தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

‘போதும் நம் வாழ்க்கை’னு நினைக்கக் கூடாது! - சுஹாசினி

‘போதும் நம் வாழ்க்கை’னு நினைக்கக் கூடாது! - சுஹாசினி
பிரீமியம் ஸ்டோரி
News
‘போதும் நம் வாழ்க்கை’னு நினைக்கக் கூடாது! - சுஹாசினி

எனக்குள் நான்

இன்றைய ஹீரோக்கள் யாரும் ஹேண்ட்சம்மாக இல்லை என்று ஒரு நிகழ்ச்சியில் உங்கள் கருத்தைச் சொல்லியிருந்தீர்கள். இன்றும் அதே கருத்துடன் இருக்கிறீர்களா?

ஹீரோக்கள் ஹேண்ட்சம்மா இல்லைனு நான் சொல்லலை. படங்கள்ல அவங்க ஹேண்ட்சம்மா இருக்கிற மாதிரி பிரெசன்ட் பண்ணிக்கிறதில்லை. தாடியும் மீசையுமா இருக்காங்கன்னுதான் சொன்னேன். அதை நான் சொல்லி மூணு, நாலு வருஷங்களாச்சு. பெண்கள் மட்டும்தான் அழகா இருக்கணுமா... ஆண்கள் ஹேண்ட்சம்மா இருக்க வேண்டாமா?

மலேசியா அமைச்சரவை யிலேருந்து என்னை அணுகி, `குரூமிங் ஆஃப் மென்' பற்றிச் சொல்லிக்கொடுக்கணும்னாங்க. `மலேசியப் பெண்கள் பலர் தமிழ் ஆண்களைக் கல்யாணம் பண்ணாம, பாகிஸ்தான் ஆண்களைக் கல்யாணம் பண்ணிக்கிறாங்க. அதனால இந்த ஆண்களுக்கு இன்னும் கொஞ்சம் குரூமிங் வேணும்'னு சொன்னாங்க. மாப்பிள்ளையா வர்றதுக்கே குரூமிங் வேணும்னா, ஹீரோவா வர எவ்வளவு குரூமிங் வேணும்? `அழகா இருக்கிற ஹீரோக்களை கசகசனு காட்டாம, இன்னும் கொஞ்சம் ஹேண்ட்சம்மா காட்டுங்க'னு சொன்னேன். அதுவும் குறிப்பிட்ட  ஒரு படத்துக்குச் சொன்னேனே தவிர, நம்ம ஹீரோஸ் எல்லோருமே எப்பவுமே ஹேண்ட்சம்தான்!

கமல், ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய உங்கள் கருத்து? இருவரில் நீங்கள் யார் பக்கம்?


ரஜினி ரொம்ப ஜனரஞ்சகமானவர். அவர் அரசியலுக்கு வருவதை மக்கள்  விரும்புவாங்கனு நினைக்கிறேன்.  அரசியல் பற்றி கமலுக்கு நல்லா தெரியும். பொது அறிவு, படிப்பறிவு எல்லாம் உண்டு. நல்ல உழைப்பாளியும்கூட. அவர் அரசியலுக்கு வந்தாலும் நல்லதுதான். அதனால ரெண்டு பேருமே அரசியலுக்கு வரலாம். நான் யார் பக்கம்னு உங்களுக்கே தெரியும்!

‘போதும் நம் வாழ்க்கை’னு நினைக்கக் கூடாது! - சுஹாசினி

80'ஸ் சந்திப்பு... அதன் ஆரம்பம் என்ன?

ஒரு கல்யாணத்துல நானும் லிஸி லட்சுமியும் நடிகர் மோகனைச் சந்திச்சோம். ரொம்ப சந்தோஷமா இருந்தது. `என் வீட்டுல ஒரு கெட் டுகெதர் வைக்கலாம். 80-கள்ல நடிச்சவங்கள்ல உன்னோடு இப்ப தொடர்புல இருக்கிறவங்களை நீ  கூப்பிடு.  என்னோடு தொடர்புல இருக்கிறவங்களை நான் கூப்பிடுறேன்'னு லிஸி சொன்னாங்க. அப்படித்தான் ஆரம்பமாச்சு.

ரஜினி, சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், மோகன்லால் எல்லோரையும் நாங்க பார்க்கும்போது கூப்பிட்டதுதான்.  ஷோபனா, நான், ரேவதி, ராதிகா, நதியா, ரம்யா, பூர்ணிமா, குஷ்பூ... எல்லாரும் அடிக்கடி மீட்பண்ணிக்கிறவங்கதான். ரெண்டாவது வருஷத்துல `நாங்களும் சேர்ந்துக்கிறோம்’னு சரத்குமாரும் ரம்யாவும் கேட்டுக்கிட்டு வந்தாங்க. அதுக்கப்புறம் ஜெயசுதா, ஜாக்கி ஷ்ராஃப்,  பூனம் தில்லான் வந்தாங்க. இப்ப நாங்க எல்லோரும் ஒரு குடும்பமா இருக்கோம். முதல் மீட்டிங் 2009-ல் நடந்தது. இப்போ

35 பேர் இருக்கோம். நாங்க சேர்ந்து ஹாலிடே போறோம். வாராவாரம்  சந்திச்சுக்கிறோம்.

உங்களுக்கு 57 வயதாமே! `57 இயர்ஸ் யங்' என்கிற மாதிரி இருக்கிறீர்கள். என்ன ரகசியம்? (சந்தோஷமான குடும்பம், அமைதியான, நிறைவான வாழ்க்கை என்கிற மாதிரியான பதில்களைத் தாண்டி உண்மையிலேயே உங்கள் இளமை ரகசியம் சொல்லுங்கள், ப்ளீஸ்...)

‘போதும் நம் வாழ்க்கை’னு நினைக்கக் கூடாது! - சுஹாசினி


நல்ல அப்பா அம்மா, சந்தோஷமான குடும்பம் அமைஞ்சாலும் முகத்துல சுருக்கம் வரத்தானே செய்யும்? நம்ம முகத்தை நாமதான் பார்த்துக்கணும். நிறைய தண்ணீர் குடிக்கணும். வெஜிடேரியன் உணவு சாப்பிடணும். நல்லா உடற்பயிற்சி செய்யணும். கொஞ்சம் குண்டா இருக்கோம்னு தோணினா உணவைக் குறைச்சும் உடற்பயிற்சி செய்தும் சரிபண்ணிக்கலாம். நாங்க இன்னும் நடிச்சிக்கிட்டிருக்கோம். அதுக்காக எங்க முகத்தையும் தோற்றத்தையும் பார்த்துக்கவேண்டியது எங்க கடமை.

எனக்கு பிளாஸ்டிக் சர்ஜரியில் நம்பிக்கையில்லை. டயட்டில் நம்பிக்கை உண்டு. `அரிசி மீது உள்ள அபரிமிதமான பிரியத்தை விட்டால் நல்லா இருக்கலாம்'கிறது என் கணிப்பு. அது தப்பாகக்கூட இருக்கலாம். அரிசி இல்லாம இருக்கிறது எனக்கு சூட்டாகுது. அவ்வளவுதான்!

ரேவதி, ரோகிணி என உங்கள் நட்பு இன்றும் தொடர்கிறது. திருமணத்துக்குப் பிறகு பெண்களுக்குப் பெரும்பாலும் சாத்தியப்படாத நட்புலகம் பற்றி உங்கள் கருத்து என்ன?

நான் ஸ்கூல்ல படிக்கும்போது எனக்கு நண்பர்கள் கிடையாது. `உனக்கு ஃப்ரெண்ட்ஸே இல்லை... நீ யாரையும் வீட்டுக்குக் கூட்டிட்டு வர மாட்டேங்கிறே’ன்னு அம்மா ரொம்ப வருத்தப்படுவாங்க. இப்ப எனக்கு நிறைய நல்ல ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. பெண்களுக்குப் பெண்களுடன் நட்பு ரொம்ப முக்கியம். ஆண்கள்கிட்ட நம் பிரச்னைகளையோ, சில சந்தேகங்களையோ கேட்க முடியாது. ஒரு படத்துல நடிக்கிறதுக்கு முன்னாடியே எவ்வளவு சார்ஜ் பண்ணலாம், அந்தப் படத்துல நான் நடிக்கலாமா, அந்தக் கதை நல்லா இருக்கான்னு குஷ்பூகிட்டயோ, ரேவதிகிட்டயோ, பூர்ணிமாகிட்டயோ கலந்தாலோசிப்பேன். தொழில்முறையிலும் பெண்களோட நட்பு இருக்கிறது ரொம்ப நல்லது. ரேவதி இப்ப ஒரு சீரியலில் நடிக்கிறாங்கன்னா, அவங்க காஸ்ட்யூம்ல நாங்க உதவி பண்ணுவோம். ரோகிணியும் நானும் நிறைய புராஜெக்ட் சேர்ந்து பண்ணுவோம். 

கல்யாணத்துக்குப் பிறகு கணவருக் காகவும் குடும்பத்துக்காகவும் குழந்தை களுக்காகவும் பார்த்து நமக்குன்னு இருக்கிற நட்பைக் குறைச்சுக்கவே கூடாது. என் கணவர் என்னுடைய ஃப்ரெண்ட்ஸை மதிப்பார். எனக்கு யாரையெல்லாம் பிடிக்குமோ அவங்களை அவருக்கும் பிடிக்கும். கணவர் அப்படித்தான் இருக்கணும். கணவருக்கும் குழந்தைகளுக்கும் நம் நட்பின் அருமை தெரியணும். அந்தவிதத்தில் நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி!

‘போதும் நம் வாழ்க்கை’னு நினைக்கக் கூடாது! - சுஹாசினி

`இந்தத் தலைமுறையில் ஹீரோயினாக இருந்திருக்கலாமோ' என எப்போதாவது யாரைப் பார்த்தாவது நினைத்திருக்கிறீர்களா?

தமிழ்ப் படங்கள்ல நடிகைகளின் சம்பளத்தைப் பார்த்துதான் அப்படி நினைச்சிருக்கேன். ஆனா, இந்திப் படங்கள்ல வித்யாபாலன், கங்கணா, தீபிகா படுகோன் எல்லாம் நடிக்கிற சில அர்த்தமுள்ள படங்களைப் பார்க்கும்போது அப்படித் தோணியிருக்கு. ஆனாலும், பாலசந்தர், பாரதிராஜா, மகேந்திரன், கே.விஸ்வநாத், பரதன், பத்மராஜன், சிபி மலயில் படங்களில் எனக்குக் கிடைச்ச கேரக்டர்ஸ் இப்ப இருக்கிற ஹீரோயின் களுக்குக் கிடைக்க சான்ஸே இல்லை.

எண்டார்ஸ்மென்ட், விளம்பரப் படம், டி.வி ஷோஸ்னு இப்போதுள்ள ஹீரோயின்ஸுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கு. எங்க காலத்துல சினிமாவுல நடிக்கிறதைத் தவிர வேற எந்த வாய்ப்பும் கிடையாது. அதைப் பார்க்கும்போது இந்த பீரியடுல ஹீரோயினா இருந்திருக் கலாமேன்னு தோணுது.

யாருடைய பயோபிக்கில் நடிக்க ஆர்வம்?

தெரியலையே... அதை டைரக்டர்தான் முடிவு பண்ணணும். ஸ்க்ரிப்ட் நல்லா இருக்கணும். எம்.எஸ்.சுப்புலட்சுமியோட பயோபிக்கில நடிக்கலாம். ரொம்ப நல்லா இருக்கும். ஆனா, அவங்களுடைய முகச்சாயல் எனக்கு இருக்கான்னு தெரியலையே!

உங்களின் நேரத்தை நீங்களே எப்படி வடிவமைத்துக்கொள்கிறீர்கள்?


காலையில் எழுந்ததும் 6 மணி முதல் 8 மணி  வரை என் நேரம்தான். அப்போது வாக்கிங், யோகா, ஸூம்பானு ஏதோ ஒண்ணு நடக்கும். நண்பர்களோடு பேசிக்கிட்டே வாக்கிங், யோகா செய்வேன். ஹெட்போன்ல எனக்குப் பிடிச்ச மியூசிக் கேட்பேன்.

எனக்குச் சின்னச் சின்ன அல்ப விஷயங்கள் பிடிக்கும். `அடல்ட் கலரிங்'னு ஒண்ணு இருக்கு. அதை வெச்சு கலர் பண்ணிட்டிருப்பேன். கார்ப்பெட் வீவிங் பண்ணுவேன். நாயை வாக்கிங் கூட்டிட்டுப் போறவங்க  நாயின் கழிவுகளை அங்கேயே விட்டுட்டுப் போவாங்க. நானும் என் அம்மாவும் எங்க கையால பேப்பர் பேக் பண்ணி எல்லாருக்கும் கொடுப்போம்.

`நாம் பவுண்டேஷன்’ல இருக்கிற பெண்களுக்கு மடிசார் புடவை எப்படிக் கட்டணும்னு சொல்லிக்கொடுத்து ஒரு கல்யாணத்துக்கு வொர்க் பண்ணவெச்சு அவங்களுக்குப் பணம் வாங்கிக் கொடுத்தோம். இந்த மாதிரி விஷயங்கள் எனக்கு சந்தோஷத்தைக் கொடுக்கிறது. இப்படித்தான் எனக்கான நேரத்தை  டிசைன் பண்ணிக்கிறேன். இதைத் தவிர, நான் வீட்டுக்காகச் செய்யறது, ஆபீஸுக்காகச் செய்யறது, சமூகத்துக்காகச் செய்யறது, என் தொழிலுக்காகச் செய்யறது, என் ஃப்ரெண்ட்ஸுக்காகச் செய்யறதுனு நிறைய இருக்கு.

பாலியல் வன்முறை பற்றி, திரைத்துறைப் பெண்கள் பரவலாகப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். உங்களுடைய சினிமா குடும்பப் பின்னணி உங்களுக்குக் கவசமாக இருந்ததா?

``இந்தக் கவசமெல்லாம் ஓரளவுக்குதான் இருக்கும். அதுக்கப்புறம் நாமதான் நம்மளைக் காப்பாத்திக்கணும். அது சினிமா, ஐ.டி., போலீஸ், மெடிக்கல்... எந்தத் துறையா இருந்தாலும் சரி. பெண்கள் அங்கே இருக்கும்போது நிச்சயமாக வன்முறை இல்லாம இருக்காது. அது எவ்வளவு  இருக்கு, அதுல நாம எப்படி  மாட்டிக்கிறோம், அதிலிருந்து எப்படித் தப்பிக்கணும், வராம எப்படித் தடுக்கணும், வந்தா எப்படி எதிர்க்கணும் எல்லாமே அவங்க அவங்க கையிலதான் இருக்கு. இது  நாளைக்கே முடியப்போற பிரச்னை இல்லை. பெண்கள் `வீக்கர் செக்ஸ்’னு ஆண்கள் நினைச்சுக்கிட்டு இருக்கிற வரையிலும்,  அவங்களோட ஆண்மையைக் காட்டுறதுக்குப் பெண்கள்மேல வன்முறையைப் பயன்படுத்துற வரையிலும் இந்தப் பிரச்னை இருந்துட்டுதான் இருக்கும். இதுல திரைத்துறை பெரிய விலக்கு இல்லை. சாதாரண சமூகத்துல இதைவிட நிறைய இருக்கு.

‘போதும் நம் வாழ்க்கை’னு நினைக்கக் கூடாது! - சுஹாசினி

நீங்கள் சொல்வது சரிதான். என் குடும்பப் பின்னணி ஒரு கவசமா இருந்தது. அதைவிட என்னுடைய தன்னம்பிக்கை பெரிய கவசமாக இருந்தது. எனக்கும் சில பிரச்னைகள் இருந்துச்சு. இல்லைன்னு சொல்ல மாட்டேன். அந்தப் பிரச்னையை நாம எப்படி எதிர்த்து வர்றோம்கிறதுதான் முக்கியம். பிரச்னை இல்லாம எந்தப் பெண்ணுமே வாழ முடியாது. இந்த இண்டஸ்ட்ரியில பெண்களை மதிக்கிறவங்க நிறைய பேர் இருக்காங்க. பெண்களுக்குத் தனி மரியாதை கொடுக்கிறவங்களும் இருக்காங்க. ரெண்டு பக்கமும் நீங்க பார்க்கணும். பாலியல் வன்முறையைச் சந்திக்கிற பெண்களின் பிரச்னைகளை, முடிஞ்சளவுக்கு தீர்த்து வெச்சிருக்கேன். இப்பவும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடக்கும்போது எனக்கு வயிறு எரியும். என்னால முடிஞ்ச முயற்சிகளை செஞ்சுக்கிட்டுதான் இருக்கேன்.

சமூக சேவை... `நாம் ஃபவுண்டேஷன்’... இந்த ஆர்வங்கள் எப்படி வந்தன?

என் தாத்தா, தேசப் போராட்ட வீரர். நாட்டின் சுதந்திரத்துக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். அவருடைய பேத்தியான நான் எப்படி சமூக சேவை செய்யாம இருக்க முடியும்? எங்கப்பா சம்பளமே வாங்காம கேஸ் எல்லாம் நடத்திக்கொடுப்பார். எங்க அம்மாவும் பாடம் சொல்லிக் கொடுக்கிறது, பணம் கொடுக்கிறதுனு எல்லாருக்கும் உதவி பண்ணுவாங்க.

முப்பாத்தம்மன் கோயில் திருவிழா நடக்கும்போது பக்கத்து வீட்டில் இருக்கிறவங்களோடு போய் கும்மி அடிச்சு கோலாட்டம் போட்டு அதில் கிடைக்கிற பணத்தை எடுத்துக்கிட்டுப் போய்  வசதியில்லாதவங்களுக்கு எண்ணெய், சீயக்காய், புதுத்துணியெல்லாம் வாங்கிக் கொடுத்து அவங்களை திருவிழாவுக்கு வரவழைப்போம். சின்ன வயசிலேயே கிராமத்துல எங்களுக்குச் சொல்லிக் கொடுத்துட்டாங்க. 40, 50 வயசுல சமூக சேவை இல்லாமல் எப்படி இருக்க முடியும்?

2010-ம் வருஷம் `நாம்' என்ற அமைப்பை ஆரம்பிச்சோம். தனித்து வாழும் பெண்களுக்கான ஓர் அமைப்பு. அந்த அமைப்புக்கு நான் டைரக்டர். அந்த அமைப்புல 350 பேர் இருக்காங்க. குழந்தைங்களை இன்ஜினீயரிங் வரை படிக்கவெச்சிருக்கோம். கிட்டத்தட்ட 20, 30 பட்டதாரிகள் உருவாகியிருக்காங்க. இந்த 350 பெண்களுக்கும் தன்னம்பிக்கையோடும் சந்தோஷத்தோடும் வாழ்வதற்கான ஆர்வத்தை நாங்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கோம்.

உங்களுக்குக் கடவுள் பக்தி கிடையாதாமே... கமல் சார் கத்துத்தந்தாரா?

கமல் சார் ஆக்டிங் கத்துக்கொடுத்தா பரவாயில்லை. இந்த விஷயத்தை நிச்சயமா கத்துக்கொடுக்கலை. எங்க அப்பா பகுத்தறிவாளர். அவர்கிட்ட இருந்து எனக்கு வந்திருக்கலாம். கடவுள் பக்தி இருக்கிறவங்களைப் பார்த்தா எனக்கு ரொம்ப மரியாதை. கோயில், சர்ச் மாதிரியான இடங்கள்மீது எனக்கு ரொம்ப ஆர்வமுண்டு. நம்பிக்கை என்பது உன்னதமான விஷயம்.

அதனால ஏதாவது ஒரு பெயர் சொல்லி என்னை லேபிள் பண்ணிடாதீங்க.  ஆனா, இதுவரைக்கும்  நான்  `என்னைக் காப்பாத்து, என்னைச் சந்தோஷமா வெச்சிக்கோ, என் குடும்பத்தைக் காப்பாத்து, எனக்கு  நிறைய பணம் வரணும்’னு வேண்டிக்கிட்டதில்லை. அதனால நீங்க என்னை வித்தியாசமா பார்க்கலாம். எல்லாரும் சந்தோஷமா இருக்கணும். எல்லாரும் நல்லா இருக்கணும். கேரளாவுல பெரிய வெள்ளம் வந்தது. மனசு பதறிப்போச்சு. ஏதாவது ஒரு சக்தி இவங்களைக் காப்பாத்தக் கூடாதான்னு தோணினது. அப்படிப்பட்டவதான் நான். நாம சந்தோஷமா இருந்துட்டு, சுத்தி இருக்கிறவங்களையும் சந்தோஷமா, நிம்மதியா வாழவைப்போமே.

‘போதும் நம் வாழ்க்கை’னு நினைக்கக் கூடாது! - சுஹாசினி

செய்ய நினைக்கிற விஷயங்கள்?

வாழ்க்கை, நான் என்ன செய்யணும்னு சொல்லுதோ அதைத்தான் செய்றேன். குறிப்பா, ஒரு திட்டம் வெச்சுக்கிறதில்லை.  சுத்தி இருக்கிறவங்களுக்கு ஏதாவது நல்ல விஷயம் செய்யணும். சென்னை, நம்ம தமிழ்நாடு உதாரணமான சிட்டியாவும் மாநிலமாவும் வரணும்கிறது என் ஆசை. அரசியல் கலக்காம வேற விதமா இதை எப்படிச் செய்யணும்னு யோசிச்சிட்டிருக்கேன். அரசியல் கலப்பில்லாமல் மக்கள் பணி செய்யணும்.

நிறைவேறாத ஆசைகள் ஏதேனும்?

நான் ஸ்போர்ட்ஸ் வுமனா இருந்து, இப்ப சிந்து, சாய்னா நேவால், சானியா மிர்ஸா மாதிரி  நிறைய சாதிக்கணும்னு நினைச்சேன். நான் அத்லெட்டிக் சாம்பியனும்கூட. ஸ்கூலிலும் காலேஜிலும் நிறைய பரிசுகள் வாங்கியிருக்கேன். அதைத்தொடர்ந்து பண்ண முடியலையேனு  வருத்தம் உண்டு. 40 வயசுல புதுசா டென்னிஸ்கூட கத்துக்கிட்டேன். ஆனா, இப்போ பெருசா விளையாடுறதில்லை. ஸ்போர்ட்ஸ்ல பெருசா ஜொலிக்கலையேங்கிறது இப்போதும் நிறைவேறாத ஆசைதான்.

திர்காலத் திட்டங்கள்?

50-களின் கடைசியில் இருக்கும் எனக்கு, ஒவ்வொரு நாளும் போனஸ்தான். இன்னிக்கு இருக்கிறதைவிட நாளைக்கு நான் சந்தோஷமா இருக்கணும், நலமாக இருக்கணும். சுத்தி இருக்கிறவங்க நல்லா இருக்கணும். எதிர்காலத்தை எதிர்நோக்கி இருக்கணும். `போதும் நம் வாழ்க்கை'னு நினைக்கக் கூடாது. அடுத்தடுத்த நாளை நான் வரவேற்கணும்னு ஆசைப்படுகிறேன். ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்திருக்கும்போத அந்த நாள் சந்தோஷமா இருக்கணும்.

- ஆர்.வைதேகி