Published:Updated:

“எல்லாக் கேடுகளுமே சமரசத்திலிருந்துதான் தொடங்குகின்றன!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“எல்லாக் கேடுகளுமே சமரசத்திலிருந்துதான் தொடங்குகின்றன!”
“எல்லாக் கேடுகளுமே சமரசத்திலிருந்துதான் தொடங்குகின்றன!”

“எல்லாக் கேடுகளுமே சமரசத்திலிருந்துதான் தொடங்குகின்றன!”

பிரீமியம் ஸ்டோரி

றிமுகப் படத்திலேயே ‘அற’முகம் காட்டியவர். சமூக அரசியல் பற்றிய தெளிவான பார்வைகொண்டவர், இயக்குநர் கோபி நயினார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியலைத் தன் படைப்புகளின் வழி பேசுவதோடு, களத்திலும் இறங்கி வேலைசெய்கிறவர்.

“எல்லாக் கேடுகளுமே சமரசத்திலிருந்துதான் தொடங்குகின்றன!”

‘` ‘அறம் 2’ பட வேலைகளை ஆரம்பித்துவிட்டீர்கள் போலிருக்கிறதே?’’

‘`ஆமாம். இந்தப் படம் ஜனநாயம் பற்றிய கேள்விகளை முன்வைக்கிற படமாக இருக்கும். இங்கே ஜனநாயகம் என்பது என்னவாக இருக்கிறது?

இயக்கங்கள், மக்கள் விடுதலைக்காக நிறைய பேசுகின்றன. ஆனால், அவற்றிடமே ஜனநாயகம் பற்றிய சரியான தெளிவு இல்லை. அது இல்லாமல் எத்தனை இயக்கங்கள், கட்சிகள் வந்தாலும் மக்களுக்குப் பயன்படாது. அப்படிப்பட்ட அரசியல், கடைசியில் சர்வதிகாரத்தில்தான் போய்முடியும். ‘அறம் 2’ அந்த அரசியலைப் பேசுகிற படமாக இருக்கும். இதிலும், நயன்தாராதான் நாயகி.

அதற்கடுத்து `பிர்ஷா முண்டா’ பற்றிய படம். பிரிட்டிஷ் காலத்தில் வாழ்ந்த பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த போராளிதான் பிர்ஷா  முண்டா. அரசிடமும், உள்நாட்டு நிலவுடமைதாரர்களிடமும் அடிமைப்பட்டிருந்த பழங்குடி மக்களுக்காகப் போராடிய முதல் வீரர். தற்போதைய பீகார், ஜார்கண்ட் போன்ற பகுதிகளில் வசித்த பழங்குடி மக்களின் போராட்டத்துக்கு வித்திட்டவர். 19-ம் நூற்றாண்டிலேயே விடுதலை அரசியலுக்காகக் களத்தில் இறங்கியவர். தனது 25-வது வயதில் சிறையிலேயே மரணமடைந்தார். திரைக்கதை யெல்லாம் முடிந்து தயாராக இருக்கிறது. விஜய் தேவரகொண்டாவை நடிக்கவைக்கிற முயற்சிகளில் இருக்கிறோம்.’’

 ‘`தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து நிறைய அரசியல் படங்கள் வரத் தொடங்கியிருக்கிற சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’


‘`இது நிச்சயம் ஆரோக்கியமான விஷயமே. நிறைய அரசியல் திரைப்படங்கள் வர வேண்டும். அதே நேரத்தில் கடந்தகால அரசியலை மட்டுமே பேசிவிட்டுக் கடந்துபோவது சரியானதல்ல. ஒரு சரியான அரசியல் படம் என்பது நிகழ்கால அரசியலைப் பற்றி பேசுவதுதான். இன்னும் சொல்லப்போனால் ஒடுக்கும் சக்திகளைப் பற்றி பேசுவதுதான்.’’

‘`தமிழகத்தை வழிநடத்த சரியான ஆளுமை இல்லை என்பதால், அந்த வெற்றிடத்தை நிரப்ப  திரைத்துறையில் பலரும் முயற்சி செய்கிறார்களே?’’


‘`இந்தச் சமூகத்தைப் பொறுத்தவரை யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால், அப்படி வருபவர்களில் யார் சமரசம் இல்லாமல், சந்தர்ப்பவாதம் இல்லாமல்  பணியாற்று கிறார்கள் என்பதை மக்களே கண்டுபிடித்துவிடுவார்கள். மக்களுக்குப் பிரச்னை வரும்போது, எந்தக் கட்சி மக்கள் பக்கம் நிற்கிறது என்பதும் மக்களுக்குத் தெரியும். அதைப் புரிந்து வருபவர்களை மக்கள் நிச்சயம் வரவேற்பார்கள்.’’

‘`இன்று தமிழ்நாட்டில் நிறைய போராட்டங்கள் நடக்கின்றன. இந்தச் சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’


``நம்மிடம் இருக்கும் எல்லாப் போராட்டங்களுமே விளைவுகளைப் பற்றி பேசுபவைதான். ஆனால், விளைவுகள் வருவதற்கு முந்தைய தடுப்புப் போராட்டங்களை யாரும் முன்னெடுப்பதில்லை. அனிதா இறந்தவுடன் நடந்த  போராட்டம் என்பது விளைவுகளுக்கான எதிர்வினைதான். நீட் தேர்வினால் ஏற்பட்ட விளைவுதான் அனிதாவின் மரணம். அந்த விளைவுக்காகத்தான் நாம் போராடினோம்.  ஆனால், மூல காரணத்தை எதிர்க்கும் போராட்டமே, இன்றைய தேவை. எந்தவித சமரசமும் இல்லாமல், சந்தர்ப்பவாதமும் இல்லாமல் தியாக உணர்வோடு அரசை, அதிகாரத்தை எதிர்த்து இறங்குவதுதான் அசலான போராட்டம்.’’ 

“எல்லாக் கேடுகளுமே சமரசத்திலிருந்துதான் தொடங்குகின்றன!”

``உங்கள் பார்வையில் சரியான தலித் சினிமா என்பது எது?’’

‘`குறியீடுகளை மட்டுமே சொல்லிச் சொல்லி ஒரு படம் வெளியாகிறது என்றால் அந்தப் படம் தலித்துகளை, தலித் அரசியலை விற்கிற படம் என்று அர்த்தம். ஆரம்பகாலத் திரைப்படங்கள் புராணங்கள், இதிகாசங்களைப் பேசின. அதற்கு முன்னர் இதே கதைகளைக் கூத்துகளின் வாயிலாக மக்களிடம் கொண்டு சேர்த்தார்கள். கூத்துகளில் நடித்தவர்களை அந்தப் பாத்திரமாகவே மக்கள் நினைத்தார்கள்.  அதே கதைகள் சினிமாவானபோது, அப்படிப்பட்ட பாத்திரங்களைப் பார்த்தபோது மக்கள் அதே உணர்வுகளை அடைந்தனர். அப்படி உருவானவர்தான் எம்.ஜி.ஆர்.  ஒடுக்கப்பட்ட மக்களின் பாத்திரங்களில் நடித்திருப்பார். தலித்துகள் தாங்கள் சம்பாதித்த  பணத்தைக் கொடுத்துப் படம் பார்த்தார்கள். அவரைக் கொண்டாடினார்கள். அந்தச் செல்வம் முதலாளிகளுக்கே போய்ச் சேர்ந்தது. செல்வம், புகழ் என எல்லாம் ஒன்று சேர அதை மக்களின் வாக்குகளாக மாற்றி, அரசியலுக்கு வந்தார். அரசின் வழி மீண்டும் செல்வத்தைத் திரட்டினார்கள். இப்போதும் அந்தப் பணம் முதலாளிகளிடமே சென்றது. இதுதான் எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு கடைசியில் ஏற்பட்ட கதி. அதுதான் தலித் சினிமாவுக்கும் நேரும்.’’

‘`சினிமா என்கிற பெரும் வணிகத்தில் இது எப்போதும் நிகழக்கூடியதுதானே... இதிலிருந்து தலித் அரசியலோ, தலித் இயக்குநர்களோ எப்படித் தப்பிக்க முடியும்?’’

‘`சமரசம் இல்லாத ஒரு தலித் இயக்குநர் இதிலிருந்து தப்பிக்க முடியும் என்று நான் கருதுகிறேன். தான் சொல்கிற கருத்துகளுக்கு என்னென்ன மாதிரி எதிர்வினைகள் வரும் என்பதையும் புரிந்து கொள்கிறவராக அவர் இருக்க வேண்டும். உங்களுடைய எல்லாக் கேடுகளுமே சமரசத்திலிருந்துதான் தொடங்கும். அதில் நேரடியான சமரசம் ஒன்று.  உங்களை அறியாமலேயே ஒரு சமரச வாழ்க்கைக்கு ஆட்பட்டிருப்பீர்கள் என்பது மற்றொன்று. அதுதான் இருப்பதிலேயே ஆபத்தான ஒன்று.’’

‘`நீலம், சிவப்பு, கறுப்பு என்கிற குறியீடுகள் பற்றி?’’


‘`எனக்குக் குறியீடுகளில் எப்போதும் நம்பிக்கை உண்டு. ஆனால், குறியீடுகள் மட்டுமே விடுதலை அரசியல் கிடையாது. அம்பேத்கரைக் குறியீடாக நிறுத்தாமல் அந்தத் தத்துவத்தை உருவாக்கிய அம்பேத்கராகவே வாழ்வதுதான் சரியானது. அவரை மாதிரி அல்லாமல், அவராகவே வாழ்வதுதான் என் அரசியல்; என் வாழ்க்கை. அவர் எப்படி சமரசம் இல்லாமல் இருந்தாரோ அப்படி வாழ்வதுதான் என் அரசியல். அவர் யாரையெல்லாம் எதிர்த்தாரோ, அவர்களையெல்லாம் எதிர்ப்பதுதான் உண்மையான அரசியல்.”

‘`உண்மையான தலித் சினிமாவுக்கான வரையறை என்று எதைச் சொல்கிறீர்கள்?’’

‘`முதலில் நீங்கள் எடுக்கும் சினிமா எதைப் பற்றிப் பேசுகிறது என்கிற தெளிவு வேண்டும். அது சாதி ஒழிப்பு பற்றிய படமா அல்லது கலைப் பகுதியாக மட்டுமே சாதி ஒழிப்பு இருக்கிறதா என்பதில் தெளிவு தேவை. ஒரு ஆர்ட் ஃபார்ம், ஒருவகையில் உரையாடலை முன்வைப்பதாக இருக்க வேண்டும். ஒரு நேர்மையான கலைஞன், கலவரத்தில் ஒடுக்கப்பட்டவனுடைய படுகொலையும், ஆதிக்கச் சாதியில் ஏற்படும் படுகொலையும் ஒன்றென்பதை உணர்ந்தவனாக இருப்பான். இதைக் கலைஞனாக இருந்தால் மட்டும்தான் உணர முடியும். சாதி ஒழிப்பை தலித் சினிமா முன்னெடுக்குமானால் அதற்கு இத்தகைய உணர்தல் முக்கியம்.’’

“எல்லாக் கேடுகளுமே சமரசத்திலிருந்துதான் தொடங்குகின்றன!”



‘`பொதுவாக சினிமாவில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?”


‘`இதுவரை ஒருவிதமான வணிக சினிமாவைப் பார்த்துப் பார்த்தே நாம் வளர்ந்துவிட்டோம். `சினிமான்னா இப்படித்தான் இருக்கணும்’ என்னும் குறுகிய பார்வை உழைக்கும் மக்களிடமே இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை சினிமா குறித்த பார்வையும் பெண்கள் குறித்த பார்வையும் பலகாலமாக மாறாமலே இருக்கின்றன.

வரலாறு முழுக்கவே, `பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்’ எனப் பெண்களையே நம்பவைத்துவிட்டார்கள். அந்த ஆணாதிக்கச் சிந்தனையை உள்வாங்கிக்கொண்ட பெண்கள் மற்ற பெண்களைப் பார்க்கிற பார்வை, ஆண்கள் பார்க்கிற பார்வையைவிட ஆபத்தானது. அதேபோலத்தான் சினிமா குறித்து மரபுரீதியாக உருவாகியிருக்கும் பார்வையும். அதைத்தான் நாம் பின்பற்றுகிறோம். அது மாற வேண்டும்.

அதேபோல் பார்வையாளர்களிடம் இதற்கான தெளிவு மிக அவசியம். தலித் சினிமா என்பதற்காகவே அதை ஆதரிப்பது, ஆதரிக்கச் சொல்லி திணிப்பது போன்ற பார்வையானது மாற வேண்டும்.’’

``கார்ப்பரேட் இல்லாத உலகம் இனி சாத்தியமா?”


``இதற்கு முன்னர் அப்படித்தானே இருந்தோம். இயற்கையோடு இயைந்த பொதுவுடமைச் சமூகமாகத்தானே நாம் இருந்தோம். மூலதனம் என்கிற ஒன்று வந்தபின்னர்தானே வர்க்கம், முதலாளித்துவம், கார்ப்பரேட் எல்லாம் வந்தன?  இந்த ஏற்றத்தாழ்வுகள் இல்லாத ஆதிப் பொதுவுடைமைச் சமூகத்துக்குத் திரும்பிப் போவதுதான் மார்க்சியத்தின் வேலை. அந்த வேலையைத்தான் நாம் செய்ய வேண்டும்.’’

வே.கிருஷ்ணவேணி - படங்கள் ப.சரவணக்குமார் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு