தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

மஹி - தத்தெடுத்த குழந்தையில்லை... நான் பெற்றெடுத்த குழந்தை! - நடிகை ரேவதி

மஹி - தத்தெடுத்த குழந்தையில்லை... நான் பெற்றெடுத்த குழந்தை! - நடிகை ரேவதி
பிரீமியம் ஸ்டோரி
News
மஹி - தத்தெடுத்த குழந்தையில்லை... நான் பெற்றெடுத்த குழந்தை! - நடிகை ரேவதி

அவள் அரங்கம்

மஹி - தத்தெடுத்த குழந்தையில்லை... நான் பெற்றெடுத்த குழந்தை! - நடிகை ரேவதி

தென்னிந்திய சினிமா மட்டுமல்ல, பாலிவுட் சினிமாவும் கொண்டாடிய நடிகை. எதார்த்தமான நடிப்பால், தான் ஏற்று நடித்த கதாபாத்திரங்களாகவே மக்கள் மனதில் நிற்பவர். பர்சனல் வாழ்க்கையில் எளிமையே இவரின் அடையாளம். 35 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா மற்றும் சின்னத்திரையில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பவர். அகவை கூடினாலும் மக்களின் அன்பு குறையாத நட்சத்திரம், நடிகை ரேவதி. இவர் பேட்டி கொடுப்பதே அரிது. நீண்ட முயற்சிக்குப் பிறகு அவரைப் பேச வைத்திருக்கிறோம்... ‘அவள் அரங்க’த்தில் அவள் விகடன் வாசகிகளின் கேள்விகளுக்கு மனம் திறக்கிறார், நடிகை ரேவதி.

மஹி - தத்தெடுத்த குழந்தையில்லை... நான் பெற்றெடுத்த குழந்தை! - நடிகை ரேவதி

முதலில் உங்கள் மகள் மஹியைப் பற்றிச் சொல்லுங்கள். இந்த வாழ்க்கை எப்படி இருக்கிறது?

- வி.ஹேமலதா, திருச்சூர்

தாய்மை, பெண்களுக்கான வரம். அதற்காக நான் ரொம்ப ஆர்வமாயிருந்தேன், ஏங்கினேன், கலங்கினேன். விவாகரத்து பெற்று பல வருடங்களுக்குப் பிறகு, என் 47 வயசுல குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடிவெடுத்தேன். எனக்கும் குழந்தைக்குமான வயசு வித்தியாசத்தை இந்தச் சமூகம் எப்படிப் பார்க்கும்னு யோசிச்சேன். ஒருகட்டத்தில், அதுக்கெல்லாம் கவலைப்படவேண்டிய அவசியமில்லைனு முடிவெடுத்தேன். என் வாழ்க்கையில் எனக்காக நான் சுயநலத்துடன் எடுத்த ஒரே முடிவு, தாய்மை மட்டும்தான். சோதனைக் குழாய் (டெஸ்ட் டியூப்) முறையில் கர்ப்பமானேன். அப்போ என் வாழ்வில் முக்கியமான இருவர் எனக்குப் பக்கபலமாக இருந்தாங்க.

மஹி - தத்தெடுத்த குழந்தையில்லை... நான் பெற்றெடுத்த குழந்தை! - நடிகை ரேவதிஎன் மகள் மஹியைப் பெற்றெடுத்து அவ முகத்தை முதலில் பார்த்த கணம்தான், என் வாழ்நாளின் மிகச்சிறந்த தருணம். அன்றிலிருந்து இன்றுவரை அவளை வளர்த்து ஆளாக்குவதுதான் என் சிறந்த பணி. இப்போ அவளுக்கு ஐந்து வயசாகுது.

எல்.கே.ஜி படிக்கிறா. அவளும் நானும் நிறைய பேசுவோம், விவாதிப்போம், சண்டை போடுவோம். அவளை அடிக்கடி வெளியிடங்களுக்கு அழைச்சுட்டுப் போவேன். அவ வயசுக்கு உண்டான எல்லா விஷயங்களையும் பக்குவமா சொல்லிக்கொடுத்து, முழுமையான ஒரு மனுஷியா வளர்த்தெடுக்கும் கடமையைச் செய்துட்டு இருக்கேன். அவளின் எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றுவேன்.

மஹி, ஒருமுறை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வர்றேன்னு சொன்னா. கூட்டிட்டுப் போனேன். ‘ம்ஹூம்... இனி ஷூட்டிங் குக்கே நான் வரலைம்மா’னு அவ சொல்ல,  நான் சிரிச்சுட்டேன்.

மஹிதான் என் உலகம். என் இப்போதைய, எதிர்கால வாழ்க்கை அவளுக்கானதுதான். நான் ஷூட்டிங் கிளம்பிய பிறகு, என் பெற்றோர் அவளைப் பார்த்துப்பாங்க. ஆனாலும், என் வருகைக்காகக் காத்திருக்கும் அவளின் பார்வைக்கு, என் தரிசனம் தரும் இன்பம், எனக்கு ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுக்கும் தருணம். மஹியைப் பத்தின விஷயங்களை முதன்முறையா அவள் விகடன் மூலமாகத்தான் பகிர்ந்துக்கிறேன்.

மஹி - தத்தெடுத்த குழந்தையில்லை... நான் பெற்றெடுத்த குழந்தை! - நடிகை ரேவதி

ரேவதி - சினிமாவுக்கு வருவதற்கு முன்?

- சு.திவ்யா, கோவை

என் பூர்வீகம் கேரளா. அப்பா இந்திய ராணுவத்தில் வேலைபார்த்ததால், பல மாநிலங்கள்ல வளர்ந்தேன். ஒருகட்டத்தில் சென்னைக்கு ஷிஃப்ட் ஆனோம். சின்ன வயசுல எல்லா குழந்தைகளையும்போல கொஞ்சம் குறும்பு, கொஞ்சம் அமைதினு கலவையாயிருப்பேன்.

எங்க குடும்பத்தில் யாரும் சினிமா வில் இல்லை. சினிமா பார்க்குறதுகூட குறைவுதான். நாங்க தங்கியிருந்த ராணுவத்தினர் குடியிருப்புல வாரம் ஒருநாள் சினிமா ஒளிபரப்புவாங்க. அதன்மூலம் எதார்த்தமான, வாழ்வியல் சார்ந்த, கருத்தாழம் உள்ள படங்களைப் பார்க்க முடிஞ்சது. அவை
அப்போது எனக்குள் பெரிசா சினிமா மீது ஈர்ப்பையோ, தாக்கத்தையோ ஏற்படுத்தலை.

சின்ன வயசுல டான்ஸ்ல எனக்கு ரொம்ப ஆர்வம். சினிமாவில்கூட, டான்ஸ் ஆடுற பாடல்கள்னா குஷியாகிடுவேன்.  ஒருவேளை சினிமா வுக்கு வரலைன்னா, கிளாஸிக்கல் டான்ஸராகியிருப்பேன்!

மஹி - தத்தெடுத்த குழந்தையில்லை... நான் பெற்றெடுத்த குழந்தை! - நடிகை ரேவதி

தன் படங்களுக்கான புதிய நாயகி களைத் தேர்வுசெய்ய இயக்குநர் பாரதிராஜா அதிகம் மெனக்கெடுவார் என அறிந்திருக்கிறேன். உங்களை எப்படித் தேர்வுசெய்தார்?

-  மீனாட்சி ரங்கநாதன், பட்டுக்கோட்டை

பாரதிராஜா அங்கிள் தன் படங்களுக் கான நாயகிகளை, பேருந்து நிலையம் போன்ற பொது இடங்களில்தான் தேர்வு செய்வார்னு நான் கேள்விப்பட்டிருக்கேன். கிட்டத்தட்ட நானும் அப்படித்தான். என் உறவினர் சந்தோஷ் சிவராம், பாரதிராஜா அங்கிளின் சகோதரர் ஜெயராஜ் - இருவரும் நண்பர்கள். என் உறவினர் மூலமாக, என் போட்டோவைப் பார்த்த  ஜெயராஜ், அதை பாரதிராஜா அங்கிள்கிட்ட காட்டியிருக்கிறார். ஒருநாள் பொது இடத்துல என்னைப் பார்த்த டைரக்டர், ‘இந்தப் பொண்ணு, போட்டோவில் பார்த்ததைவிட நேரில் எதார்த்தமா இருக்கே!’னு நினைச்சாராம். அதனால, உடனே என்னை ஹீரோயினாக்க முடிவெடுத்திருக்கிறார். அதை என் பெற்றோர் வாயிலாக அறிந்தேன். அப்போ ப்ளஸ் டூ படிச்சிட்டிருந்தேன். கொஞ்ச நாள்ல ஷூட்டிங் முடிஞ் சுடும்னு நினைச்சு நடிக்க சம்மதிச்சேன். அப்படித்தான் என் 16 வயதில் ‘மண்வாசனை’ படத்தில் அறிமுகமானேன். அப்போ, எனக்கு சினிமாவில் நடிக்க பயமோ, தயக்கமோ இல்லை. அதனால உற்சாகமா நடிச்சேன்.

மஹி - தத்தெடுத்த குழந்தையில்லை... நான் பெற்றெடுத்த குழந்தை! - நடிகை ரேவதி

‘மண்வாசனை’ திரைப்படத்தில் கிராமத்துப் பெண் ‘முத்துப்பேச்சி’யாக நடித்த அனுபவம்?

- கிருத்திகா சுப்ரமணியன், மானாமதுரை

கேரளாவில் நான் கிராமத்துச் சூழல்லதான் வளர்ந்தேன். அதனால் ‘முத்துப்பேச்சி’யா நடிக்க பெரிசா சிரமமில்லை. அந்தப் படக்குழுவிலேயே நான்தான் ரொம்ப சின்னப் பொண்ணுன்னு நினைக்கிறேன். டைரக்டர் அங்கிள், எனக்கு ஒவ்வொரு காட்சியையும் அழகா நடிச்சுக்காட்டுவார். நான்  நிறைய சந்தேகங்கள் கேட்பேன். அது டைரக்டருக்குப் பிடிச்சுப்போச்சு. அதனால என் சந்தேகங்கள் எல்லாத்துக்குமே பொறுமையா பதில் சொல்லுவார். அவர் படங்களில் ஒவ்வொரு நடிகருமே நிஜ கதாபாத்திரமா மாறி நடிப்போம். அந்த வேறுபாடுகளைக் கண்கூடாகப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன்.

மஹி - தத்தெடுத்த குழந்தையில்லை... நான் பெற்றெடுத்த குழந்தை! - நடிகை ரேவதி


ஆஷா கேலுன்னிங்கிற என் பெயரை, ‘ஆர்’ வரிசையில் ‘ரேவதி’னு மாத்தினார். ‘என் ஒரிஜினல் பெயரே இருந்தால் என்ன? ஏன் மாத்துறீங்க?’னு அவர்கிட்ட கேட்டேன். ‘இப்போ புரியாது, எதிர்காலத்தில் நீயே புரிஞ்சுப்பே’னு சொன்னார். பப்ளிக் எக்ஸாமுக்கு அப்போ தயாராகிட்டு இருந்ததால, ஷூட்டிங் ஸ்பாட்ல ஓய்வுநேரம் கிடைக்கும்போதெல்லாம் படிச்சுக்கிட்டிருப்பேன். நடிப்பு மட்டுமல்லாமல், ‘அது என்ன? ஏன் இப்படி பண்ணணும்?’னு மத்த தொழில்நுட்பங்களைப் பற்றியும் ஆர்வமா கேட்பேன். அந்த சினிமா சூழல் எனக்குள் உற்சாகமான உணர்வை ஏற்படுத்திச்சு. அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வரவே, காலேஜ்ல படிக்கும் சூழல் அமையலை.

ஆரம்பக் காலங்களில் இயக்குநர், தயாரிப்பாளர்களிடம் திட்டு வாங்கிய அனுபவம் உண்டா?

- கு.மணிமேகலை, செங்கல்பட்டு


‘மண்வாசனை’ படத்துல நடிக்கும்போது ஒரு சில முறை பாரதிராஜா அங்கிள்கிட்ட திட்டு வாங்கியிருக்கேன். என் தவறுகளை உடனே சரிபண்ணிப்பேன். ஒருமுறை நடிகர் பாண்டியன், பாரதிராஜா அங்கிள்கிட்ட அடி வாங்கினதைப் பார்த்திருக்கேன். அதெல்லாம் வாத்தியார்கிட்ட மாணவன் வாங்கும் அடி, திட்டு மாதிரிதான். எனக்கு அந்த அடி அனுபவம் கிடைக்கலை. என் பொறுப்பைச் சரியா செய்யணும்; என்னால பிறருக்கும் இயக்குநருக்கும் பாதிப்பு வரக் கூடாதுனு முதல் படத்துல இருந்தே கவனத்துடன் இருந்தேன். நான் வளர்ந்த கட்டுக்கோப்பான சூழல் அதுக்கு ஒரு காரணமா இருந்திருக்கலாம்.

மஹி - தத்தெடுத்த குழந்தையில்லை... நான் பெற்றெடுத்த குழந்தை! - நடிகை ரேவதி

இன்னும் பல ஆச்சர்யமான பதில்களோடு அடுத்த இதழில் தொடர்கிறார் ரேவதி.

- கு.ஆனந்தராஜ்  படங்கள் : க.பாலாஜி

“விகடனின் நம்பகத்தன்மைக்கு நன்றி!”

“கடைசியா நான் முழு மனதுடன் பேட்டி கொடுத்தும், போட்டோஷூட் செய்தும் 10 வருடங்களுக்கும் மேலாகுது. கடந்த ஒரு வருஷமாகவே விகடன்ல பேட்டிக்காக என்கிட்ட தொடர்ந்து பேசிட்டு இருந்தாங்க; சம்மதிச்சேன். அப்போ என்னையும் அறியாமல் எமோஷனலாகி என் மனதில் இருந்த பல விஷயங்களையும் பதிலாகச் சொன்னேன். அவையெல்லாம் எழுத்தான பின்னர், என்கிட்ட படிச்சுக்காட்டி, நான் சம்மதம் சொன்ன பிறகே பிரசுரம் பண்ணியிருக்காங்க. என் மகள் மஹியைப் பற்றி தொடர்ந்து வந்துகொண்டிருக்கிற வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தில், மஹியைப் பற்றிய உண்மைகளை முதன்முறையாக விகடன் இணையதளப் பேட்டிக்காகப் பகிர்ந்தேன். அப்போதும், பிரசுரிப்பதற்கு முன்னர் அதை என்கிட்ட படிச்சுக்காட்டி ஒப்புதல் வாங்கியதுடன், ‘என் மகளின் போட்டோ வேண்டாம்’ என்ற என் வேண்டுகோளையும் ஏற்று செய்தியை மட்டும் வெளியிட்டாங்க. ஆனால், அந்தச் செய்தியை எடுத்துப் பயன்படுத்திய பல மீடியா, என்னைக் கேட்காமலேயே, என் மகளுடன் நான் இருக்கும் பழைய போட்டோவையும் சேர்த்து வெளியிட்டாங்க. இந்நிலையில், நானும் மஹியும் தோன்றும் அட்டைப்படத்துக்கான என் ஒப்புதலுக்காக, மாறாத பொறுமையுடன் கேமராவுடன் காத்திருந்து, அதை நிகழ்த்தியிருக்காங்க விகடன் டீம். விகடனின் இந்த அறம் மற்றும் நம்பகத்தன்மைக்கு நன்றி. என் மேல் அன்பு காட்டிவரும் மக்களுக்கு மகத்தான நன்றி!”

- நடிகை ரேவதி