Published:Updated:

"உறவுகளின் முதல் எதிரி, ஈகோ... இதைப் புன்னகையுடன் சொன்ன படம்!" - #5yearsOfEndrendrumPunnagai

"உறவுகளின் முதல் எதிரி, ஈகோ... இதைப் புன்னகையுடன் சொன்ன படம்!" - #5yearsOfEndrendrumPunnagai
"உறவுகளின் முதல் எதிரி, ஈகோ... இதைப் புன்னகையுடன் சொன்ன படம்!" - #5yearsOfEndrendrumPunnagai

`என்றென்றும் புன்னகை' படம் வெளியாகி, இன்றோடு 5 வருடங்கள் நிறைவாகியிருக்கிறது. இப்படம் குறித்த ஒரு ரீவைன்ட்!

`டாம் அண்ட் ஜெர்ரி' பெயரைச் சொன்னாலே ஒரே வீட்டில் ஒர் எலியும் பூனையும் மாற்றி மாற்றி செய்யும் சேட்டைகளும், லூட்டிகளும்தான் நினைவுக்கு வரும். ஆனால், இருவரையும் பிரித்துப் பாா்க்க யாரும் விரும்பமாட்டாா்கள். ஆமாம் உறவுக்கான விளக்கம் இதுதான்! ஈகோதான் உறவுகளுக்குள் அவ்வப்போது வந்துபோகும் ராங் கால். இந்த ராங் காலை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஏற்ற டோனில் உறவுகள் என்னும் நெட் வொா்க்கில் சரியாகக் கனெக்ட் செய்து, இன்றும் பலரது மனதில் புன்னகைத்துக்கொண்டிருக்கிறது, 'என்றென்றும் புன்னகை' திரைப்படம்.

தமிழ்த் திரைப்படங்களில் இதுவரை வெளிவந்த காதல் படங்களுக்கு லிஸ்ட் எடுத்தால், அது பல டிஜிட்டுகளைத் தாண்டும். அப்படிப் பல டிஜிட்டுகளுக்கு மத்தியில், வாழ்க்கையில் நண்பனின் முக்கியத்துவத்தையும், காதலி வாழ்க்கைத் துணையின் முக்கியத்துவத்தையும் சரிசமமாகக் காட்டியது, இப்படம். கதாபத்திரத்தின் தன்மைக்கேற்ப பொருந்திப்போன ஜீவா - வினய் - சந்தானம் மூவரின் கூட்டணி பக்கா... தன்னுடைய சுயநலத்துக்காகக் கணவரையும், பெற்ற மகனையும் பிரிந்து வீட்டைவிட்டுச் சென்றுவிடும் தாயின் செயலால், பெண்கள் அனைவரும் சுயநலவாதிகள் என்ற முடிவுக்கு வருகிறான் கௌதம் (ஜீவா). பெண்களைக் கண்டாலே வெறுப்பை அள்ளிக்கொட்டும் கௌதமின் மனதை மாற்றுவதற்காக, ஊட்டியிலிருந்து சென்னைக்கு வருகின்றனர். சென்னைக்கு வரும் கௌதமுக்கு மாற்றம் அவனது பள்ளியின் முதல் நாளில்தான் ஏற்படுகிறது. ஆமாம், அங்குதான் தொடங்கியது மூவரின் ஜிகுரு தோஸ்த் நட்பதிகாரம். பாா்த்தவுடனே பக்கென்று பற்றிக்கொள்ளும் நட்புதான் படம் முழுவதும் ஜோா்.

கவுதம்-ஸ்ரீ-பேபி இணைபிரியா நண்பர்களான மூவரது உறவுகளில், ஈகோ என்னும் வில்லன் தலைவிரித்துக்கொண்டு ஆடும் ஆட்டத்தையும், கௌதம் தான் மிகவும் நேசித்த தந்தையை ஏன், எதற்காக வெறுத்தான்? பெண்களைக் கண்டாலே கோபம் கொப்பளித்துக்கொண்டு எழும் மனதில் காதல் எப்படி மலர்ந்தது... நண்பர்கள் மூவரும் திருமணம் செய்துகொண்டாா்களா, இல்லையா... எனப் பல கேள்விகளுக்குப் பதிலாக, ஒரு நண்பனின் கிளாசிக்கல் டைரியைப் படித்த உணர்வோடு, படத்தை இயக்கியிருந்தார் ஐ.அஹ்மத். பெண்களைப் பாா்த்தாலே வழிந்து கொட்டும் ஒருவன் (வினய்), பெண்களைப் பாா்த்தாலே டிசைன், டிசைனாகக் கலாய்த்து தள்ளும் மற்றொருவன் (பேபி). இவர்களுக்கு மத்தியில் தனக்கான ஈகோவுடன் அசால்ட்டாக வாழ்ந்து வரும் மற்றொருவன் (ஜீவா). இப்படிப் படத்தில் இருந்த ஒவ்வொரு கதாபாத்திரத்துக்குள்ளும் ஒரு மேஜிக் ஒளிந்திருந்தது. அது என்ன, பார்ப்போமே!

நாசர் (கௌதமின் தந்தை)

வண்ணங்களில் தன்னுடைய வாழ்க்கையை மூழ்கடித்துக்கொண்ட கலைஞன். ஒருநாள் அவை அந்தக் கலைஞஞனை முட்டாளாக்கவே, வெறும் வெள்ளையும் கறுப்புமாக மாறிப்போகிறது வாழ்க்கை. அதை ஒரு காட்சியில் உங்களுடயை ஓவியங்களை ஏன் கலர்ல வரைவதில்லை என்று தன்னிடம் கேள்வி கேட்கும் பத்திரிகையாளரிடம், 'என்னோட வாழ்க்கையில நடக்காத விஷயங்களை நான் நடக்கணும்னு ஆசைப்படுற விஷயங்களைத்தான் நான் கலர்ல வரைவேன், அந்த ஓவியங்களுடன் நான் வாழ்ந்து வர்றேன்' என்று கூறும் நாசரின் குரல்கள் வலியுடன்தான் ஒலிக்கும். எந்த மகனுக்காக மறுமணம் செய்துகொண்டாரோ, அதே மகனால் வெறுக்கப்படுவாா். இப்படி ஒரு வலியுடனும், ஆயிரம்தான் மகன் தன்னை வெறுத்தாலும், தந்தை மகன் மீது வைத்துள்ள பாசத்தையும் வலியுடனேயே வெளிப்படுத்தும் அந்தக் கதாபாத்திரத்துக்குப் பொருந்திப்போனாா்.

த்ரிஷா (ப்ரியா)

ஜெஸ்ஸி டூ ஜானு... என்றும் எதிலும் சாா்மிங்தான். அப்படித்தான், ப்ரியாவும்! தாயின் அரவணைப்பில் வளர்ந்து வரும் மிடில் க்ளாஸ் மைல்ட் லேடியான ப்ரியாதான், கௌதமின் வாழ்க்கைச் சாலையில் வரும் திருப்புமுனை. அவ்வப்போது கொஞ்சம் அட்வைஸ், கொஞ்சம் ஃபீலிங் எனப் ப்ரியாவின் பெர்ஃபாமன்ஸுக்கு அப்ளாஸ். 'காதல் காத்து மாதிரி பார்க்க முடியலைனாகூட, ஃபீல் பண்ணலாம்' என்று ப்ரியா காற்றுவாக்கில் கூறும் காதலுக்கான ஹைக்கூதான், கௌதமின் காதலுக்குத் தீபமாக இருளை நீக்கி ஒளிவிடத் தொடங்கும். இருவரும் காதலை ஒருவருக்குள் ஒருவர் ஒளித்துக்கொண்டு ஆடும் கண்ணாமூச்சிக் காதலுக்கு, ஆயிரம் லவ் லைக்ஸ் குவிக்கலாம். கௌதம் தனது தனிமையிலிருந்து மீண்டுவர ஒவ்வொரு கட்டத்திலும் ப்ரியா எடுக்கும் முயற்சிகள் ஏராளம். இப்படி த்ரிஷாவுக்குள் ஏகப்பட்ட சர்ப்ரைஸ்களைக் கொண்டாடினர் ரசிகர்கள்.

சந்தானம் (பேபி)

எந்த நடிகராக இருந்தாலும் வெச்சு பங்கம் செய்யும் சந்தானம், இந்தப் படத்தில் பேருக்குத்தான் பேபி. ஜீவாவையும் வினய்யையும் சுத்தி சுத்தி செய்யும் கலாய்கள் அவ்வளவு தூக்கல்! அதேசமயம், சென்டிமென்ட் காட்சிகளிலும் சிலிர்க்க வைத்தாா் பேபி.

வினய் (ஸ்ரீ)

பெண்களிடம் மாறி மாறி பல்பு வாங்கும் 100 வார்ட்ஸ் பல்புதான் ஸ்ரீ. மூவரின் கூட்டணியில் தனித்து நிற்கும் கதாபாத்திரம். கௌதமிடம் என்னதான் சண்டையிட்டுக்கொண்டாலும், விட்டுக்கொடுத்துச் செல்லும் காட்சிகளிலும், பல்பு வாங்கும் காட்சிகளிலும், இறுதிக் காட்சியில் மழையில் கௌதமின் ஈகோவை எதிர்த்துப் பேசும் காட்சியிலும் உச்சத்தைத் தொட்டாா் வினய்.

ஜீவா (கௌதம்)

என்றும் தான் செய்வதுதான் சரி, அதற்காக எந்த உறவாக இருந்தாலும் யோசிக்காமல் சண்டையிடும் கோபக்காரன். பெண்கள் அனைவரும் சயநலவாதிகள், ஆயிரம்தான் கவலைகள் இருந்தாலும் நண்பர்களுடன் செய்யும் லூட்டிகள் எனப் பல ப்ளஸ், மைனஸ்களுடன் இருக்கும் கதாபாத்திரத்துக்குச் சரியான சாய்ஸ் என நிரூபித்தார் ஜீவா. நண்பர்களே வாழ்க்கை என வாழ்ந்து வரும் கௌதம், ஒரு கட்டத்தில் தன் தந்தைக்காக ஸ்ரீயும் பேபியும் செய்துகொள்ளும் திருமணத்தால் நண்பர்களையும் வெறுத்துத் தனிமையில் ஆழ்கிறான். அவன் தனிமையைப் போக்குவதற்குத் த்ரிஷா எடுக்கும் முயற்சிகளின்போது, கௌதம் கூறும் நண்பர்களிடையேயான ஒவ்வொரு நினைவலைகளும் பார்க்கும் ரசிகர்களின் நட்பதிகாரத்தை நினைவுபடுத்தியது. தனது ஈகோவால்தான் ஒவ்வொன்றையும் இழந்தோம் என்பதை ரீவைன்ட் செய்து, தனது தவற்றை உணரும் கட்டத்தில்தான் அவனது தந்தையின் வண்ண ஓவியங்கள் கண்களுக்குத் தென்படும். பிறகு, நட்பும் மீளும் காதலும் கனெக்ட் ஆகும். இப்படி ட்ரீமிங்கிலும் ஃபீலிங்கிலும் கலக்கியிருந்தாா் ஜீவா.

திரையில் அனைத்தும் ஒன்று சேர்ந்து வெளிப்படும்போது அதற்கு இசையின் முக்கியத்துவம் அதிகம் உள்ளதைக் கவனமாக எடுத்துக்கொண்டு பின்னணி இசையிலும் பாடல்களிலும் காதலைக் காதுகளுக்கு மட்டும் கேட்கும்படி இல்லாமல், உள்ளம் ரசிக்கும்படியாக அமைத்த ஹாரிஸ் ஜெயராஜ்-க்கு ஹாட்ஸ் ஆஃப்!

இரண்டரை மணி நேரத்தில் ஒரு சண்டைக் காட்சிகூட இல்லாமல், சுவாரஸ்யமாக ஒரு வாழ்க்கையை ரசிக்கும்படி திரைக்கதை அமைத்திருந்தாா் இயக்குநர். நண்பனின் முக்கியத்துவத்தையும், உறவுகளுக்கு ஈகோ என்னும் வில்லன் காட்டும் ஆட்டத்தையும் புதுவித அட்வைஸில் கோலிவுட்டிற்குச் சொன்ன 'என்றென்றும் புன்னகை' டீமுக்கு வாழ்த்துகள்! 

அடுத்த கட்டுரைக்கு