சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

படம் தயாரிச்சேன்; பாடம் கத்துக்கிட்டேன்!

படம் தயாரிச்சேன்; பாடம் கத்துக்கிட்டேன்!
பிரீமியம் ஸ்டோரி
News
படம் தயாரிச்சேன்; பாடம் கத்துக்கிட்டேன்!

படம் தயாரிச்சேன்; பாடம் கத்துக்கிட்டேன்!

“சே குவேரா பத்தி எனக்கு எதுவும் தெரியாது. ஆனா,  நிறைய பசங்க அவர் படம் போட்ட டி-ஷர்ட்ஸ் போட்டுப் பார்த்திருக்கேன். அவரைப் பத்தித் தெரிஞ்சிக்கணும்னு ஆசை வந்தது. படிக்க ஆரம்பிச்சேன். சே பற்றிய ஒரு நாடகம் போடலாம்னு நண்பர்கள் அதற்கான வேலைகளில் இறங்கினோம். ஆனா அதை நடத்த முடியலை. இது எனக்கொரு மனக்குறையாவே இருந்தது. 

படம் தயாரிச்சேன்; பாடம் கத்துக்கிட்டேன்!

‘வல்லவனுக்கு வல்லவன்’ படத்தோட இயக்குநர் விஜய் தேசிங் கதை சொல்லும்போது, படத்துல சே குவேரா கெட்டப்ல உங்களுக்கு ஒரு சீக்வென்ஸ் இருக்குனு சொன்னார்.  உடனே படத்துல நடிக்க ஓகே சொல்லிட்டேன். ‘சூது கவ்வும்’ ஷூட்டிங் சமயத்துல இந்தக் கதையை விஜய் தேசிங் என்கிட்ட சொன்னார். தயாரிப்பாளர் யாரும் கிடைக்கவே இல்லை. இயக்குநர் மூணு, நாலு வருஷமா வெயிட் பண்ணிட்டிருந்தார். அந்தச் சமயத்துலதான், நானே படத்தைத் தயாரிக்கிறேன்னு ‘அசால்ட் புரொடக்‌ஷன்ஸ்’ ஆரம்பித்தேன்’’- உற்சாகமாகப் பேசத் தொடங்குகிறார் பாபி சிம்ஹா.

“ ‘வல்லவனுக்கு வல்லவன்’ எந்த மாதிரியான ஜானர்?”

“இந்தப் படம் முழுக்க முழுக்க காமெடி படம். பத்து கெட்டப் போட்டிருக்கேன்.   நெப்போலியன், ஆனந்த்ராஜ், பாடகர் அந்தோணி தாசன்னு மூணு பேரும் வில்லன்களா படத்துல நடிச்சிருக்காங்க.’’

“தயாரிப்பாளரா இருந்து பார்த்த ப்ளஸ் மைனஸ்?’’

‘`நிறைய மைனஸ் மட்டும்தான் பார்த்தேன். நல்லதுனு எதுவுமே இல்லை. ஆனா, நிறைய கத்துக்கிட்டேன். யாரை நம்பணும், நம்பக்கூடாதுனு தெரிஞ்சுக்கிட்டேன். ‘வல்லவனுக்கு வல்லவன்’ படத்தைத் தயாரிச்சது மூலமா என்னைச் சுத்தியிருக்கிறவங்களைப் பத்தித் தெரிஞ்சுக்க முடிந்தது. பணம் விஷயத்துல கொஞ்சம் ஏமாந்துட்டேன். இனிமேல் படங்களைத் தயாரிக்கும்போது எச்சரிக்கையா இருப்பேன்’’. 

படம் தயாரிச்சேன்; பாடம் கத்துக்கிட்டேன்!

“ ‘பாவா லாட்ஜ்’ வெப் சீரிஸ் பற்றி?”

“இது கேங்ஸ்டர்ஸ் பற்றிய வெப் சீரிஸ். மொத்தம் பத்து எபிசோட்ஸ் இருக்கு. நடிகை காயத்ரி, பார்வதி நாயர் நடிச்சிருக்காங்க.  ‘மாநகரம்’ படத்தோட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதை எழுதியிருக்கார். கதை கேட்டவுடனே பிடிச்சிருந்தது. நம்ம என்ன நினைக்கிறோமோ அதை அப்படியே திரையில் கொண்டுவர்றதுக்கு வெப் சீரிஸ்தான் கரெக்ட்.

இத்தனை மணிநேரம்தான் இருக்கணும்னு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. ஆடியன்ஸும் நினைச்ச நேரத்துக்கு இன்டர்நெட்ல வெப் சீரிஸ் பார்க்கலாம். மிடில் க்ளாஸ் ஃபேமிலியில் இருக்கிற ஒருத்தர் குடும்பத்தோட தியேட்டரில் படம் பார்க்கப்போனா இரண்டாயிரம் ரூபாய் செலவிட வேண்டியதா இருக்கு. அவருக்கு ஏற்றது வெப் சீரிஸ்தான்.’’

“குறும்படம் மூலமா சினிமாவுக்குள்ளே என்ட்ரி கொடுத்தவர் நீங்க. வெப் சீரிஸைக் குறும்படத்தின் அடுத்த வெர்ஷனா பார்க்குறீங்களா?”

“குறும்படம், வெப் சீரிஸ் எல்லாத்தையுமே ஒரு படமாதான் பார்க்கிறேன். ஒவ்வொண்ணுமே அதோட டைமிங் பொறுத்து வேறுபடுது, அவ்வளவுதான். பத்து விநாடிகளுக்கு விளம்பரம் வந்தாலும் படம்தான்.”

“நடிகர், தயாரிப்பாளர்... அடுத்து டைரக்‌ஷனா?”

“கண்டிப்பா இல்லை. நல்லா டைரக்‌ஷன் பண்ணக்கூடியவங்க நிறையபேர் இருக்காங்க. நமக்கு வரக்கூடியதை மட்டும் பண்ணினால் போதும்.’’

சனா - படங்கள்: பா.காளிமுத்து