Published:Updated:

``டபுள் தமாக்கா ரஜினி, சிங்கிள் விஜய், மிஸ் ஆயிட்டீங்களே தல!" - #tamilmovies2018 #Rewind2018

ப.தினேஷ்குமார்

ரஜினி, கமல், விஜய், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ்... இந்த ஆண்டு வெளியான டாப் ஸ்டார்களின் படங்கள் குறித்த ஒரு ரீவைன்ட் கட்டுரை. #Rewind2018 #TamilCinema2018

``டபுள் தமாக்கா ரஜினி, சிங்கிள் விஜய், மிஸ் ஆயிட்டீங்களே தல!" - #tamilmovies2018 #Rewind2018
``டபுள் தமாக்கா ரஜினி, சிங்கிள் விஜய், மிஸ் ஆயிட்டீங்களே தல!" - #tamilmovies2018 #Rewind2018

புதுமுகங்களின் எழுச்சி, அப்படைப்புகளுக்குக் கிடைத்த வரவேற்பு என ஓரளவு ஆரோக்கியமானதாகவே இருந்தது, இந்த வருட தமிழ் சினிமா. 2018-ல் சாதாரண நட்சத்திரங்களைக் கொண்டு உருவான `மேற்குத் தொடர்ச்சி மலை', `பரியேறும் பெருமாள்' போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்க்க, டாப் ஸ்டார்களின் நடிப்பில் என்னென்ன படங்கள் வந்தன என்பதை இந்தத் தொகுப்பில் காணலாம்.

ரஜினி:

கடந்த வருடம் (2017) ரஜினியின் படங்கள் ஏதும் வெளிவராத நிலையில், வட்டியும் முதலுமாக இந்த வருடம் இரண்டு படங்களைத் தந்திருக்கிறார், ரஜினி. `காலா' திரைப்படத்தில் தாராவி மக்களின் நில அபகரிப்புக்கு எதிராகப் போராடுபவராக மிரள வைத்தவர், `குமாரு, யாரு இவரு?’ போன்ற காட்சிகளில் `வின்டேஜ்' ரஜினியாக ரகளை செய்யவும் தவறவில்லை. `எந்திரனி'ல் சிட்டியாக வசீகரித்த ரஜினி, `2.0' படத்தில் `3.0' குட்டியாக அடாவடி செய்தார். இந்தியாவிலேயே கறுப்பு - வெள்ளை, அதன்பின் கலர், பின்னர் அனிமேஷன்... தற்போது 3டி என சினிமாவின் நான்கு பரிமாணங்களிலும் நடித்த ஒரே நடிகர் ரஜினி மட்டும்தான்! ஃபென்டாஸ்டிக் ரஜினி!

கமல்:

`பிக் பாஸ் 2', மக்கள் நீதி மய்யம் கட்சி... என இந்த வருடம் முழுக்கவே கமல் பிஸியோ பிஸி. ஒரு கேமியோ தவிர்த்து, இரண்டு வருடங்களாக படங்கள் ஏதும் வெளிவராத நிலையில், `விஸ்வரூபம் 2' மூலம் அதிரடி என்ட்ரி கொடுத்தார், கமல். முதல் பாகத்தில் சொல்லப்படாத பல கேள்விகளுக்கு, தனது பாணியில் தெளிவாக `விஸ்வரூபம் 2'வில் பதில் தந்தார், `இயக்குநர்' கமல்.

விஜய் : 

கடந்த வருடம் `பைரவா', `மெர்சல்' என இரண்டு ரன்களைத் தட்டிய விஜய், இந்த வருடம் `சர்கார்' என்ற சிங்கிளோடு நின்றுவிட்டார். கதை சர்ச்சை முதல் கலவையான விமர்சனம் வரை... பல பிரச்னையில் சிக்கியது, `சர்கார்'. கதையும் ரிலீஸுக்கு முன்பே தலைப்புச் செய்திகளில் தலையைக் கொடுத்துவிட, விஜய் என்ற பிராண்ட்தான் படத்தை ஓரளவுக்குக் காப்பாற்றியது.  

விக்ரம்:   

ரஜினி, கமலைப் போல கடந்த வருடம் படங்கள் ஏதும் வெளிவராத நிலையில், 2018-ல் இரண்டு படங்கள் தந்தார், விக்ரம். பழைய கதை, பழைய திரைக்கதையாக இருந்தாலும் `ஸ்கெட்ச்' படத்தில் தனது கதாபாத்திரத்தை நிறைவாகச் செய்திருந்தார். ஆக்‌ஷன் படங்களிலேயே `கல்ட்' படமாகப் பார்க்கப்படுகிற `சாமி'யின் இரண்டாம் பாகத்தில் ஆறுச்சாமி அவரது மகன் ராம்சாமி என இரண்டு கதாபாத்திரத்தை ஏற்றார், விக்ரம். 

சூர்யா:

கடந்த மூன்று வருடங்களாக வருடத்துக்கு ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார், சூர்யா. `ஸ்பெஷல் 26' படத்தின் ரீமேக்கான `தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படத்தில் அக்‌ஷய் குமாரின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். தனது தம்பி கார்த்தியை வைத்து `கடைக்குட்டி சிங்கம்' படத்தைத் தயாரித்தவர், அதில் நடிகர் சூர்யாவாகவே ஒரு காட்சியில் வந்துபோனார். 

சிம்பு :

கடந்த வருடம் போலவே, இந்த வருடமும் ஒரு படத்தில் மட்டும் நடித்திருக்கிறார், சிம்பு. கூடுதலாக `காற்றின் மொழி' படத்தில் ஒரு காட்சியில் வந்துபோனார். சில தோல்விகளுக்குப் பிறகு `செக்கச் சிவந்த வான'த்தில் எத்திராஜாக கம்பேக் தந்திருந்தார் சிம்பு. தொடர் தோல்விகளால் துவண்டிருந்த சிம்பு ரசிகர்களுக்கு, ஏன் சிம்புவுக்கேக்கூட இந்தப் படம் புது தெம்பைத் தந்தது.

தனுஷ்:

தனுஷின் ஹாலிவுட் அறிமுகம், நீண்டநாள் கனவுப்படமான `வடசென்னை' ரிலீஸ், மாமனார் ரஜினி படத்தைத் தயாரித்தது... என 2018-ஆம் ஆண்டு தனுஷுக்கு மிகச்சிறந்த வருடமாக அமைந்தது. கோலிவுட்டிலிருந்து பாலிவுட்டுக்குச் சென்றவர், அப்படியே ஒரு யூ-டர்ன் போட்டு, `தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர்' படத்தின் மூலம்  ஹாலிவுட்டுக்கும் பறந்தார். ரஜினியின் வெறித்தனமான ரசிகரான தனுஷ், இந்த வருடம் ரஜினியை வைத்து `காலா' படத்தைத் தயாரித்திருந்தார். அன்புவாக, `வடசென்னை'யில் பிரமிக்க வைத்தவர், `மாரி 2'வில் ஜாலி ரவுடியாக இறங்கி அடித்துக் கலக்கினார். 

கார்த்தி:

கடந்த இரண்டு வருடங்களாக, வருடத்துக்கு இரண்டு படங்கள் என நடித்த கார்த்திக்கு, இந்த வருடம் `கடைக்குட்டி சிங்கம்' மட்டுமே! விவசாயத்தின் அவசியத்தையும், குடும்ப உறவுகளின் மகத்துவத்தையும் பேசிய இப்படத்தில், விவசாயி குணசிங்கம் கேரக்டரில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார், கார்த்தி. `பிரியாணி', `தோழா' என `ஏ' சென்டரிலேயே மையம் கொண்டிருந்த கார்த்தியை மீண்டும் பி, சி சென்டர்களில் கொண்டு சேர்த்தது, இப்படம்.

விஷால்:

கடந்த வருடம் போலவே இந்த வருடமும் `இரும்புத்திரை', `சண்டக்கோழி 2' என இரண்டு படங்களைத் தந்திருக்கிறார், விஷால். அர்ஜூனுடன் இணைந்து நடித்த `இரும்புத்திரை' திரைப்படம் டேட்டா யுகத்தில் நடக்கும் டிஜிட்டல் க்ரைம்களை வெள்ளித்திரையில் வெளிச்சம்போட்டுக் காட்டியது. தனக்குப் பெரும் திருப்புமுனையைக் கொடுத்த `சண்டக்கோழி' படத்தின் இரண்டாம் பாகத்தில், முதல் பாகத்தில் பார்த்தது போலவே ஆக்‌ஷன் காட்சிகளில்  ஸ்கோர் செய்தார், விஷால்.

ஜெயம் ரவி:

கடந்த வருடம் போலவே இந்த வருடமும், `டிக் டிக் டிக்', `அடங்கமறு' என இரண்டு படங்களைத் தந்திருக்கிறார், ஜெயம் ரவி. `மிருதன்' ஹிட்டுக்குப் பிறகு மீண்டும் `டிக் டிக் டிக்' படத்தில் இணைந்தது ஜெயம் ரவி - இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் கூட்டணி. ஜெயம் ரவியின் மகன் ஆரவ், `டிக் டிக் டிக்' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தமிழ் சினிமாவில் போலீஸ் கதாபாத்திரங்கள் சமீபகாலமாக ஜெயம் ரவிக்கு நன்றாகவே பொருந்திப்போகிறது. `தனி ஒருவன்', `போகன்' படங்களைத் தொடர்ந்து, `அடங்கமறு' படத்திலும் அது நன்றாகவே வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. 

விஜய் சேதுபதி :

வழக்கம்போலவே, இந்த வருடமும் அதிக படங்களில் நடித்த கதாநாயகன் விஜய் சேதுபதிதான்!. `ஒரு நல்லநாள் பாத்துச் சொல்றேன்', `ஜூங்கா', `செக்கச் சிவந்த வானம்', `96' மற்றும் `சீதக்காதி' ஆகிய படங்களில் கதாநாயகனாகவும், `இமைக்கா நொடிகள்' மற்றும் `டிராஃபிக் ராமசாமி' படங்களில் கேமியோ கதாபாத்திரத்திலும் நடித்தார், விஜய் சேதுபதி. 2010-ல் `தென்மேற்குப் பருவக்காற்'றில் கதாநாயகனாக அறிமுகமானவருக்கு, சமீபத்தில் வெளியான `சீதக்காதி' 25-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகராக மட்டுமல்லாமல், இந்த வருடம் `ஜூங்கா', 'மேற்குத் தொடர்ச்சி மலை' ஆகிய படங்களைத் தயாரித்திருந்தார், விஜய் சேதுபதி.

சிவகார்த்திகேயன் :

இந்த வருடம் `சீமராஜா' படத்தின் மூலம் சீமராஜா - கடம்பவேல் ராஜா என இரண்டாவது முறையாக இரட்டை வேடங்களில் (ரஜினி முருகன்) நடித்தார், சிவகார்த்திகேயன். `கனா' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்ததோடு நில்லாமல், நண்பரின் நீண்டநாள் கனவுக்காக தயாரிக்கவும் செய்தார். நிகழ்ச்சித் தொகுப்பாளராக, நடிகராக, பாடகராக... எனப் பல பரிமாணங்கள் எடுத்தவர், இந்த வருடம் நண்பர்களுக்காகப் பாடலாசிரியர், தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கவும் தவறவில்லை.

இந்த வருடம் பெரும்பாலான நட்சத்திர நடிகர்கள் குறைந்தபட்சம் ஆளுக்கு தலா ஒரு படமாவது தந்துவிட்டார்கள். அந்தப் பட்டியலில் அஜித் மட்டும் மிஸ்ஸிங். மிஸ் யூ தல!