சினிமா
Published:Updated:

எங்க குடும்பம் ரொம்ப பெரிசு!

எங்க குடும்பம் ரொம்ப பெரிசு!
பிரீமியம் ஸ்டோரி
News
எங்க குடும்பம் ரொம்ப பெரிசு!

எங்க குடும்பம் ரொம்ப பெரிசு!

“என்னை வெச்சுப் படம் எடுத்தா, முதல் ஷோ ஹவுஸ்ஃபுல்தான். அஞ்சு அக்கா -மாமா, ஒரு அண்ணன் - அண்ணி, அவங்க பசங்கனு எங்க ஃபேமிலி ரொம்பப் பெருசு பிரதர்.” எனத் தொடங்கியவர், “கல்யாணத்துக்குக்கூட லேட்டாதான் வருவாங்க; பத்திரிகையில உங்க போட்டோ வரும்னு சொன்னதும் சீக்கிரமா வந்துட்டாங்க பார்த்தீங்களா?” என தன் ஸ்டைலில் குடும்பத்தை கலாய்த்து, நம்மை வரவேற்கிறார் சிவா.  உண்மைதான் ‘அகில உலக சூப்பர்ஸ்டார்’ என்ற நீளமான அவர் பட்டத்தைப்போலவே அவர் குடும்பமும் பெரிசு.

“நடுவுல அம்மா உட்காரட்டும். அவங்க பக்கத்துல நானும் ப்ரியாவும் உட்கார்ந்துக்கிறோம். எங்களைச் சுற்றி, அஞ்சு அக்காக்களும் உட்கார்ந்துக்கோங்க. அக்காக்களுக்குப் பின்னாடி மாமாக்கள் நின்னுக்கோங்க. ரொம்ப நேரம் நிற்கணும் மாமா; இதுதான் உங்களுக்கான ஃபிட்னஸ் சேலஞ்ச். அப்பறம் பெரிய பசங்க பின்னாடி நின்னுக்கோங்க. சின்னப் பசங்க எல்லோரும் முன்னாடி உட்கார்ந்துக்கோங்க!” என 23 பேருடன் நடுவில் உட்காருகிறார் சிவா.

“சிவா அவங்க அப்பா மாதிரி. அவங்க அப்பாவைச் சுற்றி இருக்கிற எல்லோருமே எப்போவுமே சிரிச்சுக்கிட்டே இருப்பாங்க. அந்தளவுக்கு நகைச்சுவையா பேசக்கூடிய ஆள். அவரோட மொத்த குணமும் சிவாகிட்ட இருக்குனு சொல்லலாம்” என சிவாவின் அம்மா சொல்ல, தன் தம்பியின் முதல் படத்தைப் பார்த்த அனுபவத்தைப் பகிர்ந்தார், சிவாவின் மூத்த அக்கா ப்ரணிதா.

“சிவா ‘சென்னை 28’ படத்துல நடிக்கிற விஷயத்தை எங்க யார்கிட்டேயும் சொல்லவே இல்லை. ஒருநாள் ரோட்டுல `சென்னை 28’ படத்தோட போஸ்டரைப் பார்த்தேன். ஒரு கும்பல்ல சிவாவும் நிற்கிற மாதிரி இருந்துச்சு. அவன்கிட்ட கேட்டா, ‘நான் எந்தப் படத்திலும் நடிக்கலையே’னு சொல்லிட்டான். அப்பறம் ஒருநாள் நியூஸ் பேப்பர்ல ஆர்ஜே சிவா நடிக்கிறதா போட்டிருந்துச்சு. அதுக்கப்புறம் கேட்டா, ‘ஆமா... நான் நடிக்கிறேன்’னு சொன்னான். இப்படித்தான் எங்க தம்பி நடிகனானது எங்களுக்குத் தெரியும்” என மூத்த அக்கா சொல்லி முடித்தார்.

எங்க குடும்பம் ரொம்ப பெரிசு!

“தமிழ்ப்படம் ரிலீஸாகுறதுக்கு முன்னாடியே, ‘இந்த மாதிரி ஒரு படம் நான் நடிச்சிருக்கேன். அதுக்கான விளைவுகள் எப்படி வேணும்னாலும் இருக்கலாம். வீட்டுமேல யாராவது கல் எறியவும் வாய்ப்பு இருக்கு’னு சிவா எங்ககிட்ட சொன்னான். ஆனா, படம் வந்ததுக்கு அப்பறம் அந்த மாதிரி எதுவுமே நடக்கலை. சொல்லப்போனா, ’சிவாவோட அக்காவா நீங்க’னு நிறைய பேர் எங்ககிட்ட பேசும்போது பெருமையாதான் இருந்துச்சு’’ என்று தாரா சொல்ல, மூன்றாவது அக்கா, மலர்விழி, “அவனை முதல்முறையா தியேட்டர் ஸ்கிரீனில் பார்க்கும்போது சந்தோஷமா இருந்துச்சு; முதல்ல கண்ணீர்தான் வந்துச்சு” என்றார்.

 “நீங்க ஏன் நடிக்கிறதை உங்க வீட்டுல இருக்கிற யாருக்குமே சொல்லலை?” என சிவாவிடம் கேட்டோம். “எங்க வீட்டுல எல்லோருமே டிகிரி வரைக்கும் படிச்சவங்க. நான் அந்த அளவுக்குப் படிக்கலை. எல்லோரும் என்னைப் படி படின்னுதான் சொல்வாங்க. அதனால நான் சினிமாவில் சக்சஸ் பண்ணிட்டு சொல்லலாம்னு நினைச்சேன்” என்றவர், அவரின் அண்ணன் செல்வத்தை அறிமுகப்படுத்தினார்.

“சிவா, ‘ரெடி ஆக்‌ஷன்’னு சொன்னா மட்டும்தான் நடிப்பார். ஆனால், நான் காலையில 6 மணிக்கு எந்திரிச்சதுல இருந்து ராத்திரி தூங்குற வரைக்கும் நடிச்சுக்கிட்டுதான் இருக்கேன்” என உலகமே ஒரு நாடகமேடை ரேஞ்சுக்குப் பதில் சொல்ல, “இவங்க ரெண்டுபேர்ல யாரு நல்ல நடிகர்; சிவாவா, செல்வமா?”  என, செல்வத்தின் மனைவி ஹேமாவிடம் கேட்டோம்.

“திரையில் சிவா, வீட்டில் செல்வா!” எனப் பன்ச் பதில் சொன்னார். “உங்க குடும்பத்தைப் பார்க்கும்போது ‘கடைக்குட்டி சிங்கம்’ படம்தான் ஞாபகத்துக்கு வருது” என சிவாவின் நான்காவது அக்கா தேன்மொழியிடம் சொல்ல, “அந்த அக்காக்கள் மாதிரி நாங்க எங்க தம்பிகிட்ட சண்டை போடமாட்டோம். தம்பிக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவோம்” எனத் தேன்மொழி சொன்னதும், “ஆமா... தம்பிக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவாங்க. டிபன் செய்யச் சொன்னா, டிவி பார்ப்பாங்க” என சிவா சொல்ல, “எவ்வளவு ஜாலியா இருந்தாலும் சாப்பாட்டு விஷயத்துல இவனுக்கு பயங்கரமா கோபம் வரும். சாப்பாடு சரியான நேரத்துக்கு வரலைனாலும்; சாப்பாடு சரியில்லைனாலும் ரொம்ப டென்ஷன் ஆகிடுவான்” என்கிறார், கடைசி அக்கா வளர்மதி.

“சாப்பாட்டு விஷயத்தில் இவ்வளவு கறாரா இருக்காரே, அப்படின்னா, நல்லா சமைப்பாரோ?!” என சிவாவின் மனைவி ப்ரியாவிடம் கேட்க, “ரொம்ப நேரம் எடுத்து சமைக்கிற ஐட்டமெல்லாம் செய்யமாட்டார். ரெடி டு ஈட் மாதிரியான ஐட்டங்கள் சமைப்பார். எனக்கு அது செஞ்சுகொடுங்க, இது செஞ்சுகொடுங்கனு அவர்கிட்ட கேட்டு அவரைக் கஷ்டப்படுத்தமாட்டேன்” என்றார் ஒரு சின்னச் சிரிப்புடன்.

“என்னப்பா... எங்ககிட்டல்லாம் எந்தக் கேள்வியும் கேட்கமாட்டீங்களா?” என்றபடி என்ட்ரி கொடுத்தார், சிவாவின் மூன்றாவது மாமா அண்ணாதுரை. “சிவான்னாலே சந்தோஷம். அவனைப் பற்றிப் பேசும்போதே ஒரு மகிழ்ச்சி நமக்குள்ள வரும். அது இயற்கையிலேயே சிவாவுக்குக் கிடைச்ச வரம். அது வாழ்க்கை முழுக்க அவர்கூட வரணும்னு வேண்டிக்கிறேன்” என்றார்.

“சிவாகூட வெளியில போகும் போதெல்லாம் ஃபேன்ஸ் தொல்லை ஜாஸ்தியா இருக்குமா?” என்று சிவாவின் நான்காவது மாமா விஜய்யிடம் கேட்டபோது, “ஒரு செலிபிரிட்டிகூட வெளியில போகும்போது சில சிக்கல்கள் இருக்கும்னு சொல்வாங்க. சிவாகூட போகும்போது அப்படி எந்தச் சிக்கலும் இருக்காது. நமக்காக நேரம் ஒதுக்குவார். பலமுறை பைக்ல போயிருக்கோம். எந்த இடையூறும் இருக்காது” என்கிறார் விஜய்.
சிவாவின் அக்கா மகள்களான மது, நீலா, அமிர்தா, நிவேதா, ஓவியா என ஐந்து பேரிடமும், “உங்களுக்கு சிவாவைத் தவிர வேறெந்த நடிகரைப் பிடிக்கும்; `தமிழ்ப்படம்’ பார்த்துட்டு என்ன ஃபீல் பண்ணீங்க?” எனப் பொதுவாக ஒரு கேள்வி கேட்டோம். கோரஸாக “எங்களுக்கு விஜய் சேதுபதி பிடிக்கும்” என்றவர்கள், “ ‘தமிழ்ப்படம்’ ஒரு ஸ்பூப் ஜானர்னு தெரியும். அதனால அதுல கலாய்க்கிறதை நாங்க பெருசா எடுத்துக்கலை. ரொம்ப ஆர்வமா பார்த்துட்டிருந்தோம். ஆனால், `கேம் ஆஃப் த்ரோன்ஸை’ எல்லாம் கலாய்ப்பாங்கனு நாங்க சத்தியமா நினைக்கலை” என்றனர்.

“உங்க குடும்பமே செம கலகலப்பா இருக்கே பிரதர். எல்லா விஷயத்தையும் இப்படித்தான் ஹேண்டில் பண்ணுவீங்களா?” என்றதும், “நாங்க எல்லோருமே எப்போவும் அப்படித்தான். ஜவஹர், அருள்னு என்னோட முதல் ரெண்டு மாமாக்கள் இன்னைக்கு வரல. அவங்க வந்திருந்தா, இன்னும் கலகலப்பா இருந்திருக்கும். உங்களுக்கு பாட்டெல்லாம்கூட பாடிக் காட்டியிருப்பாங்க.” என்கிறார்.

‘எங்கள் வீட்டில் எல்லாநாளும் கார்த்திகை’ என்று மிச்சமிருந்தவர்கள் பாட ஆரம்பிக்கும் முன்பே, வாழ்த்துகள் சொல்லி விடைபெற்றோம்.

சிவா சார், ஒரு விஷயம் சொல்றோம். விக்ரமன் படம் எடுத்தா, அதுக்குப் பொருத்தமான ஹீரோ நீங்கதான்!

- மா.பாண்டியராஜன், படங்கள்: ஜெ.வேங்கடராஜ்