னும் சொன்னாங்க. என்ன பண்றதுனு தெரியாம, பாலுமகேந்திரா சார்கிட்ட அட்வைஸ் கேட்டேன். ‘யார்கிட்ட முதல்ல அட்வான்ஸ் வாங்குனியோ, அவங்களுக்குப் படம் பண்ணு’னு சொன்னார். சரத்குமார் படத்தை ஆரம்பிச்சோம். ஆனா, கதையில அவரோட குறுக்கீடு இருந்ததுனால, அந்தப் படத்தை விட்டுட்டேன்.

“பாம்புப் படம்தான்... ஆனா பழிவாங்காது!”

பல இடங்கள்ல முட்டி மோதிய பிறகு, தெலுங்கு நடிகர் நிக்கிலை வெச்சு ஒரு படம் பண்ணலாம்னு ஏவி.எம்.சரவணன் சார்கிட்ட கதையைச் சொன்னேன். ‘பாலுமகேந்திரா உதவியாளர் நீங்க... கமர்ஷியல் கதையைச் சொல்றீங்களே!’னுட்டார். அதுவும் முடியாமப்போச்சு. ஆனா, என் கதை நிக்கிலுக்கு ரொம்பப் பிடிச்சிருந்ததுனால, அவரே எனக்காக தயாரிப்பாளரைத் தேடினார். அப்படி உருவானதுதான், என் முதல் படமான ‘களவர் கிங்’ தெலுங்குப் படம். பெரிய வெற்றியைப் பெற்ற அந்தப் படத்துக்கு நான் சம்பளமா வாங்கியது, தமிழ் ரீமேக் ரைட்ஸ் மட்டும்தான். அதைத்தான் தமிழில் விமல் நடிக்க, ‘எத்தன்’னு எடுத்தேன். பெரிய இடைவெளிக்குப் பிறகு, ‘நீயா 2’ மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கிறேன். இன்னும் ஐந்து வருடங்கள்ல ஹீரோக்களின் பெயர்களெல்லாம் மறந்துபோய், குரங்குப் படம், நாய்ப் படம்னு தமிழ்சினிமா மாறிடும். நம்ம லைஃப்பும் நமக்குப் பிடிச்ச மாதிரி மாறப்போகுது!” - ஒட்டுமொத்த சினிமாப் பயணத்தையும் சுருக்கமாக முடிக்கிறார், இயக்குநர் சுரேஷ்.

“கமல் நடிச்ச ‘நீயா?’ படத்தின் தொடர்ச்சியா இது?”

“அதுக்கும் இந்தப் படத்துக்கும் சம்பந்தமே கிடையாது. இது, லவ், ஆக்‌ஷன், காமெடி கலந்த ஒரு புதுக்கதை. ‘ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்...’ பாடலிலும், டைட்டிலிலும் மட்டும்தான், ‘நீயா?’ படத்தின் சாயல் இருக்கும். பாம்புக் கதைன்னாலே, பழிவாங்கல் கதையாதான் இருக்கும்னு எல்லோரும் நினைக்கிறாங்க. இது ஒரு ஆக்‌ரோஷமான காதல் கதைனு சொல்லலாம்.”

“பாம்புப் படம்தான்... ஆனா பழிவாங்காது!”

“ஒரு ஹீரோ, மூணு ஹீரோயின்கள் இருக்காங்க. இதுல, யார் பாம்பு?”

“ஜெய் ரெண்டு கெட்டப்ல வர்றார். அதுல, இதுவரை அவர் நடிக்காத ஒரு கெட்டப்ல கலக்கியிருக்கார். பாம்பு கேரக்டர்ல வர்றது, வரலட்சுமி. அந்தக் கேரக்டருக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கோ, அதே அளவுக்கு ராய் லட்சுமி, கேத்தரின் தெரஸாவுக்கும் இருக்கும்.”

“இயக்குநர் பாலுமகேந்திராவுடனான அனுபவங்களைச் சொல்லுங்களேன்?”

“நான் கவிதைகள் எழுதுவேன். ‘கறையான் மனிதர்கள்’ங்கிற என் தொகுப்பைப் படிச்சுட்டு, பாலுமகேந்திரா சார் பாராட்டினார். எனக்கும் சினிமாமேல இருந்த ஆர்வத்தை அவர்கிட்ட சொன்னப்போ, சேர்த்துக்கிட்டார். அவர் ‘கதை நேரம்’ இயக்கிக்கிட்டு இருந்த சமயம் அது. அதுல அவரோட வொர்க் பண்ணுனேன். இந்தத் தொடருக்காக என் கையில விட்டல் ராவின் தெலுங்குக் கதைத் தொகுப்பைக் கொடுத்து, கதைச் சுருக்கம் எழுதச் சொல்வார். புரியாம எழுதிக் கொடுப்பேன். அதையெல்லாம் ஒரு மூலையில வெச்சுட்டு, அதிலிருந்து ஒரு நல்ல கதையைச் சொல்லச் சொல்வார். இப்படி ஒரு பயிற்சியை எங்களுக்குக் கொடுத்து வளர்த்தெடுப்பார், பாலு சார். எனக்கு முன்னாடி பாலா சாரும், வெற்றி மாறனும் இதைத்தான் பண்ணுனாங்கனு, அதுக்குப் பிறகுதான் தெரிஞ்சுகிட்டேன்.” 

“பாம்புப் படம்தான்... ஆனா பழிவாங்காது!”

“ஏவி.எம்.சரவணன் கேட்டதுதான், பாலுமகேந்திராவின் உதவி இயக்குநரான நீங்க கமர்ஷியல் படங்கள் பண்றதுல ஆர்வமா இருக்கீங்களே?”

“எனக்கு இடதுசாரி சிந்தனைகள் பிடிக்கும். என்கிட்ட இருந்த கதைகளும் சமூகம் சார்ந்த கதைகளாதான் இருந்தது. இப்போ என்கிட்ட இருக்கிற ஒரு கதை, வாடகை வீட்டுல இருக்கிறவங்க அனுபவிக்கிற பிரச்னைகள் பற்றியது. ஒரு இயக்குநருக்கு அவனுக்கான அங்கீகாரம் கிடைக்கிறவரை அவன் என்ன மாதிரி படம் எடுக்கணும்னு ஒரு தயாரிப்பாளரோ, இயக்குநரோதான் முடிவு பண்றாங்க. சிலருக்கு அந்த அங்கீகாரம் முதல் படத்திலேயே கிடைக்குது. நான் கமர்ஷியல் படம் பண்ற சூழலுக்குத் தள்ளப்பட்டேன்னு சொல்லலாம்.”

அலாவுதின் ஹுசைன்