Published:Updated:

"சுட்டுத் தள்ளிட்டா எல்லாப் பிரச்னையும் தீர்ந்துடுமா?!" - 'துப்பாக்கி முனை' விமர்சனம்

"சுட்டுத் தள்ளிட்டா எல்லாப் பிரச்னையும் தீர்ந்துடுமா?!" - 'துப்பாக்கி முனை' விமர்சனம்

விக்ரம் பிரபு, ஹன்சிகா, எம்.எஸ்.பாஸ்கர், வேல.ராமமூர்த்தி நடிப்பில் வெளியாகியிருக்கும், 'துப்பாக்கி முனை' திரை விமர்சனம்.

"சுட்டுத் தள்ளிட்டா எல்லாப் பிரச்னையும் தீர்ந்துடுமா?!" - 'துப்பாக்கி முனை' விமர்சனம்

விக்ரம் பிரபு, ஹன்சிகா, எம்.எஸ்.பாஸ்கர், வேல.ராமமூர்த்தி நடிப்பில் வெளியாகியிருக்கும், 'துப்பாக்கி முனை' திரை விமர்சனம்.

Published:Updated:
"சுட்டுத் தள்ளிட்டா எல்லாப் பிரச்னையும் தீர்ந்துடுமா?!" - 'துப்பாக்கி முனை' விமர்சனம்

ட்டத்தை சாதகமாக்கி, குற்றவாளிகளுக்கு என்கவுன்டரே சிறந்த தண்டனையெனத் திரியும் முரட்டுத்தனமான போலீஸ் அதிகாரிக்கு, துப்பாக்கி குற்றங்களுக்குத் தீர்வல்ல எனப் புரியவைத்தால், அதுவே 'துப்பாக்கி முனை'.

33 என்கவுன்டர்கள், பலமுறை சஸ்பெண்டு, டிரான்ஸ்ஃபர் எனக் குற்றவாளிகளை வேட்டையாடும் போலீஸ் அதிகாரி, பிர்லா போஸுக்கு சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற ஒருவனைப் போட்டுத்தள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. வழக்கம்போல துப்பாக்கியைத் தூக்கி புல்லட்டை நிரப்பும் பிர்லா போஸுக்கு, குற்றவாளியாகச் சொல்லப்படும் ஆசாத் என்பவரை என்கவுன்டர் செய்வதில் சில தடங்கல்கள். முன்னாள் மாவோயிஸ்ட்டான ஆசாத்துக்கும், நடந்த கொலைக்கும் சம்பந்தமில்லை எனத் தெரிய வரவே, உண்மைக் குற்றவாளிகளைத் தேடித் திரிகிறார், பிர்லா. சிறுமியைக்  கொன்றது யார், ஆசாத் மீது பழிசுமத்த என்ன காரணம், ஆசாதுக்கு என்று எடுத்துவைத்த பிர்பா போஸின் துப்பாக்கி தோட்டா, என்ன ஆனது... என்பதை வழக்கமான சினிமாவாகக் கொடுத்திருக்கிறார்கள்.

பெண் குழந்தைகள் மீது அனுதினமும் நடக்கும் பாலியல் வன்கொடுமைப் பிரச்னையை முக்கியக் களமாகப் புகுத்தி, திரைக்கதையில் த்ரில் சேர்க்க முயற்சித்திருக்கும் இயக்குநர் தினேஷ் செல்வராஜுக்கு வாழ்த்துகள்.  

பிர்லா போஸ் கேரக்டரில், விக்ரம் பிரபு. 45 வயது போலீஸ் அதிகாரியெனச் சொல்கிறார்கள். நான்கைந்து நரைத்த முடி, அந்த நேர்த்தியைக் கொடுக்கவில்லை. எப்போதும் பரபரப்பாகத் திரிவது, முறைப்பாகவே இருப்பது, குற்றவாளிகளைச் சுட்டுத் தள்ளுவதில் பரவசம் அடைவது... எனக் கேரக்டருக்குக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். டைட்டில் கார்டு கலர்ஃபுல்லாக இருக்கட்டும் என ஹன்சிகாவின் கால்சீட்டைக் கேட்டிருப்பார்கள் போல! மொத்தமே சில காட்சிகள்தான். வழக்கமாக ஆக்‌ஷன் படங்களின் பாடல் காட்சிகளாவது ஹீரோயின்களின் இருப்பை தக்கவைக்கும். இந்தப் படத்தில் பாடல்களும் இல்லாததால், ஹன்சிகாவுக்கு வேலையே இல்லை. 

சலூன்கடை எம்.எஸ்.பாஸ்கர் கேரக்டர் கவனிக்க வைக்கிறது. மகளின் சிரிப்பிற்காகவே வாழ்வது, அவள் சந்தோஷத்தை ரசிப்பது, காணாமல்போன பிறகான பரிதவிப்பு, சர்ச்சில் அழும் காட்சி, க்ளைமாக்ஸில் கொஞ்சம் ஆக்‌ஷன் போர்ஷன்... என இவரது கேரக்டர், ரசனை. அதை நடிப்பாலும் கடத்தியிருக்கிறார், எம்.எஸ்.பாஸ்கர். அதே முறைப்பு, விரைப்பு எனக் கடந்துபோகிறார், வேல.ராமமூர்த்தி. முகம் தெரியாத பல நடிகர்களின் நடிப்பு ஓவர் ஆக்டிங்! இதனாலேயே, சென்டிமென்ட் காட்சிகளில் ஒட்ட முடியவில்லை. 

கேரக்டர்களைவிட அதிகமாக இருக்கிறது, படத்தில் இருக்கும் ஃபிளாஷ்பேக் காட்சிகள். எங்கெல்லாம் ட்விஸ்ட் இருக்கிறதோ, அங்கெல்லாம் ஒரு ஃபிளாஷ்பேக் காட்சியை ஓப்பன் செய்கிறார், இயக்குநர். அவையெல்லாம் சுவாரஸ்யமாக இல்லாததும், 'அடுத்து இதுதான்' என எளிதாகக் கணிக்ககூடியதுமான காட்சிகள், திரைக்கதையைப் பதம் பார்க்கிறது. 

தமிழ்சினிமாவில் பாலியல் வன்முறையை டீட்டெயிலாகக் காட்டும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, ஆபத்தான போக்கு. பெண்களுக்கு எதிரான வன்முறைகளைப் பற்றி மெசேஜ் சொல்ல நினைப்பது சரிதான். ஆனால், அதைச் சொல்லும்விதம் பார்ப்பவர்களை நெளிய வைக்காமல் இருக்கவேண்டும் என்பது மிக முக்கியம். உணர்ச்சிகளைத் திணிக்கிறோம் என்ற பெயரில், அதை விலாவரியாகக் காட்டவேண்டிய அவசியம், படத்தில் இல்லை. காட்சிப் படுத்துவதிலும் கொஞ்சம் கவனமா இருங்க, படைப்பாளிகளே! 

குட்டியான அறிமுகப் பாடலைத் தவிர, படத்தில் வேறு பாடல்கள் இல்லை. பின்னணி இசையில் மெனக்கெட்டிருக்கிறார், எல்.வி.கணேஷ். படத்தின் பெரும் பலம், ராசாமதியின் ஒளிப்பதிவு. ராமேஸ்வரத்தின் மொத்த அழகையும் முடிந்த அளவுக்கு அள்ளி ஃப்ரேம்களை அழகாக்கியிருக்கிறார். கதைக்களம் ராமேஸ்வரம் என்பதால், கோவில் குளத்தைச் சுற்றாமல், கதைக்குத் தேவையான இடத்திலேயே கேமரா பயணித்திருப்பது, கூடுதல் சிறப்பு.

'கொல்றது பாவம்னு சொல்லாம, ஏன் கொல்லாம விட்டீங்கனு கேட்குறீங்களே?', 'ஆணிவேர்ல தப்பை வெச்சுக்கிட்டு, கிளையை வெட்டி என்ன பிரயோஜனம்?' என சில வசனங்கள் ஈர்ப்பு. 'நீங்க பண்ற ஆபரேஷன் மாதிரிதான், இந்த என்கவுன்டர்' என டாக்டர் அம்மாவிடம், போலீஸ் மகனான விக்ரம் பிரபு சொல்வது, பொருந்தாத வசனம்.

வடமாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு வரும் பீகாரைச் சேர்ந்த முன்னாள் மாவோயிஸ்ட் ஆசாத்தை, செய்யாத குற்றத்துக்கு சிக்கவைத்ததில் இருந்துதான் படத்தின் கதை தொடங்குகிறது. ஆனால், ஏன் சம்பந்தமில்லாமல் அவன் சிக்கவைக்கப்பட்டான் என்பதற்கான காட்சிகள் படத்தில் இல்லை. சிக்கினால், தன் உயிருக்கே ஆபத்து என்ற அளவுக்கு முக்கியமான அந்த ஃபேக்ஸை, ஏதோ டீ சொல்லிவிட்டுக் கிளம்புவதுபோல, 'எடுத்து வைங்க... வரேன்' என்பதுபோலச் செல்கிறார், விக்ரம் பிரபு. காயின் போனில் பேசினால், கடைசியாகப் பேசியது யாருடன் என்று வில்லன் கோஷ்டிகுத் தெரிந்துவிடும் என்பதுகூடவா, அத்தனை பெரிய பொறுப்பில் இருக்கும் பிர்லா போஸுக்குத் தெரியாது... இப்படிப் படத்தில் லாஜிக் மிஸ்டேக் வரிசை கட்டி நிற்கிறது.

என்கவுன்டருக்காக எடுத்துவைக்கப்பட்ட அந்த புல்லட் பயன்படும் விதம், துப்பாக்கிக்கு ஏற்படும் கதியெனப் படத்தில் அழகான காட்சிகள் இருந்தாலும், அவைப் படமாக்கப்பட்ட விதம் அழகியலாக இல்லை. சிறுமிக்கு எதிரான பாலியல் வன்முறையை, த்ரில்லர் களத்தில் சொல்ல நினைத்த இயக்குநர் தினேஷ் செல்வராஜ், அதை இன்னும் கொஞ்சம் ஷார்ப்பாக சொல்லியிருந்தால், துப்பாக்கி முனை பயமுறித்தியிருக்கும்