Published:Updated:

`நான் கேட்ட 3 வது நிமிடத்தில் ரூ.25 லட்சம் அறிவித்தார்!' - விஜய் சேதுபதியால் நெகிழ்ந்த போஸ் வெங்கட்

`நான் கேட்ட 3 வது நிமிடத்தில் ரூ.25 லட்சம் அறிவித்தார்!' - விஜய் சேதுபதியால் நெகிழ்ந்த போஸ் வெங்கட்
`நான் கேட்ட 3 வது நிமிடத்தில் ரூ.25 லட்சம் அறிவித்தார்!' - விஜய் சேதுபதியால் நெகிழ்ந்த போஸ் வெங்கட்

ஜா புயலின் பாதிப்பிலிருந்து டெல்டா மாவட்டங்கள் இன்னும் மீளவில்லை. வீடுகள், விவசாயப் பயிர்கள், தென்னை மரங்கள், கால்நடைகள் என அனைத்தையும் இழந்து வாழ்வாதாரத்துக்கு வழிதெரியாமல் திணறி வருகின்றனர் அப்பகுதி மக்கள். புயல் பாதித்த பகுதிகளில் அரசின் நிவாரண உதவிகள் போதுமானதாக இல்லை. தனி நபர்களும் தனியார் அமைப்புகளும் செய்கின்ற உதவியால் ஓரளவு நிலைமை சீரடைந்து வருகிறது.

அந்தவகையில், நடிகர் போஸ் வெங்கட்டும் கஜா புயல் நிவாரணப் பணிகளுக்காக 11 நாள்கள் நேரடியாகக் களமிறங்கி உழைத்தார். பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கான உதவிகளைத் தற்போதும் செய்து வருகிறார். அவரிடம் பேசினோம்.

கஜா புயல் சேதங்களை நேரில் சென்று பார்த்தீர்கள். எந்த அளவுக்குச் சேதங்கள் இருந்தன?

என் சொந்த ஊர் அறந்தாங்கியும் கஜா புயலுக்குத் தப்பவில்லை. என்ன செய்வதென்று தெரியவில்லை. உடனே தேவையான பொருள்களை வாங்கிக்கொண்டு ஊருக்குச் சென்றோம். அங்கு சென்ற பிறகுதான் புயலின் பாதிப்பை அறிய முடிந்தது. நிறைய சேதங்கள். எளிதில் மீள முடியாத சேதங்கள். ஊரில் உள்ளவர்களுடன் சேர்ந்து முதல்கட்ட உதவிகளைச் செய்தோம். புயலின் தாக்கத்தை அறிந்து விஜய் சேதுபதி, கார்த்தி உள்ளிட்ட நடிகர்களையும் என் நண்பர்களையும் தொடர்பு கொண்டேன். அவர்கள் அனைவரும் கேட்ட உடனேயே உதவி செய்தனர். மக்கள் இருளில் இருப்பதை அறிந்து என் நண்பர் ஒருவர் 25,000 ரூபாய்க்கு டார்ச் லைட் வாங்கிக் கொடுத்தார். இப்படி ஏராளமான பேர் மனிதாபிமான உதவிகளைச் செய்ய முன்வந்தனர்.

சென்னை பெருவெள்ளத்தின்போதும் வர்தா புயலின்போதும் நற்பணிகளில் ஈடுபட்டேன். நான் எப்போதும் உதவி செய்பவன்தான் என்றாலும், சொந்த ஊர் பாதிப்பு அடைந்துவிட்டால் கூடுதலாகவே இதயம் துடிக்கத்தானே செய்யும். என்னால் முடிந்ததை என் ஊருக்குச் செய்தேன். சுமார் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு நிவாரணப் பொருள்களைத் திரட்டிக் கொடுத்துள்ளேன். இது ஓரளவுக்கு மனநிம்மதியைக் கொடுத்துள்ளது. 

இன்னும் புயலின் பாதிப்புகளிலிருந்து மக்கள் முழுமையாக மீளவில்லை. அதனால், தற்போதும் நிவாரணப் பொருள்களை அனுப்பி வருகிறோம். காவிரி கடைமடைப் பகுதி மக்களுக்கு இன்னும் முழுமையான நிவாரணம் கிடைக்கவில்லை. அவர்களுக்கும் எங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறோம். அரசின் நிவாரணம் என்பது முதலாளிகளுக்கானதாகவே இருக்கிறது. தென்னை மரங்களை இழந்தவர்களுக்கும் பயிர்களை இழந்தவர்களுக்கும் மட்டுமே அரசு இழப்பீட்டுத் தொகையை அறிவித்துள்ளது. ஆனால், இதை நம்பி வாழும் ஏராளமான கூலித் தொழிலாளிகள் உள்ளனர். அவர்களின் மறுவாழ்வுக்கு அரசு எந்த உதவியும் செய்யவில்லை. இந்த ஏழைத் தொழிலாளிகள் தங்களது கௌரவமான வாழ்க்கையை இழந்துவிட்டார்கள். 

விஜய் சேதுபதி செய்த உதவிகளைச் சொல்லுங்கள்?

விஜய் சேதுபதி என் நண்பர் என்பதைத் தாண்டி இரக்கக் குணம் உடையவர். ஒரு நடிகர் மாதிரி பழகாமல் சகோதரரைப்போல பழகக்கூடியவர். புயலின்போது அவர் வெளிநாட்டில் இருந்தார். அவருக்குப் போன் செய்தேன். `இவ்வாறு நடந்திருக்கிறது, மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துவிட்டார்கள்' என எடுத்துக் கூறினேன். வெளிநாட்டில் இருந்தாலும் மக்களின் சூழ்நிலையை உணர்ந்து, நான் கேட்ட அடுத்த மூன்றாவது நிமிடத்தில் 25 லட்சம் ரூபாயை அறிவித்தார். இப்போதுகூட தன் ரசிகர் மன்றம் மூலம் விவசாயிகளுக்குத் தென்னை மரக் கன்றுகளை வழங்கி வருகிறார். அதை அவர்களே விவசாய நிலத்தில் நட்டு வருகின்றனர். அந்தப் பொறுப்பை என்னிடம் கொடுத்துள்ளார். இதேபோல் நடிகர் கார்த்தியும் என் சிறந்த நண்பர். இவரும் ஏராளமான உதவிகளைச் செய்துள்ளார். 

சரி... தவம் படத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் நடித்துள்ளீர்கள். அவருடன் பழகிய அனுபவத்தைச் சொல்லுங்கள்? 

அண்ணன் என அழைப்பதற்கு நூறு சதவிகிதம் தகுதியானவர் சீமான். மிகவும் இனிமையானவர். மிகச் சிறந்த அரசியல்வாதி, சிந்தனையாளர். அவரும் கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகத் தீவிரமாக உழைத்தார். அரசியலைப் பொறுத்தவரை ஸ்டாலினும் சீமான் அண்ணனும் மக்கள் முன்னேற்றத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் தி.மு.க, அ.தி.மு.க-வைத் தவிர்த்து பொதுக்கட்சிகளாக இருப்பவை கம்யூனிஸ்ட் கட்சிகள். கம்யூனிஸ்ட் கட்சிகள் தமிழகத்தில் பெரிய வளர்ச்சி அடையவில்லை. என்னைப் பொறுத்தவரை கம்யூனிஸ்ட் கட்சிகளின் இடத்தை, தற்போது சீமான் நிரப்பி வருகிறார். 

உங்கள் குருநாதர் `மெட்டி ஒலி' திருமுருகன் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகிவருகிறாரே? 

ஆமாம். பார்த்தேன். அவர் மிகப்பெரிய திறமைசாலி. நல்ல மனிதர். அவர் புகழ் அடைவதில் எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி. ஆனால், சமூக வலைதளங்களில் அவர் உருவத்தைக் கொண்டு கிண்டல் செய்வதை ஏற்க முடியவில்லை.