Published:Updated:

“பெண் இயக்குநர் என்ற அடையாளம் வேண்டாம்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“பெண் இயக்குநர் என்ற அடையாளம் வேண்டாம்!”
“பெண் இயக்குநர் என்ற அடையாளம் வேண்டாம்!”

“பெண் இயக்குநர் என்ற அடையாளம் வேண்டாம்!”

பிரீமியம் ஸ்டோரி

ம்மையும் குழந்தைகளாகவே உணரவைத்த படம் ‘பூவரசம் பீப்பீ.’ அந்தப்படத்தின் இயக்குநர் ஹலீதா ஷமீம், தன் இரண்டாவது படத்துடன் தயாராகியிருக்கிறார்.

“பெண் இயக்குநர் என்ற அடையாளம் வேண்டாம்!”

“ ‘பூவரசம் பீப்பீ’ படத்துக்குப் பிறகு அதே பசங்களையும், ‘பாபநாசம்’ படத்துல கமலுக்கு ரெண்டாவது பொண்ணா நடிச்ச குழந்தையையும் வெச்சு ‘மின்மினி’ன்னு ஒரு படம் ஆரம்பிச்சேன். முதல் பாதியை 2015-லேயே எடுத்துட்டேன். படத்தின் இரண்டாம் பாதிக்கு அந்தப் பசங்க வளர்ந்த மாதிரி இருக்கணும். அதுக்காக நாலு வருஷம் காத்திருந்து எடுப்போம்னு நினைச்சேன். நடுவுல சில வாய்ப்புகள் வந்தது. அதுல நான்கு கதைகள் கொண்ட படத்தில் ஒரு கதை மட்டும் நான் பண்ற மாதிரி இருந்தது. அதை முடிச்சுட்டு, மத்த கதைகளை வேற மூன்று இயக்குநர்கள் பண்ணுவாங்கன்னு எதிர்பார்த்தேன். யாரும் பண்ணலை. என்கிட்டேயே வெவ்வேற கதைகள் இருந்தது. அதான், நானே பண்ணிட்டேன்.

ரெண்டு மூணு சந்திப்புகள்ல யாருன்னே தெரியாத ரெண்டுபேர் ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையில எந்தளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்துறாங்க, அவங்களுக்குள் இருக்கிற ஆத்மார்த்தமான அன்பு எப்படி வெளிப்படுது... இதுதான் படத்தோட களம். முதல் கதைக்கு, ‘டர்டில்ஸ்’னு பெயர் வெச்சிருக்கேன். இந்தப் பகுதில, சில சந்திப்புகள்ல பழக்கமான ரெண்டு முதியவர்களுக்குள் வெளிப்படுற அன்பைக் காட்டியிருக்கேன். வயது முதிர்ச்சி, தனிமை... இந்த மாதிரியான தடைகளையெல்லாம் தாண்டி அவங்க எப்படி மீண்டும் சேர்றாங்கன்னு கதை சொல்லப்போறேன். அடுத்த கதைக்கு ‘பிங்க் பேக்’னு பெயர். குப்பை போடுறவங்களுக்கும், குப்பை அள்றவங்களுக்கும் இடையேயான அன்பை இதுல சொல்றேன். 

“பெண் இயக்குநர் என்ற அடையாளம் வேண்டாம்!”

‘காக்காக் கடி’ மூணாவது கதை. ‘காலா’ மணிகண்டன் - நிவேதிதா சதீஷ் ஜோடியா நடிச்சிருக்காங்க. கால்டாக்‌ஸில ஷேர் ரைடு போற ரெண்டுபேருக்குள்ள வெளிப்படும் அன்பு, இதோட களம். காக்காவுக்கும் ஒரு கனெக்‌ஷன் இருக்கும். நகர நெரிசல்ல பல விஷயங்களைக் கடந்து போறதுமட்டுமில்லாம, சில விஷயங்களை நின்னு கவனிப்போம்ல... அதுதான், ‘காக்காக் கடி’. கடைசி கதைக்கு, ‘ஹே அம்மு’ன்னு பெயர். சமுத்திரக்கனி - சுனைனா நடிச்சிருக்காங்க. திருமணமாகி 12 வருடமா கணவன் மனைவி உறவுல இருந்தும், ரெண்டுபேரும் சம்பந்தமே இல்லாத மாதிரி வாழ்வாங்க. அவங்களுக்குள்ள எப்படி நேசம் உருவாகி, சந்தோஷமான வாழ்க்கைக்கு நகர்த்துதுன்னு சொல்றேன். இந்த நாலு இனிப்பான விஷயங்களும் சில்லு சில்லா சேர்ந்ததுதான்  ‘சில்லுக் கருப்பட்டி’யா உருவாகியிருக்கு.

மனோஜ் பரமஹம்ஸா, அபிநந்தன், விஜய் கார்த்திக், யாமினி... ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொருத்தர் ஒளிப்பதிவு பண்ணியிருக்காங்க. பிரதீப் குமார் மியூசிக் பண்ணியிருக்கார். படத்துல ஒரே ஒரு பாட்டு இருக்கு. அதையும் பிரதீப்பே பாடியிருக்கார்.  

“பெண் இயக்குநர் என்ற அடையாளம் வேண்டாம்!”


 
சமுத்திரக்கனி கேரக்டர்ல வேற ஒருத்தர் நடிக்கவேண்டியது. கடைசி நேரத்துல முடியாமப் போகவே, ஷூட்டிங்கிற்கு முந்தைய நாள்தான் அவர்கிட்ட விஷயத்தைச் சொன்னேன். ‘எப்போ, எங்கே வரணும்’னு கேட்டு, அவரே ஃபிளைட் டிக்கெட் புக் பண்ணி வந்துட்டார். மூணு குழந்தைக்கு அம்மாவா நடிக்கணும்னு சொன்னப்போ மட்டும் சுனைனா கொஞ்சம் ஜெர்க் ஆனாங்க. ஒரு படத்துல அம்மாவா நடிச்சுட்டா ‘அம்மா நடிகை’னு முத்திரை குத்திடுவாங்களேன்னு பயந்தாங்க. நான் கதையைப் புரியவெச்சு நடிக்க வெச்சேன்.”

“ஒரு பெண் இயக்குநரா உங்களுக்கான இடம் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க?”  

“முதல்ல `பெண் இயக்குந’ரா இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறேன். இந்தக் கேள்வியையே, ‘ஓர் இயக்குநரா உங்களுக்கான இடம் எப்படி இருக்கணும்?’னுதான் கேட்கணும். நான் இயக்குநர் ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன், ஆகிட்டேன். இதுல ஆண், பெண் பாகுபாடு எல்லாம் கிடையாது.  பெண் இயக்குநர், குழந்தைகள் பட இயக்குநர், காதல் பட இயக்குநர்னு எனக்கு எந்தத் தனி அடையாளமும் இருக்கக் கூடாது. இயக்குநரா எனக்கான அடையாளமா, என் படங்கள் இருந்தால் போதும்.”

உ.சுதர்சன் காந்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு