தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

காதலே என் தனிப்பெருந்துணை - நகுல் - ஸ்ருதி கலகல...

காதலே என் தனிப்பெருந்துணை - நகுல் - ஸ்ருதி கலகல...
பிரீமியம் ஸ்டோரி
News
காதலே என் தனிப்பெருந்துணை - நகுல் - ஸ்ருதி கலகல...

ஸ்வீட் ஃபேமிலி

“தமிழில் சில படங்கள்தான் நடிச்சிருந்தாலும், அவருடைய கேரக்டர்கள் எல்லோருக்கும் பிடிக்கும்; பக்கத்து வீட்டுப் பையனை நினைவுபடுத்தும்... அதுதான் நகுல். குறிப்பா, மத்தவங்களோட சந்தோஷத்துக்காக ஏதாச்சும் செய்துட்டே யிருப்பார். நான் காதலில் விழுந்தது அதுலதான்’’ - வெட்கத்தில் சின்னதாகச் சிரிக்கிறார் நடிகர் நகுலின் மனைவி ஸ்ருதி.

“நான் பி.ஏ முடிச்சுட்டு, லண்டனில் கேக் பேக்கிங் கோர்ஸ் பண்ணினேன். பின்னர் சென்னையில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் பேக்கிங் செஃப் ஆக வேலைக்குச் சேர்ந்தேன். அந்த ஹோட்டலுக்கு நிறைய செலிபிரிட்டிகள் வருவாங்க. அவங்களையெல்லாம் அடிக்கடி பார்க்க நேர்ந்ததால, சினிமா ஸ்டார்ஸ் என்றால் ஒரு வியப்பு இல்லாமல் போயிடுச்சு. நகுல்கிட்டகூட அப்படித்தான் இருந்தேன். அதையும் மீறி எங்களுக்குள் காதல் நுழைந்தது. அன்பை மட்டுமே அடிப்படையாகக்கொண்டு நிகழ்ந்தது அது. நான் ரொம்ப லக்கி’’ என்கிற ஸ்ருதி, தன் கணவரைப் பார்க்கிறார்.

காதலே என் தனிப்பெருந்துணை - நகுல் - ஸ்ருதி கலகல...

‘`இவங்க இப்படித்தான் அடிக்கடி எமோஷனல் ஆயிருவாங்க. பட், ஸ்ருதி கிடைச்சதுக்கு நான்தான் லக்கி’’ என்று கலகலப்புடன் பேச ஆரம்பித்தார் நகுல். ‘`ஒருநாள் எங்க உறவினர் வீட்டில் ஸ்ருதி செய்த கப் கேக்கைச் சாப்பிட்டேன். சூப்பரா இருந்தது. `சரி, பாராட்டலாமே’னு மெசன்ஜரில் மேசேஜ் பண்ணினேன். மேடம்கிட்டயிருந்து ரிப்ளேயே இல்லை. அப்புறம் அவங்க நம்பரை வாங்கி, போன் பண்ணி பேசினேன். ரொம்ப இயல்பா பேசின ஸ்ருதியை எனக்கு ரொம்பப் பிடிச்சது. விலங்குகளைப் பராமரிக்கிறது, அடுத்தவங்களுக்கு உதவுறது, எதையும் ஈஸியா கடந்துபோறதுன்னு எங்க ரெண்டு பேருக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்க, க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம். பின்னர் என்னை அறியாமலேயே நான் ஸ்ருதியைக் காதலிக்க ஆரம்பிச்சுட்டேன். ஒருநாள், ‘ஸ்ருதி, உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கவா?’னு சீரியஸாகக் கேட்க, ‘ஜோக் அடிக்காதே’னு சொல்லிட்டாங்க. பிறகு படாதபாடுபட்டு என் காதலை புரியவெச்சேன். நாங்க பரஸ்பரம் பகிர்ந்துகிட்ட நேசம், எங்க ரெண்டு பேருடைய வாழ்க்கையையும் ரொம்ப அழகா வழிநடத்த ஆரம்பிச்சது’’ என நகுல் சொல்லும்போதே வெட்கத்தில் சிரிக்கும் ஸ்ருதி, தங்கள் காதல், கல்யாணத்தில் முடிந்தது பற்றித் தொடர்ந்தார்.

“எங்களுடைய லவ் பத்தி வீட்டில் சொன்னதும், எங்கம்மா, ‘சினிமாக் காரங்களுக்கு உன்னைக் கல்யாணம் பண்ணி வைக்க முடியாது’ன்னு  சொல்லிட்டாங்க. ‘அம்மா, ஒரு தடவை நகுல்கிட்ட பேசிப்பாரேன்’னு போன் போட்டுக் கொடுத்தேன். கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம்... ரெண்டு பேரும் பேசிட்டேயிருக்காங்க. எனக்கு மனசுக்குள்ள அப்பவே நம்பிக்கை வந்துடுச்சு. போனை வெச்சதும் அம்மா, ‘நகுல்தான் உனக்குப் பொருத்தமான மாப்பிள்ளை’னு சொல்லிட்டாங்க. அப்புறம் என்ன... ரெண்டு குடும்பத்துப் பெரியவங்க சம்மதத்தோடு திருமணம் கோலாகலமாக நடந்தது’’ என்றவர்,

“திருமணத்துக்குப் பின் சொந்தமா கேக் பிசினஸை ஆரம்பிச்சேன். நகுலும் அது தொடர்பான விஷயங்கள் பற்றிக் கேட்டு, கத்துக்கிட்டார். சில நேரங்களில் சமாளிக்க முடியாத அளவுக்கு ஆர்டர்கள் வரும்போது தடுமாறுவேன். அப்போவெல்லாம் நகுல் எந்த ஈகோவும் இல்லாம டிசைனிங், கலரிங் போன்ற வேலைகளில் எனக்கு ஹெல்ப் பண்ணுவார். அவருடைய ஃப்ரெண்ட்ஸ்கிட்ட இருந்து ஆர்டர் வாங்கிட்டுவந்து சர்ப்ரைஸ் கொடுப்பார். என்னை நிறைய மோட்டிவேட் பண்ணுவார். எந்த முடிவு எடுக்கிறதுக்கு முன்னாடியும் என்னோட ஒப்பீனியன் கேட்பார். படத்துக்காக யாராவது ஸ்டோரி சொல்ல வந்தாகூட, ‘நீயும் வா ஸ்ருதி’னு சொல்வார்.

காதலே என் தனிப்பெருந்துணை - நகுல் - ஸ்ருதி கலகல...

நகுல் நல்ல கணவர். அதைவிட, ரொம்ப நல்ல மனிதர். தெருக்களில் அடிபட்டுக் கிடக்கும் நாய்களை வீட்டுக்குத் தூக்கிட்டுவந்து  சிகிச்சை கொடுப்பார். எங்க வீட்டில் இருக்கும் ஐந்து நாய்களுமே அப்படி வந்தவைதான். அதுங்க காட்டும் தூய்மையான அன்புக்கு ஈடேயில்லை. கேரள வெள்ளத்தின்போது, பாதிக்கப்பட்ட நிறைய நாய்களுக்குச் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். நான் எதையும் மிகைப்படுத்திச் சொல்லலை. இதுதான் நகுல்’’ என்றவர், தன் பிசினஸ் பற்றிச் சொன்னார்.

“ ‘ஸ்வீடூத் ஃபேரி  (Sweetooth fairy) என் கம்பெனி பெயர். இப்போ ஆன்லைன் ஆர்டர்ஸ் எடுத்துப் பண்ணிட்டிருக்கேன். விரைவில் கேக் ஷாப் திறக்கும் ஐடியாவும் இருக்கு. கே.எஸ்.ரவிக்குமார் சார், மாதவன் சார், சதீஷ் சார்... இவங்களெல்லாம் என் செலிபிரிட்டி கஸ்டமர்ஸ். செயற்கை நிறங்கள், பதப்படுத்திகள் எதுவும் சேர்க்காம செய்ற கேக்ஸ்தான் எங்கள் சிறப்பு. பொதுவா வீட்டில் வளர்க்கும் பெட்ஸுக்கு ஸ்வீட்ஸ் கொடுக்கக் கூடாதுனு சொல்லுவாங்க. அதனால, பெட்ஸுக்குக் கொடுக்கக்கூடிய வகையில் பிரத்யேக கேக்ஸ், சாக்லேட்ஸ் தயாரிக்கிறதும் எங்களுடைய தனித்துவம். இந்த ஐடியாவைக் கொடுத்தவர், என் கணவர். இப்படி என் வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயத்திலும், காதலே என் தனிப்பெருந்துணை’’ என்று ஸ்ருதி லவ் மோடுக்கு மாற, ‘`அதுக்காக நாங்க ரொம்ப சமர்த்து ஜோடினு நினைச்சுடாதீங்க. எப்பவும் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்... சண்டைனு வந்துட்டா நாங்க பெஸ்ட் எனிமீஸ்” என்று சிரிக்கிறார் நகுல்!

- சு.சூர்யா கோமதி,  படம் : க.பாலாஜி