Published:Updated:

‘ராதிகா’யணம் - நடிப்புப் பயணத்தில் 40 ஆண்டுகள்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
‘ராதிகா’யணம் - நடிப்புப் பயணத்தில் 40 ஆண்டுகள்...
‘ராதிகா’யணம் - நடிப்புப் பயணத்தில் 40 ஆண்டுகள்...

‘ராதிகா’யணம் - நடிப்புப் பயணத்தில் 40 ஆண்டுகள்...

பிரீமியம் ஸ்டோரி

ச்சர்யம்தான்! ராதிகா திரையுலகுக்கு வந்து நாற்பதாண்டுகள் ஆகிவிட்டன.  வெற்றிகரமாக கிழக்கே போன ரயில், இந்த நாற்பதாண்டுகளில் அரசியல், சினிமா, சின்னத்திரை என்று சகல திசைகளிலும் பயணம் செய்து சாதித்திருக்கிறது. வாணி-ராணி தொடரில் இரட்டை வேடங்களில் கலக்கிக்கொண்டிருக்கும் நடிகவேளின் வாரிசு, அடுத்து `சந்திரகுமாரி’ சீரியலில் வரலாற்று நாயகியாகப் புது அவதாரம் எடுக்கவிருக்கிறார். வாழ்த்துகளோடு சந்தித்தேன். ஆனந்தம் பொங்க அனுபவங்களை இறக்கிவைத்தார்.

‘ராதிகா’யணம் - நடிப்புப் பயணத்தில் 40 ஆண்டுகள்...

இயக்குநர்கள்  
               
``இத்தனை ஆண்டுகள் தமிழ் சினிமாவுல நீடிச்சு நிக்கிற அளவுக்கு என்னை உருவாக்கியவர் என் குருநாதர் பாரதிராஜா. நான் நடிச்ச படங்கள்லயே முதலும், கடைசியுமாக என் அப்பா பார்த்த படம் ‘கிழக்கே போகும் ரயில்.’ அந்தப்படத்தைப் பார்த்துட்டு பாரதிராஜாசாரின் திறமையை வியந்து மனசாரப் பாராட்டினார். `பசும்பொன்’ படத்தில் ஒரு காட்சியில் நான் நடிக்க, டைரக்டர் படமாக்கிக்கொண்டிருந்தார். பெரிய டயலாக், எமோஷனலான காட்சி அது, தொடர்ந்து நடிச்சிட்டே இருக்கேன். கட் சொல்லாம பாரதிராஜா சார் பார்த்துட்டே இருக்கார். சீன் முடிஞ்சதும் என்னைக் கூப்பிட்டு, `‘உன்னை ஒருகாலத்துல டயலாக் சொல்லிக்கொடுத்து அழவைக்கறதுக்கு என்னவெல்லாம் பாடுபட்டிருப்பேன். இப்போ என்னை கட் சொல்லமுடியாத அளவுக்கு நடிச்சு மிரட்டுறியே!’’ன்னு ஆச்சர்யப்பட்டார்.

‘ராதிகா’யணம் - நடிப்புப் பயணத்தில் 40 ஆண்டுகள்...`கிழக்கே போகும் ரயில்’ படத்தோட ஷூட்டிங் மேட்டுப்பாளையத்துல நடந்தது. ஸ்ரீதேவிதான் ஹீரோயின்னு நினைச்சு பாரதிராஜாசார் யூனிட்டே ஆசையோட காத்துக்கிட்டிருந்தது.  பாரதிராஜா சார் சென்னையில் என்னைப் பார்த்து முடிவுபண்ணி அவருடனே மேட்டுப்பாளையத்துக்கு அழைச்சுட்டுப் போனார். சாரோட கார்ல இருந்து பேன்ட், சட்டை, கூலிங்கிளாஸ் சகிதமாக நான் இறங்கினதைப் பார்த்ததும் யூனிட்ல இருந்த எல்லார் முகமும் மாறிடுச்சு. பாக்யராஜ்
‘ஹீரோயினைக் கூட்டிட்டு வரச்சொன்னா, பூசணிக்காயைக் கூட்டிக்கிட்டு வந்திருக்கீங்க...’ என்று டைரக்டரிடம் சொல்ல, அது என் காதிலும் விழுந்துவிட எனக்கு செம கோபம்.  

‘ராதிகா’யணம் - நடிப்புப் பயணத்தில் 40 ஆண்டுகள்...

கோபத்தை வெளியில் காட்டாம அடக்கிக்கிட்டேன். ஆனா சும்மா விட முடியுமா? பாக்யராஜ் எனக்கு வசனம்  சொல்லிக்கொடுக்கும் போதெல்லாம் அதைக் கவனிக்காத மாதிரி கெக்க பிக்கேனு சிரிச்சிட்டே இருப்பேன். பயங்கரமா கடுப்பாவார் பாக்யராஜ், ஒருகட்டத்துல ‘`சார், இந்தப் புள்ள ரொம்ப மோசம், டயலாக்கை சரியாவே பேசச் தெரியலை’’ என்று பாரதிராஜாவிடம் புகார் பண்ணிட்டார்.

பாரதிராஜா என்னைக் கூப்பிட்டு `எங்கே, அந்த டயலாக்கைச் சொல்லு’னு சொன்னார். நான் அடுத்த செகண்ட் கடகடனு வசனம் பேச, திகைத்துப்போனார் பாக்யராஜ். கோபத்தில் நான், டைரக்டரை வச்சுக்கிட்டே பாக்யராஜைக் கன்னாபின்னான்னு இங்கிலீஷ்ல திட்டித்தீர்த்துட்டேன். ஆனா, அதுக்கப்புறம் எனக்கே அவரைப் பார்க்க பாவமா இருந்துச்சு. வலியப்போய் அவரிடம் ஸாரி கேட்டேன்.

`நீ இங்கிலீஷ்ல திட்னதால, என்ன சொல்லித் திட்டினேன்னே எனக்குத் தெரியலை. விடும்மா பரவாயில்லை’னார் பாக்யராஜ்.

‘கிழக்கே போகும் ரயில்’ படம் முடிஞ்சு எனக்கு டப்பிங் குடுக்குற ஆளை செலக்ட் செய்துகிட்டி ருந்தார் டைரக்டர். அந்தச் சமயத்தில் `சார், ராதிகாவுக்கு டப்பிங் வேண்டாம். அவரோட மழலைக்குரலே படத்துக்குப் பெரிய ப்ளஸ்ஸா இருக்கும்’னு பாக்யராஜ் சொன்னபோது நெகிழ்ந்து போயிட்டேன். அதற்குப் பிறகு இருவரும் நண்பர் களாகிட்டோம். `ராதிகா, நான் படம் பண்ணும்போது நீதான் ஹீரோயின்’ என்று என்னிடம் எப்போதும் சொல்வார் பாக்யராஜ்.

அவரோட  முதல்படமான ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ படத்துல நடிக்க முதல்ல என்னைத்தான் அழைச்சார். அப்போ தெலுங்குப் படத்தில் கமிட் ஆகியிருந்ததால் நடிக்க முடியாமப்போச்சு. ஆனால், பாக்யராஜ் டைரக்‌ஷன்ல வெளிவந்த ‘முந்தானை முடிச்சு’ , ‘அந்த ஏழு நாட்கள்’ படத்தோட தெலுங்கு ரீ-மேக்ல நான்தான் ஹீரோயின். அதுவும் ‘முந்தானை முடிச்சு’ ரீமேக்ல நடிச்சதுக்காக ஆந்திர அரசின் சிறந்த நடிகை விருது வாங்கினேன்.  

‘ராதிகா’யணம் - நடிப்புப் பயணத்தில் 40 ஆண்டுகள்...

எஸ்.பி.முத்துராமன் சாரும் எனக்கு ரொம்பவே முக்கியமானவர். ‘போக்கிரி ராஜா’, ‘நல்லவனுக்கு நல்லவன்’, ‘பேர் சொல்லும் பிள்ளை’ னு அவர்  டைரக்‌ஷன்ல ஏகப்பட்ட வெற்றிப்படங்கள்ல நடிச்சிருக்கேன். பாலுமகேந்திரா சார் அதுவரை நான் செஞ்சிகிட்டிருந்த கேரக்டர்களில் இருந்து மாற்றி, என்னை வேறுமாதிரியான கிளாஸான கதாபாத்திரங்களில் நடிக்கவைத்தார். எஸ். ஏ. சந்திரசேகரன் சார் டைரக்‌ஷன்ல ஆக்‌ஷன் படங்கள்ல நடிச்சது என்னுடைய கரியரை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது. 

தெலுங்கு சினிமாவில் பர்ஃபெக்‌ஷன்னு சொன்னால் அந்தப் பெருமை கண்டிப்பா கே.விஸ்வநாத் சாருக்குத்தான் பொருந்தும்.  ‘சுவாதி முத்யம்’(தமிழில் `சிப்பிக்குள் முத்து’) படத்தில் நடிக்கும்போது  அவரிடமிருந்து நடிப்பில் உள்ள சின்னச்சின்ன நுணுக்கமான வெளிப்பாடுகளைக் கத்துக்கிட்டேன். நிறைய சொல்லிக்கொடுப்பார் அதேசமயம் நாம நடிப்புல விளையாடறதுக்கு நிறைய இடத்தையும் கொடுப்பார்.  ராகவேந்திரராவ், தாசரி நாராயணராவ் டைரக்‌ஷன்லயும் நிறைய படங்கள் நடிச்சிருக்கேன். 

கே.பாலச்சந்தர் சார் எப்போ என்னைப் பார்த்தாலும் ‘உன்னை மாதிரி ஒரு நல்ல நடிகையோட திறமைக்குத் தீனி போடுற மாதிரி ஒரு கதையிலே சீக்கிரமா நடிக்க வைக்கப்போறேன்’ன்னு சொல்லிக்கிட்டே இருந்தார். ‘சார் உங்க படத்துல சான்ஸ் கிடைக்காமப்போனாலும், நீங்க இயக்குற டிவி சீரியலிலாவது நடிக்கிற வாய்ப்பைக் கொடுங்க சார்’னு  பலமுறை கேட்டிருக்கேன். கடைசிவரை அந்த வாய்ப்பு அமையவே இல்லை.

‘ராதிகா’யணம் - நடிப்புப் பயணத்தில் 40 ஆண்டுகள்...நடிகர்கள்

‘முதல் மரியாதை’ படத்தில் ராதா கேரக்டரில் நான்தான் நடிக்கிறதா இருந்தது. அப்போ கொஞ்சம் பிஸியா இருந்ததால நடிக்க முடியாமப்போய்டுச்சு. ஆனாலும் ராதாவுக்குப் பின்னணிக் குரல் கொடுத்தேன். ஆனா,  அதுக்குப்பிறகு 13 வருஷம் கழிச்சுதான் சிவாஜிசாரோட ஜோடியா நடிக்கிற வாய்ப்பு, கஸ்தூரிராஜா இயக்கத்துல வெளிவந்த ‘என் ஆச ராசாவே’ படம் மூலமா கிடைச்சது. அவரை மாதிரி ஒரு தொழில்ரீதியான நடிகரைப் பார்க்கவே முடியாது. ஷூட்டிங் ஸ்பாட்ல சின்ன சத்தம் கேட்டாக்கூட அதுக்குக் காரணமானவங்களைப் பார்த்து முறைப்பார். அவருக்குப் பிறகு அந்த அளவுக்குக் கச்சிதம் எதிர்பார்க்கிறவர், ரஜினிசார். தமிழில் அவருடன் ஏகப்பட்ட படங்கள் நடிச்சிருக்கேன். நான் சினிமாவுக்கு வந்து 10 வருஷம் கழிச்சுதான் கமலுக்கு ஜோடியா ‘சுவாதி முத்யம்’ படத்தில் நடித்தேன். அந்தப்படத்துல  ரொம்ப மெச்சூர்டு கேரக்டர், நல்ல பெயர் வாங்கிக்கொடுத்த படம். அதுக்கப்புறம் ‘பேர் சொல்லும் பிள்ளை’யில் மறுபடியும் கமலுடன் நடிச்சேன். விஜயகாந்த், சத்யராஜ், மோகனுடன் நிறைய படங்கள்ல நடிச்சேன். இந்த மூன்றுபேரோட 80களில் ஆரம்பிச்ச நட்பு இப்பவும் தொடருது.

இப்பவும் நான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ரொம்ப குஷியோட கிளம்பினா அந்தப் படத்துல நிச்சயமா பிரபு இருப்பார். எனக்கும், பிரபுவுக்கும் சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடியே நட்பு இருந்தது. நாங்க ஒண்ணு சேர்ந்துட்டா ஷூட்டிங் ஸ்பாட்டே அதகளம்தான். இப்பவும் நான் அண்ணாந்து  ஆச்சர்யமா பார்க்குற நடிகர், மோகன்லால்.

‘ராதிகா’யணம் - நடிப்புப் பயணத்தில் 40 ஆண்டுகள்...விஜய் சின்னப் பையனா இருக்கும்போதே ‘இது எங்கள் நீதி’ படத்துல என்னுடன் நடிச்சார். இப்போ ‘தெறி’ படத்துல மறுபடியும் பார்க்கும்போது அப்படியே அசந்து போயிட்டேன். ஸ்பாட்டுல அப்படியே மெளனமா உட்கார்ந்திருக்கார், இயக்குநர் ஆக்‌ஷன் சொன்னவுடனே கேமரா முன்னாடி வந்து நின்னா மேஜிக் பண்ணி மிரட்டியெடுத்துடறார்.

இப்போ நான் இண்டஸ்ட்ரியிலேயே வியந்து பார்க்குற இன்னொரு நடிகர் தனுஷ். சினிமா இண்டஸ்ட்ரியிலே  யாரோடும் ஒப்பிட முடியாத அர்ப்பணிப்புள்ளவர்.  ‘வடசென்னை’ பார்த்து உண்மையிலேயே உறைஞ்சுபோயிட்டேன்.

தமிழ் மாதிரியே தெலுங்கிலும் நூற்றுக்கணக்கான படங்கள் பண்ணியிருக்கேன். முதல்வர் ஆவதற்கு முன்னாடி  என்.டி.ராமராவ் கடைசியா நடிச்ச படத்தில்  அவருக்கு ஜோடியா நான்தான் நடிச்சேன். நாகேஸ்வரராவ்காருவுடன் நடிக்கும்போது காலையில் 7 மணி ஷூட்டிங்குக்கு 6.30 மணிக்கே மேக்கப்போட்டு  ரெடியாக இருப்பார். தெலுங்கில் ஏகப்பட்ட படங்களில் சோபன்பாபுவுடன் நடிச்சிருக்கேன். ஒரு காலத்தில்  தெலுங்கு  சினிமா இண்டஸ்ட்ரியிலே என்னையும் சிரஞ்சீவியையும்  எல்லோரும் `ஹிட் ஜோடி’ன்னு பெருமையா சொல்லுவாங்க. அந்தளவுக்கு நாங்க ஜோடியா நடிச்ச  எல்லாப் படங்களும் அங்கே சூப்பர் டூப்பர் ஹிட். சிரஞ்சீவியுடன் மட்டும் 28 படங்கள் நடிச்சிருக்கேன்னு நினைச்சா பிரமிப்பா இருக்கு!

நடிகைகள்

நான் சினிமாவில் நுழைந்தபோது அப்போ முன்னணி நடிகைகளாக இருந்தது மூன்றுபேர். ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா, சுஜாதா. ஸ்ரீதேவி பர்ஃபாமென்ஸ் ஆர்ட்டிஸ்ட்,  ஸ்ரீப்ரியா துடுக்குத்தனமான பெண் பாத்திரங்கள், சுஜாதா குடும்பப்பாங்கான நாயகின்னு ஆளுக்கொரு  தனித்தன்மையோட முத்திரை பதிச்சு நடிச்சிக்கிட்டிருந்தாங்க.

அந்தச் சமயத்துல ஒரு பேட்டியில் என்னிடம் இந்த மூன்றுபேர் பெயரைச் சொல்லி ‘சினிமாவுல நீங்க யார் நடிப்பை ஃபாலோ பண்ணப்போறீங்க?’ன்னு கேட்டாங்க. அப்பவே நான் ‘மூணுபேர் பாணியையும் கலந்துகட்டி வித்தியாசமா நடிக்கப்போறேன்’னு  குழந்தைத் தனமா சொன்னேன். ஆரம்பத்துல விளையாட்டுத்தனமா இருந்தாலும் ஒரு கட்டத்துல என்னுடைய நடிப்புமேல முழுக்கவனத்தையும் செலுத்த ஆரம்பிச்சேன். இப்படித்தான்னு இல்லாம எல்லா மாதிரியான ரோல்களையும் சவாலா நினைச்சுச் செய்ய ஆரம்பிச்சேன். 

‘ராதிகா’யணம் - நடிப்புப் பயணத்தில் 40 ஆண்டுகள்...

என் முதல் படத்துல இருந்து இப்பவரை ஸ்ரீப்ரியா ரொம்ப நெருக்கமான தோழி. அன்னைக்கு எப்படியோ இன்னைக்கும் அதே அன்பும் நெருக்கமும் எங்ககிட்ட இருக்கு. சுஹாசினி,  ஊர்வசி, ரேவதி எல்லோருடனும் நல்ல நட்போட இருக்கேன். நயன்தாராவை ரொம்பப் பிடிக்கும். இப்போ அறிமுகமாகும் பெரும்பாலான நடிகைங்க மூணு படத்துக்குமேல தாக்குப்பிடிக்க முடியாமப்போயிடறாங்க. ஆனால், இப்படிப்பட்ட காலத்துலகூட ஜோதிகா,  திரிஷா, நயன்தாரா எல்லாம் இத்தனை வருஷம் இண்டஸ்ட்ரியில  தாக்குப்பிடிச்சு தங்களுக்குனு ஒரு இடத்தைத் தக்கவச்சு, நிலைச்சு நிக்கறது பெரிய சாதனை.

அரசியல் அவதாரம்

விஜயகாந்த் நடிச்ச ‘கூலிக்காரன்’ பட வெற்றி விழாவுக்குக் கலைஞர் வந்திருந்தார். முதல் முறையா  மேடையில் நான் பேசின பேச்சு கலைஞருக்கு ரொம்பப்  பிடிச்சுப்போச்சு. 1989-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் இறந்தபிறகு சட்டமன்றத் தேர்தல் நேரம் ‘தேர்தல்ல நீ தி.மு.க-வுக்கு ஆதரவா பிரசாரம் செய்யணும்’னு   கலைஞர் சொல்லிட்டார். அப்பாவுக்கு நண்பராச்சே, அதனால என்னால் ஒண்ணும் எதிர்த்துப்  பேசமுடியலை. அப்போ சினிமாவில் நான் ரொம்ப பிஸியா இருந்த நேரம். `இதுவரை தி.மு.க-வுக்குப் போன எந்த சினிமா நட்சத்திரமும் உருப்பட்டதேயில்லை, நீ தேவையில்லாமப் போய் மாட்டிக்காதே’ன்னு என்னை எல்லோரும் பயமுறுத்தினார்கள். நான் கவலையே படவில்லை. தமிழ்நாட்ல இருக்குற சின்னச்சின்ன கிராமங்களுக்கு எல்லாம் போய்  தி.மு.க-வுக்குப் பிரசாரம் பண்ணி வாக்கு சேகரித்தேன். அப்போ பிரசாரம் செய்றதுக்குத் தேர்தல் கமிஷன் நேரவரையறை எதுவும் வைக்கலை. அதனால் காலை 10 மணிக்குப் பிரசாரம் தொடங்கினா மறுநாள் காலை 6 மணிவரை தொடர்ந்து பிரசாரம் செய்வேன். அந்தத் தேர்தலில் தி.மு.க ஜெயித்தது. அந்த அரசியல் அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது. இப்போ எல்லோரும் ஈஸியா டிவி முன்னாடி உட்கார்ந்துகிட்டு அரசியல் பேசுறாங்க. உண்மையான அரசியல் அது கிடையாது. மக்களோடு மக்களா களத்துல இறங்கி வேலை பார்ப்பதுதான் உண்மையான அரசியலாக இருக்கும். 

‘ராதிகா’யணம் - நடிப்புப் பயணத்தில் 40 ஆண்டுகள்...

சின்னத்திரை

முதன்முதலாக டிவியில் நான் காலடி வெச்சப்போ என் சொந்தக்காரங்க, சினிமா நண்பர்கள்னு எல்லோருமே நிறைய பயமுறுத்தினாங்க.  ‘சினிமா கரியர் உனக்கு நல்லாத்தானே போயிட்டிருக்கு. அப்புறம் எதுக்கு டிவி? பைத்தியம் பிடிச்சிருச்சா?’ன்னு திட்டாத ஆட்களே கிடையாது. 

அப்போ ரேயான் கைக்குழந்தையா இருந்தாள். ஒரு பக்கம் சினிமா, இன்னொரு பக்கம் டிவின்னு ஷூட்டிங் போகணும். ரொம்ப சிரமமான காலகட்டம். ஆனாலும் துவண்டுபோகலை. முதன்முதலாகத் தெலுங்கு சீரியல் ஒன்றைத் தயாரிச்சேன். அது ரொம்பவே நல்லா போச்சு. தமிழில் சன்டிவியில் ‘சித்தி’ தொடர் தொடங்கினேன். டிவி சீரியலுக்காகத் தனியாக ராடன் நிறுவனம் ஆரம்பித்தபோது ரொம்பவே கஷ்டப்பட்டேன். பொதுவா `நடிகைகள் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினால் ஒரு படத்துக்குப் பிறகு, காணாமல் போய்விடுவார்கள்’ என்று ஒரு தவறான அபிப்ராயம் பரவியிருக்கு. அப்படிப் பட்ட பிம்பத்தை உடைக்கணும்னு ஒரு வைராக்கியம். `சித்தி’யில் ஆரம்பிச்சு,  ‘அண்ணாமலை’, `செல்வி’,  ‘அரசி’, ‘செல்லமே’ இப்போ `வாணி ராணி’ன்னு ராடனோட பயணம் வெற்றிகரமா 18 வருடங்களாகப் போய்க்கிட்டிருக்கு. இப்போ ‘சந்திரகுமாரி’ புதுசா வரப்போகுது. இது வழக்கமான ஃபேமிலி டிராமாவாக இல்லாமல் வித்தியாசமான சீரியலாக உருவாக்கியிருக்கோம்.

‘ராதிகா’யணம் - நடிப்புப் பயணத்தில் 40 ஆண்டுகள்...

குடும்பம்

சினிமா, டிவி எல்லாம் வெளியில்தான். வீட்டுக்குப் போயிட்டா அதுபத்தி எதுவுமே பேசக்கூடாதுன்னு வீட்ல எழுதப்படாத சட்டம்  போட்டிருக்கோம். என் கணவர் சரத் குமார்தான் என்னைத் தாங்கிப் பிடிக்கிற தூண். எங்க ரெண்டு பேருக்குள்ளயும் கணவன் மனைவி உறவைத்தாண்டி, ஒரு நல்ல நட்பு இருக்கு. சரத்தோட பெரிய பலம் அவரோட விடாமுயற்சி, தன்னம்பிக்கைதான். அவர் அரசியலில் இறங்கியது சரியா தவறான்னு ஆராய்ச்சி செய்ய விரும்பலை. கஷ்டங்கள் பார்த்து ஒதுங்கிப்போய் நிற்காமல், தான் வாழ்ந்ததற்கான அடையாளத்தை விட்டுச் செல்லணும்னு நினைக்கிற குணாதிசயம் கொண்டவர். என் குழந்தைகளுக்குக் கிடைச்ச அன்பான, பாசமான அப்பா. என் மகள் ரேயானுக்குக் குழந்தை பிறந்திருக்கு,  மகன் ராகுல் 9-ம் வகுப்பு படிக்கிறார். வாழ்க்கை ரொம்ப அழகா இருக்கு.”

 எம்.குணா - படம் பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு