Published:Updated:

தன்மானம் அவமானம் வெகுமானம் - 4

தன்மானம் அவமானம் வெகுமானம் - 4
பிரீமியம் ஸ்டோரி
தன்மானம் அவமானம் வெகுமானம் - 4

தன்மானம் அவமானம் வெகுமானம் - 4

தன்மானம் அவமானம் வெகுமானம் - 4

தன்மானம் அவமானம் வெகுமானம் - 4

Published:Updated:
தன்மானம் அவமானம் வெகுமானம் - 4
பிரீமியம் ஸ்டோரி
தன்மானம் அவமானம் வெகுமானம் - 4

பிரபலங்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்த, கண்ணீரும் புன்னகையும்  கலந்த சம்பவங்களைப் பகிரும் பகுதி இது. இந்த வாரம் இயக்குநர் பாரதிராஜா

தன்மானம்

ரு விதை வளர்வதற்கு நல்ல நிலம் அமைய வேண்டும். நிலத்தைத் தோண்டி  விதையை உள்ளே வைக்க வேண்டும். செடியாக வெளி வரும்போது ஆடு மாடுகளிட மிருந்தும், இயற்கைச் சீற்றங்களிலி ருந்தும் போராடித்  தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும். அதுபோல வளர்ந்து வந்தவன்தான் இந்த பாரதிராஜா.  

தன்மானம் அவமானம் வெகுமானம் - 4

45 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை இப்போது நினைத்துப்பார்க்கிறேன்.  தேனாம்பேட்டையில் நான், இளையராஜா, பாஸ்கர், கங்கை அமரன் எல்லாம் ஒரே அறையில் தங்கி எதிர்கால வாழ்க்கைக்காகப் போராடிக்கொண்டிருந்தோம்.  அப்போதெல்லாம் ஆங்கிலமொழி கற்றுக்கொள்ளும் ஆர்வத்தில் தினமும் அமெரிக்கத் தூதரக நூலகத்துக்குச் செல்வேன். நாள் முழுக்க வாசிப்பில் கழியும். முடிந்ததும் தேனாம்பேட்டைக்குப் பேருந்தில் திரும்புவேன். அப்படி ஒரு நாள் சபையரில் இருந்து தேனாம்பேட்டைக்குச் செல்லும் ஒரு பேருந்தில் ஏறும்போது, கூட்டம் பேருந்தில் அலைமோதியது. குறிப்பாக வேலைக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் பெண்கள் அதிகமாக இருந்தனர். என் பையில் 50 காசுகள் மட்டும் இருந்தது. அதை வைத்துக்கொண்டு 10 பைசாவுக்கு பஸ் டிக்கெட் வாங்க வேண்டும் மீதமுள்ள 40 காசில் டீயும் சிகரெட்டும் என்று திட்ட மிட்டிருந்தேன். கண்டக்டரிடம் ``டென் பைசா டிக்கெட் ப்ளீஸ்’’ என்று கேட்டேன். அவரோ 20 காசு டிக்கெட்டைக் கிழித்து நீட்டினார். எனக்கு அதிர்ச்சி. ‘ஏம்பா நான் உன்னிடம்  பத்துக் காசு டிக்கெட்தானே கேட்டேன்?’’ என்றேன். அவரோ ‘`நீ எதுக்கு இங்கிலீஷுல கேட்டே?’’ என்றார். 

‘`ஏம்பா டிக்கெட் என்பதே இங்கிலீஷ்தானே’’ என்று நான் பதில் சொல்ல இருவருக்கும் இடையில் சண்டை மூண்டுவிட்டது. சுற்றிநின்ற இளம்பெண்கள் அத்தனை பேரும் என்னை வேடிக்கை பார்க்க எனக்கு உயிரே போய்விடும் போலிருந்தது. ஒரு கட்டத்தில் ‘`உன்னால் என்னடா செய்ய முடியும் முட்டாள்...’’ என்று கண்டக்டர் பேச ‘`அப்படியெல்லாம் பேசாதே, ரொம்பத் தப்பு பண்றே’’ என்று நான் பொறுமையாக   எச்சரித்துக்கொண்டே இருந்தேன். `‘அப்படித்தான்டா சொல்வேன், என்ன செய்வே?’’ என்று அவர்  மீண்டும் என்னைச் சூடேற்றினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தன்மானம் அவமானம் வெகுமானம் - 4

என் உச்சகட்டக் கோபத்தை அடக்கிக் கொண்டு  ‘`நீ சொல்லித்தான் பாரேன்’’ என்றேன். அவர் வேண்டுமென்றே மறுபடியும் சொல்ல அடுத்த நொடி  கைகளை ஓங்கி அவர் கன்னத்தில் பளார் என அறைந்துவிட்டேன். கண்டக்டர் கையில் இருந்த பேக், டிக்கெட், அனைத்தும் கீழே சிதறி விழுந்தன. உடனே கண்டக்டர் பதற்றமாக டபுள் விசில் அடித்துக்கொண்டே இருந்தார்.

அடுத்த சில நிமிடங்களில் பஸ் பாண்டிபஜார்  போலீஸ் ஸ்டேஷன் முன்பு நின்றபோதுதான் டபுள் விசிலின் அர்த்தம் புரிந்தது.  கண்டக்டர் பரபரப்பாக உள்ளே நுழைந்து என்மீது புகார் கொடுத்தார்.

தன்மானம் அவமானம் வெகுமானம் - 4என்னை நிமிர்ந்து பார்த்த சப் இன்ஸ்பெக்டர்  ‘பஸ்ஸில்  என்ன நடந்தது?’ என்று விசாரித்தார். ‘`நான் சினிமாவுல அசிஸ்டென்ட் டைரக்டரா வேலை பாக்குறேன். என்னை கண்டக்டர் எல்லோர் முன்னாடியும் அசிங்கமா திட்டினார். நான்  எவ்வளவோ சொல்லியும் கேட்கலை. அதனால ஆத்திரத்துல அடிச்சுட்டேன்’’ என்று உண்மையை மறைக்காமல் சொன்னேன்.

`‘நீங்கள் அடிச்சதா சொன்னா கேஸ் வேறமாதிரி ஆகிவிடும். அதனால, கையைத் தூக்கும்போது கண்டக்டர் மேல பட்டுடுச்சுன்னு சொல்லிடு’’ என்று எனக்கு ஆதரவாக ஆலோசனை சொன்னார் அவர். நானும் அப்படியே சொன்னேன். அப்போதைக்கு அந்தப் பிரச்னை அத்தோடு முடிந்தது என நினைத்து அறைக்குத் திரும்பிவிட்டேன்.

அந்தக் காலகட்டத்தில் என் அப்பா தேனியிலிருந்து என் செலவுக்காக மாதம் 15 ரூபாய் மணியார்டர் அனுப்புவார். என் அறையில் இருந்த இளையராஜாவின் அண்ணன் பாஸ்கரிடம் “அப்பா மணியார்டர் அனுப்பினால்  வாங்கி வை” என்று சொல்லிவிட்டு வெளியே போய்விட்டேன். நான் வீட்டுக்குத் திரும்பியபோது, ஒரு வெள்ளைக் கவரை நீட்டினான் பாஸ்கர். அந்தச் சமயத்தில் கடிதம் எழுதி கவருக்குள் போட்டு நடுவில் பணத்தை மறைத்து அனுப்பும் பழக்கம் இருந்தது. ஒருவேளை அந்த மாதிரி அப்பா அனுப்பியிருக்கிறாரோ என்று ஆசையோடு கவரைப் பிரித்த எனக்கு அதிர்ச்சி. 

பாண்டிபஜார் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து   என்னை நீதிமன்றத்தில் ஆஜராகச் சொல்லி சம்மன் அனுப்பியிருந்தனர். ஸ்டேஷனில் விசாரித்தால் அந்த சப் இன்ஸ்பெக்டர் வேறு இடத்துக்கு மாற்றலாகிவிட்டார். தனியாக வக்கீல் வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற விவரமெல்லாம் தெரியாமல் துணைக்கு பாஸ்கரை அழைத்துக்கொண்டு கோர்ட்டுக்குப் போனேன். கூண்டில் ஏறிநின்ற என்னைப் பார்த்த நீதிபதி ‘நீ நிரபராதியா, குற்றவாளியா?’  என்று கேட்டார். நான் நிரபராதி என்று அவரிடம் வாதிட்டேன். நீதிபதி என்ன புரிந்துகொண்டாரோ, எனக்கு 30 ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.

நான் ஐம்பது காசுக்கே அல்லாடிக்கொண்டிருந்த நேரத்தில் 30 ரூபாய்க்கு எங்கே போவது? மாலைக்குள் பணத்தைக் கொடுக்க வில்லையென்றால் ஜெயிலுக்குப் போக வேண்டியதுதான். என்ன செய்வது என்று யோசிக்க... ஒரு பட ரெக்கார்டிங்கில் இளையராஜா வாத்தியம் வாசிக்கச் சென்றது நினைவுக்கு வந்தது. என்னைக் கோர்ட்டை விட்டு வெளியே அனுப்ப மறுத்துவிட்டனர். இளையராஜாவைப் பார்க்க பாஸ்கரை அனுப்பினேன். இளையராஜாவுக்குத் தரவேண்டிய சம்பளப் பணமான 30 ரூபாயை முன்கூட்டியே வாங்கிவந்தார் பாஸ்கர். அதைக்கொண்டுதான் அன்று கோர்ட்டில் அபராதம் செலுத்தி வெளியே வந்தேன். அன்று என் தன்மானத்தைக் காத்தது இளையராஜாவின் அந்த முப்பது ரூபாய்தான்!

அவமானம்

ஓர் இயக்குநருக்கு சண்டை அமைப்பு, இசையறிவு, நடன அசைவு என்று எல்லாமே தெரிந்திருக்க வேண்டும். அவன்தான் உண்மையான இயக்குநன்.

‘கிழக்குச் சீமையிலே’ படத்துக்கான க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியைப் படமாக்கிக்கொண்டி ருந்தோம். வழக்கமாக கிராமத்துக்குள் சண்டை வரும்போது, ஜம்ப் பண்ணியெல்லாம் யாரும் சண்டைபோட மாட்டார்கள். ஒருவரோடு ஒருவர் கட்டிப்புரண்டு சண்டை போடுவதுதான் இயல்பு. அந்தக்காட்சியை அப்படித்தான் எடுக்க விரும்பினேன். நானே ஒரு பக்கா கிராமத்துக்காரன் என்பதால் என் எண்ணத்துக்கு ஏற்றபடி சண்டைக் காட்சியைப் படமாக்கி முடித்து விட்டேன். 

தன்மானம் அவமானம் வெகுமானம் - 4

சென்னை வந்தவுடன் இங்கே உள்ள ஒரு சினிமா சங்கம் ``எங்களைப் பயன்படுத்தாமல் சண்டைக்காட்சியை பாரதிராஜா எப்படிப் படமாக்கலாம்?’’ என்று என்மீது பாய்ந்தனர். இரண்டு லட்சரூபாய் அபராதத்தொகை கட்டவேண்டும் என்றார்கள். என் சினிமா கரியரில் எனக்கு நேர்ந்த மிகப்பெரிய அவமதிப்பு இது.

``சினிமாவில் சென்டிமென்ட்டுக்கு, சண்டைக்காட்சிக்கு, பாடலுக்கு என்று தனித்தனியாக டைரக்டர்களை வைத்துக்கொண்டா சினிமா ஷூட்டிங்கை நடத்த முடியும்?’’ என்று கேள்வி கேட்டேன்.  எனக்கு ஆதரவு தந்த கலைஞர்களை எல்லாம் ஒன்று திரட்டினேன் ‘ஒரு கலைஞனின் சுதந்திரத்தில் யாரும் தலையிடக் கூடாது?’ என்று போராட்டத்தில் இறங்கினேன்.

என் வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டி போஸ்டர் அடித்து சென்னை முழுக்க ஒட்டி என்னைத் தலைகுனிய வைத்தனர். நிலைமை மோசமானது. ‘`உங்கள்மீது கை வைத்தால் என்ன செய்வீர்கள்?’’ என்று மிரட்டினார்கள்.  `‘கைவைத்துப் பாருங்கள்’’ என்று நானும் பேசினேன்.

முதலமைச்சர் கலைஞர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. கோட்டையில் முதல்வர் அறைக்குச் சென்றேன்.  அங்கே, என்னை எதிர்த்தவர்கள் அமர்ந்திருந்தனர். என்னைப் பார்த்தவுடன் இருக்கையில் அமரச்சொன்னார் முதல்வர். `‘என்னை அவமானப்படுத்தியவர்களோடு நான் உட்காரமாட்டேன்’’ என்று முதல்வரிடம் சொல்லிவிட்டு, என் கையில் இருந்த ஃபைலைத் தூக்கிப்போட்டுவிட்டு, வேகவேகமாக அந்த அறையை விட்டு வெளியேறினேன். 

தன்மானம் அவமானம் வெகுமானம் - 4

அதன்பின்னர் என்னைத் தனியாக அழைத்துப் பேசிய கலைஞர், ‘`பொதுவாழ்க்கையில் இதையெல்லாம் சந்தித்தே ஆகவேண்டும். நான் எவ்வளவு அவமானங்களைச் சந்தித்திருக்கிறேன் தெரியுமா?’’ என்று என்னிடம் அக்கறையாகப் பேசினார். நான் பட்ட அவமானத்துக்கு அது ஆறுதலாக இருந்தது.

வெகுமானம்

‘அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படத்தை நடிகர் சங்கத்தில் இருந்த ப்ரிவ்யூ தியேட்டரில் திரையிட்டேன் அதைக்காண அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் வந்திருந்தார். முழுப்படத்தையும்  பார்த்துவிட்டு வெளிவந்தவர் என்னைப் பார்த்தவுடன் இறுகக்கட்டி அணைத்துக்கொண்டார்.  ‘‘அஞ்சு அண்ணா, பத்துப் பெரியார் செய்ய முடியாத காரியத்தை நீ இந்தப் படத்துல சாதிச்சுக்காட்டியிருக்கே’’ என்று என்னைப் பாராட்டித் தள்ளினார். அதன்பிறகு ‘அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படத்தின் வெற்றிவிழாவில் எம்.ஜி.ஆர் கலந்துகொண்டார். நிகழ்ச்சி முடிந்து நான் கிளம்பப்போகும்போது ‘உன் வீட்டுக்கு எப்படிப் போறே? வா, என் கார்ல கூட்டிக்கிட்டுப் போறேன்’ என்று தன் காரில் என்னை ஏற்றிக்கொண்டு என் வீட்டில்  இறக்கிவிட்டார்.  `‘பாரதி, இந்தச் சின்ன வீட்டிலேயா இருக்கே? சீக்கிரமா பெரிய வீட்டைக்  கட்டிக்கோ. நானே கிரஹபிரவேசத்துக்கு வர்றேன்’’ என்று சொல்லிவிட்டுப் போனார். 

அதற்குப் பிறகு நான் புதிதாக வீடு கட்டினேன்.    எம்.ஜி.ஆர் அமெரிக்க சிகிச்சைக்குப் பிறகு சென்னை திரும்பியிருந்த நேரம். அதற்காக அழைப்பு கொடுக்க ராமாவரம் சென்றேன். ‘`நீங்கள் உங்கள் உடல்நிலையைப் பார்த்துக் கொள்ளுங்கள். வரணும்னு அவசியம் இல்லை. சும்மா அழைப்பு வெச்சிட்டுப் போகத்தான் வந்தேன்’’ என்று சொல்லிவிட்டு வந்தேன்.

என் புதுமனை புகுவிழாவுக்கு வீட்டுக்கு அதிகாலையில் வரவேண்டிய பசுமாடே வரவில்லை. அதற்கு முன்பாக, குளித்து முடித்து பட்டுச்சட்டை பளபளக்க ஐந்தரை மணிக்கே ஜானகி அம்மாளுடன் வீட்டுக்கு வந்துவிட்டார்  எம்.ஜி.ஆர். உடல்நிலை அவ்வளவு மோசமாக இருந்தபோதும் கடைசிவரை இருந்து நிகழ்வைச் சிறப்பித்துவிட்டுத்தான் சென்றார்.

தன் வீட்டின் அடுப்பறைவரை செல்லும் உரிமையை எனக்குக் கொடுத்திருந்தார் எம்.ஜி.ஆர். அந்த அளவுக்கு என்மீது பிரியமாக இருப்பார்.  1987 டிசம்பர் 24-ம் தேதி ராமாவரத்தில் இருந்து அதிகாலை போன் வந்தது. அலறி அடித்துக்கொண்டு ஓடினேன். சினிமாவில் எத்தனையோ படங்களில், எத்தனையோ வேடங்களில் மேக்கப் போட்டு நடித்த எம்.ஜி.ஆரின் தங்க முகத்துக்கு இறுதியாக மேக்கப் போட்டேன்.

தலைக்குக் குல்லா அணிவித்து, கறுப்புக் கண்ணாடி போட்டு, ஜிப்பாவைப் பின்புறம் கிழித்து மாட்டிவிட்டு அவரது இறுதியாத்திரைக்கு அனுப்பியதை இப்போதும் மறக்க முடியாது. அப்படி ஒரு மனிதரோடு நெருக்கமாக வாழ்ந்ததையும் அவருடைய இறுதி யாத்திரை வரை கூடவே இருந்ததையும் என் வாழ்வின் மிகப்பெரிய பாக்கியமாக நினைக்கிறேன்.

எம்.குணா - படங்கள் ப.சரவணகுமார் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism