தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

“அவரை அப்பா என்றுதான் அழைப்பேன்!” - அனிதா இரஞ்சித்

“அவரை அப்பா என்றுதான் அழைப்பேன்!” - அனிதா இரஞ்சித்
பிரீமியம் ஸ்டோரி
News
“அவரை அப்பா என்றுதான் அழைப்பேன்!” - அனிதா இரஞ்சித்

காதலைக் கரம் பிடித்தோம்

மிழ் சினிமா உலகில் முக்கியமான இயக்குநராக இடம்பிடித்திருப்பவர் பா.இரஞ்சித். துடிப்பான இயக்கம், வீரியம் மிகுந்த பேச்சு, இயல்பான தோற்றம் என்று தனக்கான அடையாளத்தை உருவாக்கிக்கொண்டவரின் படங்களில் மிதக்கும் காதல் வசனங்கள், அழகியலைத் தாண்டிய இயல்பை வெளிப்படுத்தும். ‘`அதில் எங்களின் காதல் கதைகளும் உண்டு’’ என்கிறார், இரஞ்சித்தின் காதல் மனைவி அனிதா. அவர்களின் அன்புக் கூடு பற்றி அவர் பகிர்ந்ததிலிருந்து...

“வாழ்க்கை ரொம்ப அழகான ஓவியம் மாதிரி போயிட்டு இருக்கு. நாங்க தேர்வு செய்த படிப்பில் இருந்து சாப்பிடும் உணவுவரை ரெண்டு பேருடைய விருப்பங்களிலும் நிறைய ஒற்றுமை இருக்கும். எங்க மகள் மகிழினியும், இப்போ அவற்றையெல்லாம் பிரதிபலிக்கும்விதமா வளர்ந்துவர்றது கூடுதல் ஆச்சர்யம். வாழ்க்கையில் சில விஷயங்களை நாம எதிர்பார்த்திருக்கவே மாட்டோம். ஆனா, அது தற்செயலான ஒரு வண்ணமாக நம் வாழ்வில் நுழைந்து அழகான ஓவியமாக மாறி நிற்கும். அப்படித்தான் எங்களுடைய காதலும்.

“அவரை அப்பா என்றுதான் அழைப்பேன்!” - அனிதா இரஞ்சித்

நானும் இரஞ்சித்தும் சென்னையில் உள்ள அரசு கவின் கலைக்கல்லூரியில் படிச்சோம். அவர் சீனியர், நான் ஜூனியர். இரஞ்சித் அந்தக் கல்லூரியில் நுழைவுத்தேர்வு எழுதிய அதே வருடம், அதே அறையில்தான் நானும் நுழைவுத்தேர்வு எழுதினேன். அப்போ பார்த்துக்கிட்ட அந்தச் சில நிமிடங்களில், ஏனோ ஒருவர் முகம் ஒருவருக்கு ரொம்ப பதிஞ்சுபோச்சு. அவருக்கு ஸீட் கிடைச்சு, பிரின்ட் மேக்கிங்ல சேர்ந்து படிச்சார். நான் முதல் வாய்ப்பைத் தவற விட்டுவிட்டு, மீண்டும் அடுத்த வருஷம் நுழைவுத்தேர்வு எழுதி பெயின்ட்டிங் கோர்ஸ்ல சேர்ந்தேன்.

கல்லூரியில் சேர்ந்த புதிது. கொஞ்சம் தூரத்தில் நின்றிருந்த என் தோழி ஒருத்தியை, கொஞ்சம் சத்தமா பெயர் சொல்லிக் கூப்பிட்டேன். அப்போ தற்செயலா இரஞ்சித் திரும்பிப் பார்த்தார். ‘அட, போன வருஷம் என்ட்ரன்ஸ் எக்ஸாம் ஹால்ல பார்த்தோமே...’னு எங்க ரெண்டு பேர் மனசுக்குள்ளும் ஒரு மணி அடிக்க, ‘ஹலோ’ சொல்லிக்கிட்டோம். அப்புறம் சின்னச் சின்ன பாராட்டுகள், கருத்துப்பகிர்தல்கள்னு ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம். திடீர்னு ஒருநாள், ‘நான் உன்னைக் காதலிக்கவா? உனக்கு `ஓகே’ இல்லைன்னா, ஃப்ரெண்ட்ஸாகவே இருந்துடலாம்’னு இரஞ்சித் என்னிடம் கேட்டார். எனக்கு குடும்பத்தில் நிறைய கமிட்மென்ட்ஸ் இருந்ததால முதல்ல மறுத்தாலும், அவரின் இயல்பான குணம் என் மனசுக்குள் காதலை விதைக்க, ஒரே வாரத்தில் `ஓகே’ சொல்லிட்டேன்.

“அவரை அப்பா என்றுதான் அழைப்பேன்!” - அனிதா இரஞ்சித்


காதலிக்க ஆரம்பிச்சு அடுத்தடுத்து பேசும்போது, எங்களுக்கிடையில் நிறைய கருத்து வேறுபாடுகள் வந்துச்சு. ‘இது சரிப்பட்டு வராது’னு இரஞ்சித் சொல்ல, நான் அழுதேன். பின்னர் பிரச்னையைப் புரிஞ்சுக்கிட்டு கனத்த இதயத்தோடு ரெண்டு பேரும் அந்தத் தருணத்தைக் கடந்தோம். அந்நேரம் கல்லூரி விடுமுறை என்பதால், எங்க இடைவெளி அதிகமாச்சு. இரஞ்சித் எனக்கு போன் செய்திருக்கார்... ஆனா, என்னால பேச முடியாம போயிடுச்சு. விடுமுறை முடிந்து கல்லூரிக்குத் திரும்பினோம். ஒரு தீர்மானம் எடுத்துட்டு வந்திருந்தார் அவர். நேராக என்கிட்ட வந்து, ‘நீ இல்லாம இருக்க முடியலை; இருக்கவும் முடியாது. உனக்குப் பிடிச்சதை நீ செய், எனக்குப் பிடிச்சதை நான் செய்றேன். ஆனா, ரெண்டு பேரும் ஒன்றாக இருப் போம், ஜெயிப்போம்’னு என் கையைப் பிடிச்சார்; நானும் அவர் கையைப் பிடிச்சேன். அப்போதிலிருந்து இப்போவரை கைகளை இன்னும் இறுக்கமா பிடிச்சுக்கிட்டு பயணிக்கிறோம்.

இரஞ்சித் உதவி இயக்குநராகப் படம் பண்ண ஆரம்பிச்சதும், எங்க ரெண்டு வீட்டிலேயும் சொல்லி பெரியவங்க சம்மதத் துடன் திருமணம் செய்துகிட்டோம். பிறகு, அவர் இயக்குநராவதற்காக முயற்சி செய்ய ஆரம்பிச்சார். நிலையான வருமானம் இருக்காது. எனக்கும் பெயின்ட்டிங் ஆர்டர் வந்தால்தான் வருமானம். அதனால் நான் ஒரு கல்லூரியில் ஓவியப் பேராசிரியராக வேலைக்குச் சேர்ந்தேன். அப்போ என் பெயின்ட்டிங் பொழுதுகளை நிறைய மிஸ் செஞ்சாலும், ‘நீ ஜெயிக்கிறதுக்கு முன்னேறிட்டே இரு, எங்கேயும் காம்ப்ரமைஸ் ஆகாதே’னு அவர்கிட்ட சொல்லுவேன்.

திருமணமாகி ரெண்டரை வருஷம் கழிச்சு, எங்க வாழ்வில் மகிழினி வந்தா. வாழ்க்கை இன்னும் அழகானது. காதலனாக, கணவனாகப் பார்த்து ரசித்த இரஞ்சித்தைவிட அப்பா இரஞ்சித்   இன்னும் அன்பானவர். அதனால மகிழினியுடன் சேர்ந்து நானும் அவரை ‘அப்பா’ன்னு கூப்பிட ஆரம்பிச்சேன். என்னையும் மகிழினியையும் முகம் வாடாம அவர் பார்த்துக்குவார். நானும் தேவையில்லாத எந்த டென்ஷனையும் அவருக்குக் கொடுக்க மாட்டேன். அவர் வீட்டில் இருக்கும் நாள்களில் பிடிச்ச சமையல், மகளுடன் சின்னச் சின்ன விளையாட்டுகள், நிறைய பேச்சு, பகிர்தல்கள்னு அவ் வளவு சந்தோஷமா எங்க நேரம் கழியும்.

அவர் படங்களில் வரும் நிறைய காதல் காட்சிகள் எங்க வாழ்க்கையில நடந்ததாகத்தான் இருக்கும். அவையெல்லாம் இயல்பா இருப்பதாலதான் எல்லோரும் அவங்க வாழ்க்கையோடு அவற்றைப் பொருத்திப் பார்த்துக்குறாங்க. இப்போ இரஞ்சித் ஒரு வெற்றி இயக்குநர். ‘இருந்தாலும், சினிமாவில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும்; பொருளாதாரரீதியாக மீண்டும் பின்தங்கிட்டா என்ன பண்றது?’னு இரஞ்சித் ஒருமுறை என்கிட்ட கேட்டார். ‘நாம எந்த நிலையில் வாழ்க்கையை ஆரம்பிச்சோமோ, அதேபோல புதுசா ஆரம்பிப்போம். நீ தயங்காம உன் பாதையில் போ’னு சொன்னேன். அதைத்தான் எங்க காதலின் வெற்றியா பார்க்கிறேன்.

இரஞ்சித் படங்களில் மட்டுமல்ல, அவர் வாழ்விலும் பெண்கள் வலிமையாக இருக்கணும்னு விரும்புறவர். நான் ரொம்ப லக்கி!”

- சு.சூர்யா கோமதி