சினிமா
Published:Updated:

“சினிமா மட்டுமே எதையும் மாற்றாது”

“சினிமா மட்டுமே எதையும் மாற்றாது”
பிரீமியம் ஸ்டோரி
News
“சினிமா மட்டுமே எதையும் மாற்றாது”

சினிமா

நாகராஜ் போபட்ராவ் மஞ்சுளே - இந்திய அரசியல் சினிமாவின் இன்றைய முகம். இறுகிப்போன சாதியச் சமூகத்தின்மீது இவர் விட்டெறிந்த கல் ‘ஃபான்றி.’ ஆணவக்கொலைகளின் ரத்தப் பிசுபிசுப்பு நிறைந்த படம் ‘சாய்ரத்.’  ‘பரியேறும் பெருமாள்’ படம் பார்ப்பதற்காக சென்னை வந்திருந்தவரைச் சந்தித்துப் பேசினோம். 

“சினிமா மட்டுமே எதையும் மாற்றாது”

“தலித் மக்களின் வாழ்க்கையைப் பேசும் திரைப்படங்கள் வரத் தொடங்கிவிட்டன. இவை மக்களின் வாழ்க்கையில் எந்தவிதமான மாற்றம் வரும் என நினைக்கிறீர்கள்?”

“சினிமாவோ, சினிமாக்காரர்களோ மட்டுமே எதையும் செய்துவிட முடியாது. சினிமா, வறுமையையும் ஒழிக்காது, சாதியையும் ஒழிக்காது. சினிமாவின் மூலம் விழிப்புணர்வையும், விவாதத்தையும் ஏற்படுத்த முடியும்; அவ்வளவுதான்! அரசியல் தளத்தில் உள்ளவர்களின் பங்களிப்பு, இயக்கங்களின் பங்களிப்பு உட்பட பல தரப்பிலும் ஒருங்கிணைப்பு நடந்தால்தான் சாதி ஒழிப்பு சாத்தியம்.”

“உங்கள் திரைப்படங்கள் கன்னடத்திலும் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளன. தமிழில் வெளியிடும் திட்டமிருக்கிறதா?”


“ ‘சாய்ரத்’ திரைப்படம் வெளியிடுவதற்கு முன்பு, தமிழிலும் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட வேண்டும் எனக் கருதினோம். ஆனால், அது எவ்வளவு தூரம் மக்களைச் சென்றடையும் என்ற குழப்பம் இருந்தது.தமிழில் எனது திரைப்படங்களுக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இனி அதற்கான முயற்சிகளில் ஈடுபட நினைத்திருக்கிறேன்.”

“சினிமா மட்டுமே எதையும் மாற்றாது”“சாதி அமைப்பின் குரூரத்தை உலகமே உணரும்படியான திரைப்படங்களை இயக்கியிருக்கிறீர்கள். தலித் இயக்குநராக அறியப்படுவதை எப்படி உணர்கிறீர்கள்?”


“நான் பட்டியலினத்தைச் சேர்ந்தவனில்லை. நாடோடி பழங்குடியினத்தைச் சார்ந்தவன். இன்னும் மோசமான வன்முறைகளைப் பழங்குடிகள் சந்தித்து வருகிறார்கள். என்னை நானே ஒரு அம்பேத்கரியவாதியாகக் கருதுகிறேன். ஆனால், பலரும் எனக்கு தலித் முத்திரை குத்துவதில்தான் மகிழ்ச்சி யடைகிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை மறைத்தாலும், வெளிப்படுத்தினாலும், உங்களது சாதியை எப்படியாவது கண்டுபிடிப்பதில் நம் மக்கள் கில்லாடிகள். திரைப்படம் எடுக்கத் தொடங்கியபோது என் சமூக அடையாளத்தை வெளிப்படுத்துவதில் எனக்குக் கொஞ்சம் பயம் இருந்தது. நிறைய படிக்கவும் எழுதவும், கற்றுக்கொள்ளவும் தொடங்கிய பிறகு, மறைப்பதில் எந்த விதமான பயனும் இல்லை என்று உணர்ந்துவிட்டேன். மறைக்கத் தொடங்கினால், இறுதிவரையில் எல்லாவற்றையும் மறைத்துக்கொண்டே இருக்கவேண்டிய நிர்பந்தம் வரும். அதில் எனக்கு விருப்பமில்லை.

தேசிய விருது கிடைத்தபோது, எனது சாதியையும், என் அப்பா கல்லுடைக்கும் தொழிலாளி என்பதையும், அம்பேத்கரின் கொள்கைகளைப் பின்பற்றுபவன் எனவும் எங்கள் பகுதிகள் பாடும் மக்கள் கலைஞர்களே எனக்கு விருப்பமானவர்கள் எனவும் சொல்லியிருந்தேன். இப்படியெல்லாம் சொந்த அடையாளங்களை வெளிப்படுத்தினால், சினிமா உன்னைத் தூக்கி எறிந்துவிடும் என நண்பர்களும், உறவினர்களும் எச்சரித்தார்கள். பயமாகத்தான் இருந்தது. ஆனால், என் அப்பா மருத்துவர் என்றோ, பொறியாளர் என்றோ என்னால் சொல்ல முடியுமா என்ன? பொய்யின் அடித்தளமாகப் போட்டு, அதற்கு ஒதுக்கப்படுவோமோ என்னும் பயத்தில்தான் பலர் தங்கள் சாதியை மறைத்துக் கொள்கிறார்கள். சமூகம்தான் அதற்காகத் தலைகுனிய வேண்டும்; ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்கள் அல்ல!”

“சினிமா மட்டுமே எதையும் மாற்றாது”

“நீங்கள் ஒரு கவிஞர். மொழியைப் பற்றி உங்களது கருத்து என்ன? உங்கள் திரைப்படங்களில் வட்டார மொழியைப் பயன்படுத்துவதற்குப் பின்னுள்ள காரணம் என்ன?”

“ஒரு மொழி, கிராமங்களில் இருந்து நகரத்தை நெருங்கும்போது அதன் அழகையும் சாரத்தையும் இழக்கிறது. சம்ஸ்கிருதத்தை எடுத்துக்கொள்ளுங்கள், அதைப் பிறர் பேச அனுமதிக்கவில்லை. அந்த மொழி இறந்துவிட்டது. என்னைப் பொறுத்தவரை உயிர்ப்போடு இயங்கும் மொழி என்பது கிராமப்புறங்களின் உழைக்கும் மக்களால் பயன் படுத்தப்படும் மொழிதான்.”

“முழுநீளத் திரைப்படங்களை எடுக்கும் அதே சிரத்தையோடு, குறும்படங்களையும் இயக்குகிறீர்களே, எப்படி?”


“குறும்படங்கள் உங்களுக்கு வணிகரீதியான  அழுத்தங்களைத் தருவதில்லை. சில பிரச்னை களைச் சுதந்திரமாகச் சொல்லும் வெளி, குறும்படங்கள் எடுக்கும்போது மட்டுமே கிடைக்கும். சமரசம் செய்துகொள்ள வேண்டிய தேவையிருக்காது. சொல்ல வேண்டியதை எந்தப் போலித்தனங்களும், சங்கடங்களும் இல்லாமல் வெளிப்படுத்தலாம்.”

“ ‘ஃபான்றி’ திரைப்படத்தின் ஜப்யா, சாய்ராட்டின் பர்ஷ்யா, பரியேறும் பெருமாளின் பரியன் என இவர்கள் ஏற்படுத்தும் அதிர்வுகள் எப்படியானது?”


ஐப்யாவோ, பர்ஷ்யாவோ, பரியேறும் பெருமாளோ... இவர்கள் ஏற்படுத்தும் அதிர்வைத் திரையரங்குகளில் உணர முடிகிறது. மக்கள் அழுகிறார்கள். ஆனால், அதனால் இந்தச் சமூகத்துக்கு ஏற்படும் குற்றவுணர்வின் ஆயுள் குறைவாக இருக்கிறது. சினிமாவில் மட்டுமல்ல, சமூகத்திலும் இதுதான். நேரடியாகவே, சாதி வன்முறை களையும் ஆணவக்கொலை களையும் தொலைக்காட்சி களில் பார்க்கிறோம். நமது குற்றவுணர்ச்சி அந்தந்த நேரத்து உணர்வாக முடிந்துவிடுகிறதே?

பாபாசாகேப் அம்பேத்கர் சொல்லிச் சென்ற செய்திகளை அப்படியே நினைவில் வைத்துள்ளோமா என்ன?  நம் சமூகத்தைப் பொறுத்தவரை மறதி என்பது வசதியான நோய், மாற்றம் இங்கே மெதுவாகத்தான் நடந்திருக்கிறது. இங்கு நடந்துள்ள மாற்றத்தைச் சரியாக உணர வேண்டுமானால், குறுகிய காலம் போதாது, நீண்டகாலத்தைக் கணக்கிலெடுத்து ஆராய வேண்டியிருக்கும்.  திரைப்படங்களால் நீண்ட கால, நிரந்தர மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியாது. 4-5 ஆண்டுகளுக்குப் பிறகு ஃபான்றி பேசப்படுகிறது. சிலருடைய நினைவிலாவது இருக்கிறது. பரியேறும் பெருமாளும் அப்படி இருக்கும். விளைவு தெரிய வருவதற்கு வெகு நாள்களாகும். ஒரு திரைப்படம் வந்ததும்  உடனடியாக கண்டிப்பாக மாற்றம் வராது. நூற்றாண்டுகளாகச் சேர்ந்த அழுக்கும் நாற்றமும், சுத்தமாவதற்கு நாள்கள் ஆகத்தானே செய்யும்.”

“திரைப்படங்களைத் தாண்டியும் ‘தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ முயற்சிகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“ ‘ஃபான்றி’ வெளியீட்டின்போதே நிகழ்ந்திருக்கவேண்டிய சந்திப்பு, தாமதமாகி யிருக்கிறது. அவருடைய வேலைகளைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். சினிமாவைத் தாண்டியும், ரஞ்சித் முன்னெடுக்கும் முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியவை. சிந்தனை ஒற்றுமையோடு, என்னோடு ரஞ்சித்தும், மாரி செல்வராஜும் சேர்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கலைகள் வழியே சமூகத்தில் ஏற்படும் உரையாடல்கள் தீர்வை நோக்கிப் பயணிக்கவைக்கும் என்பதை உறுதியாக நம்புகிறார்கள் இந்தக் கலைஞர்கள். அவர்களின் முயற்சி வெல்லட்டும்.”

புன்னகையின் வெளிச்சம் பரவுகிறது.

ம.குணவதி, சக்தி தமிழ்ச்செல்வன் - படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்