Published:Updated:

அய்யா என்ன சொல்ல வர்றார்னா? - சீதக்காதி விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
அய்யா என்ன சொல்ல வர்றார்னா? - சீதக்காதி விமர்சனம்
அய்யா என்ன சொல்ல வர்றார்னா? - சீதக்காதி விமர்சனம்

கலைஞனுக்கும், கலைக்கும் சாவே கிடையாது என்பதை ஆத்மார்த்தமாகவும், நகைச்சுவையாகவும் சொல்கிறது இந்த சீதக்காதி. 

அய்யா என்கிற ஆதிமூலம் 50 ஆண்டுகளுக்கும் மேல் மேடை நாடகங்களில் நடித்துவருபவர். மக்களின் நேரடிப் பார்வையில் நடிக்க வேண்டும் என நினைக்கும் ஆதிமூலம், சினிமாவில் நடிக்க, தொடர்ந்து மறுத்து வருபவர். ஒரு கட்டத்தில் அவரும் சினிமாவில் `நடிக்க' நேர்கிறது. அது என்னவிதமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதனை 172 நிமிட சினிமாவாகச் சொல்லியிருக்கிறது பாலாஜி தரணிதரன் இயக்கியிருக்கும் சீதக்காதி.

விஜய் சேதுபதிக்கு 25வது திரைப்படம். படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் 1950களில் ஆதிமூலம் நடித்த லவகுசாவில் ஆரம்பித்து, எண்பதுகளில் விசாரணை என்னும் நீதிமன்ற மேடை நாடகம் வரை மேடையில் நாடகங்கள் அரங்கேறும் காட்சிகள் காட்டப்படுகின்றன. ஒவ்வொரு தோற்றத்திலும் வயது முதிர்வுக்கான அழகியலுடன் அசத்துகிறார். அதிலும் கலையை வெறுத்து ஒதுக்கும் ஔரங்கசீப் மன்னராக 8 நிமிடங்கள் ஒரே ஷாட். லைவ் ரெக்கார்டிங், சிங்கிள் ஷாட் என நகரும் அக்காட்சியை இன்னும் இன்னும் மெருகேற்றி வேறுபடுத்திக்காட்டுகிறது சரஸ்காந்தின் கேமரா. கோவிந்த் வசந்தாவின் இசையும், சரஸ்காந்தின் ஒளிப்பதிவும், விஜய் சேதுபதியின் நடிப்பும் அந்த 8 நிமிடங்கள் முடிந்ததும், நம்மையும் அறியாமல் ஒரு மேடை நாடகத்தைப் பார்த்த உணர்வை ஏற்படுத்தி கைதட்ட வைக்கிறது. 

விஜய் சேதுபதி எப்போதும் திரைப்படங்களில் விஜய் சேதுபதியாக மட்டுமே இருக்கிறார் என்னும் புகாருக்கு, ஆதிமூலம் மூலமாக பதிலடி கொடுத்திருக்கிறார். 70 வயது முதியவர், முதிர்ச்சியான தோற்றம் என அய்யா ஆதிமூலம் மட்டும் அக்காட்சிகளில் தெரிகிறார். படத்தின் ஆரம்பத்தில் வெறும் 40 நிமிடங்கள் வரும் ஒரு கதாபாத்திரம் படம் முழுமைக்கான பாதிப்பை ஏற்படுத்த முடியுமா என்னும் கேள்விக்கு முடியும் என்கிறார் விசே. இவை அனைத்தும் முதல் 1 மணி நேரத்துக்குள் நடக்கும் காட்சிகள் என்றால், இது மேலும் எப்படியெல்லாம் இருக்கும் என எண்ணும் போது, திரைக்கதை முற்றிலுமாக மாறி வேறு திசையில் நகர்கிறது.

விஜய் சேதுபதியின் மனைவி லட்சுமியாக `வீடு' அர்ச்சனா. ஒரு வயது முதிர்ந்தவர் பேரக்குழந்தையை தூக்கும் போது வலியுடன் கொடுக்கும் உடல் நுணுக்கங்களைக்கூட  உணர வைக்கிறார். படத்தின் மற்றுமொரு மிகப்பெரிய பலம் அரசு நாடக சபாவின் மேனேஜராக வரும் மௌலி. யதார்த்தமாக, அதே சமயம் மிகவும் கறாராக சில விஷயங்களை அழுத்தமாக மறுக்கும் வேடம். அநாயசமாகச் செய்திருக்கிறார். ஹீரோ காதலியைப் பார்க்கும் காட்சியை இயக்கும் பகவதி பெருமாள் `பக்ஸ்'-ஸூம் `நடித்திருக்கும்’ ராஜ்குமாரும் படத்தின் ஒட்டுமொத்த ட்ரீட்மென்ட்டை தனித்திருக்கவைக்கிறார்கள். அதனாலேயே அந்த காமெடி களை கட்டுகிறது.        

வக்கீலாக கருணாகரன், நீதிபதியாக இயக்குநர் மகேந்திரன், நாயகிகளாக ரம்யா நம்பீசன், பார்வதி  நாயர், காயத்ரி எனப் பலர் படத்தில் இருக்கிறார்கள். அவ்வளவே.

ஃபேன்டஸி ரீதியிலான படம் என்றாலும், சாமான்யன் முதல் நீதிபதி வரை ஊரில் இருக்கும் அனைவருமே இப்படி ஒரு விஷயத்தை ஆமோதிப்பதெல்லாம்...  ஒரு கட்டத்துக்கு மேல், எவ்வித சுவாரஸ்யமும் இல்லாமல் நகரும் காட்சிகளும், அதை மீண்டும் மீண்டும் டைம் லூப்பில் பார்ப்பது போல் அக்காட்சிகள் ஏற்படுத்தும் உணர்வும், படத்தின் மீது ஓர் ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன. கிட்டத்தட்ட `நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்' பட டைப் காமெடிதான். ஆனால், இப்படம் எதைப் பேசுபொருளாக எடுத்துக்கொள்கிறது என்பதே காமெடியானது போல் தோன்றுகிறது. மேடை நாடகக் கலைஞர்கள் அளவுக்கு சினிமாக் கலைஞர்களுக்கு நடிக்க வராது என்பதைக்கூட ஒரு கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், ஒரு நொடியில் நடிப்பின் வாசனையைக் கூட மறந்து மரத்துபோனதுபோல் நிற்கும் நடிகர்களும், அதை வைத்து காமெடி செய்திருப்பதும், இது கலைக்கான ஒரு படமா அல்லது `தமிழ்ப்படம்' போல், சினிமா மீதான ஒரு ஸ்பூஃப் திரைப்படமா என எண்ண வைக்கிறது. 

எடிட்டர் கருணை காட்டாமல், சில காட்சிகளை கட் செய்திருக்கலாம் எனத் தோன்றும் அளவுக்கு நகரும் காட்சியமைப்புகள் படத்தை விட்டு பார்வையாளனை விலக வைக்கிறது. இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் வரிகளில் `அய்யா' பாடலும், மதன் கார்க்கியின் வரிகளில் `அவன்' பாடலும்தான், கோவிந்த வசந்தாவின் பின்னணி இசையோடு இக்காட்சிகளை சிறிதளவேணும் காப்பாற்றுகின்றன. 

பாரதிராஜா, பாக்யராஜ் தொடங்கி இயக்குநர் ராம், விமர்சகர் பரத்வாஜ் ரங்கன் வரை எண்ணற்ற கேமியோக்கள். சிறப்பான நடிப்பைத் தர மறுக்கும் பட நாயகர்கள், ஓவர்டைம் பார்த்து ஓவர்டோஸாக நடிக்கும் ஊடகவியலாளர்கள், மக்கள் எனப் படத்தில் ஆங்காங்கே வரும் செயற்கைத்தன்மை கேள்விகளை எழுப்புகிறது.

மேடை நாடகக் கலைஞர்களின் வலியை,  மேடை நாடகத்துக்கும், சினிமாவுக்குமான முரண்களை இப்படம் பேசியிருக்கிறது. அது தொடர்பான விவாதங்களையோ கவன ஈர்ப்புகளையோ கோரியிருக்கிறது. ஆனால், பெரும்பகுதி படம் நம்பியிருக்கும் அந்த `அய்யா வருகை’ ஒருகட்டத்துக்குப் பின் அயர்ச்சியை உண்டாக்குவது என்னவோ, உண்மை.  

ஆனாலும், இந்த சீதக்காதியின் பெரும் பலமும் சிறுபலவீனமும் `அய்யா’தான்! 

அடுத்த கட்டுரைக்கு