Published:Updated:

``தங்கத்தில் எம்.ஜி.ஆர் சிலை... முதல்வர் காரில் நானும் ஜானகி அக்காவும்!" - விஜயகுமாரி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``தங்கத்தில் எம்.ஜி.ஆர் சிலை... முதல்வர் காரில் நானும் ஜானகி அக்காவும்!" - விஜயகுமாரி
``தங்கத்தில் எம்.ஜி.ஆர் சிலை... முதல்வர் காரில் நானும் ஜானகி அக்காவும்!" - விஜயகுமாரி

"தங்கத்தில் முக்கால் அடி உயரத்திலான எம்.ஜி.ஆர் சிலை செய்யப்பட்டது. அதை என் கையால் காணிக்கையாகச் செலுத்தச் சொல்லிட்டார், எம்.ஜி.ஆர்."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

றைந்த முதல்வர் எம்.ஜி.ஆருடைய 31-ம் ஆண்டு நினைவு தினம், இன்று (24.12.18) அனுசரிக்கப்படுகிறது. எம்.ஜி.ஆர் உடன் பழகிய நினைவுகளைப் பகிர்கிறார், நடிகை விஜயகுமாரி.

``எம்.ஜி.ஆர், நடிகர் சங்கத் தலைவராக இருந்த தருணம். ராயப்பேட்டையில் இருந்த அவர் வீட்டில் சங்கக் கூட்டம் நடந்துச்சு. என் கணவரும் (எஸ்.எஸ்.ராஜேந்திரன்) நானும் அக்கூட்டத்தில் கலந்துகொண்டோம். அப்போதுதான் அண்ணன் எம்.ஜி.ஆர் அவர்களை முதன் முதலில் பார்த்தேன். பிற்காலத்தில் அவர் குடும்பத்துக்கும் எங்க குடும்பத்துக்கும் பாசப் பிணைப்பு அதிகமாச்சு. `நாடோடி மன்னன்', `காவல்காரன்' உள்ளிட்ட சில படங்களில் எம்.ஜி.ஆர் உடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு எனக்கு வந்துச்சு. ஆனால், `எஸ்.எஸ்.ஆர் என் உடன்பிறவா தம்பி; என் உடன்பிறவா தங்கை விஜயகுமாரியுடன் நான் ஜோடியா நடிக்கிறது சரிவராது'னு அவர் மறுத்துட்டார். ஆனாலும், அவரும் நானும் அண்ணன், தங்கையா பல படங்களில் நடிச்சோம். 

பொங்கல் பண்டிகையின்போது, சென்னை நேரு ஸ்டேடியத்தில் கிரிக்கெட் போட்டி நடக்கும். அதைப் பார்க்க, என்னையும் வரச்சொல்லிக் கூப்பிட்டாங்க. நான் எம்.ஜி.ஆர் வீட்டுக்குப் போனேன். அப்போ முதல்வரா இருந்த எம்.ஜி.ஆர் தன் அரசாங்க காரில் என்னையும் ஜானகி அக்காவையும் வரச்சொல்லிட்டார். நாங்க போக வேண்டிய சாதாரண காரில் அவர் வந்தார். ஸ்டேடியத்தில் இருந்த போலீஸார், அரசியல்வாதிகள் எல்லாம் முதல்வர் வந்துட்டாருனு ஓடிவந்து எங்க காரை திறந்தவங்களுக்கு அதிர்ச்சி... பின்னாடியே சாதாரண கார்ல, எம்.ஜி.ஆர் எளிமையா வந்திறங்கினார். அறிஞர் அண்ணாவின் வளர்ப்பு மகன்கள் திருமணத்தில் கலந்துகொண்ட என் கணவரையும் என்னையும் தன் வீட்டுக்கு அழைத்தார், எம்.ஜி.ஆர். அவர் வீட்டில் விருந்து முடிந்து கிளம்பும்போது, `என் தங்கை முதன் முதல்ல என் வீட்டுக்கு வந்திருக்கு'னு சொல்லி வெள்ளித்தட்டில் பத்தாயிரம் பணத்துடன் எனக்குப் பொங்கல் சீர் செய்தார்" என்று பழைய நினைவுகளை சுவாரஸ்யமாகச் சொல்கிறார், விஜயகுமாரி.

``எம்.ஜி.ஆர், கடிகாரப் பிரியர். ஒருமுறை அவருக்குக் கைக்கடிகாரம் ஒன்றைப் பரிசாகக் கொடுத்தேன். `கடிகாரம் வாங்கினா, கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் சண்டை வரும். இந்தக் கடிகாரம் வேண்டாம்'னு மறுத்தார். நான் விடாமல் வலியுறுத்த, அவர் வீட்டுல நாங்க இருவரும் ஓட்டம்பிடிச்சு வலம் வந்தோம். ஒரு கட்டத்துல, ஜானகி அக்கா அந்தக் கடிகாரத்தை வாங்கிக்கிட்டாங்க. அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து வந்ததுக்குப் பிறகு, தன் உருவத்தைத் தங்கத்தில் செய்து அதை மூகாம்பிகை கோயிலில் காணிக்கையாகச் செலுத்துவதாக எம்.ஜி.ஆர் வேண்டியிருந்தார். தங்கத்தில் முக்கால் அடி உயரத்திலான எம்.ஜி.ஆர் சிலை செய்யப்பட்டது. அதை என் கையால் காணிக்கையாகச் செலுத்தச் சொல்லிட்டார், எம்.ஜி.ஆர். ஜானகி அக்கா, நான் உட்பட சிலர் மூகாம்பிகை கோயிலுக்குப் போனோம். அந்தச் சிலையை நான்தான் உண்டியலில் போட்டேன். பிறகு ஒருமுறை, எம்.ஜி.ஆர்-க்கு முகாம்பிகை போட்டோ ஒன்றைக் கொடுத்தேன். அதை இறக்கும்வரை தன் வீட்டில் எம்.ஜி.ஆர் பத்திரமா வெச்சிருந்தார்.

எம்.ஜி.ஆர் அண்ணனுக்கு உடல்நிலை சரியில்லாத போது, மூன்று முறை என் வீட்டிலிருந்து திருவேற்காடு கோயிலுக்கு நடைபாதையாகப் போய் அவருக்காக வேண்டினேன். அவர் மறைந்த தருணத்துலயும் அவர் வீட்டிலும், ராஜாஜி ஹாலிலும்தான் இருந்தேன். நாங்க இருவரும் உடன் பிறவா அண்ணன் தங்கையாகப் பழகினோம். ஆனால், ஒருநாள்கூட அவர்கிட்ட ஒரு சின்ன உதவியைக்கூடக் கேட்டதில்லை. அக்கா இருந்தவரை ராமாவரம் தோட்டத்துக்கு அடிக்கடிப் போவேன். பிறகு நிலைமை ரொம்ப மாறிப்போயிடுச்சு" என்கிறார் விஜயகுமாரி, வருத்தத்துடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு