Published:Updated:

`எவ்வளவு செலவுனு இதுவரை சிவா சொல்லவே இல்லை' - `கனா’ விழாவில் நெகிழ்ந்த அருண்ராஜா காமராஜ்!

`எவ்வளவு செலவுனு இதுவரை சிவா சொல்லவே இல்லை' - `கனா’ விழாவில் நெகிழ்ந்த அருண்ராஜா காமராஜ்!
`எவ்வளவு செலவுனு இதுவரை சிவா சொல்லவே இல்லை' - `கனா’ விழாவில் நெகிழ்ந்த அருண்ராஜா காமராஜ்!

சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ள படம் `கனா’. மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை சிவகார்த்திகேயன் நண்பரும், படலாசிரியருமான அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாகவும், அவருக்குத் தந்தையாக சத்யராஜும் நடித்திருக்கிறார்கள். சிவகார்த்திகேயனின் மற்றொரு நண்பர் திபு நிணன் தாமஸ் இசையமைத்திருக்கிறார். சிவகார்த்திகேயன் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். படத்தில் வரும் `வாயாடி பெத்த புள்ள..’ என்ற பாடலை சிவகார்த்திகேயனும், அவரின் மகள் ஆராதனா பாடியுள்ளனர். இந்தப் பாடல் சமீபத்தில் வெளியாகி செம வைரலாகியது.   

கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பெண்ணின் கிரிக்கெட் கனவு, மகளின் கனவை நிறைவேற்றத் துடிக்கும் தந்தை, இதுதான் திரைப்படத்தின் மையக் கதை. படத்தின் டீசர், டிரெய்லர் வெளியாகிப் பேசப்பட்டது. படம் வரும் 21-ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த நிலையில், படத்தின் பிரஸ் மீட் நேற்று நடைபெற்றது. இதில் சிவகார்த்தியன் சில பணிகள் காரணமாக கலந்துகொள்ளவில்லை. அதேநேரம் படத்தில் பணியாற்றிய ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  

அப்போது பேசிய அருண்ராஜா காமராஜ், ``இந்தப் படத்துக்கு எவ்வளவு செலவுகள் ஆனது என்று இதுவரை என்னிடம் சிவாவும், இணை தயாரிப்பாளர் கலையும் சொல்லவில்லை. நான் கேட்டுக்கொண்டே இருப்பேன். ஆனால் `அது எதுக்கு உனக்கு, நீ போய் படம் பண்ணு. எதையும் யோசிக்காம படம் பண்ணுங்க' என்று கூறிவிட்டார்கள். இதுமாதிரி அனைவருமே நன்றாகவே பார்த்துக்கொண்டார்கள். சத்யராஜ் சார், ஐஸ்வர்யா ராஜேஷ், டெக்னீஷியன்கள் என அனைவரும் நன்றாகவே பார்த்துக்கொண்டார்கள். 

சத்யராஜ் சாரிடம் முதலில் நன்றாகவே கதை சொல்லவில்லை. ஆனால், என்னை நம்பி படத்தில் நடித்துக்கொடுத்தார். இதேபோல் இந்தப் படத்துக்காக என்  நண்பர்கள் நிறைய உழைத்துள்ளனர். அவர்கள் தான் என்னை இயக்குநராகப் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டார்கள். அவர்கள் இல்லையென்றால் இங்கு நான் இல்லை. மொத்தத்தில் நண்பர்களால் சூழப்பட்டவன் நான். அவர்கள் என்னைக் கைவிடப் போவதில்லை" என்று நெகிழ்ந்து பேசினார். 

விழாவில் பேசிய சத்யராஜ், ``இங்கு இருக்கும் உங்களுக்கு இந்தப் படம் தமிழகத்தில் வெற்றிபெற வேண்டும் எனக் கனவு இருக்கும். ஆனால், டங்கல் மாதிரி கனா படம் சீனாவில் சூப்பர் ஹிட் அடிக்க வேண்டும். அது தான் கனவு. விளையாட்டைப் பற்றி எடுக்கக்கூடிய படம் எங்கு வேண்டுமானாலும் ஹிட் அடிக்கும். இதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன. அருண்ராஜா காமராஜ் நல்ல சமூக சிந்தனை உள்ளவர். அவர் கண்டிப்பாக வெற்றிபெறுவார்" என்றார்.