Published:Updated:

``தூங்கி எந்திரிக்கிறதுக்குள்ள எட்டு லட்சம் ரீச்!’’ - 'வைரல் பாடகி' பிரியா ஃபாக்சி

ப.தினேஷ்குமார்

`மழைக்குருவி' பாடலைப் பாடி, சமூக வலைதளங்களில் வைரல் பெண் ஆனவர், பிரியா ஃபாக்சி. அவரிடம் பேசினோம்.

``தூங்கி எந்திரிக்கிறதுக்குள்ள எட்டு லட்சம் ரீச்!’’ - 'வைரல் பாடகி' பிரியா ஃபாக்சி
``தூங்கி எந்திரிக்கிறதுக்குள்ள எட்டு லட்சம் ரீச்!’’ - 'வைரல் பாடகி' பிரியா ஃபாக்சி

``கீச்சு கீச் என்றது, கிட்ட வா என்றது... பேச்சு எதுவுமின்றி, பிரியமா என்றது’’ - `செக்கச் சிவந்த வானம்' படத்தில் ரஹ்மான் தன் மெல்லிய குரலால் கீச்சிய இப்பாடலை, சில மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் பாட, அது சமூக வலைதளங்களிலும், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களிலும் உலா வந்துகொண்டிருந்தது. யார் அந்தப் பெண் எனத் தேடினால், திருச்சியில் படித்துக்கொண்டிருக்கிறார். பெயர், பிரியா ஃபாக்சி. ஹாய், ஹலோவுக்குப் பிறகு, தனது பிளாஷ்பேக் கதையைச் சொன்னார் பிரியா. கேட்போமா?  

``என் பெயர், பிரியா ஃபாக்சி. சின்ன வயசுலேயே அம்மா என்னைப் பாட்டு கிளாஸ்ல சேர்த்து விட்டுட்டாங்க. அப்போலாம் எனக்குப் பாட்டுமேல பெரிய ஆர்வம் கிடையாது. அம்மாகிட்ட, 'பாட்டு கிளாஸுக்கெல்லாம் போகலைமா'னு அடம்பிடிப்பேன். தினமும் அம்மா சமாதானப்படுத்தி அனுப்பி வைப்பாங்க. ரெண்டு மாசம் கழிச்சு எனக்குப் பாட்டு சொல்லிக் கொடுத்துக்கிட்டிருந்தவர், `கிளாஸுக்கு வர்ற பொண்ணுங்கல்ல நீதான்மா ரொம்ப நல்லாப் பாடுற!'னு பாராட்டினார். அப்போதான், 'நாம நல்லாதான் பாடுறோம்; நமக்குள்ளேயும் ஏதோ ஒண்ணு இருக்கு'னு தோணுச்சு. பிறகு, எனக்குப் பாட்டுமேல தனி பிரியம் ஏற்பட்டு, எந்த மறுப்பும் சொல்லாம தினமும் பாட்டு கிளாஸுக்குப் போக ஆரம்பிச்சுட்டேன். நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது, எனக்குப் பாட்டுமேல பெரிய ஆர்வம் இருக்குனு நினைச்சு, அப்பா என்னை `சூப்பர் சிங்கர்' ஆடிஷனுக்காக ராத்திரியெல்லாம் தூங்காம வரிசையில நின்னுக்கிட்டு இருந்திருக்கார். அந்தளவுக்கு எங்கப்பா எனக்காகப் பல தியாகங்களைப் பண்ணியிருக்கார். இப்போ, 'மழைக்குருவி' பாட்டுக்கு கிடைச்ச வரவேற்பைப் பார்த்து, எங்க அம்மா கண் கலங்கிட்டாங்க. இந்த நிமிடம் வரைக்கும் அப்பாவும் அம்மாவும்தான் எனக்குப் பெரிய சப்போர்ட். நான் இப்போ திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இரண்டாமாண்டு ஜியாலஜி படிச்சுக்கிட்டு இருக்கேன்" என்றவர் தொடர்ந்தார். 

``மத்தவங்களைச் சார்ந்திருக்காம, நம்ம முயற்சியில உருவாகிற இன்டிபென்டென்ட் மியூசிக் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதுக்கு சமூக வலைதளங்கள் சிறந்த பிளாட்பாரமா இருக்கிறதால, அதுல நான் முப்பது, நாற்பது நொடிகளுக்குப் பாடலைப் பாடி ஷேர் பண்ணிக்கிட்டு இருந்தேன். என் முதல் 'கவர் சாங்' 'மழைக்குருவி'தான். அதுக்கு இவ்ளோ பெரிய வரவேற்பு கிடைக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. வீடியோ பதிவு செஞ்சு ஒரு மாசம் கழிச்சுகூட அந்த வீடியோ பெருசா எங்கேயும் ரீச் ஆகலை. திடீர்னு ஊட்டி, கோயம்புத்தூர் பக்கம் அந்த வீடியோ பரவ ஆரம்பிச்சது. அதுவரை ஆயிரக்கணக்கான பேர்தான் அந்த வீடியோவைப் பார்த்திருந்தாங்க. போகப்போக, லட்சக்கணக்குல போக ஆரம்பிச்சது. நைட்டு தூங்கி எந்திரிக்கிறதுக்குள்ள மூணு லட்சம் பேர் அந்த வீடியோவைப் பார்த்திருந்தாங்க. இதுவரை எட்டு லட்சத்துக்கும் அதிகமானோர் என்னோட `மழைக்குருவி' பாடலைப் பார்த்திருக்காங்க" என்றவரிடம், பிடித்த இசையமைப்பாளர், அடுத்த திட்டங்கள் குறித்தும் கேட்டோம்.

``அனிருத் எனக்குப் பெரிய இன்ஸ்பிரேஷன். நான் கேள்விப்பட்ட வரைக்கும் அனிருத் அண்ணாவும் தன்னுடைய கல்லூரிக் காலங்களில் பல அவமானங்களைச் சந்திச்சிருக்காராம். அதையெல்லாம் கடந்து, `ஒய் திஸ் கொலவெறி' மூலமா பெரிய சாதனையைப் படைச்சார். அதனால, அனிருத் அண்ணாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அடுத்து சில ஆங்கில மாஷ்அப்ஸ் (Mashups) பண்ணலாம்னு யோசிக்கிறேன். சினிமாவுல பாடுற வாய்ப்புகள் வரத் தொடங்கியிருக்கு. இன்னும் எதுவும் முடிவாகல. பொறுமையா, நிதானமா ஒவ்வொரு அடியா எடுத்து வைக்கிறேன். எதிர்காலத்துல நிச்சயம் நல்ல பாடகியா வருவேன்!" - நம்பிக்கையுடன் முடிக்கிறார் பிரியா ஃபாக்சி.

வாழ்த்துகள் தோழி!