சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ராஜா ரங்குஸ்கி - சினிமா விமர்சனம்

ராஜா ரங்குஸ்கி - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
ராஜா ரங்குஸ்கி - சினிமா விமர்சனம்

ராஜா ரங்குஸ்கி - சினிமா விமர்சனம்

சுஜாதாவுக்கு டைட்டில்  கார்டில் நன்றி சொல்லியிருக்கிறார் இயக்குநர். சுஜாதாவின் பால்யகால பட்டப்பெயராம் ‘ரங்குஸ்கி’. ஒரு த்ரில்லர் கதையை முடிந்த அளவுக்கு சுவாரஸ்யமாகச் சொல்ல மெனக்கெட்டிருக்கிறார் இயக்குநர் தரணிதரன்.  

ராஜா ரங்குஸ்கி - சினிமா விமர்சனம்

கான்ஸ்டபிள் ராஜாவுக்கு அருகில் வசிக்கும் ரங்குஸ்கி மேல் காதல். சொல்பேச்சு கேட்காத சுந்தரி இந்த ரங்குஸ்கி. ‘செய்யாதே’ என்றால் செய்து பார்ப்பதும், ‘செய்’ என்றால் செய்யாமல் விடுவதும் அவர் குணம். இதையே சாதகமாக்கி அடையாளம் தெரியாத ஒருவராக ஒரு நம்பரிலிருந்து ரங்குஸ்கியை அழைத்து, ‘ராஜா பின்னால் சுத்தாதே!’ என்று உத்தரவு போட்டு ரங்குஸ்கியைத் தன்மீது காதலில் விழ வைக்கிறார். போட்டு வைத்த காதல் திட்டம் ஓ.கே ஆன குஷியிலிருக்கும் போதுதான் தன் குரலில்  வேறொரு எண்ணிலிருந்து தன் காதலியிடம் ஒருவன் பேசுவது தெரிய வருகிறது. அந்தக் குரலுக்குச் சொந்தமானவன் யார் என்ற குழப்பத்தில் இருக்கும்போதே, ராஜாவுக்கு கால் செய்து ‘ரங்குஸ்கியைக் கொன்றுவிடு’ என உத்தரவிடுகிறது அந்தக் குரல். இதற்கிடையே மரியா என்ற பெண் கொலை செய்யப்பட அந்தப் பழியும் தன்மீது விழ, கொலையாளியைத் தேடி ஓடுகிறான் ராஜா. ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்து குற்றவாளியைக் கண்டுபிடித்து, பழியிலிருந்து மீண்டானா நாயகன் என்பது மீதிக்கதை.

ராஜா ரங்குஸ்கி - சினிமா விமர்சனம்கான்ஸ்டபிள் ராஜாவாக ‘மெட்ரோ’ சிரிஷ். ரொமான்ஸ், மிரட்சி, கோபம், அழுகை, பயம் என எல்லா உணர்ச்சிகளுக்கும் லேகிய வியாபாரி போல ஒரே மருந்து... ஒரே ரியாக்‌ஷன்.  சாந்தினிக்கு இந்தப் படம் செம மைலேஜ். பாத்திரத்தின் வெயிட் உணர்ந்து ரங்குஸ்கியாக நன்றாகவே நடித்திருக்கிறார்.

ராஜாவின் கான்ஸ்டபிள் நண்பனாக வரும் ‘கல்லூரி’ வினோத்தின் ஒன்லைன்கள் சிரிப்பை வரவழைக்கின்றன. சி.பி.சி.ஐ.டி அதிகாரியாக நடித்திருக்கும் ஜெயக்குமார் ஜானகிராமனின் நடிப்பு யதார்த்தம். கொஞ்ச நேரமே வந்தாலும் கவனிக்க வைக்கிறார் அனுபமா.

இசை யுவன் ஷங்கர் ராஜா. பின்னணியில் திகில் கூட்டியிருப்பவர் பாடல்களில் அடக்கி வாசித்திருக்கிறார். டி.கே.யுவாவின் ஒளிப்பதிவு வில்லாக்களைக்கூட இரவுநேர டாப் ஆங்கிளில் காட்டி பயமுறுத்துகிறது. ஷஃபிக் முகமது அலியின் எடிட்டிங் பக்கா.

நம் புத்திசாலித்தனத்துக்கு சவால்விடும் காட்சியமைப்புகள்தான் த்ரில்லர் படங்களுக்கான அடிப்படை. சில பாத்திரங்கள்மீது நமக்கு சந்தேகம் எழும் வண்ணம் பாத்திரப்படைப்புகள் வார்க்கப்பட்டிருக்கும். ஆனால், இந்தப் படத்தைப் பொறுத்தவரை அப்படி எதுவும் இல்லாமல் காட்சிகள் நகர்வது அலுப்பை ஏற்படுத்துகிறது.

கொஞ்சம் சுவாரஸ்யமான முடிச்சுகளைப் போட்டு, திரைக்கதையை இன்னும் இழுத்துக் கட்டியிருக்கலாம்.

- விகடன் விமர்சனக் குழு