தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

“என் கண்களை என் மூணு குழந்தைகளுக்கும் கொடுத்திருக்கேன்!” - நடிகை சிவரஞ்சனி

“என் கண்களை என் மூணு குழந்தைகளுக்கும் கொடுத்திருக்கேன்!” - நடிகை சிவரஞ்சனி
பிரீமியம் ஸ்டோரி
News
“என் கண்களை என் மூணு குழந்தைகளுக்கும் கொடுத்திருக்கேன்!” - நடிகை சிவரஞ்சனி

பயணங்கள் முடிவதில்லை

“பிறந்தது கேரளா, வளர்ந்தது தமிழ்நாடு. இப்போ ஆந்திராவின் மருமகள். 1990-களில் ஏழு வருஷங்கள் ஆக்டிவாக நடிச்சேன். பிறகு கல்யாணம், குழந்தைகள், குடும்பம்னு இருந்துட்டதால, இப்போவரை நடிக்கலை. ஆனா, சினிமாவோடுதான் இருக்கேன்; என் கணவர் உற்சாகமா நடிக்க, நான் சப்போர்ட் பண்றேன். இனி என் பிள்ளைகள் நடிக்கவும் துணை நிற்கப் போறேன்...” - மகிழ்ச்சியுடன் தொடங்குகிறார் நடிகை சிவரஞ்சனி. 1990-களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர், தெலுங்கு முன்னணி நடிகர் ஸ்ரீகாந்த்தைத் திருமணம் செய்துகொண்டு சினிமாவிலிருந்து விலகினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தன் சினிமா பயணம், குடும்ப வாழ்க்கை, குழந்தைகள் பற்றிப் பகிர்கிறார் நம்மோடு!

“என் கண்களை என் மூணு குழந்தைகளுக்கும் கொடுத்திருக்கேன்!” - நடிகை சிவரஞ்சனி


“நான் பிறந்து வளர்ந்தது சென்னை. என் கண்கள் வித்தியாசமா இருக்குறதால, ஸ்கூல்ல எல்லோரும் ‘ஸோ க்யூட்’னு சொல்லுவாங்க. ஸ்கூல்ல ஒரு நிகழ்ச்சியில் நான் டான்ஸ் ஆடினேன்... பாட்டுப் பாடினேன். சிறப்பு விருந்தினரா வந்திருந்த சினிமா துறையைச் சேர்ந்த ஒருவர், ‘சூப்பர்! சினிமாவில் நடிக்கிறியா?’னு கேட்டார். அப்போ என் தாத்தா பாட்டி வளர்ப்பில் இருந்த நான், ஷார்ஜாவில் இருந்த என் பெற்றோர்கிட்ட கேட்டேன். ‘விருப்பமிருந்தா நடி’னு சொன்னாங்க. அப்படித்தான் எட்டாவது படிக்கும்போது, ‘நிலா பெண்ணே’ படத்தில் ஹீரோயினா அறிமுகமானேன். ஒன்பதாவது படிக்கும்போது படிப்பை நிறுத்துற அளவுக்கு அடுத்தடுத்து படங்கள் கிடைத்தன.

என் நிஜப் பெயர் உமா மகேஸ்வரி. என் ரெண்டாவது தமிழ்ப் படத்துல ‘சிவரஞ்சனி’னு பெயரை மாத்திட்டாங்க. தெலுங்குத் திரையுலகில், நடிகை வடிவுக்கரசி அம்மாவுக்கு ‘சிவரஞ்சனி’னு பெயர் இருந்ததால, அங்க என் பெயரை ‘ஊஹா’னு மாத்தினாங்க. இப்படி எனக்கு மூணு பெயர். ஆனா, பர்சனல் லைஃப்ல என் பெயர் உமா மகேஸ்வரிதான்” என்கிற சிவரஞ்சனி, ‘தாலாட்டு’, ‘ராஜதுரை’, ‘வண்டிச்சோலை சின்ராசு’, ‘சின்ன மாப்பிள்ளை’ உள்பட தமிழ் மற்றும் தெலுங்கு, மலையாள மொழிகளில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

“என் கண்களை என் மூணு குழந்தைகளுக்கும் கொடுத்திருக்கேன்!” - நடிகை சிவரஞ்சனி

“என்னுடைய முதல் தெலுங்குப் படம் உள்பட, கணவருடன் நாலு படங்களில் ஜோடியா நடிச்சேன். எங்க ரெண்டு பேருக்குள்ளும் காதல் நுழைஞ்சது. ஆனா, அதை யார் முதல்ல வெளிப்படுத்துறதுனு ரெண்டு பேருக்குமே தயக்கம். அதைவிட எங்க காதலை வீட்டுல எப்படிச் சொல்றதுனு குழப்பம். அதனால, ரொம்ப ரகசியமா காதலிச்சிட்டிருந்தோம். இந்த நிலையில, அவர் திடீர்னு ஒருநாள் எங்க வீட்டுக்கு வந்தார். எனக்குப் பெரிய அதிர்ச்சி. ‘பூஜை ரூம் எங்க இருக்கு? கூட்டிட்டுப்போ...’னு சொன்னார். எதுவும் புரியாம பயத்துடனேயே நான் கூட்டிட்டுப் போக, அடுத்த அதிர்ச்சியா எனக்கு மோதிரமும் ஒரு செயினும் போட்டுவிட்டார். ‘என்ன ஸ்ரீகாந்த் பண்றீங்க?’னு எங்கம்மா ஷாக் ஆகிட்டாங்க. பிறகு எங்க காதல் விஷயத்தை அவரே என் வீட்ல சொன்னார். ரெண்டு குடும்பத்தினரும் எங்க காதலை ஏத்துக்கிட்டு, கல்யாணத்துக்குச் சம்மதிச்சாங்க.

1996-ம் ஆண்டு இறுதியில எங்க நிச்சயதார்த்தம் நடந்துச்சு. ‘ஸ்ரீகாந்த் தொடர்ந்து நடிக்கப் போறார். கல்யாணத்துக்குப் பிறகு நானும் நடிக்க முடிவெடுத்தா ரெண்டு பேரும் ஷூட்டிங், ஷூட்டிங்னு ஓடிக்கிட்டே இருப்போமே தவிர, குடும்ப வாழ்க்கையை அனுபவிக்க முடியாது. அதனால சினிமாவில் நடிப்பதை நிறுத்திட்டு, திருமண வாழ்க்கையை ஆரம்பிப்போம்’னு அப்போ முடிவெடுத்தேன். ‘பீக்ல இருக்கும்போது இப்படியொரு முடிவெடுக்கிறீங்களே?’னு சினிமா துறையில் பலரும் கேட்டாங்க. ஆனாலும், இந்த முடிவுதான் எனக்குப் பிடிச்சிருந்தது.

1997-ம் வருஷம் கல்யாணமாச்சு. நாங்க காதலிக்க ஆரம்பிச்ச தருணத்திலிருந்து இப்போவரை, எங்களுக்குள் யாரு முதல்ல புரபோஸ் செய்தோம்னு அடிக்கடி சுவாரஸ்யமா விவாதிப்போம். எங்களுக்குள் அப்படி ஒரு சம்பவமே இதுவரை நடக்காத மாதிரிதான் தோணுது. அதை நினைச்சும் சிரிப்போம்” என்கிறார் வெட்கத்துடன் சிவரஞ்சனி. தன் மனைவி, அம்மா பொறுப்புகளைப் பற்றிச் சொல்லும்போது, அந்த வண்ணக் கண்களில் மின்னல்கள்.

“நான் சிங்கிள் சைல்டு. என் குழந்தைப் பருவத்தையும் சந்தோஷமா அனுபவிக்கலை. அதனால என் மூணு குழந்தைகளையும் கவனிச்சுக்கிறதை ஆசை ஆசையாகச் செய்றேன். கண்டிப்பு இருந்தாலும், அவங்களுடைய பெஸ்ட் ஃப்ரெண்டும் நான்தான். சந்தோஷமோ, துக்கமோ... குழந்தைங்க என்கிட்டதான் எதையும் முதல்ல பகிர்ந்துக்குவாங்க. நான் குழந்தைகளைப் பிரிஞ்சு ரெண்டு நாள்கள் வெளியூர் போறதுகூட இல்லை” என்று தாய்மை உணர்வில் பூரிக்கிறார்.

“என் கண்களை என் மூணு குழந்தைகளுக்கும் கொடுத்திருக்கேன்!” - நடிகை சிவரஞ்சனி

கண்கள் பற்றிக் கேட்டதும், உற்சாகமாகிறார் சிவரஞ்சனி. “இது கடவுள் எனக்குக் கொடுத்த கிஃப்ட். சினிமாவுக்கு வந்த பிறகு என் கண்களே எனக்கு அடையாளமாச்சு. ஒவ்வொரு முறை நான் கர்ப்பமாகும்போதும், ‘பிறக்கப்போற குழந்தையின் கண்களும் என் கண்கள் போலவே இருக்கணும்’னு வேண்டிக்குவேன். என்ன ஆச்சர்யம்... என் மூணு குழந்தைகளுக்குமே என்னுடைய கண்கள்தான். அது அவங்களை ரொம்ப அழகாக்குது. பசங்க என்கிட்ட, ‘எங்களுக்கு கிஃப்ட் கொடுங்கம்மா’னு கேட்டா, ‘என் கண்ணையே உங்க மூணு பேருக்கும் கிஃப்ட்டா கொடுத்திருக்கேன். இது வாழ்க்கை முழுக்க உங்களோடு இருக்கும். இதுக்கு மேல ஓர் அம்மாவால பெரிய கிஃப்ட் கொடுக்க முடியாது கண்ணுங்களா’னு சொல்லுவேன்.

பெரிய பையன் ரோஷன், ஒரு தெலுங்குப் படத்தில் ஹீரோவா நடிச்சான். பிறகு வெளிநாட்டில் ஆக்டிங் டிப்ளோமா கோர்ஸ் படிச்சான். இப்போ பிசினஸ் கோர்ஸ் மற்றும் நடிப்புக்கான பயிற்சிகளை எடுக்குறான். ஒன்பதாவது படிக்கிற பொண்ணு மேதா, அப்படியே என் சின்ன வயசு சாயல்ல இருக்கா. கடைக்குட்டி ரோஹன் நாலாவது படிக்கிறான். அவன் போட்டோவைப் பார்த்து, ‘பையனுடைய கண்கள் ரொம்ப அழகா இருக்கு’னு படத்தில் நடிக்கக் கேட்டாங்க. இப்போ ஒரு தமிழ்ப் படத்துல பிரபுதேவாவோடு முக்கியமான ரோல்ல நடிச்சுக்கிட்டு இருக்கான். அவனை ஷூட்டிங் கூட்டிட்டுப்போறது மற்றும் நடிப்பு சொல்லிக்கொடுக்கிற பொறுப்பு என்னுடையது. இப்படி, என்னுடைய நாலு தூண்களும் சிறப்பா முன்னேறணும். அதுக்கு நான் துணையா இருக்குறதைவிட பெரிய சந்தோஷம் எதுவும் இல்லை எனக்கு இந்த உலகத்தில்” - உமா மகேஸ்வரி வார்த்தைகளில் நிறைவு.

‘கண்ணு’பட்டுடப் போகுது!

- கு.ஆனந்தராஜ்