Published:Updated:

''விலங்கு உருவத்திற்கு மாறி, எதிரிகளை அழிக்கலாம்... கதை நல்லாதான் இருக்கு!" - 'ஒடியன்' படம் எப்படி? #Odiyan

''விலங்கு உருவத்திற்கு மாறி, எதிரிகளை அழிக்கலாம்... கதை நல்லாதான் இருக்கு!" - 'ஒடியன்' படம் எப்படி? #Odiyan
''விலங்கு உருவத்திற்கு மாறி, எதிரிகளை அழிக்கலாம்... கதை நல்லாதான் இருக்கு!" - 'ஒடியன்' படம் எப்படி? #Odiyan

கிராமங்களுக்கு மின்சாரம் வருவதற்கு சிறிதுகாலம் முன்பு ஒடியனாக இருந்தவனின் வாழ்க்கை, மின்சாரம் வந்த பின் என்னவாகிறது என்பதே ஒடியனின் ஒன்லைன்.

முன்பெல்லாம் நமது கிராமங்களில் ஒரு வழக்குச் சொல்லை அடிக்கடி கேட்டிருப்போம் அல்லது கேள்விப்பட்டிருப்போம். ``முனி அடிச்சிடுச்சி" என்பதுதான் அது. காரணம் தெரியாமல் மர்மமாக இறந்தவர்களைக் கிராமங்களில் இவ்வாறாகச் சொல்வதுண்டு. "ஊரோட அந்த மூலையில முனி இருக்கு, அந்தப் பனைமரத்துல முனி இருக்கு..." எனப் பல கதைகளையும், சம்பவங்களையும் கேட்டிருப்போம். இதேபோல, கேரளத்தில் சொல்லப்படும் நாட்டுப்புறக் கதைகளில் இருக்கும் ஒரு கதாபாத்திரம்தான், ஒடியன். ஆனால், முனி மாதிரி கண்ணுக்குத் தெரியாதவர்களில்லை ஒடியன்கள். இரவின் அடர் இருட்டில் தங்களை விலங்கு உருவத்துக்கு மாற்றிக்கொண்டு, எதிரிகளைத் தாக்கும் சக்தி படைத்தவர்கள் அவர்கள். நம்ப முடியவில்லையா? மோகன்லாலின் `ஒடியன்' திரைப்படம் ஃபேன்டஸி வகையைச் சேர்ந்ததுதான்.

கேரளாவின் நாட்டுப்புறக் கதைகளில் ஒடியன்களின் கதை பிரபலமான ஒன்று. ஒடியன் தோன்றிய கதை இவ்வாறாகக் கூறப்படுகிறது. ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்வதற்கு முன்பே கேரளாவின் மலப்புரம், பாலக்காடு பகுதிகளில் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் அவர்களிடம் வேலை செய்த தாழ்த்தப்பட்ட மக்களைப் பலவாறாகத் துன்புறுத்தினர். தாழ்த்தப்பட்ட பெண்கள் மீது உச்சகட்ட வன்கொடுமையை நிகழ்த்தினர். தாழ்த்தப்பட்டவர்களில் ஒருவர் அவர்களுக்கான தெய்வம் கருங்குட்டியை உருவாக்கி, அதனிடம் தங்கள் துன்பங்களை முறையிட... அவருக்கு `ஒடி' வித்தைகளைத் தருகிறது அந்த தெய்வம். அதற்குப் பிரதிபலனாக, ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெண்ணின் முதல் பிரசவத்தில் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையின் இரத்தம் காணிக்கையாகக் கொடுக்கப்பட வேண்டும். இப்படி முதலில் ஒடி வித்தைகளைக் கற்று உருவான ஒடியன், அதன்பின் தொடர்ந்து பல்வேறு ஒடியன்களை உருவாக்குகிறார். ஒடியன்கள் வேகமாக இயங்கக்கூடியவர்கள், பலம் பொருந்தியவர்கள், இரவில் விலங்குகளின் உருவத்துக்கு மாறி பயமுறுத்திக்கொல்லும் சக்தி படைத்தவர்கள். இதனால், இறந்தவர்களை யார் கொன்றது என்றே தெரியாது.

ஒடியன்கள் ஒரு குழுவாக ஊருக்கு வெளியேதான் வாழ்ந்துள்ளார்கள். தங்கள் மீது ஆதிக்கம் செலுத்தியவர்களை எதிர்க்க, ஒடி வித்தைகளைப் பயன்படுத்தியவர்கள் காலம் செல்லச் செல்ல அதையே தொழிலாக மாற்றிக்கொண்டனர். அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தியவர்களே அவர்களைக் கூலிப்படை போன்று பயன்படுத்திக்கொண்டார்கள். அதனால், மின்சாரம் வருவதற்கு முன்புவரை இரவில் வெளியே செல்லவே மக்கள் பயந்தனர். இப்படித்தான் அந்த நாட்டுப்புறக் கதைகளில் கூறப்படுகிறது. ஒடியன்கள் இருப்பதாக மக்கள் தனியே செல்ல பயப்படும் இடங்கள் கேரளாவின் மலப்புர கிராமப் பகுதிகளில் இன்றும் இருக்கிறது.

இந்தக் கதையில் இருக்கும் சுவாரஸ்யம்கூட `ஒடியன்' படத்தின் திரைக்கதையில் இல்லை. மேலே சொன்ன கதை மொத்தமும் படத்தில் ஓரிரு நிமிடங்களில் கடந்து விடுகிறது. படம் முற்றிலும் புதிதாக ஒடியனின் வேறொரு கதையைச் சொல்ல முயன்றிருக்கிறது. கிராமங்களுக்கு மின்சாரம் வருவதற்கு சிறிதுகாலம் முன்பு ஒடியனாக இருந்தவனின் வாழ்க்கை, மின்சாரம் வந்த பின் என்னவாகிறது என்பதே ஒடியனின் ஒன்லைன். ஆனால், இந்தக் கதைக்கருவைக்கூட ஹீரோ, வில்லன் என்ற பழைய ஆட்டத்திலேயே வைத்து ஆடியிருக்கிறார்கள். படத்தில் நல்ல விஷயம், நாட்டுப்புறக் கதைகளில் முழுக்க எதிர்மறையாகச் சித்திரிக்கப்பட்டிருக்கும் ஒடியன் கதாபாத்திரத்தை சூப்பர் ஹீரோவாக, நல்லவனாக மாற்றி எழுதியிருப்பது. அது மோகன்லால் என்பதால் எடுபடவும் செய்திருக்கிறது. சூப்பர் ஹீரோ அளவுக்கான ஃபேன்டஸி கதாபாத்திரத்தை வைத்துக்கொண்டு, முழுக்க ஆக்‌ஷன் கதையாகவும் இல்லாமல் டிராமாவாகவும் இல்லாமல் நடுவில் பயணிக்கிறது ஒடியன். ஒடியனாக இருப்பவனின் குற்றவுணர்வு, சமூகத்தின் புறக்கணிப்பு என அக வாழ்க்கையைப் பேச நினைத்திருப்பது, பாராட்டக்கூடிய  விஷயம்தான். ஆனால், கணிக்க முடிந்த காட்சிகளும், ஆழமற்ற கதாபாத்திர வார்ப்பும் படத்தைத் தொய்வாக்குகின்றன. 

ஆரம்ப காட்சியில் வயதான ஒடியனாக சவால் விடுவதும், அதன்பின் ஒவ்வொருவரும் சொல்லும் ஒடியன் மாணிக்கத்தின் இளம் வயது கதையும் ஓரளவுக்கு சுவாரசிஸ்மானதாக இருக்கின்றன. அதுவும் முதல் பாதியோடு முடிந்து போகிறது. ஒடியன் கதாபாத்திரம் மட்டுமே ஒட்டுமொத்தப் படத்தையும் தாங்கிப்பிடித்து நிற்கிறது. இவ்வளவு பலம் வாய்ந்த ஒடியனுக்கு எதிரான வில்லன் மிகச் சாதாரண வில்லனாகத்தான் இருக்கிறான்.

ஒடியன் மாணிக்கமாக இளவயது தோற்றத்தில் அவ்வளவு அழகாக இருக்கிறார், மோகன்லால். மற்றவர்களைப் பயமுறுத்திய அனுபவத்தைப் பெருமையாகச் சொல்லும் காட்சியும், பிறகு அதற்கே குற்றவுணர்வுடன் கதறும் காட்சியும் மாபெரும் நடிகன் மோகன்லாலுக்குரியவை. வயதான தோற்றத்தில் அந்தத் தீர்க்கமான பார்வையும்கூட. மஞ்சு வாரியர் இன்னும் அதே அழகோடு அப்படியே இருக்கிறார், நன்றாகவும் நடித்துள்ளார். ஆனால், வலுவான கதாபாத்திரமாக இல்லாததால் குறிப்பிட்டுச் சொல்ல ஒன்றுமில்லை. பிரகாஷ்ராஜ் வழக்கமான வில்லனாக நடித்துள்ளார். `சென்னை 28' இரண்டாம் பாகத்தில் ஜெய் ஜோடியாக வரும் சானா அல்தாஃபிற்கு குறிப்பிடத்தகுந்த கதாபாத்திரம். மோகன்லாலை ஒடியனாக நம்ப வைப்பதில், பீட்டர் ஹெய்னின் சண்டைக் காட்சிகளுக்கு முக்கியப் பங்கு உண்டு.

அந்த டீக்கடை சண்டைக் காட்சியும், க்ளைமாக்ஸூக்கு முந்தைய ஆலமரச் சண்டைக் காட்சியும் பிசிறில்லாதவை. சாம் சி. எஸ்ஸின் பின்னணி இசை படத்தின் மிகப்பெரும் பலம். குறிப்பாக, ஒடியன் தீம் மிரட்டல் ரகம். ஜெயச்சந்திரனின் இசையில் 5 பாடல்களில் நெஞ்சிலே, முத்தப்பன் இரண்டும் சிறப்பு. மற்றவை ஓகே. ஒடியனின் வயதான காலம், இளமைக் காலம் என இருவேறு காலகட்டத்தில் கதை நடந்தாலும், ஒளிப்பதிவில் பெரிய வித்தியாசமில்லை. படத்தின் கருவான இரவுக் காட்சிகளுக்குச் சிறப்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார், ஷாஜி குமார். படத்தின் நீளத்தை படத்தொகுப்பாளர் ஜான்குட்டி இன்னும் கொஞ்சம் குறைத்திருக்கலாம். படம் எந்தக் காலகட்டத்தில் நடக்கிறது என்பதையும் இரண்டு வெவ்வேறான காலகட்டத்துக்கான வித்தியாசத்தையும் இன்னும் டீட்டெயில் செய்திருக்கலாம், கலை இயக்குநர் பிரசாந்த் மாதவ். படத்தில் கிராஃபிக்ஸ் காட்சிகள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. 

கேரளாவின் நாட்டுப்புறக் கதைகளில் கூறப்படும் ஒடியன்கள், கரிய நிறத்துக்குச் சொந்தக்காரர்கள். ஆனால், படத்தில் ஒடியன் மாணிக்கத்தின் தாத்தாவிலிருந்து ஒடியன் மாணிக்கம் வரை வெள்ளை வெளேரென்று இருக்கிறார்கள். அதேசமயம், கறுப்பு நிறத்தைத் தொடர்புப்படுத்தி வில்லன் கதாபாத்திரம் குறிப்பிடப்பட்டிருப்பது, நெருடல். ஒடியன் மாணிக்கம் ஊருக்கு வெளியே வசிக்கிறாரே (அவர் மட்டும்தான் குழு இல்லை) தவிர, சமூகக் கட்டமைப்பில் ஒடியன்களின் நிலை என்னவாக இருந்தது என்பதற்கு எந்தக் காட்சிகளும் இல்லை. ஃபேன்டஸி கதாபாத்திரத்தை வைத்துக்கொண்டு, திரைக்கதையில் புகுந்து விளையாடியிருக்கலாம். இயக்குநர் ஶ்ரீகுமார் மேனன் அதைத் தவறவிட்டுவிட்டார்.     

அடுத்த கட்டுரைக்கு