சினிமா
Published:Updated:

கிரிக்கெட்டுக்கு எஸ்... க்ளீன் ஷேவிங் நோ!

கிரிக்கெட்டுக்கு எஸ்... க்ளீன் ஷேவிங் நோ!
பிரீமியம் ஸ்டோரி
News
கிரிக்கெட்டுக்கு எஸ்... க்ளீன் ஷேவிங் நோ!

சினிமா

மெலடியில் கரைய வைப்பார். கானாவில் தெறிக்கவிடுவார். நாட்டார் இசையிலும் புழுதி பறக்கும். எந்த ஜானரிலும் இறங்கி அடிப்பது சந்தோஷ் நாராயணன் ஸ்டைல். அவருடைய வாழ்க்கைப் பயணம், இசைப் பயணம் பற்றி உரையாட சந்தோஷ் நாராயணன் - மீனாட்சி தம்பதியினரை சந்தித்தோம். 

கிரிக்கெட்டுக்கு எஸ்... க்ளீன் ஷேவிங் நோ!

“ரெண்டு பெருமே இசைக்குடும்பத்துல இருந்துதான் வந்திருக்கோம். என் தம்பியோட நண்பர் பிரதீப் மூலமாதான் சந்தோஷ் எனக்குப் பழக்கமானார். மியூசிக் பத்தி நிறைய பேசுவோம். ரெண்டு பேரும் நேசிச்ச இசைதான் எங்களை நண்பர்களாக்கி, காதலர்களாக்கி இப்போ கணவன் - மனைவியாகவும் ஆக்கியிருக்கு” என்று மீனாட்சி முடிக்க, ``ஆமா. நாங்க இசையால் இணைந்த இனிமையான ஜோடி’’ என்று சந்தோஷம் ததும்பச் சொல்கிறார் சந்தோஷ் நாராயணன்.

“எனக்கு இந்த இடத்தில் உட்கார்ந்து சிந்திச்சாதான் ட்யூன் வரும்னு கிடையாது. எப்போ வேணாலும் என்ன வேணாலும் க்ளிக்காகும். ‘ஏ சண்டக்காரா’, இறைவி பிஜிஎம் எல்லாம் பாடலாசிரியர் விவேக் வீட்ல குழந்தைகள் பயன்படுத்துற கீபோர்டுல பண்ணுனது. என்னைப் பொறுத்தவரை, இசைக்கும் இடத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை’’ என்று முடிக்க, மீனாட்சி தொடர்கிறார்.

கிரிக்கெட்டுக்கு எஸ்... க்ளீன் ஷேவிங் நோ!“வீட்ல ஒரு பியானோ வெச்சிருக்கோம். எங்ககிட்ட சும்மா பேசிக்கிட்டே எதாவது வாசிச்சுக்கிட்டிருப்பார். அப்போ சில ட்யூன்கள் புதுசா க்ளிக்காகிடும். சூப்பர்ல!” என, தன் கணவரைப் பற்றிச் சிலாகிக்கிறார்.

‘`உங்க மனைவிக்கு என்ன பாட்டை டெடிகேட் பண்ணுவீங்க?’’ என்றவுடன், `‘வேற என்ன, `தங்க சிலை...’ சாங்தான்’’ என்று உடனடி பதில் வருகிறது சந்தோஷிடமிருந்து.

“நானும் ரஞ்சித்தும் அறிமுகமானது செம கதை. நான் ‘உயிர் மொழி’ன்னு ஒரு படம் வொர்க் பண்ணிட்டிருந்தபோது, வேறு படங்களுக்கு மியூசிக் பண்ண முயற்சி பண்ணிக்கிட்டிருந்தேன். அப்போ என் நண்பர் ஒருவர் சொன்னதின்பேரில், தயாரிப்பாளர் சி.வி.குமார் வந்தார். நான் கம்போஸ் பண்ணி வெச்சிருந்த மியூசிக்கைக் கேட்டு ‘ரொம்ப நல்லா இருக்கு. நான் டைரக்டரைப் பார்க்கச் சொல்றேன்’னு சொல்லிட்டுப் போயிட்டார்.  ஆனா இரஞ்சித் வந்தவுடனே, ‘நான் வேற ஒரு மியூசிக் டைரக்டரை ப்ளான் பண்ணிட்டேன். புரொடியூசர் சொன்னதுனாலதான் உங்களைப் பார்க்க வந்தேன்’னு சொன்னார். என்னடா இது ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே இப்படிச் சொல்றார்னு ஆகிடுச்சு. மியூசிக் போட்டுக் காட்டினா, ‘இதெல்லாம் வேண்டாம். கானா மாதிரிதான் வேணும்’னு கேட்டார். எனக்கு அது செட் ஆகலை. நான் வேணா மொக்கையா போட்டுக் கொடுக்கிறேன். நீங்க அவர்கிட்ட செட்டாகலைனு சொல்லிடுங்கன்னு சொன்னேன். அப்படிப் போட்டதுதான் ‘ஆசை ஒரு புல்வெளி.’ ஆனா, அவருக்கு   அது ரொம்பப் பிடிச்சுப்போயிடுச்சு. ‘சூப்பர். நாமளே பண்ணிடலாம்’னு சொல்லி ஆரம்பிச்சதுதான்  ‘அட்டகத்தி.’  அப்படித்தான் எங்க பயணம் ஆரம்பிச்சது. அதேபோல,  ரஞ்சித், நலன், கார்த்திக் சுப்புராஜ்னு எனக்கு அமைஞ்ச முதல் மூணு டைரக்டர்களும் வேற லெவல்” என, தன் இயக்குநர்கள் பற்றி உற்சாகமாகப் பகிர்ந்துகொண்டார் சந்தோஷ் நாராயணன்.  

கிரிக்கெட்டுக்கு எஸ்... க்ளீன் ஷேவிங் நோ!

“கொஞ்ச நாள் ஊர்ல இருந்துட்டு சென்னை வந்தேன்.  ‘அட்டகத்தி’ சமயம். சந்தோஷ்கிட்ட அவ்வளவு மாற்றம். அவர் ஸ்லாங், மாடுலேஷன்னு எல்லாமே வேற மாதிரி ஆகிடுச்சு. நார்த் மெட்ராஸ் ஆளாகவே மாறிட்டார். இப்போகூட அப்பப்போ அந்த சந்தோஷைப் பார்க்கலாம்’’ என்றார் மீனாட்சி. ‘`வீட்டை சந்தோஷ் க்ளீன் பண்ணிட்டே இருப்பாராமே...’ என நாம் கேட்க, “ஆமா. என்னைத் தவிர மத்த இடங்களை க்ளீனா வெச்சுப்பேன்” என்றார் சந்தோஷ். “இதோ அவரே சொல்லிட்டார்ல. வீட்டைப் பார்த்துக்கணும், சுத்தமா வெச்சுக்கணும்னு அவர் ரொம்ப கவனமா இருப்பார். ரோட்டுல குப்பை இருந்தால்கூட அதை க்ளீன் பண்ண ஆரம்பிச்சுடுவார். ஆனா என்ன, விளையாடிட்டு வந்த சந்தோஷை குளிக்க வைக்க நம்ம அரும்பாடு படணும்” என்று கலாய்க்க,  ‘`சரி விடுப்பா. அதுலதான் நான் கொஞ்சம் பேட். மத்தபடி என் மனசு சுத்தம்” என்றபடி புன்னகைத்தார், சந்தோஷ்.  “அவரைப் பத்தி உங்களுக்கு மட்டும் தெரிஞ்ச விஷயம் என்னன்னு என்கிட்ட கேட்பாங்க. உண்மையாவே, அப்படி எனக்கு மட்டும் தெரிஞ்ச விஷயம்னு எதுவும் இல்லை. இவரைப் பத்தி எல்லோருக்கும் எல்லாமே தெரியும். சீக்ரெட்னு ஒண்ணும் இல்லை. அதான் சந்தோஷ்”  - தன் மனைவி மீனாட்சி இவரைப் பற்றிச் சொல்ல, அதை ஆமோதித்துத் தலையாட்டுகிறார்.  
 
 “ஆரம்பத்துல ஒரு வீட்ல வாடகைக்கு இருந்தாங்க. பத்து வருஷமா அந்த வீட்ல முகம் பார்க்குற கண்ணாடி இல்லை. கண்ணாடி இல்லாமல் யாராவது இருக்க முடியுமா? இவர் இருந்திருக்கார். வீட்ல எப்படியோ அப்படித்தான் வெளியேவும் இருப்பார். ரொம்ப முடி, தாடி எல்லாம் வளர்ந்து அரிக்க ஆரம்பித்தால்தான் சலூனுக்குப் போய் வெட்டுவார். தன் லுக்கைப் பத்தின கவலையே இவர்கிட்ட இல்லை” என்கிறார் மீனாட்சி. சந்தோஷோ அப்போதும் எந்தக் கவலையும் இல்லாமல் தாடியைத் தடவியபடி சிரிக்கிறார்.

 “இதுக்கு முன்னாடி ‘Bliss’னு ஒரு உலக அமைதிக்கான ஆல்பம் பண்ணுனேன். அந்த ஆல்பம் எனக்கான விசிட்டிங் கார்டா இருந்தது. அந்த ஆல்பம் மூலமாதான் நிறைய தொடர்புகள் கிடைக்க ஆரம்பிச்சது. `கால் ஜென்ட்லி’ன்னு ஒரு கம்போஸர். அவர் சவுண்ட் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் உங்க ஃபேன்னு சொல்லி என் ஆல்பத்தை அனுப்பினேன். ‘நைஸ்’னு அவர் அனுப்பிய பதிலை பிரின்ட் அவுட் எடுத்து வீடு முழுக்க ஒட்டி வெச்சேன்னா பார்த்துக்கோங்களேன். அதே மாதிரி, ரஹ்மான் சாரை எனக்கு ரொம்பப் பிடிக்கும்” என்கிறார் சந்தோஷ்.

“சந்தோஷ் பாடல்கள் வெளியாகுதுன்னா என்ன மாதிரி வரவேற்பு இருக்குங்கிறதை நான் கவனிப்பேன். ஆனா, அவர் அதைப் பத்தி எல்லாம் கவலைப்பட மாட்டார். எப்படி இப்படி இருக்கார்னே தெரியலை. நான் ரொம்ப எமோஷனலா கனெக்ட் ஆகிடுவேன். அவர் அப்படி இல்லை. அவர் ஜாலியா கிரிக்கெட் விளையாடக் கிளம்பிடுவார்” என்றவரை இடைமறித்த சந்தோஷ், “தினமும் கண்டிப்பா விளையாடணும்னு நினைப்பேன். என் கூட விளையாடுற பாதிப் பேருக்கு சினிமா பத்தின விஷயங்கள்ல ஆர்வமே இருக்காது. நானும் சினிமா பிம்பம் இல்லாமல்தான் இருப்பேன். கால்வாயில பந்து விழுந்தா எல்லோரும்தான் எடுக்கணும். ஸ்போர்ட்ஸ் அடிப்படையே எல்லோரும் சமம்ங்கிற நிலைப்பாடைக் கொண்டு வரத்தானே! ஃபிட்னெஸ்காகவும் விளையாடுறேன். ஜிம்முக்குப் போலாம். ஆனா, விளையாடுறதுல இருக்கிற உற்சாகம் ஜிம்மில் வராது.

கிரிக்கெட்டுக்கு எஸ்... க்ளீன் ஷேவிங் நோ!

விளையாடிட்டு வந்து ஸ்டுடியோவுக்குள்ள போனா அவ்ளோ புத்துணர்ச்சியா இருக்கும்’’ என்று தனக்கும் கிரிக்கெட்டுக்குமான நெருக்கத்தை சுவாரஸ்யமாகப் பகிர்ந்துகொள்கிறார். “இப்படித்தான் ‘காலா’ சமயத்துல, ரஞ்சித் வீட்டுக்கு வந்தார். ‘ரெண்டு நாள் பசங்க கூட விளையாட அனுப்பாதே. பிடிச்சு வெச்சுக்கோ’னு சொன்னார். அவர் கார் ஏறினதும் ‘பை - பை ரஞ்சித்’னு விளையாடக் கிளம்பிட்டார். இவருக்குள்ள ஒரு ஸ்கூல் பையன் ஒளிஞ்சிருக்கான்” என்று புன்னகைத்தார், மீனாட்சி. 

“`ராஜா சார் ஒரு வாழும் சகாப்தம். ‘செண்பகமே’, ‘ஏதோ மோகம்’, ‘என்ன சத்தம் இந்த நேரம்’னு நிறைய பாடல்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். என்னோட கம்போஸிங்ல எம்.எஸ்.வி ஐயா, இளையராஜா சார், ரஹ்மான் சார் இவங்க மூணு பேரும் நிச்சயம் இருப்பாங்க. எம்.எஸ்.வி ஐயா கூட அனந்து ரொம்ப வருஷம் இருந்திருக்கார். அவர் இருந்திருந்தா இந்த ட்யூனை எப்படிப் போட்டிருப்பார்னு அவர்கிட்ட கேட்டுட்டிருப்பேன். ‘வடசென்னை’ படத்தில ‘கிங் ஆஃப் தி சீ’ பாடல்  எம்.எஸ்.வி சாருக்கான சமர்ப்பணம்’’ என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார். 

“இவர் பெயரை நிறைய பேர் தப்புத்தப்பா சொல்லிக் கூப்பிடுவாங்க, தெரியுமா?” என்ற மீனாட்சியை ஆமோதித்த சந்தோஷ், “ஆமா. நான் லிஸ்ட் தர்றேன். சந்தோஷ் சுப்ரமணியம், சங்கர் நாராயணன், சந்தோஷ் சிவன், சந்தோஷ் பண்டிட், சங்கர் மகாதேவன் இப்படி நிறைய பெயர் சொல்லிக் கூப்பிடுவாங்க. அதுல ஒருத்தர், நீங்க யாரோ ஒருத்தர்தானேன்னு கேட்டார். அதான் அல்டிமேட். ஒரு நாள் லிஃப்ட்ல இருந்து இறங்கி வரும்போது, எதிர்ல ஒருத்தர் மியூசிக் டைரக்டர் சந்தோஷ் நாராயணன்டானு சொல்ல, ‘ஹே... பிச்சைக்காரன் மாதிரி இருக்கான். அவனைப் போய் சந்தோஷ் நாராயணன்னு சொல்றே?’னு சொல்லிட்டுப் போயிட்டாங்க. தப்புதான். ஆனா, அந்த டைம்ல அவங்க சொன்னது செம காமெடியா இருந்தது” என்று சொல்லும்போது அவருக்குள் இருந்த அப்பாவித்தனம் வெளிப்பட்டது. 

“என் பொண்ணுக்கும் எனக்கும் என்கிட்ட பிடிச்சதே என் தாடிதான். தாடியை ட்ரிம் பண்ணுனாக்கூட திட்டுவா... பேசமாட்டா... என் வாழ்க்கையிலே இதுவரை அஞ்சு முறைதான் க்ளீன் ஷேவ் பண்ணியிருப்பேன்” என்று சிரித்தவர், 

``இந்த வருடம் ‘மெர்க்குரி’, ‘காலா’, ‘பரியேறும் பெருமாள்’, ‘வடசென்னை’, ‘ஜிப்ஸி’ மாதிரி வெரைட்டியான படங்கள் பண்ணினது மனசுக்கு நிறைவா இருக்கு ” என்ற சந்தோஷின் கைகளைப் பற்றிக்கொள்கிறார் மீனாட்சி.

ஆர்.சரண், உ.சுதர்சன் காந்தி - படங்கள்: க.பாலாஜி - ஓவியம்: பிரேம் டாவின்ஸி