சினிமா
Published:Updated:

பல்து பிக்காலுமா குபீலு!

பல்து பிக்காலுமா குபீலு!
பிரீமியம் ஸ்டோரி
News
பல்து பிக்காலுமா குபீலு!

ஓவியம்: கார்த்திகேயன் மேடி

`சர்கார்’ படத்தின் சிங்கிள் ட்ராக் `சிம்ட்டாங்காரன்’ பாடலின் வரிகள் நிறைய ஆச்சர்யத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. `இந்தப் பாட்டோட தமிழ் வெர்ஷன் எப்போ வரும்’ என்ற லெவலில் குழம்பிப்போய்க் கிடக்கிறார்கள் பலர். இது தமிழ்தான் எனப் புரிந்துகொண்ட சிலரோ,  வரிகளுக்கு அர்த்தம் தெரியாமல் குழம்பி நிற்கிறார்கள். ஆகவே, இந்த முயற்சி. சிம்ட்டாங்காரன் பாடல் என்ன சொல்லவருகிறதென அடிமட்டம் வரை அலசிப்பார்த்து அர்த்தங்கள் கண்டுபிடித்திருக்கிறோம். இந்தாங்கோ...

பல்து பிக்காலுமா குபீலு!

“பல்டி பார்க்குற
டர்ல வுடணும் பல்து
வேர்ல்டு மொத்தமும்
அர்ல விடணும் பிஸ்து”


`பல்டி பார்க்குற டர்ல வுடணும் பல்து’ என்கிற வரிகளை அக்கு அக்காய்ப் பிரித்துப்பார்த்தால் பொருளுணர முடியும். `பல்டி பார்க்குற’ என்பது `மறுபடியும் சிந்திச்சுப் பார்க்குறேன்’. `டர்ல விடணும் பல்து’ என்பது ‘டயர்ல விழணும் படுத்து.’ அதாவது, அ.தி.மு.க அமைச்சர்கள் செய்த காரியங்களை நமக்கு நினைவுபடுத்துகிறார். `வேர்ல்டு மொத்தமும் அர்ல விடணும் பிஸ்து’ என்பது, ஆற்றுநீர் ஆவியாகாமல் தடுக்க தெர்மாகோலை மிதக்க விட்டது, அணைக்குக் காய்ச்சல் வந்தது என அறிக்கை விட்டது, சாலைக்குப் பூட்டு போட்டுவிடலாம் என ஆலோசனை சொன்னதென ஒட்டுமொத்த உலகையும் அரளவிட்டார்களே அ.தி.மு.க காரர்கள், அதைச் சொல்லவருகிறார்.

“நிக்கலு பிக்கலுமா
தொட்டனா தொக்கலுமா
மக்கரு குக்கருமா
போய் தர்ல உட்காருமா”


`பிக்கல்’ என்றால் பிரச்னை என்றும் எடுத்துக்கொள்ளலாம் அல்லது ஊறுகாய் எனவும் எடுத்துக்கொள்ளலாம். `நிக்கலு’ என்றால் கிளம்பு என்று பொருள். ஊறுகாய் எல்லாம் கிளம்புங்கள். அதாவது சைடிஷ்கள் கிளம்புங்கள் என்கிறார். கிளம்பாமல் பிரச்னை கொடுத்தால், தொடவேண்டிய நிலை வரும். தொட்டால் பிக்கல் தொக்கலாகிவிடும்.  அதாவது, பிக்கல்களுக்கு இருக்கிற குறைந்தபட்ச மரியாதையும் இல்லாமல் போய்விடும் என எச்சரிக்கிறார். இது அ.தி.மு.க-வைக் குறிவைக்கும் வரிகள் என்பதை உணரமுடிகிறது.  மக்கரு குக்கருமா என்ற வரிகளில் டி.டி.வி.தினகரனைத்தான் கலாய்க்கிறார் எனத் தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. `போய் தர்ல உட்காருமா’ என்ற வரிகள் ஜெயலலிதாவின் சமாதியில் ஓ.பி.எஸ் செய்த தர்மயுத்த தியானத்தைச் சுட்டிக்காட்டுகிறது.

பல்து பிக்காலுமா குபீலு!

“பொழிந்தது நிலவோ
மலர்ந்தது கனவோ
ஹாஹாஹாஹா...”


பொழிந்தது நிலவோ என்பது நிலவில் சாய்பாபா தெரிகிறார் எனக் கிளப்பிவிட்டவர்களைக் கிண்டியெடுத்துக் கிண்டலடிக்கும் வரிகள். `மலர்ந்தது கனவோ’ என்ற வார்த்தைகளில் பா.ஜ.க-வைப் புரட்டியெடுக்கிறார். கடைசியாக வரும் `ஹாஹாஹாஹா...’ போலீஸால் தேடப்படும் சிரிப்பு நடிகர் எஸ்.வி.சேகரையும் அவரைத் தேடிக்கொண்டேயிருக்கும் காவல்துறையையும் குறிக்கிறது.

“கொக்கலங்கா கொக்கலங்கா
கொக்கலங்கா குபீலு
ஹைட்ல இருந்து டைவ் அடிச்சா டமாலு 
நம்ம புஷ்ட்டுருக்க
கோட்ட இல்ல”


`சச்சின்’ படத்தில் வரும் `குண்டு மாங்காய் தோப்புக்குள்ளே’ பாடலில் `கொக்கலங்கா குருவிலங்கா குக்குக்கூ’ என்ற வரி வரும். அந்தப் பாடலில் தொப்பை கெட்-அப்பில் விஜய் வருவதே அஜித்தைக் கலாய்க்கத்தான் என அப்போது பேச்சு இருந்தது. அதைத்தான் மறுபடியும் இங்கே லீடாக எடுத்து அஜித்தைக் கலாய்க்கத் தொடங்குகிறார். `ஹைட்ல இருந்து டைவ் அடிச்சா டமாலு’ என்கிற வரி, `விவேகம்’ படத்தில் பல்கேரியா ராணுவத்திடம் தமிழில் பன்ச் அடித்துவிட்டு, தலைகீழாக அணை மேலிருந்து அஜித் குதிப்பாரே, அந்தக் காட்சியைத்தான் குறியீடாகச் சுட்டிக்காட்டிக் கலாய்க்கிறது. `தலதான் அடுத்த முதல்வர்’, `தளபதிதான் அடுத்த முதல்வர்’ என இரு ரசிகர்களும் சட்டசபை போட்டோவை வைத்துக்கொண்டு போஸ்டர் யுத்தம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அதைத்தான் கடைசி இரண்டு வரிகளில் சொல்லியிருக்கிறார். ‘ரசிகர்கள் கோட்டை எனச் சொல்வது ஜார்ஜ் கோட்டையை, நீங்கள் அடிக்கடி அணியும் கோட்டை இல்லை’ என சாதுர்யமாக சாட்டையைச் சுழற்றியிருக்கிறார். `கோட்டையில் எங்கள் சர்கார்’தான் என நம்பிக்கை சொல்கிறார்.

பல்து பிக்காலுமா குபீலு!

“அல்லா ஜுரம் பேட்ட இல்ல
சிரிச்சினுக்கோம் சேட்டையில”


முதல்வரியை யோசித்ததில் எனக்கே ஜுரம் வருவதுபோல் இருந்ததால் சாய்ஸில் விட்டுவிட்டேன். `பேட்ட இல்ல’ என எதைச் சொல்கிறார் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. ஆம், ரஜினியின் அடுத்த படமான `பேட்ட’யைத்தான் சொல்கிறார். `சிரிச்சினுக்கோம் சேட்டையில’ என்பது `பேட்ட’ மோஷன் போஸ்டரைப் பார்த்து விஜய் ரசிகர்கள் கலாய்த்து மீம் போட்டதைச் சொல்லவருகிறது.

“பிசிரு கெளப்பு பிசிரு கெளப்பு
கொக்கலங்கா கொக்கலங்கா குத்தப்போடு”


பிசிரு என்பது உறுத்தலான ஒன்று. அதையெல்லாம் அடித்துக் கிளப்பு என்கிறார். யாரை அப்படிச் சொல்கிறார் என்பது குழப்பமாகியிருக்கிறது. ஆனால், கொக்கலங்கா கொக்கலங்கா குத்தப்போடு என்கிற வரியில் மீண்டும் அஜித்தைத்தான் சீண்டியிருக்கிறார். `குத்தப்போடு’ எனும் பதம், `என்னை நிறைய பேர் முதுகுல குத்தியிருக்காங்கம்மா’ என அஜித் சொல்லும் வசனத்தைத்தான் நினைவுபடுத்துகிறது.

இதெல்லாம் நம்புற மாதிரி இல்லைன்னு என் மனசுக்கும் நல்லாவே தெரியுது. என்ன பண்றது, எனக்கு வேற வழி தெரியலை ஆத்தா!

ப.சூரியராஜ்