சினிமா
Published:Updated:

“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்!”

“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்!”

சினிமா

“வெற்றி மாறன்தான் என் அடுத்த படத்துக்கும் இயக்குநர். ‘வடசென்னை’ ஒரு ட்ரையாலஜி கதை. பார்ட் 1-க்கும், பார்ட் 2-க்கும் இடையில சின்ன பிரேக் தேவைப்பட்டது. அதுக்காக தாணு தயாரிக்கிற படத்துல கமிட்டாகியிருக்கேன். இயக்குநரா மல்டி ஸ்டாரர் படம் ஒன்றை இயக்கிக்கிட்டு இருக்கேன். ‘விஐபி 3’ பட வேலைகளை சீக்கிரமே தொடங்கணும்.” - தனது அடுத்தகட்டம் குறித்து, தெளிவான திட்டத்துடன் இருக்கிறார் தனுஷ்.   

“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்!”

“ ‘வடசென்னை’யில் நடித்தவர்களில் இயக்குநர்கள் அதிகம். எப்படி இருந்தது அந்த அனுபவம்?”

“இயக்குநர்கள், நடிகர்கள்னு பிரிச்சுப் பார்த்ததில்லை. அந்தக் கதாபாத்திரமா மாறணும், அவ்வளவுதான். ‘வடசென்னை’ மாதிரியான ஒரு கதையும், கதைக்களமும் அவ்வளவு சுலபமா ஒரு நடிகனுக்குக் கிடைக்காது. வெற்றி மாறனுக்கு என்ன தேவையோ, அதைக் கொஞ்சம்கூடத் தயங்காமக் கொடுத்திருக்கிறோம். சமுத்திரக்கனி அண்ணாகிட்ட இப்படியொரு ஹியூமர் சென்ஸ் இருக்கும்ங்கிறதை இப்போதான் தெரிஞ்சுகிட்டேன். நிச்சயம் எனக்கு நல்ல அனுபவம். படம் பார்க்கிறவங்களுக்கும் ‘வடசென்னை’ சிறந்த அனுபவமா இருக்கும்னு நம்புறேன்.”

“ஹாலிவுட் சினிமாவுக்குப் போனதுக்கான காரணம் மற்றும் கேன்ஸ் திரைப்பட விழா அனுபவம் பற்றிச் சொல்லுங்க...”

“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்!”

“ஹாலிவுட்டுக்குப் போனதுக்கு முக்கியக் காரணமே, சினிமா குறித்து கத்துக்க வேண்டிய விஷயங்கள் அதிகம் என்பதால்தான். இந்திய சினிமாவுல இருந்து சிறந்த நடிகர்கள் பட்டியல்ல என்னோட பெயரும் ஹாலிவுட்டுக்குப் போய்ச் சேர்ந்திருக்கு. அவங்கதான் என் படங்களைப் பார்த்து, ‘The Extraordinary Journey of the Fakir’-ங்கிற ஆங்கில-பிரெஞ்சு மொழிப் படத்துல நடிக்க வாய்ப்பு கொடுத்தாங்க. இப்படித்தான் ஹாலிவுட் வாய்ப்பு வந்ததே தவிர, நான் அந்த வாய்ப்பைத் தேடிப் போகலை. இந்தப் படம் கேன்ஸ் திரைப்பட விழாவுக்குப் போனது, அங்க ரெண்டுநாள் நான் தங்கியிருந்தது மூலமா பல்வேறு நாட்டுல இருந்து வந்த நடிகர்களை சந்திச்சேன். அவங்ககிட்ட பலதரப்பட்ட சினிமா குறித்துப் பேசினேன். உலகத்தை ஒரு படி அதிகமா ரசிக்க இடம் கிடைத்தது.

தொழில்நுட்ப ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் நிறைய விஷயங்கள் அவங்ககிட்ட இருக்கு. ஹாலிவுட் படத்துல திட்டமிடுதலுக்கு அதிகம் நேரம் ஒதுக்குறாங்க. அதனால ஷூட்டிங் நேரம் குறையுது, செலவு மிச்சமாகுது. இந்த ஃபார்முலால அவங்க ஸ்ட்ராங்கா இருக்கிறதுனாலதான், உலகத்தரம் மிக்க சினிமாக்களை அவங்களால எடுக்க முடியுது. தொடர்ந்து இரண்டு, மூன்று படங்கள் ஹாலிவுட்ல இருந்து எனக்கு வந்துச்சு. எந்தக் கதை பிடிச்சிருக்கோ, அதுல நடிப்பேன். மொழி ஒரு தடை இல்லை.”

“பாலிவுட் அனுபவங்கள்...?”  

“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்!”

“பாலிவுட்டைப் பொறுத்தவரை, தமிழுக்குப் பதிலாக இந்தி பேசி நடிச்சேனே தவிர, வேறெந்த வித்தியாசமும் எனக்குத் தெரியலை. ‘ராஞ்சனா’, ‘ஷமிதாப்’ ரெண்டுக்குமே என் கதாபாத்திரத்தை எப்படிச் செய்தால் சரியா இருக்குமோ, அதைச் செய்தேன். அதுக்கு என் முகம் தேவையா இருந்ததுனாலதான் அவங்க என்னைக் கூப்பிட்டாங்க. நான் அதிகமா ஷூட்டிங் ஸ்பாட்ல பேசமாட்டேன். மொத்தத்துல, குதிரைக்குக் கடிவாளம் போட்டமாதிரிதான் அங்கேயும் வேலை பார்த்தேன். எத்தனை படங்கள்ல வேலை பார்த்தாலும், ‘எல்லாப் படமும் முதல் படம்’னு நினைத்து வேலை பார்ப்பவர், அமிதாப் பச்சன். அவருடைய அனுபவத்தை ஒப்பிடுறப்போ, செட்ல உள்ள எல்லோருமே கத்துக்குட்டிகள். ஆனா, அதை அவர் பொருட்படுத்தியதே கிடையாது. கதை கேட்குறதுல இருந்து, நடிக்கும்போது மத்தவங்க சொல்ற விமர்சனங்களை ஏற்பது வரை... பொறுமைசாலி. ஷாட் முடிந்ததும், ‘நான் எப்படி நடிச்சிருக்கேன்’னு ஆவலா கேட்பார்.”

“இயக்குநர் தனுஷ் எப்படிப்பட்டவர்?”


“ஒரு நடிகர்கிட்ட இருந்து வந்த அனுபவத்தின் தொகுப்புதான் இயக்குநர் வடிவம். ‘நான் இப்போ நடிகர்’, ‘இப்போ இயக்குநர்’னு என்னை நானே வித்தியாசப்படுத்திப் பார்த்தது கிடையாது. எவ்வளவுக்கு எவ்வளவு நாம ரோல் குறித்து யோசிக்காம இருக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. ஒரு நடிகனா இருக்குறது ஈஸி. இயக்குநரா இருக்குறது கஷ்டம். அடுத்ததா எஸ்.ஜே. சூர்யா, ஸ்ரீகாந்த், சரத்குமார், நாகார்ஜுனா, நித்யா மேனன், அதிதி ராவ்... இவங்க எல்லோரையும் வெச்சு படம் இயக்கிக்கிட்டிருக்கேன்.”

“ரஜினியின் மௌனம், தனுஷ் அரசியல் - என்ன சொல்ல விரும்புறீங்க?”

“அவரோட அமைதிக்கு ஒரு காரணம் இருக்கு. நானும் அதேமாதிரி அமைதியாக இருக்க விரும்புறேன். சினிமா தவிர வேறு எதையும் பொதுவெளியில் பேச விரும்பலை. இன்னைக்குத் தேதிக்கு என் கையில வரிசையா ஆறு படங்கள் இருக்கு. அது மக்கள்கிட்ட நல்லபடியா போய்ச் சேரணும். அரசியல் வாழ்க்கை எனக்கு அமையுமான்னு தெரியலை.”

“லிங்கா, யாத்ரா எப்படி இருக்காங்க? ஐஸ்வர்யாவை மறுபடி சினிமாவுல எப்போ பார்க்கலாம்?”

“வேலை வேலைனு ஓடறதால குடும்பத்துக்கு நேரம் ஒதுக்க முடியல. இதைப் புரிஞ்சுக்கிற குடும்பத்தைக் கடவுள் எனக்குக் கொடுத்திருக்கார். மகிழ்ச்சி! லிங்கா, யாத்ராவை ஐஸ்வர்யா வளர்க்குற விதமே அழகு. குழந்தைகளும் இந்த வயசுலயே அதிக மெச்சூரிட்டியோட இருக்காங்க. பெத்தவங்க மனசு நோகாம நடந்துக்கணும்னு ஆசைப்படுறாங்க. அவங்க வகையில, என்னவாகணும்னு விருப்பப்படுறாங்களோ, அதுக்கு நானும் ஐஸ்வர்யாவும் துணை நிற்போம். பசங்க கொஞ்சம் வளர்ந்ததுக்கு அப்புறம் ஐஸ்வர்யாவ சினிமால பார்க்கலாம்.”

“ரசிகர்கள் மத்தியில சிம்பு - தனுஷ் போட்டியை எப்படிப் பார்க்குறீங்க?”


“ரஜினி - கமல், விஜய் - அஜித், இந்த மாதிரியான காம்பினேஷன்ஸ் வெச்சுப் பேசுறது தமிழ் சினிமாவுல தவிர்க்க முடியாதது. தனுஷ் வேண்டாம்னு சொன்னாலும், சிம்பு வேண்டாம்னு சொன்னாலும் ரசிகர்கள் தொடர்ச்சியா பேசிக்கிட்டேதான் இருப்பாங்க. ஆனா, இது ஒரு ஆரோக்கியமான போட்டியா யாரோட மனதையும் காயப்படுத்தாத மாதிரி இருந்தா பரவாயில்லை. இதனால ரசிகர்கள் மத்தியில பிரச்னை ஏற்படும்னா, அதை ஏத்துக்க மாட்டேன். அன்புதான் நிரந்தரம். ஒருத்தவங்கமேல வெச்சிருக்குற அன்பு, காலப்போக்குல வெறுப்பா மாறுச்சுன்னா, அந்த அன்புக்கு அர்த்தமில்லை. எங்க ரெண்டுபேரோட ரசிகர்களுக்குமே நான் சொல்றது ஒரேயொரு விஷயம்தான். நாங்க படம் எடுக்குறது உங்களுக்காகத்தான். அதுக்கான முழு சப்போர்ட்டும் உங்ககிட்ட இருந்து கிடைக்கணும்னு எதிர்பார்க்குறோம். எல்லாப் படமும் எல்லோருக்குமானது. அதை ரசிகர்கள் பிரித்துப் பார்க்க வேண்டாம். உங்களுக்குப் பிடிச்ச நடிகரைப் பற்றிப் பெருமையா பேசிக்கோங்க. அதுக்காக மத்தவங்களைத் திட்ட வேண்டாம். எனக்குப் போட்டி போடுறதுல நம்பிக்கை இல்லை. ஆனா, சினிமாவுல 15 வருடத்துக்கும்மேல இருக்கிற ஒரு நண்பரா, என் பெயரும் சிம்பு பெயரும் பக்கத்து பக்கத்துல வர்றது எனக்குப் பெருமைதான்!”

“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்!”

“சமூக வலைதளங்கள்ல தனுஷோட பிரச்னைகள் குறித்துப் பேசப்படுறதுக்கு எப்படி ரியாக்ட் பண்ணுவீங்க?”

“சமூக வலைதளங்கள்ல வர்ற மோசமான கமெண்டுகளை எடுத்துக்கமாட்டேன். அன்பு நிரந்தரம், வெறுப்பு நிரந்தரம் அல்ல. ஒருத்தரை வெறுக்கிறது ஒரு வேலையே கிடையாது. பாசிட்டிவ் விஷயங்கள் மட்டும்தான் என் கண்ணுல படும்.”

“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்!”“சீக்குவல் படங்களை நோக்கி தமிழ் சினிமா போறதுக்கான காரணங்கள் என்ன, உங்களுடைய அடுத்தடுத்த சீக்குவல் படங்கள் எப்படி இருக்கும்?”

“ ‘மாரி’யைவிட ‘மாரி 2’ கதை சிறப்பா இருக்கும். அதுல நாங்க தவறவிட்டதை இதுல நிறைவேத்தியிருக்கோம்னு சொல்லலாம். ஃபேமிலியோட சேர்ந்து என்ஜாய் பண்றமாதிரியான கதை.  இப்போ வர்ற புது நடிகர்கள் எல்லாம் ஏற்கெனவே பத்துப் படங்கள்ல நடிச்ச மாதிரியான ஒரு யதார்த்தத்தைக் கேமராவுக்கு முன்னாடி கொண்டு வர்றாங்க. சாய் பல்லவி நடிப்பைப் பார்க்கும்போது ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சு.

கதைக்குத் தமிழ் சினிமாவுல பஞ்சமில்லை. முன்பைவிட இப்போ கதையில் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கோம். வித்தியாசமான முயற்சிகளைத் தொழில்நுட்ப ரீதியா பண்ணிக்கிட்டிருக்கோம். சீக்குவல் படங்களுக்கு எப்போதுமே வியாபார நோக்கம் அதிகம். தனி ரசிகர் பட்டாளம் இருக்கும். இவை மட்டும்தான் சீக்குவல் படங்கள் எடுப்பதற்கான காரணங்கள்.”

‘’ ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்துல என்ன பிரச்னை?”

“கெளதம் சார் எப்போ ஷூட்டிங்குக்கு வரச் சொன்னாலும், நான் மறுப்பு தெரிவிச்சதே கிடையாது. அவருடைய திட்டங்களை நாம சொதப்பிடக் கூடாதுன்னு, கேட்ட தேதிகளையெல்லாம் அவருக்காக ஒதுக்கிக் கொடுத்தேன். இதுக்குமேல படம் வரலைனா, அது என் தவறு கிடையாது. படம் எடுப்பதையும் தாண்டி, வெளியிடுறதுல நிறைய பிரச்னைகள் இருக்கு. சீக்கிரம் படம் வெளியாகும்னு நம்புறேன்.”

“அண்ணன் செல்வராகவனோட மீண்டும் எப்படி எப்போ இணையப்போறீங்க?”


“நான் அண்ணாவோட அடுத்த படத்துக்காகக் காத்துக்கிட்டிருக்கேன். சூர்யா ஹீரோ, யுவன் இசைனு கேட்கும்போதே ஆசையா இருக்கு. அடுத்த வருடம் நானும் அண்ணாவும் சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம்.”

சுஜிதா சென்