சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

சாமி 2 - சினிமா விமர்சனம்

சாமி 2 - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சாமி 2 - சினிமா விமர்சனம்

சாமி 2 - சினிமா விமர்சனம்

பெருமாள் பிச்சையை வதம் செய்த ஆறுச்சாமியின் மகன் ராம்சாமியும், பெருமாள் பிச்சையின் மகன்கள் ராவண பிச்சை அண்டு பிரதர்ஸும் மோதிக்கொள்கிறார்கள். ராம் ராவணனை வதம் செய்தாரா என்பது ஸ்கொயர் சொல்லும் கதை.

சாமி 2 - சினிமா விமர்சனம்

டாப் ஆங்கிளில் காட்டப்படும், வெடித்துப் பறக்கும் சுர்ர்ரூம் சுர்ர்ரூம் ஹை டெசிபல் வாகனங்கள், அடிவாங்கியாவது டூயட் பாட ஆசைப்படும் நாயகி, செல்போனை வைத்து டெக்னிக்கலாகத் திட்டம்போட்டு வில்லனைத் தூக்கும் பரபர க்ளைமாக்ஸ்...புள்ளி மாறாமல் கோலம் போட்டிருக்கிறார் இயக்குநர் ஹரி.

2031-ல் நடக்கிறது கதை. அநேகமாக இன்னும் பதினைந்து ஆண்டுகளுக்கு இந்தியாவால் ஓர் இன்ச்கூட முன்னேற முடியாது என்பதுதான் ஹரியின் நம்பிக்கை போலும். பானிபூரியில் தொடங்கி சாதிவெறி வரை சமகாலத்தைவிட எதிர்காலம் இன்னும் பின்னோக்கி இருக்கிறது.

சாமி 2 - சினிமா விமர்சனம்


 
இரண்டு சாமிகளாக விக்ரம். மனிதர் தங்க பஸ்பம் சாப்பிடுகிறாரோ என்னவோ, 2003 ஆறுச்சாமியைவிட ராம்சாமி இளமையாக இருக்கிறார். வசன உச்சரிப்பிலும் வாய்ஸ் மாடுலேஷனிலும் எவ்வளவு வெரைட்டி! த்ரிஷாவுக்குப் பதில் ஐஸ்வர்யா ராஜேஷ். கெட்டப்பும் மேக்கப்பும் நடிப்பும் அக்கிரஹார பாஷையும் அந்தோ பரிதாபம்... கீர்த்தி சுரேஷ் விரட்டி விரட்டிக் காதலித்து, கொஞ்சமாக நடித்திருக்கிறார்.  சூரி காமெடி, எப்போதாவது சிரிக்கவைக்கிறது.

ஆரம்பத்தில் இலங்கைத்தமிழ் மாதிரி செந்தமிழ் பேசி, பிறகு நெல்லைத்தமிழ் மாதிரி மதுரைத்தமிழில் பேசி... படம் முழுக்கக் கோபப்பட்டுக்கொண்டேயிருக்கிறார் வில்லன் பாபி சிம்ஹா.

ஆக்‌ஷன் படத்துக்கான டெம்போ கூட்டுகிறது ப்ரியன் மற்றும் வெங்கடேஷ் அங்குராஜின் ஒளிப்பதிவு. டிஎஸ்பி-யின் தீம் இசையில் மட்டும் அதிரடி.

4X வேகத்தில் படம் எடுக்கும் ஹரி, இதில் 8X வேகம் தொட முயற்சி செய்திருப்பார் போல. எடிட்டர் வி.டி.விஜயனும், டி.எஸ் ஜேயும் பரபரப்பில் தன் விரலையும்கூட இரண்டு இன்ச் கட் செய்திருக்கலாம்.

‘கட்டுன பொண்டாட்டியா இருந்தாக்கூட வாடி போடினு கூப்பிடக் கூடாது!’ என அட்வைஸ் செய்கிற விக்ரம் இன்னொரு காட்சியில் கீர்த்தி சுரேஷின் செவுள் பிய்யும் அளவுக்கு அறை கொடுத்து உட்காரவைக்கிறார். ‘இன்னுமா சாதியெல்லாம் பார்க்குறாங்க?’ என்று ஹீரோ கேட்கிறார், சில காட்சிகளுக்குப் பிறகு ‘உன்னை இந்த அடையாளத்தோடுதான் வளர்த்தேன்’ என ஹீரோவிடம் பூணூலைத் தொட்டுக் காண்பிக்கிறார் டெல்லி கணேஷ் (2031-ல்).  இப்படி முன்னுக்குப் பின் முரண்கள் ஏராளம்.

அவரை இவர் பழிவாங்குகிறார், இவரை அவர் பழிவாங்குகிறார் என்று பார்ட், பார்ட்டாகப் படமெடுத்து ஹரி நம்மை பார்ட், பார்ட்டாகக் கழற்றிப் பழிவாங்கப்போகிறார் என்பது மட்டும் இந்த ஸ்கொயரில் நன்றாகத் தெரிகிறது.

- விகடன் விமர்சனக் குழு