சினிமா
Published:Updated:

சர்ப்ரைஸ் குயின்... சந்தோஷ விக்னேஷ்!

சர்ப்ரைஸ் குயின்... சந்தோஷ விக்னேஷ்!
பிரீமியம் ஸ்டோரி
News
சர்ப்ரைஸ் குயின்... சந்தோஷ விக்னேஷ்!

சினிமாபடங்கள்: அருண் டைட்டன்

‘மதயானைக்கூட்டம்’, ‘கிருமி’, ‘விக்ரம் வேதா’, ‘பரியேறும் பெருமாள்’ என்று, நடிக்கும் படங்களில் எல்லாம் தன்னைத் தக்க வைத்துக்கொள்பவர் கதிர். ‘சிகை’ ஃபர்ஸ்ட்லுக் இன்னும் எதிர்பார்ப்பைத் தூண்டியிருக்கிறது. தேவதைகளைத் தேடும் பரியனாக நடித்த கதிரை அவரது நிஜ தேவதையுடன் சந்தித்தேன். சஞ்சனாவுடன் திருமணமாகி ஆறுமாதங்கள்தான் ஆகின்றன. 

சர்ப்ரைஸ் குயின்... சந்தோஷ விக்னேஷ்!

“ஸ்கூலில் இவர் என்னோட சீனியர். ஆனா, என்னை ராகிங்லாம் பண்ணியது கிடையாது. நாங்க ரெண்டு பேரும் ஒரே ஸ்கூலில் படிச்சவங்கன்னு நிச்சயதார்த்தத்துக்குப் பிறகுதான் எங்களுக்கே தெரிஞ்சது” என்று சிரிக்கிறார் சஞ்சனா.

“ஆமாங்க... அப்பவே இவங்கதான் என் மனைவியா வரப்போறாங்கன்னு தெரிஞ்சிருந்தா ராகிங் பண்ணியிருக்கலாம்’’ என்று சொன்ன கதிரைச் செல்லமாக முறைக்கிறார் சஞ்சனா. உடனே பயந்தது போல் பாவனை செய்துவிட்டு, தொடர்ந்து பேசினார் கதிர். 

“இவங்களை குயின் ஆஃப் சஸ்பென்ஸ்னு சொல்லலாம். எனக்கு எப்போ பார்த்தாலும் ஏதாவது சஸ்பென்ஸ் கொடுத்துக்கிட்டே இருப்பாங்க. சமீபத்தில் என்னோட பிறந்தநாள் வந்துச்சு. சர்ப்ரைஸா என்னை கோவாவுக்கு அழைச்சிட்டுப் போனாங்க. எங்கே கூப்பிட்டுப் போறாங்கனு தெரியாமலே இவங்ககூட ட்ராவல் பண்ணினேன்” என்று கதிர் சொல்ல, சத்தமாகச் சிரித்த சஞ்சனா, “விக்னேஷ் சஸ்பென்ஸா கிஃப்ட் கொடுக்கிற விஷயத்துல சுத்த வேஸ்ட். விக்னேஷ் யார்னு தேடாதீங்க. இவருடைய உண்மையான பேர்  விக்‌னேஷ். படத்துக்காகத்தான் கதிர்னு மாத்திக்கிட்டார். சஸ்பென்ஸ்ங்கிற வார்த்தைக்கு ஸ்பெல்லிங்கூடத் தெரியாது இவருக்கு. ‘உன் பிறந்தநாளுக்கு ஹேண்ட் பேக் வாங்கப் போறேன். உனக்கு என்ன கலர் வேணும்’’னு போன் பண்ணிக் கேட்டுட்டுதான் வாங்கிட்டு வருவார். எனக்கு கிஃப்ட் வாங்கிற ஃபீலே கிடைக்காது’’ என்று கதிரை முறைத்த சஞ்சனாவைத் தொடர்ந்து, கதிர் பேசினார். 

சர்ப்ரைஸ் குயின்... சந்தோஷ விக்னேஷ்!

“நான் சின்ன வயசிலே இருந்தே பெரிசா யாருக்கும் எந்த கிஃப்ட்டும் வாங்கிக் கொடுத்துப் பழக்கமில்லை. இவங்கதான் இப்படின்னா இவங்க தங்கச்சி அதுக்கும்மேல. நான் சஞ்சுவைப் பார்த்த நாளிலிருந்து நூறாவது நாள் வரைக்கும் சின்னச் சின்ன மொமன்ட்ஸை எங்களுக்கே தெரியாமல் கேமராவில் ஷூட் பண்ணி, நூறாவது நாளில் போட்டுக்காட்டி னாங்க. அசந்துட்டேன்” என்று கண்கள் விரிய சொல்கிறார் கதிர்.

“இருக்காதா பின்னே? எங்க திருமணத்துல அதிக அக்கறை எடுத்துக்கிட்டது என் தங்கை திவ்யா தர்ஷனா. எங்க திருமணம் முடிவு ஆனதும், இவர் ஒரு நடிகரா இருக்கிறார்னு ரொம்ப பயந்து இவரைப் பற்றி விசாரிக்க ஆரம்பிச்சிட்டா. முக்கியமா, ‘கிருமி’ படத்துல ஒரு ரொமாண்டிக் பாட்டு வரும். அதை என்கிட்ட காட்டி, ‘இவரையா கல்யாணம் பண்ணிக்கப் போறே?’ன்னு கேட்டா. அப்போ எனக்குப் பெரிசா தெரியலை. ஆனா, இப்போ யாராவது ஹீரோயின்ஸ்கூட இவர் நெருக்கமா பழகும் காட்சி சினிமாவில் பார்த்தா கோபம் வரும், பாருங்க!’’ என்று சஞ்சனா சொல்ல, கைகளைத் தூக்கியபடி சரண்டர் சிம்பல் காட்டுகிறார் கதிர்.

“ஹா ஹா. எங்க திருமணம் நடக்கிறதுக்கு முன்னாடியே சஞ்சுகிட்ட, சினிமா பற்றி முழுசா சொல்லிட்டேன். ஏன்னா, எங்க ரெண்டு பேருக்கும் இடையில் எந்தவொரு விரிசலும் வந்திடக் கூடாதுங்கிறதுக்காகத்தான். இவங்களுக்கு என்னோட ஷூட்டிங் ஸ்பாட் எப்படியிருக்கும்னு பார்க்க ஆசை. ஒருநாள் கூப்பிட்டுப் போகணும்’’ என்று கதிர் சொல்லி முடிக்க, சஞ்சனா தொடர்கிறார்.

சர்ப்ரைஸ் குயின்... சந்தோஷ விக்னேஷ்!‘`சினிமாவைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. எங்க திருமணம் நிச்சயதார்த்தம் ஆனதுக்குப் பிறகுதான் இவங்க நடிச்சிருக்கிற சில படங்களைப் பார்த்தேன். ‘பரியேறும் பெருமாள்’ படத்தைப் பார்த்துட்டு இவரா இப்படி நடிச்சிருக்கார்னு எனக்கு ஒரே ஆச்சர்யம்!’’ என்று சஞ்சனா நெகிழ,  “கண்டிப்பா ‘சிகை’ படத்தை இவங்க பக்கத்தில உட்கார்ந்து பார்க்க மாட்டேன். ஏன்னா, அந்தப் படத்துல பெண் வேடம் போட்டிருப்பேன். இவங்க பக்கத்திலிருந்து பார்க்க கொஞ்சம் கூச்சமா இருக்கும்’’ என்கிறார்.

“என் மாமனார் பற்றிச் சொல்லியே ஆகணும். அவர் தியேட்டர் போய் சினிமா பார்க்கிற ஆள்  கிடையாது. ஆனா, ‘பரியேறும் பெருமாள்’ படத்தை தியேட்டரில் அவரின் நண்பர்கள், சொந்தகாரங்கன்னு சுமார் எழுபது பேர்கூட சேர்ந்து பார்த்திருக்கார். எப்பவுமே என் மாமனார் வீட்டுல எனக்குப் பெரிய வரவேற்பு இருக்கும். அதிலும் மருமகனை உள்ளங்கையில் வெச்சுத் தாங்குவாங்க என் மாமியார். அவங்களுக்கு ஓவியாவை ரொம்பப் பிடிக்கும். என்கிட்ட ஓவியா பற்றிக் கேட்டுக்கிட்டே இருப்பாங்க. அநேகமா, ஓவியா ஆர்மிக்கு கொ.ப.செ ஆகிருவாங்க போல’’ என்று கலாய்த்த கதிரைச் செல்லமாய் சஞ்சனா முறைக்க, கதிர் சமாதானப்படுத்த, அப்புறம் எனக்கு அங்கே என்ன வேலை?

சனா