Published:Updated:

பரியன் உருவான கதை!

பரியன் உருவான கதை!
பிரீமியம் ஸ்டோரி
பரியன் உருவான கதை!

பரியன் உருவான கதை!

பரியன் உருவான கதை!

பரியன் உருவான கதை!

Published:Updated:
பரியன் உருவான கதை!
பிரீமியம் ஸ்டோரி
பரியன் உருவான கதை!

‘பரியேறும் பெருமாள்’ தமிழ்த் திரையுலக வரலாற்றில் ஒரு மகத்தான மைல்கல். நடிப்பு, இசை, ஒளிப்பதிவு என எல்லா அம்சங்களும் இழையோடியே இது சாத்தியமாகி யிருந்தது. உருவான கதை அறிய, ‘பரியேறும் பெருமாள்’ படக்குழுவினரைச் சந்தித்தோம். 

பரியன் உருவான கதை!

“என் ‘மெட்ராஸ்’ படம் பார்த்துட்டு என்கிட்ட ரொம்ப நேரம் பேசினான் மாரி. அவன் இயல்பிலேயே அரசியல் புரிதலும், கலை பற்றிய புரிதலும் உள்ளவன். தமிழ்ச்சமூகத்தை பாதிச்சிருக்கும் மோசமான நோய் சாதி. அதை அழுத்தமா இவன் படம் பேசுது” என்கிறார் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ரஞ்சித்.
 
“ரஞ்சித் என் அண்ணன்; தயாரிப்பாளரா அவரைப் பார்க்கல. ‘கபாலி’ பட சமயத்துல `எதாவது எழுதிட்டிருக்கியா?’னு கேட்டார். அப்ப இந்தக் கதையைச் சொன்னேன். கபாலி முடிஞ்சு ரிலீஸானப்ப என்கிட்ட இந்தக் கதை தயாரா இருந்தது. அண்ணனும் ‘நீலம் புரொடக்‌ஷன்ஸ்’ தொடங்கற யோசனைல இருந்தார். அப்படித்தான் பரியனின் பயணம் ஆரம்பமாச்சு” என்று சொல்லும் மாரி செல்வராஜ், தலைப்பு குறித்தும் பேசத் தொடங்கினார்.

“நாயகனின் பெயர் பரியேறும் பெருமாள் என்பது எப்போதோ எடுத்த முடிவு. ஆனால் படத்தின் பெயராக இதை வைப்பது சரியா என்ற யோசனை எனக்கு இருந்துகிட்டே இருந்தது. `இளையராஜாக்கள்’, `பாண்டியராஜாக்கள்’, `அடங்காமை’ என்று வேறு சில பெயர்களை யோசித்திருந்தேன். திரைக்கதைக்குள் அடிக்கடி வரும் ‘பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல் மேல ஒரு கோடு’ சொல்லும் விஷயத்தின் ஆழம் உணர்ந்த ரஞ்சித் அதையே பரிந்துரைத்தார். நாம யோசிக்கறது வேற. இன்னொருத்தர் அதை சரிங்கறப்ப நம்பிக்கை அதிகமாகுது” என்ற மாரி தொடர்ந்தார்:

“கொலைகாரத் தாத்தா கேரக்டரில் நடிக்க வைக்கப் பலபேரைப் பார்த்தேன். வயசானவங்களா இருக்கணும், அதேநேரம் உடல் உறுதியும் இருக்கணும். சிலரை நடிக்கவும் வெச்சேன். சரியா வர்ல. அப்பதான் கராத்தே வெங்கடேசன் பத்தி சொன்னாங்க.”

கராத்தே வெங்கடேசன் வழக்கறிஞர். படத்தில் வருவதுபோல சில வழக்குகளைச் சந்தித்திருப்பதாகச் சொன்னார். “ ‘அண்ணே, ரெண்டு பேரைக் குத்திட்டு வந்துட்டாங்க.  நாளைக்கு சரண்டர் பண்ணணும்’ம்பாங்க. அதையெல்லாம் நினைச்சுட்டுதான் இந்த ரோல் பண்ணினேன். நம்ம மேலே நாலு பேருக்கு வெறுப்பு வந்தாலும் பரவால்ல. சிலர் திருந்தினால் சரினுதான் இந்த வில்லன் ரோலில் நடிச்சேன்.”

“உங்க முகநூல் பதிவெல்லாம் பார்த்தோம். நீங்க ஓர் இந்துத்துவ ஆதரவாளர்னு தெரியுது. ஆனால் படம் சாதி எதிர்ப்பைப் பேசும் படம். இந்தப் படம் உங்க எண்ணத்தில் மாற்றம் ஏற்படுத்தியிருக்குதா?” என்று கேட்டோம். “இல்லை” என்றார் அழுத்தமாக. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பரியன் உருவான கதை!

“என்னோட வாழ்க்கையில் முப்பது ஆண்டுக்காலம் காங்கிரஸ் கட்சியில் இருந்துட்டு, அஞ்சு வருடமாகத்தான் இந்த நிலை எடுத்திருக்கேன். அங்க தப்பு இருந்ததுன்னுதான் இங்க வந்திருக்கேன். ஆனால், சனாதன தர்மத்திலும் இந்துத்துவ அரசியலிலும் அழுத்தமான நம்பிக்கை உடையவன் நான்’’ என்றார்.

பரியனின் அப்பாவாக நடித்த வண்ணார் பேட்டை தங்கராஜ் அதே வெள்ளந்தியான முகத்துடன்  இந்த உரையாடலைப் பார்த்துக்கொண்டிருந்தார். ``அந்தக் கேரக்டருக்கே ‘செல்வராஜ்’னு எங்க அப்பா பேரைத்தான் வெச்சிருந்தேன். பலபேருக்கப்பறம் இவரைத் தேடிப்பிடிச்சேன்.  நாட்டுப்புறக் கலைக்குழுவுல முக்கியமான ஆள். அதுபோக வெள்ளரிக்கா வித்துட்டிருக்கார். படம் ரிலீஸாகி மூணுநாளா கடைலதான் இருந்திருக்கிறார். ஆளுகதான் பார்த்து, “என்ன தங்கராஜையா, ஊரே தேடுது... இங்கன இருக்கீங்க?’னு அனுப்பிவெச்சாங்க” என்றார் மாரி.

``நிர்வாணமா ஓடணும்னு சொன்னப்ப `நம்ம புள்ளைகளெல்லாம் பாக்குமேய்யா’னு யோசிச்சேன். மாரித்தம்பி எதுக்காக இதப் படமா பண்றாருனு சொன்னதும் பண்ணிருவோம்னு பண்ணிட்டேன். இப்ப எல்லாரும் பாராட்டுறாங்க” என்றார் தங்கராஜ்.

அவர் நிர்வாணமாக ஓடும் காட்சியைப் படமாக்கும்போது நடந்ததைப் பகிர்ந்துகொண்டார் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர். “அந்தக் காட்சி எடுக்கும்போது, படக்குழுவில் இருந்த எல்லாருமே கண்ணை மூடிக்கிட்டாங்க. ஆனா நான் கேமராமேன். பார்த்துதானே ஆகணும்? ஷூட் பண்ணி முடிஞ்சும் அந்த அதிர்ச்சி என் உடம்பில் அப்படியே இருந்தது.  எனக்கும் இவர்களைப் போல அரசியல் தெளிவு கொஞ்சம் இருக்கறதால எந்த ஆங்கிள்ல கேமரா வெச்சு, எதெதைப் பதிவு பண்ணணும்கறதுல தெளிவா இருந்தேன். அதை மக்கள் புரிஞ்சு ஏத்துக்கறதுதான் மகிழ்ச்சியா இருக்கு!” என்றார்.

“மக்கள் ஏத்துக்கிட்டுக் கொண்டாடக் காரணம், குறியீடுகள்னு புரியாம வைக்காம, வெளிப்படையா பேசின நேர்மைதான்” - இதைச் சொன்னவர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். “சில காட்சிகள்ல குறியீடுகள் இருக்குதான். அது ஈஸியா புரியற மாதிரிதான் இருக்கு. அப்படித்தானே இருக்கணும்... இல்லைன்னா எப்படிப் போய்ச்சேரும்?” என்றார். `எங்கும் புகழ் துவங்க’ பாடலும் `நான் யார்’ பாடலும் மொத்த ஆல்பத்திலும் அவருக்கு மிகவும் பிடித்த பாதித்த பாடல்கள் என்றார். “ `நான் யார்’ பாடலின் வரிகள் அவ்வளவு ஆழமா இருக்கும்.  ஃபீல் பண்ணி, கத்திக் கத்தி அந்தப் பாட்டை டிராக் பாடிட்டேன். அப்பறம் வேறு சிலரைப் பாடவெச்சும் அந்த ஆன்மா மிஸ் ஆகற மாதிரி இருந்தது. ‘என்ன சொல்றீங்க மாரி?’னு கேட்டேன். ‘நீங்க பாடினதுதான் சரியா இருக்கு’னு  மாரி சொல்லவும் அதையே ரிலீஸ் பண்ணீட்டோம்” என்கிறார். 

 “இது மாரி   பார்த்து, வாழ்ந்து, அனுபவித்த கதை. அவர்கிட்ட ஒவ்வொரு காட்சிக்கும் உண்டான காரணம் என்ன, அந்தக் காட்சி சொல்லவர்றது என்னன்னு கேட்டுக்கிட்டேன். அதன்படி எடிட் பண்ணினேன்” என்றார் படத்தொகுப்பாளர் செல்வா. ஒரு கலைஞன் படைப்பைக் கைமாற்றி விடும்போதும் அதன் சாரம் சிதையாமல் இருப்பது முக்கியம். கலை இயக்குநர் ராமு, 2005-ன் ஒவ்வொரு அம்சமும் படத்தின் ஆங்காங்கே இருக்குமாறு பார்த்துக்கொண்டதைப் பகிர்ந்துகொண்டார். அப்போதைய பெஞ்ச், டெஸ்க், நோட்டுப் புத்தகங்கள், போஸ்டர்கள் என்று பலவற்றிலும் கலை இயக்குநரின் கைவண்ணம் இருந்தது. “யாரும் அதை கவனிச்சுப் பாராட்டலைங் கறதுதான் அவருக்கான வெற்றி” என்றார் ரஞ்சித். 

பரியன் உருவான கதை!

அமைதியாகவே இந்த உரையாடலைப் பார்த்துக்கொண்டிருந்தார் `பரியன்’ கதிர். ``எல்லாரும் நான் அடிவாங்கற காட்சிக்குத்தான் பதறினாங்க. ஆனா எனக்கு அந்தக் கடைசி உரையாடல்தான் ரொம்ப பாதிச்சுது. எத்தனை பேருக்கு பரியனுக்கு கிடைத்த அந்த ‘உரையாடும்’ வாய்ப்பு கிடைக்குது? பேசவிடாமலே குரல்வளை நெருக்கப்படுகிற பரியன்கள்தானே அதிகம்?” என்று கதிர் எழுப்பிய கேள்வி பலரின் கேள்வியாக அந்த அறையின் சுவரெங்கும் எதிரொலித்தது.

“அந்தக் காட்சியில் மாரிமுத்துவின் நடிப்பு முக்கியமாகப் பாராட்டப்பட வேண்டியது” என்றார் மாரி செல்வராஜ்.

இந்தப் படத்தின் விழா ஒன்றில், கயல் ஆனந்தியின் தந்தையாக நடித்த மாரிமுத்து, ‘ஒரு கலைக்காகத் தன்னை நிர்வாணமாக ஒப்படைத்த கலைஞன் காலில் விழ ஆசைப்படுகிறேன்’ என்று சொல்லி, பரியனின் அப்பாவாக நடித்த தங்கராஜின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கியிருக்கிறார்.

“ராம்  சார்கிட்டயும் ரஞ்சித் அண்ணன்கிட்டயும் இந்த க்ளைமாக்ஸுக்காக நிறைய பேசினேன். பல விவாதங்களுக்குப் பிறகு இந்த க்ளைமாக்ஸை வெச்சோம். ஏன்னா, ஒடுக்குபவர்கள், ஒடுக்கப் படுபவர்கள் இவர்களைவிட, எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தபடி, மௌனமாக இருப்பவர்கள்தான் அதிகம். அவங்களையும் பேசவைக்கணும் என்பதுதான் அந்த க்ளைமாக்ஸின் நோக்கம். அப்படி ஒரு உரையாடல் நடந்தா அது இந்தப் படத்துக்கு மட்டும் கிடைச்ச வெற்றியல்ல. இந்த சமூகத்துக்குக் கிடைத்த வெற்றி” என்றார் மாரி செல்வராஜ்.

மாற்றங்கள் தொடங்கட்டும்; தொடரட்டும்!

பரிசல் கிருஷ்ணா, சனா - படம்: எஸ்.ரவிக்குமார்