சினிமா
Published:Updated:

“இதில் விஜய்யும் வில்லன்தான்!”

“இதில் விஜய்யும் வில்லன்தான்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“இதில் விஜய்யும் வில்லன்தான்!”

முருகதாஸ் சொல்லும் ‘சர்கார்’ எக்ஸ்க்ளூசிவ்சினிமா

“தமிழ், தெலுங்கு, இந்தின்னு நான் எந்த மொழியில படம் பண்ணிட்டிருந்தாலும், ஒரு மெசேஜ், சர்ப்ரைஸ் சந்திப்புனு விஜய் சாருடன் எப்பவும் தொடர்பில் இருப்பேன். அப்படி ரிலாக்ஸா இருந்த சமயத்தில் ஒருமுறை சந்திச்சோம். ‘மறுபடியும் ஒரு படம் பண்ணலாமே’னு பேசினோம். ‘இந்த முறை அரசியல் படம்தான்’னு சொன்னேன். ‘ஓ.கே’ சொன்னார் விஜய்.

“இதில் விஜய்யும் வில்லன்தான்!”

அது, ‘மெர்சல்’ வெளிவராத நேரம். அப்பவே ‘சர்கார்’ கதையை முழுக்க அவரிடம் சொல்லிட்டேன். ‘மெர்சல்’ ரிலீஸ் ஆச்சு. அந்தச் சமயத்தில், மீண்டும் விஜய் சார் கூப்பிட்டார்.

‘ஒரே ஒரு டயலாக்... அதுவே பெரிய பிரச்னையா போயிட்டிருக்கு. இந்த ஸ்கிரிப்ட்டைப் பண்ணலாமா... இல்ல, வேற ஸ்கிரிப்ட்டுக்குப் போயிடலாமா’னு கேட்டார். ‘அரசியல்வாதிகளைக் குறை சொல்றதுக்கு முன்னாடி நம் கடமைகளை நாம நேர்மையா பண்றோமானு ஒவ்வொருத்தரும் சுய பரிசோதனை பண்ணிக்கணும்னு சொல்றதுதான் நம்ம கதை. இதுல தனிப்பட்ட முறையில யாரையுமே விமர்சிக்கலை. இந்தச் சூழல்ல இது அவசியமான படம். இதைப் பண்ணலாம் சார்’னு சொன்னேன். ‘டபுள் ஓகே’னார். இதோ ‘சர்கார்’ ரெடி.”

- தொடக்கப் புள்ளியை நம்மிடம் ஆர்வமாக விவரிக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். தன் ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் செம கூலாக, ரிலாக்ஸாகப் பேசினார். ‘சர்கார்’ பிரமாண்டம் நம் கண்முன்னே விரியத்தொடங்குகிறது.

“இதில் விஜய்யும் வில்லன்தான்!”

“இந்தப் படத்தைப்பற்றிப் பேசும்போது, ‘என் அடுத்த கமிட்மென்ட் சன் பிக்சர்ஸோட இருக்கு. உங்களுக்கு ஓகேவா’னு விஜய் சார் கேட்டார். ‘பெரிய தயாரிப்பு நிறுவனம். ‘எந்திரன்’ படத்துக்குப்பிறகு நேரடித் தயாரிப்புல வர்றாங்க. சந்தோஷம்’னேன். அப்படித்தான் சன் பிக்சர்ஸோட சேர்ந்து எங்க பயணத்தை ஆரம்பிச்சோம்.”

“இது தமிழகத்தின் நிகழ்கால அரசியலைப் பேசும் படமா?”


“ ‘ஓட்டு கேட்டு தேர்தல் நேரத்துல வருவாங்கள்ல... அப்ப நாங்க பார்த்துக்குறோம். எங்க ஒவ்வொருத்தரோட ஓட்டும் ஒரு லட்சம் பெறும் தெரியுமா’னு  சாதாரணப் பகுதியில வசிக்கிற ஒரு அம்மா ஒரு பேட்டியில், சொல்றாங்க. அதுவே எனக்குப் பெரிய அதிர்ச்சி. தவறான ஆளுக்கு வாக்களிச்சிட்டோமேங்குற அந்த ஆதங்கம் நியாயமானது. ஆனா, தன் ஓட்டைப் பணத்தோட ஒப்பிட்டுப் பேசியது, அவங்களை அறியாம அனிச்சைச் செயல்போல வெளிப்படுது. எந்தப் புள்ளியில் நமது ஓட்டைப் பணத்தோட ஒப்பிட ஆரம்பிச்சோம்? வாக்கு என்பது நம் உரிமை. அதைப் பணத்தோடு ஒப்பிடுற கொடுமை எந்தப் புள்ளியில் தொடங்குச்சு? அந்த மையப்புள்ளிதான், இவ்வளவு ஊழல்களுக்கும் காரணம். அதுக்கு முதல் புள்ளிய வெச்சது நாமதான்.  புள்ளிகளை தவறா வெச்சதால, கோலமே தவறா இருக்கு, கடைசில `இதை அவன் அலங்கோலமாக்கிட்டான்’னு புலம்புறதுல அர்த்தமே இல்லை. வாக்களிக்கிற கடமையை நாம நேர்மையா சரியா பண்றோமாங்கற விஷயத்தை மையப்புள்ளியா வெச்சுதான் ‘சர்கார்’ உருவாகியிருக்கு.”

“‘சர்கார்’ பற்றிய செய்திகள், புகைப்படங்களைப் பார்க்கும்போது கதை, முதல்வர்-துணை முதல்வரின் ஆட்சியை, வெளிநாட்டிலிருந்து வரும் ஹீரோ வீழ்த்தி, எப்படி ஆட்சியைப் பிடிக்கிறார்னு போகும்னு தோணுதே. சரியா?”

“இதில் விஜய்யும் வில்லன்தான்!”

“இன்னைக்கு இருக்கிற தலைவர்களை அப்படியே நேரடியா பிரதிபலிக்கும் விஷயங்களோ, அவர்களை கேலி செய்யும் விஷயங்களோ சர்காரில் இருக்காது. அது எங்களின் நோக்கமும் அல்ல. அவர்களை ஆழமா சிந்திக்கவைக்கணும் என்பதே எங்களின் இலக்கு. ‘அப்ப இன்றைய அரசியலை பிரதிபலிக்காதா’னு கேட்டா, ‘எப்படி பாதிக்கப்பட்டோம்’னு விழிப்புணர்வை உண்டாக்குமே ஒழிய தனி நபர் தாக்குதல் இருக்காது’ என்பதே என் பதில்.”

“இதில் விஜய் கதாபாத்திரத்தின் தன்மை எப்படி இருக்கும்?”

“ஹீரோ, ஃபாரின் ரிட்டர்ன். அப்படிச் சொன்னதுமே அதுக்கான மாஸ் எலிமென்ட்ஸ் தானாவே வந்துடும். அதேசமயம் மக்களோட பிரச்னையைப் பேசக்கூடிய பிரதிநிதியாவும் அவரை எளிதா மாத்திக்க முடிஞ்சுது. அதை விஜய் சார் ரொம்ப அழகா பண்ணியிருக்கார். தவிர இது வெறுமனே அரசியல் படம் மட்டுமல்ல, நல்ல ஹீரோ-வில்லன் படமும்கூட. இதில் நல்ல கதை இருக்கு. ‘அடுத்து என்ன... அடுத்து என்ன...’னு எதிர்பார்க்கக்கூடிய சுவாரஸ்யமான காட்சிகள் இருக்கு. ஒரு கமர்ஷியல் சினிமாவைக் கதை மட்டுமே காப்பாத்திடாது. ஹீரோவுக்கு நல்ல  பலமான எதிரி இருக்கணும். ஹீரோவுக்கு அவங்க என்ன பிரச்னைகளைத் தர்றாங்க. அதை ஹீரோ எப்படி எதிர்கொண்டு வெல்றார்னு இருக்கணும். ஒரு கார்ப்பரேட் கிங், இங்க இருக்கிற அரசியல் ரீதியிலான பிரச்னைகளை எப்படி எதிர்கொள்றான்னு சொல்லும்போதே சுவாரஸ்யமான விஷயங்கள் அந்தக் கதைக்குள்ளேயே வந்துடும்.”

“ஹீரோவோட கேரக்டர் பெயர்?”

“சுந்தர்!”

“ஹீரோவின் கேரக்டர், அவரோட பெயர்... எல்லாம் பார்க்கையில், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையை முன்னுதாரணமா வெச்சுதான் கதாபாத்திரத்தை வடிவமைச்சிருக்கீங்கன்னு நினைக்கிறேன். சரியா?”


“அவரை சுந்தர்னு நினைச்சுக்கிட்டு அவர் முகத்தைப் பாருங்க, என் கேரக்டருக்கு யார் இன்ஸ்பிரேஷன்னு உங்களுக்கே புரியும். உலகின் மிகப்பெரிய கார்ப்பரேட் கம்பெனியில் சிஇஓ-வா இருக்கிற ஒரு தமிழன். அவரின் வார்த்தைக்காக இரண்டாயிரம் அமெரிக்கர்கள் அவரின் அலுவலகத்தில் காத்திருக்காங்க. அவர் என்ன சொல்றார்னு உலகமே உற்று நோக்குது. அந்தமாதிரியான ஆள் நம் சொந்த வீட்டைச் சுத்தப்படுத்தணும்னு நினைச்சு ஊருக்கு வர்றார். ஆனா, ஒண்ணுமே இல்லாத விஷயத்தைப் பிரச்னையாக்கி, பெரிய பிரச்னையை ஒண்ணுமே இல்லாம ஆக்குற அரசியல்வாதிகளோட மோதி, பிரச்னைகளை எப்படி சரி பண்ணுகிறார் என்பதுதான் கதை. இப்படியான அழகான கற்பனைதான் சர்கார்.”

“சுந்தர் பிச்சையை சந்திச்சீங்களா?”

“இல்லை. படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்பே சந்திக்கணும்னு நினைச்சோம். ஷூட்டிங் நெருங்கிட்டதால ரிலீஸுக்குப் பிறகு  விஜய் சாரோட போய் சந்திக்கலாம்னு இருக்கோம்.”

“இதில் விஜய்யும் வில்லன்தான்!”

“ ‘கத்தி’யில் கார்ப்ரேட் கம்பெனிதான் பெரிய வில்லன். ஆனால், இதில் அப்படியே நேரெதிர். கார்ப்பரேட் கம்பெனியின் சி.இ.ஓ-தான் ஹீரோ. முரண்பாடா இருக்கே?”

“ஆமாம், படத்தில் விஜய் சாரும் வில்லன்தான். கார்ப்பரேட்ல இருந்து வர்றவரை நான் நல்லவரா சித்திரிக்கலை. அந்தக் கதாபாத்திரமும் வில்லன்தான்.    உண்மையைச் சொல்லணும்னா, ஆரம்பத்தில் இந்தப் படத்துக்கு நாங்க வெச்ச தலைப்பு, ‘வில்லாதி வில்லன்.’ சத்யராஜ் சார் படத் தலைப்பு. வில்லனா தமிழகம் வந்த ஹீரோ, எந்தப் புள்ளியில் மனம் மாறினார் என்பதுதான் சுவாரஸ்யம். இரண்டு டைனோசர்கள் சண்டைபோட்டாலும் ஒரு டைனோசர் ஜெயிக்கணும்னு நினைப்போம். அதுதான் படம் பார்க்கிற நமக்கும் சுவாரஸ்யம்.”

“ஒரு டைனோசர் இவர்னா, இன்னொரு டைனோசர் யார்?”


“அது, நாம சமூகத்தில் பார்த்துட்டிருக்கிற பல விஷயங்களின் கலவை. அது தனிப்பட்ட மனிதர்கள் கிடையாது. பல பிரச்னைகளின் தொகுப்புனு சொல்லலாம். அந்தத் தொகுப்பில்தான் ராதாரவி, பழ.கருப்பையா இருவரும் முக்கியமான கேரக்டர்கள்.”

“ராதாரவி, பழ. கருப்பையா இருவரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவங்க. இதில் வில்லன்கள். இரண்டு பேரும் என்ன பண்ணியிருக்காங்க?”

“இதில் விஜய்யும் வில்லன்தான்!”

“ராதாரவி சாருக்கு சினிமா, அரசியல் ரெண்டும் நல்லா தெரியும். சொன்னதும் டக்குனு புடிச்சிகிட்டு பண்ணிடுவார். பழ.கருப்பையா சார் நல்ல இலக்கியவாதி, அரசியல்வாதி. ஆனால், அவருக்கு சினிமா மேக்கிங் அந்தளவுக்குத் தெரியாது. ஆனா, புத்திசாலி. இரண்டுபேரும் சேர்ந்து வர்ற காட்சிகளை எடுக்கும்போது தனிப்பட்ட முறையில் ஜாலியாவும் இருக்கும், கொஞ்சம் பதற்றமாவும் இருக்கும். ஏன்னா, ராதாரவி சார், பழ.கருப்பையா சாரை ஃப்ரெண்ட்லியா கிண்டல் பண்ணிட்டிருப்பார். எங்கே அவர் டென்ஷனாகி ஷூட்டிங்குக்கு பிரச்னை வந்துடுமோனு எங்களுக்கு பயமா இருக்கும். இருவரையும் என் அசிஸ்டென்ட்ஸ் தனித்தனியா டீல் பண்ணிட்டிருப்பாங்க.”

“கீர்த்தி சுரேஷ், வரலட்சுமின்னு இரண்டு ஹீரோயின்கள் இருக்காங்க. எப்படி நடிச்சிருக்காங்க?”

“அரசியல், அரசியல் சூழ்ச்சி, தந்திரம், பழிவாங்கல்னு கதை பரபரப்பா போயிட்டு இருக்கும். இதுக்கிடையில கலர்ஃபுல் பெண் முகங்களும் வேணும். இல்லைனா என்னடா, படம் முழுக்க ஆம்பளைங்களா இருக்காங்கன்னு நினைச்சிடுவாங்க. அந்த ஃப்ரேமை அழகுபடுத்தணும். ஆனா, ‘நடிகையர் திலகம்’ல கீர்த்தி சுரேஷைப் பார்த்தபிறகு, ‘ஐயய்யோ இவ்வளவு திறமையான நடிகையை அழகுக்காக மட்டுமே பயன்படுத்தியிருக்கோமே’னு பெரிய வருத்தம். நிச்சயம் ஃப்யூச்சர்ல கதையைத் தாங்குற கேரக்டர் தர்றேன்னு சொல்லியிருக்கேன். வரலட்சுமி கேரக்டர்ல உள்ள சர்ப்ரைஸ் என்னன்னு திரையில பார்க்கும்போது புரியும். ஒரு ஆளைப்பார்த்து சிரிச்சா பரவாயில்லை, ஆனா இப்பல்லாம் யோகிபாபு பேரைப் பார்த்தாலே சிரிக்க ஆரம்பிச்சிடுறாங்க. அந்தளவுக்கு ரசிகர்களை ட்யூன் அப் பண்ணி வெச்சிருக்கார். ஒவ்வொரு சீனிலும் ஒரு சின்னக் கலகலகப்பு மூட் கொடுக்கணும். அதுக்கு யோகிபாபு கியாரண்டி.”

“இதில் விஜய்யும் வில்லன்தான்!”

“இந்தி ‘கஜினி’ படத்துக்குப்பிறகு இதில் மறுபடியும் ரஹ்மானுடன் இணையுறீங்க. எப்படி இருந்தது இந்த அனுபவம்?”

“ரஹ்மான் சார்ட்ட கதை, சூழல் சொல்லிடணும். அதை உள்வாங்கிட்டு ஏதாவது ஒரு விமானப் பயணத்திலோ, தனிமைப்பொழுதிலோ யோசிச்சு மொத்தம் 10 டியூன் கொடுப்பார். அதை நான்கைந்து முறை கேட்டு நமக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுத்துக்கணும். இதுதான் ப்ராசஸ். இந்த ஸ்கிரிப்ட்ல ஒரு இடம் மியூசிக்கலா இருக்கும். அதுக்கு அவர் தந்ததுதான் ‘ஒரு விரல் புரட்சி’ டியூன். அதைக் கேட்டுட்டு, ‘சார் இந்த டியூன்ல ஒரு ரெவெல்யூஷன் இருக்கு. இதை வேறொரு இடத்துல பயன்படுத்திக்கிறேன்’னு சொன்னேன். அப்படித்தான் ஒரு விரல் புரட்சி உருவாச்சு. ‘சிம்டாங்காரனை’ப் பொறுத்தவரை, சில சென்னை வார்த்தைகளை வெச்சுப் பாட்டு பண்ணலாம்னு ரஹ்மான் சார் சொன்னார். ‘வெறும் சென்னை வார்த்தைகள் மட்டும்’னு சொன்னது பாடலாசிரியர் விவேக். அது, கேட்டதும் புரியாது. போகப்போக ஹிட்டாகும்னு தெரியும். அதனாலதான் அதை முதல்ல வெளியிட்டோம். இந்த ஆல்பத்தில் சிம்டாங்காரன்தான் எனக்குப் பிடிச்ச பாட்டு. பாட்டுக்கு என்ன அர்த்தம்ங்கறதை, படத்துல யோகிபாபுவுக்கு ஹீரோ சொல்றப்ப நீங்களும் புரிஞ்சுக்குவீங்க!”

“படத்தில் டெக்னிக்கலா வேறென்ன ஸ்பெஷல்?”

“இந்தக் கதைக்கு உள்ளது உள்ளபடியான ஒளிப்பதிவு தேவைப்பட்டுச்சு. சுருக்கமா சொல்லணும்னா டாக்குமென்ட்ரி பிரசன்டேஷன். ‘அங்கமாலி டைரீஸ்’ பார்த்துட்டு கிரீஷ் கங்காதரன்ட்ட பேசினோம். நான் நினைச்ச ஃபீலை அப்படியே கொண்டுவந்திருக்கார். 

“இதில் விஜய்யும் வில்லன்தான்!”

நாம எடுக்கும்போது எல்லாமே நல்லா இருக்குன்னு நினைச்சுதான் எடுத்திருப்போம். ‘இந்த இடத்துல இதைச் சொல்ல நீங்க முயற்சி பண்ணியிருக்கீங்க. ஆனா அது கன்வே ஆகலை. நீங்க நினைக்கிறமாதிரி கன்வே ஆகணும்னா இந்தமாதிரியான விஷயங்கள் தேவை’னு கேட்பார். அவர் கேட்டதை ஷூட் பண்ணிக் கொடுத்தா, அழகா மேட்ச் பண்ணுவார். அதனாலதான் ஸ்ரீகர் பிரசாத் சாரை நாங்க வெறும் எடிட்டர்னு சொல்றது கிடையாது. அவர் ஒரு ஸ்கிரிப்ட் டாக்டர்.”

“இந்திய சினிமாவில் முதல் 100 கோடி வசூலைத் தொட்ட படத்தின் இயக்குநர், நின்னு நிதானமா 12 படங்கள் எடுத்திருக்கீங்க. திரும்பிப் பார்த்தா எப்படி இருக்கு?”

“2001-ல் முதல் படம் இயக்கினேன். இன்னைக்கு 18 வருஷமாச்சு. விடாப்பிடியாவும் கவனமாவும் இருப்பதுதான் என்னைத் தக்கவெச்சிருக்குன்னு நினைக்கிறேன். என் வேலைக்குள்தான் பொழுதுபோக்கைத் தேடிப்பேனே தவிர, தனியா தேடிப்போனது இல்லை. என் மனைவி, குழந்தைகள் இரண்டு பேர்தான் என் உலகம். இந்தப் பயணத்துல நான் கத்துக்கிட்டதுன்னா, நம்மை நாமே மிகைப்படுத்திக் கற்பனை பண்ணிக்கிட்டு திமிரா இருக்கக் கூடாது. ஏன்னா அதுதான் நம்மை நேசிக்கிறவங்களை நம்மகிட்ட இருந்து விலக்கும். இது நிரந்தரமில்லாத உலகம். அதுல சினிமா என்பது இன்னும் நிரந்தரமில்லாதது. இங்க வெற்றி என்பது கையில இருக்கிற ஐஸ்க்ரீம் மாதிரி. உருகுறதுக்குள்ள அடுத்த ஐஸ்கிரீமை வாங்கியாகணும். இங்க எவ்வளவோ பேர் வந்துட்டாங்க. இன்னும் எவ்வளவோ பேர் வரப்போறாங்க. அதுல நாமளும் பயணமாகுறோம், அவ்வளவுதான். அந்த ஒவ்வொரு நிமிஷத்தையுமே பொறுப்போடவும் பயத்தோடவும் நகர்த்திட்டே போறதாலதான் என் வேலையும் என் சினிமாவும் தொடருதுன்னு நம்புறேன்.”

“இதில் விஜய்யும் வில்லன்தான்!”“அந்தக் கள்ளக்குறிச்சி கிராமத்துப்பையன் இன்னமும் உள்ளுக்குள்ள இருக்கான்னு நினைக்கிறேன்...’’

“உண்மைதான். அது போகவே மாட்டேங்குது. அது போகவே கூடாதுன்னும் ஆசைப்படுறேன். அன்னைக்கு சுவர் ஏறிக்குதிச்சி ரஜினி சார் படம் பார்க்கப்போன நாள்கள் ஆழ்மனசுல இருக்கிறதாலதான் என்னால ஹீரோயிசம் இல்லாம எதையுமே சொல்லமுடியலை. நான் இன்னமும் அப்படியேதான் இருக்கேன். தரையில உட்கார்ந்துதான் சாப்பிடுறேன். அந்த கிராமத்தானை வெளியேற்ற நான் முயற்சி பண்ணவும் இல்லை. அந்த கிராமத்தான் மனசுதான் ‘சர்கார்’ மாதிரியான படங்களைப் பண்ணவைக்குதுன்னு நம்புறேன்.”

“விஜயகாந்த் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் ரொம்பவே ஸ்பெஷல் மனிதர். அவரை அடிக்கடி சந்திப்பது உண்டா?”

“வருஷாவருஷம் பிறந்தநாள் அன்னைக்கு சந்திச்சிடுவேன். நிகழ்ச்சிகள்ல பார்க்கும்போது பேசுவேன். அப்படி சமீபத்துல ஒரு கல்யாண வீட்ல பார்த்தேன். அவரை அங்க எதிர்பார்க்கவே இல்லை. என் மனைவி, குழந்தைகளை அவரோட கால்ல விழ வைத்து ஆசீர்வாதம் வாங்கவெச்சாங்க. அவர் போனபிறகு, ‘சிங்கம் மாதிரி இருந்த கேப்டன், இப்படி இருக்காரே’னு நினைச்சு, கண் கலங்கிட்டேன். நிச்சயம் எல்லாம் சரியாகி மீண்டு வருவார். அப்படிப்பட்ட மனிதரைப் பார்ப்பது ரொம்ப அரிது.”

“அடுத்து எப்ப இந்திப் படம் டைரக்ட் பண்ணுறீங்க. பாலிவுட் ஹீரோக்களோட தொடர்புல இருக்கீங்களா?”


“சல்மானும் நானும் படம் பண்ணினதில்லை. ஆனா இருவருக்குள்ளும் நல்ல நட்பு இருக்கு. திடீர்னு அவரே போன் பண்ணி, ‘என்ன பண்ணிட்டு இருக்கீங்க’ம்பார். ‘உங்களை வெச்சு படம் பண்ணலாம்னு ஐடியாவுல இருக்கேன்’ம்பேன். ‘பண்ணலாம்’பார். ‘எப்ப சார்’னு கேட்டா, ‘அடுத்த வாரம் ஆரம்பிக்கலாம்’ம்பார். ‘என்ன சார் காமெடியா’னு கேட்டா, ‘அப்ப அடுத்த வாரம் உன் டேட் கிடைக்காதா’ம்பார். இப்படி நேரடியாவும் இடைப்பட்ட ஆள்கள் மூலமாவும் பேசுவாங்க. எவ்வளவு பெரிய ஹீரோவா இருந்தாலும் மியூச்சுவலா நாலு மாசம் காத்திருக்கலாம்.  ஆனா, அங்க ஒவ்வொரு ஹீரோவும் இரண்டு படங்களைக் கையில வெச்சிருக்காங்க. ரெண்டு வருஷம் காத்திருக்கணும். எனக்கு அவ்வளவு பொறுமை இல்லை. ஆனா, கஜினி, ரமணா, துப்பாக்கின்னு என் படங்களையே அங்க ரீமேக் பண்ணின நான் இனி ரீமேக் பண்ணக்கூடாதுங்கிறதுல தெளிவா இருக்கேன். இல்லைனா இந்நேரம் கத்தியின் இந்தி ரீமேக்கை அங்க இயக்கிட்டிருந்திருப்பேன். தேதிகள் செட் ஆச்சுனா அமீர்கான், சல்மான்கூட படம் பண்ண வாய்ப்பு இருக்கு. பார்ப்போம்.”

“உதவி இயக்குநர்களுக்கும் உங்களுக்குமான உறவு அலாதியானது. அப்படி என்ன ஸ்பெஷல் கனெக்ட் அது?”

“நீ என்னடா சாதிச்சிட்டனு யாராவது கேட்டாங்கன்னா, ‘எங்கேயும் எப்போதும்’ சரவணன், ‘மான் கராத்தே’ திருக்குமரன், ‘இமைக்கா நொடிகள்’ அஜய் ஞானமுத்து, ‘ரங்கூன்’ ராஜ்குமார், ‘கணிதன்’ டி.என்.சந்தோஷ், ‘அயோக்யா’ மோகன், ‘அரிமாநம்பி’ ஆனந்த்சங்கர், ‘வத்திக்குச்சி’ கின்ஸ்லின்... இப்படி என் பசங்களோட வளர்ச்சியைத்தான் பெருமையா சொல்லுவேன். அவங்களை இயக்குநர் ஆக்குறதைவிட நமக்கு வேறென்ன பெரிய வேலை இருக்கு? ‘இந்த ஹீரோகிட்ட சொல்லுங்க சார்... அந்தக் கம்பெனியில நீங்க சொன்னா அந்த வேலை வேகமா நடக்கும்’னு கேட்பாங்க. சொல்லிடுவேன். மத்தபடி இயக்குநர் ஆவது என்பது அவங்களோட தனித்திறமை.  எவ்வளவோ மரம் இருக்கு, ஒரு மரத்துமேலயா இன்னொரு மரம் வளருது?”

“ ‘சர்கார்’ படம் என் கதை’னு ஒருவர் புகார் தந்திருக்கிறார். உங்கள் படங்கள்மீது தொடர்ந்து வரும் இதுமாதிரியான புகார்களை எப்படி எடுத்துக்குறீங்க?”

“இந்தப் புகாரை எனக்கு சம்பந்தப்பட்ட யாராவது சொல்லியிருந்தால்கூட ஓரளவுக்கு கன்சிடர் பண்ணலாம். ஆனால், எனக்குச் சம்பந்தமே இல்லாத ஒருவர் இதைச் சொல்லும்போது, நாளிதழ்ச் செய்திகள், நாட்டு நடப்புகள், அதன் பாதிப்புன்னு இந்தமாதிரியான கதைகளை யார் வேணும்னாலும் பண்ணலாமே. அந்த பாதிப்பின் அடிப்படையில நான் ஒரு படம் எடுத்திருக்கேன். என் படம் இன்னும் வரவேயில்லை. அதுக்குள்ள இது என் கதைனு சொல்றதே மிகப்பெரிய திருட்டுத்தனம். பரபரப்பான மீடியா சூழல்ல குறுகிய காலத்துல புகழ் பெறணும்ங்கிறதுதான் அவங்களோட நோக்கம். ‘இது என் கதைனு சொல்லி என்கிட்ட 10 லட்சம் கேட்டவங்களை, 20 லட்சம் கோர்ட்டுக்குச் செலவு பண்ணி ஜெயிச்சிருக்கேன். இனி இந்தமாதிரியான புகார்களுக்கு வருத்தப்படுற மாதிரியும் இல்லை, இந்த ஆட்களை விடுற மாதிரியும் இல்லை.”

“அடுத்து ரஜினியை இயக்குறீங்கன்னு தகவல்...”

“ரஜினி சாரை சந்திச்சேன். கிட்டத்தட்ட முழுக் கதையையுமே சார்ட்ட சொல்லியிருக்கேன். நாங்க படம் பண்றோம் என்பது மியூச்சுவலா இருக்கு. அது அடுத்த கட்டத்துக்கு இனிமேல்தான் போகணும். அது நடக்கும் என்ற நம்பிக்கையில நானும் ஒரு ரசிகனா காத்துட்டிருக்கேன்.”

ம.கா.செந்தில்குமார்