Published:Updated:

ஆஃப்பாயில்... அட்டூழியம்... அட்ரா சக்க கலாய்!- 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
ஆஃப்பாயில்... அட்டூழியம்... அட்ரா சக்க கலாய்!- 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' விமர்சனம்
ஆஃப்பாயில்... அட்டூழியம்... அட்ரா சக்க கலாய்!- 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' விமர்சனம்

ரு ஆஃபாயிலால் பூனையை புலியாகவும் கரப்பானை காண்டாமிருகமாகவும் சில்வண்டை சிங்கமாகவும் மாற்ற முடியும் என ஆஃபாயில் தியரி பேசுகிறது, 'சிலுக்குவார்பட்டி சிங்கம்'.

திண்டுக்கல் சிலுக்குவார்பட்டியைச் சேர்ந்தவர், போலீஸ் கான்ஸ்டபிள் சத்தியமூர்த்தி. ஒற்றை ஓடைக் கூட உடைக்க தெம்பில்லாத, சரியான பயந்தாங்கோளி போலீஸ்!. தான் உண்டு தன் பாட்டி உண்டு என இருக்கும் இடம் தெரியாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார். சென்னையில் காவல் அதிகாரியையே நடுரோட்டில் வைத்துப் போட்டுத்தள்ளும் பிரபல ரௌடி, சைக்கிள் சங்கர். அவனைக் கைது செய்ய ஒட்டுமொத்த காவல்துறையும் தேடி அலைகிறது. டோனி, நிலக்கோட்டை நாராயணன், பாஸ்கி, ராஜீ, ஷேர் ஆட்டோ சந்திரன், கனகா என எண்ணற்ற பாத்திரங்களை இடைப்புள்ளியாய் வைத்து, சத்தி - சங்கர் இருவரையும் காலமென்பது கோலம் போட்டுக் கோர்த்துவிடுகிறது. பின், நடப்பதெல்லாம் கலர்ஃபுல் காமெடி களேபரம்! ரேஸிங், சேஸிங், மாறுவேடம், உருட்டுக்கட்டை, சாக்கு மூட்டை என சுந்தர்.சி, எழில் பாணியில் கிச்சு கிச்சு மூட்டுகிறது, திரைக்கதை.
 

கான்ஸ்டபிள் சத்தியமூர்த்தியாக, விஷ்ணு விஷால். 'ராட்சசனி'ல் சீரியஸ் போலீஸாக கெத்து காட்டியவர், 'சிலுக்குவார்பட்டி சிங்க'த்தில் வெத்து போலீஸாக சிரிப்பு காட்டியிருக்கிறார். காமெடி படங்களுக்கென அவர் கண்டுபிடித்து வைத்திருக்கும் அதே பழைய எக்ஸ்பிரெஷன்கள்தான் என்றாலும், ரசிக்க வைக்கிறது. வில்லனுக்குப் பயந்து விதவிதமான வேடங்களில் தலைமறைவாய்த் திரிவது, சரவெடி. அதிலும், குடுகுடுப்பைக்காரர் வேடம் போட்டு, பூம்பூம் எருமையோடு திரியும் இடம் அல்டிமேட்!. முறைப்பெண் ராஜீயாக, ரெஜினா கஸான்ட்ரா. அழகாய் இருக்கிறார்! வில்லன் சைக்கிள் சங்கராக, சாய்ரவி. படத்தில் ஒரு ஆஃபாயிலைத் தட்டிவிட்டு அவர் படும் பாடு! ஸ்டேஷன் லாக்கப்பில் சாய்ரவி அடைபட்டுத் தவிக்கும் ஒவ்வொரு ஃப்ரேமும் குபீர் சிரிப்பு. அவரின் வலது கை டோனியாக, யோகிபாபு. பல இடங்களில் காமெடி கவுன்டர்களைத் தெறிக்கவிட்டிருக்கிறார். வேற லெவல் தல! லிவிங்ஸ்டன், மன்சூர் அலிகான், ஆனந்தராஜ், கருணாகரன், லொள்ளு சபா மனோகர், மாரிமுத்து, வடிவுக்கரசி, சௌந்தரராஜா... என எல்லா நடிகர்களும் நிறைவான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். 'கனகா' எனும் கௌரவ வேடத்தில் ஓவியா. சார்... ஓவியா சார்!

லாஜிக், மேஜிக் எல்லாம் தூக்கி பரணில் போட்டுவிட்டுப் படத்தைப் பார்த்தால், வாய்விட்டு சிரிக்கலாம். இல்லையேல், வாய்விட்டு அழுதாலும் ஆச்சரியமில்லை. கல்யாண வீடு, உருட்டுக்கட்டை, சாக்கு மூட்டை, டாடா சுமோ, ஜில்ஜில் பார், செல்போன் ஆதாரம், மாறுவேடம் என எல்லாமும் ஏற்கெனவே பார்த்துவிட்டதுதான். அடுத்தடுத்து என்ன நடக்கப்போகுமென ஆண்டாண்டு காலமாய் நாம் பார்த்துப் பதியவைத்த திரைக்கதை, அச்சு பிசகாமல் அப்படியே நகர்கிறது. ஆனால், அந்தப் படங்களில் இருக்கும் சுவாரஸ்யமான நீளமான  காமெடிகள் இதில் மிஸ்ஸிங். பாட்ஷா, கேப்டன் பிரபாகரனை வைத்து ஆனந்த ராஜுக்கும், மன்சூர் அலிகானுக்கும் பிடித்திருக்கும் ரீவண்ட் காட்சிகள் மட்டும் செம.  லேடீஸ் டாய்லெட்டுக்குள் தொடர்ச்சியாக ஆண்கள் நுழைந்துகொண்டே இருப்பதையெல்லாம் இன்னுமா காமெடியா என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.  

லியோன் ஜேம்ஸின் பின்னணி இசையில் புதுமை என்று ஒன்றுமில்லை. அதேநேரம் குறை என்றும் ஒன்றுமில்லை. பாடல்கள் ஓகே! ஜெ.லெக்‌ஷமனின் ஒளிப்பதிவிலும் அதேதான். புதுமை என்று ஒன்றுமில்லை, அதேநேரம் குறை என்றும் ஒன்றுமில்லை. ரூபனின் எடிட்டிங் சேஸிங் காட்சிகளில் கவனிக்கவைக்கிறது. மற்றபடி, அதிலும் புதுமை என்று... நீங்களே கம்ப்ளீட் செய்துகொள்ளுங்கள்!

காமெடி மட்டும் கைவிட்டிருந்தால், ஜவ்வாக இருந்திருக்கும் படம். காமெடி போதுமான அளவு கைக்கூடி வந்ததால், ஜிவ்வென்னு இருக்கிறது இந்த, 'சிலுக்குவார்பட்டி சிங்கம்'.

'அடங்கமறு' படத்தின் விமர்சனத்தை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்..! 

அடுத்த கட்டுரைக்கு