Published:Updated:

``அரசியல்வாதி ஆனபிறகுதான் என் கணவருக்குச் சறுக்கலா?!" - `கிரேஸ்' கருணாஸ்

கு.ஆனந்தராஜ்

``என்னைக் `குண்டு, குண்டா, பஸ், லாரி'னு கிண்டல் பண்றாங்க. ஆனா, அவை காமெடிக்காக மட்டுமே சொல்லப்படுது. அப்படிச் சொன்ன பிறகு, போட்டியாளர்கள் எங்கிட்ட வந்து ரொம்பவே மன்னிப்புக் கேட்பாங்க."

``அரசியல்வாதி ஆனபிறகுதான் என் கணவருக்குச் சறுக்கலா?!" - `கிரேஸ்' கருணாஸ்
``அரசியல்வாதி ஆனபிறகுதான் என் கணவருக்குச் சறுக்கலா?!" - `கிரேஸ்' கருணாஸ்

விஜய் டிவி `கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ்' நிகழ்ச்சியில் நடுவராக இருப்பவர், பாடகி கிரேஸ் கருணாஸ். இந்நிகழ்ச்சியில் கிரேஸின் உருவத்தை மையப்படுத்தி அதிக அளவில் கிண்டலான பேச்சுகள் எழுகின்றன. இதை கிரேஸ் எப்படி எடுத்துக்கொள்கிறார்? அவரிடம் பேசினோம்...

`` `கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ்' நிகழ்ச்சியில் நடுவர் பயணம் குறித்து..."

``பொதுவாகவே எனக்கு நகைச்சுவை ரொம்பப் பிடிக்கும். பெரிசா எந்த விஷயத்துக்கும் கலங்காம, மகிழ்ச்சியா இருப்பேன். விஜய் டிவியில, `சிரிப்புடா' நிகழ்ச்சியின் ஒரு எபிசோடில் சிறப்பு விருந்தினரா போயிருந்தேன். அந்நிகழ்ச்சியை ரொம்பவே சிரிச்சு ரசிச்சேன். பிறகு, `கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ்' நிகழ்ச்சியைத் தொடங்கும்போது, என்னை நடுவராகக் கேட்டாங்க. `திருவிளையாடல் ஆரம்பம்' உட்பட சில படங்களில் சின்னச் சின்ன காமெடி ரோல்ல நடிச்சிருக்கேன். பாடகியான நாம, ஒரு காமெடி நிகழ்ச்சியில் நடுவரா போகலாமாங்கிற சின்னத் தயக்கம் இருந்தாலும், உற்சாகமா களமிறங்கிட்டேன். ஆனா, இந்நிகழ்ச்சி பெரிய அளவுல ஹிட்டாகிடுச்சு. எனக்கும் பெரிய ரீச் கொடுத்திருக்கு."

``நிகழ்ச்சியில உங்க உடலமைப்பை வெச்சு நிறைய கிண்டல் பண்றாங்க. அதை எப்படி எடுத்துப்பீங்க?"

``இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில பெரிய எதிர்பார்ப்பு இருக்கு. அதுக்காக ரொம்ப மெனக்கெட்டு புதுப்புது காமெடி ஸ்கிரிப்ட் தயார் பண்றாங்க. அதில் என்னைக் `குண்டு, குண்டா, பஸ், லாரி'னு கிண்டல் பண்றாங்க. ஆனா, அவை காமெடிக்காக மட்டுமே சொல்லப்படுது. அப்படிச் சொன்ன பிறகு, போட்டியாளர்கள் எங்கிட்ட வந்து ரொம்பவே மன்னிப்புக் கேட்பாங்க. உண்மையிலயே ஒருத்தர் நம்மை காயப்படுத்தணும்ங்கிற எண்ணத்தில் பேசினால்தானே நாம கோபப்படணும். ஆனா, காமெடிக்காக என்னைக் கிண்டல் பண்றதால, நானும் காமெடியா எடுத்துகிட்டு உடனே சிரிச்சுடுவேன். உடனே அந்தக் கிண்டலையெல்லாம் மறந்துடுவேன். அதை நிகழ்ச்சியிலேயே பார்க்கலாம். மக்களும் ரசிக்கிறாங்க. மத்தபடி, சீரியஸா ஒருத்தரோட உடல் மொழியை யாரும் காயப்படுத்தாதீங்க." 

``பின்னணிப் பாடகியாக உங்க பாடல்களை இப்போதெல்லாம் கேட்க முடியவதில்லையே..."

`` `திண்டுக்கல்லு திண்டுக்கல்லு' உட்பட சில பாடல்களைப் பாடியிருக்கேன். இப்போ பாடகர்களின் எண்ணிக்கை அதிகரிச்சுகிட்டே இருக்கு. இளைஞர்கள் நிறைய பேர் இசைத்துறைக்கு வர்றாங்க. மக்களின் ரசனையும் மாறிட்டே வருது. அதனால எனக்கும் வாய்ப்புகள் வருவது குறைஞ்சுடுச்சு. நானும் பின்னணிப் பாடகியாக பெரிய பிரேக்குக்காக வெயிட் பண்ணிட்டிருக்கேன். விரைவில் ஒரு ஆல்பம் ரிலீஸ் பண்ணும் யோசனையும் இருக்கு. மத்தபடி நான் வழக்கம்போல, மேடை இசைநிகழ்ச்சிகளில் பாடிட்டுதான் இருக்கேன்."

``ரெஸ்டாரன்ட்டைக் கவனிக்கிற பொறுப்புகளையும் பார்த்துக்கிறீங்களா?"

``ஆமாம்! இசையைப் போலவே, சமையலும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். டிவி குக்கரி நிகழ்ச்சிகளில் அதிகம் வேலை செய்திருக்கிறேன். சமையல் ஆர்வத்தினால்தான், ஒரு ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்க முடிவெடுத்தேன். என் கணவர் ஊக்கப்படுத்தவே, திண்டுக்கல் நகரத்துல ரெஸ்டாரன்ட்டைத் தொடங்கினோம். இந்த பிசினஸ் பயணமும் நல்லா போகுது. குடும்பம், நடுவர் மற்றும் இசைப்பணிகளைத் தவிர, மற்ற நேரங்களில் ரெஸ்டாரன்ட்டைக் கவனிக்கிற பொறுப்பைச் செய்றேன்." 

``உங்க கணவர், காமெடி நடிகராகப் புகழுடன் இருந்தார். ஹீரோ மற்றும் அரசியல்னு வந்த பிறகுதான் அவருக்குச் சறுக்கல் ஏற்பட்டதா நினைக்கிறீங்களா?"

``வடிவேலு, விவேக் ஆகியோருக்கு அடுத்தபடியா, என் கணவர் முன்னணி காமெடியனாக உயர்ந்தார். இந்நிலையில கதை நாயகனாக அவருக்கு வாய்ப்புகள் வந்துச்சு. `திண்டுக்கல் சாரதி', `அம்பாசமுத்திரம் அம்பானி'னு சில படங்கள்ல ஹீரோவா நடிச்சார். அப்படங்களும் ஓரளவுக்கு நல்லாதான் ஓடிச்சு. பிறகு, அரசியலிலும் இறங்கினார். இந்த இரண்டு தளங்களிலும் அவர் ஏற்ற, இறக்கங்களைப் பார்த்தார். இது எல்லோருக்கும் இயல்பானதுதான். இதனாலதான் அவருக்கான காமெடி வாய்ப்புகளிலும், மற்ற சினிமா வாய்ப்புகளிலும் சறுக்கல் ஏற்பட்டுச்சுனு சொல்லமாட்டேன். அரசியலுக்கு வந்த பிறகு, சினிமாவுல கவனம் செலுத்த அவருக்கு நேரம் பத்தலை. இதுதான், அவரை சினிமாவில் அதிகம் பார்க்க முடியாமல் போனதுக்குக் காரணம். என் கணவர் எப்போதும் சினிமாவை மறக்க மாட்டார். இப்போ பழையபடி காமெடி ரோல்ல கவனம் செலுத்த ஆரம்பிச்சுட்டார். இனி, அவரை சினிமாவில் தொடர்ந்து பார்க்கலாம்" என்று புன்னகைக்கிறார், கிரேஸ் கருணாஸ்.