Published:Updated:

13 கதைகள், அந்த 12 நிமிட கடைசி ஷாட், குவியும் விருதுகள்... உக்ரைனின் #DonBass படம் ஒரு பார்வை!

13 கதைகள், அந்த 12 நிமிட கடைசி ஷாட், குவியும் விருதுகள்... உக்ரைனின் #DonBass படம் ஒரு பார்வை!
13 கதைகள், அந்த 12 நிமிட கடைசி ஷாட், குவியும் விருதுகள்... உக்ரைனின் #DonBass படம் ஒரு பார்வை!

மீபத்தில் ஆங்கில அகராதியில் நுழைந்த இரண்டு வார்த்தைகள், `fake news' (போலிச் செய்தி) மற்றும் `post truth' (உண்மைக்குப் பதிலாக உணர்ச்சிபூர்வமாக பொதுமக்களின் கருத்தை உருவாக்குவது). ஜார்ஜ் ஆர்வெல் தீர்க்க தரிசனமாக அன்றே சொன்ன இந்தக் கருத்துகளை `டான்பாஸ்' படத்தில் காணலாம். கோவா திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான தங்க மயில் பரிசும், கேன்ஸ் (Cannes) திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநர் பரிசும் பெற்ற `டான்பாஸ்’, கிழக்கு உக்ரைனில், உக்ரைனுக்கும் - ரஷ்யாவின் ஆதரவு பெற்ற பிரிவினைப் படைக்கும் இடையே நடந்து வரும் போரைப் பற்றிய படம். 

கிழக்கு உக்ரைனில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் ஒரு மேக்கப் போடும் ட்ரெய்லருக்குள் படம் ஆரம்பிக்கிறது. மேக்கப் போட்டுக் கொண்டிருக்கும் துணை நடிகர்களை உதவி இயக்குநர் ஒருத்தி உடனே வருமாறு அவசரப்படுத்தி படப்பிடிப்பு நடக்கப்போகும் இடத்துக்கு அவர்களை ஓடச் செய்கிறாள். அங்கே குண்டு வெடித்து பல வாகனங்கள் சேதமாகின்றன. டிவி நிருபர்கள் துணை நடிகர்களிடம் அங்கு நடந்தது பற்றி பேட்டி எடுக்கிறார்கள். அப்போதுதான் நமக்குப் புரிகிறது, போலிச் செய்தியைப் படம் பிடிக்க வெடி குண்டை வைத்ததே அந்த பிரிவினைப் படைதான் என்று!       

இந்த ஒரு கதையுடன் இன்னும் பல கதைகளைச் சேர்த்திருக்கும் லோஸ்னிட்சா, புகழ் பெற்ற ஸ்பானிஷ் இயக்குநர் லூயீஸ் புனுவெலின் `த ஃபேண்டம் ஆஃப் லிபர்ட்டி' படத்திலிருந்து இந்த நான்-லீனியர் வடிவத்தில் படம் எடுக்கும் ஐடியா கிடைத்ததாகச் சொல்கிறார். புனுவெலின் படத்தில் ஒவ்வொரு கதையிலிருந்தும் ஒரு கதாபாத்திரத்தை அடுத்த கதைக்குப் போக வைத்துப் பூத்தொடுப்பது போல் படம் கோக்கப்பட்டிருக்கிறது. லோஸ்னிட்சா, தன் படத்தில் 13 கதைகளில் பலவற்றை இதுபோல் கோத்திருக்கிறார்.

இந்தக் கதைகள், கிழக்கு உக்ரைனில் நடக்கும் போரைப் பற்றிய யூ-டியூப் வீடியோக்களை அடிப்படையாகக் கொண்டவை. முதல் கதை போல் சிறப்பான இன்னும் சில கதைகள் இந்தப் படத்தில் இருக்கின்றன. தன் காரைத் தொலைத்த வியாபாரி ஒருவர், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் போலீஸ் தலைமையகத்துக்கு வருமாறு அழைக்கப்படுகிறார். அங்கே போலீஸ் அதிகாரி, காரை போருக்கு உபயோகப்படுத்தக் கொடுத்து விடுமாறு அவரைக் கட்டாயப்படுத்துகிறார். அதுமட்டும் இல்லை. அவரை விடுவிக்க உறவினர்களிடமிருந்து பணம் சேர்த்துக் கொடுக்குமாறும் பயமுறுத்துகிறார். வியாபாரியை இன்னோர் அறைக்கு அழைத்துப்போகிறார்கள். அங்கே இவரைப் போல் பலரும் தங்களை விடுவிக்கப் பணம் கேட்டு போன் செய்து கொண்டிருக்கிறார்கள். 

இன்னொரு கதை, ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் பாம் ஷெல்டரில் அடைக்கலம் பெற்றிருப்பவர்களின் பரிதாப நிலையைப் பற்றியது. அங்கு இருக்கும் டிவி பெட்டியில், முதல் கதையில் எடுக்கப்பட்ட போலிச் செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது. மிக நவீனமாக உடையணிந்த இளம் பெண்ணொருத்தி நிறைய டின் உணவுகளைக் கொண்டு வந்து கொடுத்து, தன் அம்மாவை தன்னுடன் வரச்சொல்லி வற்புறுத்துகிறாள். அம்மாவோ, பிரிவினை அரசாங்கத்தில் வேலை செய்யும் தன் மகளுடன் இருக்கப் பிடிக்காமல், அடுத்த அறையில் புகுந்து கதவைச் சாத்திக்கொள்கிறாள். 

மற்றொரு கதை, பஸ்ஸில் செல்லும் பயணிகளைப் பற்றியது. பிரிவினைப் பகுதி அவுட்போஸ்ட்டில் ஒரு சிப்பாய் பஸ்ஸை நிறுத்தி  ஏறி, `எனக்கு என்ன கொண்டு வந்திருக்கிறீர்கள்?' என்று கேட்கிறான். எல்லோருமே பஞ்சத்தில் அடிபட்டவர்கள். யாரிடமும் ஒன்றும் இல்லை. ஒரு கிழவியைத் தவிர! அவள் நீளமான பன்றிக் கொழுப்புக் கட்டி ஒன்றைப் பொட்டலத்திலிருந்து எடுக்கிறாள். சிப்பாய்க்குத் தெரியும், பயணிகளிடம் அதிகமாக ஒன்றும் இருக்காதென்று. அதனால், கிழவியின் பன்றிக் கொழுப்புக் கட்டியில் பாதியை வெட்டி எடுத்துக்கொண்டு திருப்தியுடன் பஸ்ஸிலிருந்து இறங்கி, பஸ்ஸுக்கு வழிவிடுகிறான். ஆனால், அடுத்த சோதனைச் சாவடியில் ஒரு பெண் ராணுவ அதிகாரி எல்லா ஆண் பயணிகளையும் பஸ்ஸிலிருந்து இறங்க உத்தரவிடுகிறாள். ஒரு இளைஞனைப் பார்த்து, போரில் சண்டைபோட ஏன் சேரவில்லை என்று கேட்கிறாள். அவன், `என் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை' என்கிறான். `நாம் எல்லோருக்குமே ஓர்  அம்மா இருக்கிறாள். உடம்பு சரியில்லாமல். தாய் நாட்டைக் காப்பது நம் கடமை' என்று சொல்லி, கொட்டும் பனியில் எல்லோரையும் அவர்களது சட்டையைக் கழற்றச் சொல்லி ராணுவத்தில் சேர்த்து விடுகிறாள்.

இரு கதைகள் கொடூரமாக இருக்கின்றன. பிடிபட்ட உக்ரைன் சிப்பாய் ஒருவன், விளக்குக் கம்பத்தில் கட்டி வைக்கப்படுகிறான். பொதுமக்கள் அவனைச் சூழ்ந்துகொண்டு தர்மஅடி கொடுத்த பின், அவனைக் குற்றுயிரும் குலையுயிருமாக எடுத்துச் செல்கிறார்கள். இன்னொரு கதையில், தப்பி ஓட முயன்ற பிரிவினை ராணுவச் சிப்பாய் ஒருவனை இரண்டு வரிசைகளில் நிற்கும் சிப்பாய்களின் நடுவே நடக்க விடுகிறார்கள். எல்லா சிப்பாய்களும் அவனைப் பிரம்பால் அடிக்கிறார்கள். இந்தக் காட்சிகளை இயக்குநர் சற்று விலகி நின்று உணர்ச்சிகளைக் கிளப்பாமல் காட்டியிருக்க வேண்டும். அதுபோல் காட்டவில்லை. `Post - truth' (உண்மைக்குப் பதிலாக உணர்ச்சிப் பூர்வமாக பொதுமக்களிடம் கருத்தை உருவாக்குவது) பற்றிய இந்தப் படத்தில், இது உதைக்கிறது. ஆனால், பொதுவாக இது சோக மயமான படமில்லை. பல கதைகளில் சோகமான காட்சிகள் கேலிக்கூத்தாக (farcical style) எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் ஒரு ராணுவ ஆபீசரின் திருமணம் க்ரோடெஸ்க்காக (grotesque style) எடுக்கப்பட்டிருக்கிறது. 

புகழ் பெற்ற ரோமானிய ஒளிப்பதிவாளர் ஒலெக் முடு, தன் ஹேண்ட் ஹெல்ட் கேமராவின் மூலம் நம்மைப் போர்க்களத்தில் மூழ்கடிக்கிறார். படத்தில் மேக்கப் டிரெய்லரில் ஆரம்பிக்கும் முதல் காட்சியே ஹேண்ட் ஹெல்ட்தான். துணை நடிகர்கள் அங்கிருந்து ஓடும்போது, கேமராவும் அவர்களின் பின்னால் ஓடுகிறது. எல்லாக் கதைகளும் ஹேண்ட் ஹெல்ட் கேமராவில் `லாங் டேக்'களாக  எடுக்கப்பட்டிருக்கின்றன. லோஸ்னிட்சாவின் முந்தைய படமான `த ஜென்டில் க்ரீச்சர்' (2017) கூட நன்றாக இருந்தது. அதிலும், ஒலெக் முடுவின் ஒளிப்பதிவு சிறப்பாக இருந்தது. `டான்பாஸ்' படத்தின் கடைசி ஷாட் 12 நிமிடம் ஓடுகிறது. போலிச் செய்திக்காக நடித்த துணை நடிகர்கள் என்ன ஆனார்கள் என்று முடிவைச் சொன்னால், படத்தைப் பார்க்கப் போகிறவர்களுக்கு சுவாரஸ்யம் போய்விடும். அது ஸ்பைன் சில்லிங் க்ளைமாக்ஸ். கேமரா, கிரேனில் மேலே சென்று நடப்பது எல்லாவற்றையும் பேனரமிக் வியூவில் காட்டி, படத்தின் வெவ்வேறு கோணங்களைப் பற்றிச் சிந்திக்க வைக்கிறது. இந்த மாதிரி நீளமான காட்சியைத் துண்டு துண்டாக எடுத்துச் சேர்த்துவிடலாம். ஆனால், நேரடியாகப் பார்ப்பது போன்ற அனுபவம் கிடைக்காது. இவ்வளவு நீளமான ஷாட் எடுக்க மிகத்திறமையாக கோரியோகிராஃபி செய்ய வேண்டும். பொதுவாக, கோவா திரைப்பட விழாவில் போட்டிக்காக (competition section) வந்த படங்களிடமிருந்து அதிகமாக எதிர்பார்க்க முடியாது என்ற நிலையிலிருந்து மாறுபட்ட `டான்பாஸ்' படத்தில் இந்த 12 நிமிட ஷாட், படத்தை எங்கோ தூக்கிக்கொண்டு போகிறது.