Published:Updated:

``ரமணா 2.0, வின்னர் 2.0, சூர்யவம்சம் 2.0... இது எப்படி இருக்கு?!

``ரமணா 2.0, வின்னர் 2.0, சூர்யவம்சம் 2.0... இது எப்படி இருக்கு?!
``ரமணா 2.0, வின்னர் 2.0, சூர்யவம்சம் 2.0... இது எப்படி இருக்கு?!

`சாமி 2', `சண்டக்கோழி 2', `எந்திரன் 2.0', `தமிழ்ப்படம் 2', `தேவி 2' - இப்படியாக தமிழ் சினிமாவில் மாஸ் ஹிட் கொடுத்த பல திரைப்படங்களின் அடுத்த வெர்ஷன் வரிசையாகக் களமிறங்கி ரசிகர்களைக் கலங்கடித்துக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் எந்தத் திரைப்படத்தின் அடுத்த வெர்ஷன் வந்தால் நன்றாக இருக்கும்?!

'சாமி 2', 'சண்டக்கோழி 2', 'சார்லி சாப்ளின் 2', 'எந்திரன் 2.0', 'இந்தியன் 2', 'தமிழ்ப்படம் 2', 'தேவி 2' - இப்படியாக தமிழ் சினிமாவில் மாஸ் ஹிட் கொடுத்த பல திரைப்படங்களின் அடுத்த வெர்ஷன்கள் வரிசையாகக் களமிறங்கி ரசிகர்களைக் கலங்கடித்துக் கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் எந்தத் திரைப்படத்தின் அடுத்த வெர்ஷன் வந்தால், மீம் மெட்டீரியலாக உபயோகித்துப் புளங்காகிதம் அடையலாம் என மீம் ஆர்வலர்கள் ரூம் போட்டு யோசித்துக்கொண்டிருக்க, நம் பங்குக்கு மூளையைக் கசக்கிப் பிழிந்து யோசித்ததில் வந்து விழுந்த சில திரைப்படங்களின் பட்டியல்.

சூர்ய வம்சம் 2.0 :

மீ்ம் கிரியேட்டர்களின் `லிட்டில் பிரின்ஸ்' அண்ணன் சரத்குமார் சின்ராசாக வேடம் கட்டி வாழ்ந்த தன்னிகரற்ற காவியம், `சூர்ய வம்சம்'. சரத்குமார் அப்பா மகனாக இருவேடங்களில் நடித்திருக்க, அவருடன் ராதிகா, தேவயானி உள்ளிட்ட பலரும் நடித்தார்கள். ஊரில் பெரிய மனிதராக வலம் வரும் அப்பா சரத்குமாரின் மகன் சின்ராசு, தன் குடும்பத்தின் எதிர்ப்பை மீறி தேவயானியைக் கரம் பிடித்து வாழ்க்கையைத் தொடங்குகிறார். அடுத்து என்ன, `ஒரே பாடல் ஓஹோ வாழ்க்கை’. இதே பாட்டில் தேவயானியும் கலெக்டர் ஆகிவிட, இத்தனை வருடங்கள் உருண்டு திரண்டு ஓடியும், அப்பா சரத்குமார் இவர்கள் மீது வீம்பு கொண்டு அலைவதாகக் காட்டிக் கொள்கிறார். பின்னர் குடும்பத்துக்குத் தெரியாமல் தன் பேரன் மீது அன்பு செலுத்தி அடிக்கடி சந்தித்துப் பேசிக் கொ’ல்’கிறார்கள்.

இதுக்கு ஏன் '2.0' வெர்ஷன் வேணும்னு கேட்குறீங்களா... தாத்தா பேரன் இருவரும் இருக்கும்படி படமாக்கப்பட்ட காட்சிகளும், வசனங்களும் பொருந்திப் போகாத தற்கால நாட்டு நடப்புப் பிரச்னைகளே இல்லை எனலாம். `பாயாசம் சாப்பிடுங்க ப்ரெண்டு!’, ‘பரவால்ல ப்ரெண்டு, யாராவாது வேணும்னே பண்ணுவாங்களா ப்ரெண்டு!’, ‘இனிமே சின்ராசக் கையிலேயே பிடிக்க முடியாது’, ‘ஊர்லேயே மரிக்கொழுந்து சென்ட் போடறவன் நீ மட்டும்தான்’ போன்ற வசனங்களே போதும். முதல் வெர்ஷனிலேயே சோஷியல் மீடியாவில் அனைவருக்கும் செல்லப் பிள்ளையாகிவிட்ட 'சூர்ய வம்சம்', இன்னும் பல திருப்பங்களோடு '2.0' வெர்ஷனில் உருவெடுத்தால், மிகச் சிறப்பாக இருக்கும்தானே! 

ப்ரண்ட்ஸ் 2.0 :

விஜய், சூர்யா, வடிவேலு, தேவயானி நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம், 'ப்ரெண்ட்ஸ்'. 'கான்ட்ராக்டர்' நேசமணி கேரக்டரில் நடித்திருக்கும் வடிவேலு போதும்... இந்தப் படத்தின் '2.0' வெர்ஷனை எதிர்பார்க்க! படத்தின் முதல்பாதியில் அப்ரசண்டிகளாக வேலைக்குச் சேரும் விஜய், சூர்யா & கோ 'சித்தப்பு' நேசமணியைப் படுத்தும் பாடு, பல தலைமுறைகளைக் கடந்தும் சிரிக்க வைக்கும். ‘உசுர வாங்காதீங்கடா’, `இதுவரைக்கும் உடைச்ச ஃபர்னிச்சர்லாம் பத்தாதா?’, ‘இது உங்க வொய்ஃபா?’ போன்ற வசனங்கள் இப்போதும் ட்ரெண்டிங் ஆச்சே!

வின்னர் 2.0 :

‘வடிவேலு ஃபார் லைஃப்’ என்ற டேக்லைனிற்கு மிக முக்கியக் காரணியாக அமைந்த படம் இது. ‘கைப்புள்ள’ கதாபாத்திரத்தி்ல் புகுந்து விளையாடி வீடு கட்டியிருப்பார், வடிவேலு. பிரசாந்த், கிரண், நம்பியார் மற்றும் பலர் நடிப்பில் வெளியான இப்படத்தின் காமெடிக் காட்சிகளுக்கு, இப்போதும் டிமாண்ட் இருப்பது, இரண்டாம் பாகத்தின் எதிர்பார்ப்பிற்கு மிகச்சிறந்த உதாரணம். ‘கைப்புள்ள’ கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்ட நாளைக்கூட ஞாபகம் வைத்துக்கொண்டு, சோஷியல் மீடியாவில் கொண்டாடித் தீர்க்கிறார்கள், நெட்டிசன்கள். ‘சங்கமே அபராதத்துலதான் ஓடுது’, ’ஊருக்குள்ள நம்மளைப் பத்திக் கேட்டுப்பாருங்க தம்பி! நாம அடிவாங்காத ஏரியாவே கிடையாது’ போன்ற வசனங்கள் மீம் கிரியேட்டர்களின் ஆல்டைம் ஃபேவரைட். மற்ற யாரும் இல்லையென்றாலும் பரவாயில்லை. வடிவேலுவை மட்டுமேகூட வைத்துக்கொண்டு, 'வின்னர் 2.0' எடுத்து அதிரி புதிரி ஹிட்டாக்கலாம் என்பதைத் தெரிவித்துக்கொண்டு...

ரமணா 2.0 :

விஜயகாந்த்தின் அரசியல் மேடைப் பேச்சுகள் எந்த அளவுக்கு ட்ரோலில் சிக்கியதோ, அதற்குக் கொஞ்சமும் குறையாமல் 'ரமணா' பட டெம்ப்ளேட்டுகளையும் சோஷியல் மீடியாவில் வெளுத்துத் துவைத்தார்கள். கல்லூரிப் பேராசிரியராக வரும் விஜயகாந்த், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளைக் கடத்திக் கொல்கிறார். அதைத் தடுக்க காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. வழக்கில் உண்மையான குற்றவாளியைக் கண்டறிவதன் மூலம், தனது வேலையில் அடுத்தகட்ட வளர்ச்சியை அடையலாம் என நினைக்கிறார், கான்ஸ்டபிள் ஒருவர். மேலதிகாரிகளின் அழுத்தத்தால் வேலையிலிருந்து நீக்கப்படுகிறார். இருந்தாலும், ஆர்வம் காரணமாகத் தொடர்ந்து இந்த வழக்கில் ஆர்வம் காட்டி உண்மைகளைக் கண்டுபிடிக்கிறார். விஜயகாந்த் செய்த கொலைக்கான பின்னணியில் இருந்த ஃபிளாஷ்பேக், நெகிழ்ச்சி. அதைவிட மோசமான சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டிருக்கும் இந்தச் சூழலுக்கு, இந்தப் படத்தின் இரண்டாம் வெர்ஷன் நிச்சயம் தேவைதான். `யார்யா அவரூ... எனக்கே பாக்கணும்போல இருக்கே!’.

இப்படி, இன்னும் எந்தெந்த படங்களில் '2.0' வந்தால் நன்றாக இருக்கும்? அதற்கான காரணத்தோடு கமென்ட் தட்டுங்களேன் ஃப்ரெண்ட்ஸ்...!

அடுத்த கட்டுரைக்கு