Published:Updated:

"காலா, பரியன், ருத்ரா, கிறிஸ்டோபர், ஜானு, ஜோ..." - 2018-ன் 'வாவ்' கதைகள்! #2018TamilCinema

விகடன் விமர்சனக்குழு

'பரியேறும் பெருமாள்' என்ற உரையாடல் சினிமாவைக் கொடுத்து, இந்த வருடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதில் வெற்றி பெற்றிருக்கிறார், இயக்குநர் மாரி செல்வராஜ்.

"காலா, பரியன், ருத்ரா, கிறிஸ்டோபர், ஜானு, ஜோ..." - 2018-ன் 'வாவ்' கதைகள்! #2018TamilCinema
"காலா, பரியன், ருத்ரா, கிறிஸ்டோபர், ஜானு, ஜோ..." - 2018-ன் 'வாவ்' கதைகள்! #2018TamilCinema

சுவாரஸ்யமான களத்தைத் தேர்ந்தெடுத்து, அதை நேர்த்தியாகச் சொன்ன தமிழ் சினிமாக்கள் இந்த ஆண்டு அதிகம் வெளியாகியிருப்பது, ஆரோக்கியமான விஷயம். அப்படி 2018-ல் இதுவரை என்னென்ன விஷயங்களைப் பேசியது தமிழ்சினிமா... பார்ப்போம்! #2018TamilCinema

நிலம் எங்கள் உரிமை! 

'இந்த மண்ணுதான் நமக்கு எல்லாம். இந்த மண்ணுக்காகப் போராடுவோம், நிலம் எங்கள் உரிமை!' -என ரஜினிகாந்த் சொல்லும்போது, நிலத்தின் அவசியம் அனைவருக்கும் உணர்த்தப்பட்டது. வளர்ச்சி என்ற பெயரில் ஏழை மக்களின் உடைமை எவ்வாறு பெறப்படுகிறது என்றும், சேரி, அழுக்கு, அசிங்கம் என்று கூறி வளர்ந்துவரும் நகரமயமாதலும் அதைச் சார்ந்த பொருளாதாரப் பலன்களும் அம்மக்களை நகரங்களிலிருந்து எவ்வாறு அப்புறப்படுத்தும் என்பதையும் 'காலா' வெளிப்படுத்தியது. 'நிலம் உனக்கு அதிகாரம், நிலம் எங்களுக்கு வாழ்க்கை!' என்ற வசனம் மூலம் வல்லாதிக்கத்திற்கு எதிரான கர்ஜனையாக அமைந்தது, காலாவின் குரல்.

'மேற்குத் தொடர்ச்சி மலை' - வாழ்க்கை முழுவதும் உழைப்பிலேயே கழிக்கும் கூலித் தொழிலாளி ஒருவன், தனக்கென ஒரு காணி நிலத்தைப் பெற வேண்டும் என நினைக்கிறான். நிலம் என்பது பேராசை அல்ல, அது உரிமை. இவ்வுலகில் தனது இருப்பின் அடையாளமான அந்த நிலத்தின் முக்கியத்துவம், ராமசாமியின் ஏக்கத்தில் பார்வையாளனின் மனதில் ஊடுருவியது. மேலும், நிலம் வெறும் பரப்பு அல்ல, அது பண்பாட்டின் அடையாளம். அதை இழக்கும்பட்சத்தில் நமது பண்பாட்டு உரிமைகளையும் இழந்துவருகிறோம் என்று முகத்தில் அறைந்து சொன்னது, 'மேற்குத் தொடர்ச்சி மலை'யின் முடிவு. 

பேரரசர்கள், குறுநில மன்னர்கள் முதல் இன்றைய ஆட்சியாளர்கள் வரை... உலகம் சந்திக்கும் முதன்மை வன்முறை நிலத்தின் மீதானது. கொலை, கொள்ளை, கட்டப் பஞ்சாயத்து என்று ரவுடியிஸம் பல பரிமாணங்களைக் கொண்டிருந்தாலும், பிரதானம் நகரத்தின் மீதான தனது அதிகாரம். ரவுடிகளின் உருவாக்கம், அவர்களின் ஆதிக்கம், அவர்களுக்குள்ளான அரசியல்... என அனைத்தும் அவர்கள் சார்ந்த நிலத்திற்காகவே என்று, மேலும் பல சர்ச்சையான விவாதகங்களை எழுப்பியது வெற்றிமாறனின், 'வடசென்னை'. 

சைக்கோக்கள் ஜாக்கிரதை! 

உட்கார்ந்த இடத்திலேயே வக்கிரச் சிரிப்புடன் அனைவரையும் அலையவிட்டு ரசிக்கும் கொடூர சைக்கோ வில்லன், ருத்ரா. பெரிய கண்கள், மிரட்டும் சிரிப்பு, தொடர் கொலைகளால் போலீஸை விரட்டுவது... என சைக்கோவாகவே வாழ்ந்திருப்பார், அனுராக் காஷ்யப். தன் நிலையைப் ஒரு பெண் பறித்துக்கொண்டார் என்ற காரணத்திலிருந்து, சைக்கோவாக ஒரு வில்லனின் பாத்திரத்துடன் மையப்படுத்தி, அதில் கவனமும் பெற்றது, 'இமைக்கா நொடிகள்'. 

க்ரைம் டிடெக்டிவ் கதையில் இறுதியில் எப்படியாவது நாயகன்தான் வெற்றி பெறுவான்... என்பது தெரியும். ஆனாலும், ஒவ்வொரு காட்சியையும் பரபரப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்லி அசத்தியிருந்தது, 'ராட்சசன்'. ஒவ்வொரு கொலையின் போதும் எழும் பதற்றம், அதற்கான காரணங்களைத் தேடத் தூண்டும் ஆவல் இறுதிவரை விறுவிறுப்பு குறையாமல் இருந்தது. காரணம், யார் அந்த கொலைகாரன்? எதற்காக கொலை செய்கிறான்? போன்ற கேள்விகளுக்கு உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட சிறுவனை, அவன் சூழல் எப்படி மன ரீதியாக மாற்றுகிறது, அவன் ஏன் ராட்சசனாகிறான்... என்ற பதில்களில் நிறைவு செய்தது படம். சற்றே திடுக்கிட வைக்கும் தோற்றடத்துடன் பலரின் கவனத்தையும் ஈர்த்தான், கிறிஸ்டோபர். அவன் இசைக்கும் பியானோ முதல் ஜிப்ரானின் பின்னணி இசை முழுக்கப் படத்தின் பதற்றத்திற்கு வலு சேர்த்தது. 

பரியனும் ஜானுவும்! 

'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்திற்குப் பிறகு கடந்த சில வருடங்களாகச் சரியான கதாபத்திரங்கள் அமையாத த்ரிஷாவிற்குப் பெயர் சொல்லும் பாத்திரமாக, அமைந்தது '96' ஜானு. யாருமில்லா இரவின் வெளியில் த்ரிஷா - விஜய் சேதுபதி மட்டும் நடக்கும் ஃபர்ஸ்ட் லுக், டீஸரைப் பார்த்தவுடனே, இது த்ரிஷாவிற்கு 'கம்பேக்' எனக் கவிதை எழுத ஆரம்பித்துவிட்டார்கள், த்ரிஷா ரசிகர்கள். ஒரு இரவில் பயணிக்கும் இரண்டாம் பாதியில் விஜய் சேதுபதி - த்ரிஷா இருவரின் ஒவ்வொரு அசைவும் படத்தின் அழகியலாக அமைந்தது. த்ரிஷாவின் மஞ்சள் குர்தி பிராண்டட்  ஆகிப்போனது. பள்ளி நண்பர்கள் பழைய நினைவுகளைத் தேட, வாட்ஸ்அப் குரூப் தொடங்கினார்கள். அதன் மூலம் ஜானுக்களும், ராம்களும் உயிர்த்தெழுந்தார்கள்.  

பரியன் வெறும் பாத்திரமல்ல. ஆண்டாண்டுகால அடிமை இந்தியாவின் அடையாளம். வெகுஜன சூழல் பேசத் தயங்கிய அல்லது பேச மறுத்த குரூரத்தின் வெளிப்பாடு. அவர்கள் ஊரின் பெயர்தான் கேட்பார்கள், அவர்கள் முன் இருக்கையில் அமர்ந்தால் நாம் பின் இருக்கையில்தானே அமர வேண்டும், பேருந்தில் அவர் வயதானவர் நிறைய நேரம் உட்கார முடியாமல் எழுந்து நிற்கிறார்... என நாம் பார்க்கும் அனைத்தும், 'இப்பெல்லாம் யாருங்க சாதி பார்க்குறா?' என்ற மேம்போக்கான செயல்பாடுகள். அதைப் பரியன் கண்டிப்பாக உணர்ந்திருப்பான். அதைக் கூற மற்றவர்களையும் அழைக்கிறான். ஆயுதங்களோடு அல்ல, அன்போடு! அப்படிப்பட்ட 'பரியேறும் பெருமாள்' என்ற உரையாடல் சினிமாவைக் கொடுத்து, இந்த வருடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதில் வெற்றி பெற்றிருக்கிறார், இயக்குநர் மாரி செல்வராஜ். அவர் பாடலை போலவே...

எங்கும் புகழ் துவங்க, 
இங்கு நானும் நான் துவங்க! 

இன்னும் பல ஆஸம் சினிமாக்களுக்காக, தமிழ் சினிமா ரசிகர்கள் வெயிட்டிங்!