தன்னம்பிக்கை
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

எதிர்பார்ப்புகளின்றி கொடுப்பது மட்டுமே எங்கள் காதல்! - நடிகை வித்யா

எதிர்பார்ப்புகளின்றி கொடுப்பது மட்டுமே எங்கள் காதல்! - நடிகை வித்யா
பிரீமியம் ஸ்டோரி
News
எதிர்பார்ப்புகளின்றி கொடுப்பது மட்டுமே எங்கள் காதல்! - நடிகை வித்யா

என் காதல் சொல்ல வந்தேன்

``வாழ்க்கையின் அடிப்படையே காதல்தான்! அன்பு இல்லாத வாழ்க்கையை யாராலும் வாழ முடியாது. ‘என் வாழ்க்கையில் காதல் என்ற அத்தியாயமே கிடையாது...’ என்று யார் சொன்னாலும் அது ‘வடிகட்டிய பொய்’ என்று நான் அடித்துச் சொல்வேன்! 

எதிர்பார்ப்புகளின்றி கொடுப்பது மட்டுமே எங்கள் காதல்! - நடிகை வித்யா

இன்றைக்குக் காதல் என்ற பெயரில், விரும்பத்தகாத விஷயங்கள் நிறைய நடக்கின்றன. தயவுசெய்து அவற்றையெல்லாம் ‘காதல்’ என்ற வார்த்தைக்குள் அடையாளப்படுத்தி அசிங்கப்படுத்தாதீர்கள். ஏனெனில், காதல் என்பது யாரையும் கட்டுப்படுத்துவதோ, டார்ச்சர் செய்வதோ அல்ல. அப்படி யாரேனும் செய்துகொண்டிருந்தால்... அது காதலும் அல்ல!’’ - அர்த்தமும் ஆழமுமாகப் பேச ஆரம்பிக்கிறார் வெள்ளித்திரை - சின்னத்திரை ‘நாயகி’ வித்யா பிரதீப்.

‘`அம்மா ஆசிரியர்.  அதனால படிப்புக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுக்கிற ஃபேமிலி. ஸ்கூல் - காலேஜ் படிக்கிறப்ப அதிகபட்சமா இரண்டு அல்லது மூன்று சினிமாக்கள்தான் பார்த்திருக்கிறேன். ஆனாலும்கூட, ஷாரூக் கான் ரொம்பப் பிடிக்கும். ஹாஸ்டல் அறை முழுக்க சல்மான், ஷாரூக் போட்டோ - பேப்பர் கட்டிங்ஸை ஒட்டி வெச்சு, நீயா நானானு சண்டை போட்டுக்குவோம்!

எதிர்பார்ப்புகளின்றி கொடுப்பது மட்டுமே எங்கள் காதல்! - நடிகை வித்யா



காலேஜ்ல படிக்கிறப்பவே பாடப் புத்தகங்கள் தவிர, தத்துவப் புத்தகங்கள் படிப்பதும் ரொம்பப் பிடிக்கும். அதனாலோ என்னவோ காதல் விஷயத்தில் பெரிய ஈடுபாடு இருந்ததில்லை. ஆனாலும், நிறைய ப்ரபோஸல்ஸ் வந்திருக்கிறது!’’ என்று முகம் மலரும் வித்யா, அந்தச் சுவாரஸ்யப் பக்கங்களையும் புரட்ட ஆரம்பிக்கிறார்.

‘`காலேஜ் - ஹாஸ்டல்னு நடந்தே போய் வருவேன். அப்போதெல்லாம் காதல் என்ற பெயரில், தொடர்ந்து என் பின்னாடியே வந்து டிஸ்டர்ப் பண்ணியவர்களும் உண்டு. பெரும்பாலும் அவர்களைக் கண்டுகொள்ளாமலேயே கடந்து போய்விடுவேன். தொடர்ந்து தொல்லை பண்ணுகிறவர்களைக் கல்லூரிப் பேராசிரியர்களிடம் சொல்லிக்கொடுத்திருக்கிறேன்.

காதலைச் சொல்ல எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால், நாகரிகமாக ஒதுங்கிச் சென்றுவிட வேண்டும் என்கிற புரிதல் இங்கே பலருக்கும் இருப்பதில்லை. அதுதான் பிரச்னை.

அப்படி ஒருவர் எனக்குத் தொடர்ந்து செல்போனில் மெசேஜ் கொடுத்துத் தொல்லை கொடுத்தார். ‘ஹீரோயின்’ என்கிற அடைமொழியோடுதான் அந்த மெசேஜ்கள் ஆரம்பிக்கும். ‘இன்னிக்கு உங்க டிரஸ் ரொம்ப நல்லாயிருக்கு’, ‘உங்க செருப்பு கலர் சூப்பர்’ என்பது மாதிரியான வர்ணனை தகவல்களாக வந்துவிழும்.

அவருடைய நம்பரை ப்ளாக் செய்தாலும் வேறு ஒரு நம்பரிலிருந்து மெசேஜ் அனுப்ப ஆரம்பித்துவிடுவார். ஒன்றரை வருடங்களாக இந்தத் தொல்லை தொடர்ந்தது. நேரில் வந்து தொல்லை கொடுக்கவில்லையென்றாலும்கூட யாரென்றே தெரியாத ஒரு நபர் இவ்வளவு நெருக்கமாகத் தொடர்ந்து நம்மை ஃபாலோ செய்கிறார் என்ற எண்ணமே எனக்குப் பெரும் டார்ச்சராக இருந்தது.

ஒருகட்டத்தில், என்னுடைய பிறந்த நாளுக்கு எனக்கே தெரியாமல், என்னுடைய தோழிகளுக்கு சாக்லேட் பரிசளிக்கும் வரை அந்த நபர் எல்லை மீறியபோதுதான் ரொம்ப ஸ்ட்ராங்காக எனது எதிர்ப்பைப் பதிவுசெய்தேன். அந்த எச்சரிக்கைக்குப் பிறகு எந்தத் தொல்லையும் இல்லை!

இதுமட்டுமல்ல... சில நேரங்களில், காதலித்தவர்களேகூட சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் பிரிய நேரிடலாம்.  அப்போது, எதிர்த் தரப்பினரின் நியாயத்தைப் புரிந்துகொண்டு நாகரிகமாக ஒதுங்கிச் செல்வதுதானே உண்மையான காதலாக இருக்க முடியும்? அதைவிட்டு, ‘காதல் ஒருமுறைதான் மலரும்; இனி என் வாழ்க்கையில் வேறு காதலே இல்லை’ என்றெல்லாம் கண்ணீர்விட்டு தியாகியாவதோ... ‘என்னைப் பிரிந்த உன்னை வாழவிட மாட்டேன்...’ என்று பழிவாங்க நினைப்பதோ இயற்கைக்கு முரணானது. காதலிப்பவர்களுக்கு இந்தப் புரிந்துகொள்ளும் திறன் கட்டாயம் தேவை என்று நினைக்கிறேன்.

காலேஜ் டைமில் என் ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேருக்கு  காதல் வந்து பீச், பார்க் எனச் சுற்றும்போது, ‘என்னடா இது ஞாயிற்றுக்கிழமைகூட நாம மட்டும் இப்படித் தனிமையா இருக்கிறோமே...’னு ஃபீல் பண்ணின நாள்கள் உண்டு. நிறைய தத்துவங்களைப் படித்ததாலோ என்னவோ... எனக்கான துணை எப்படி இருக்க வேண்டும் என்கிற என் கற்பனையும் அதுகுறித்தத் தேடலும் ரொம்பவே மெச்சூரிட்டியாக - சுய மரியாதை நிறைந்ததாக இருந்தது.

எவரையும் சார்ந்திராத சுதந்திரமான பெண் நான். பரஸ்பர மரியாதை, அன்பு, அக்கறை, பாதுகாப்பு... இவற்றைத்தான் எனக்கான துணையிடம் நான் எதிர்பார்ப்பேன். என்னைப் பொறுத்தவரையில், ஓர் ஆண் என்பவன் எனக்கான மரியாதையைக் கொடுப்பதில் எந்தவிதக் கஞ்சத்தனமும் காட்டக் கூடாது. அவனுடைய சம்பளம், கார், பங்களா இத்யாதிகளெல்லாம் எனக்குத் தேவையில்லை. அவனிடமிருந்து நிபந்தனையற்ற காதல் மட்டுமே என் எதிர்பார்ப்பு.

காதல் என்பது வார்த்தைகளால், வர்ணிக்க முடியாத... அடிமன ஆழத்திலிருந்து வெளிவருகிற ஒருவிதமான உணர்வு. ‘இரு உள்ளங்களுக்கிடையே எதிர்பார்ப்புகளற்ற அளவுகடந்த அக்கறைதான் காதல்’ என்று வேண்டுமானால், காதலை மொழிபெயர்க்கலாம். இப்படியான அளவுகடந்த காதலை எனக்கு யாரால் கொடுக்க முடியுமோ... அவரை மட்டும்தான் என்னாலும் லவ் பண்ண முடியும்.

‘நீ இப்படி இருந்தால் நன்றாக இருக்கும்; அப்படி நடந்துகொண்டால் நல்லது’ என்றெல்லாம் என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிராமல், வித்யாவை வித்யாவாகவே ஏற்றுக்கொள்கிற ஒருவர்தான் எனக்கு வேண்டும். அப்படிப்பட்ட ஒருவரோடு இந்த உலகத்தில் நான் இருக்கும்போது, நான் நானாகவே இருக்கலாம்!

எதிர்பார்ப்புகளின்றி கொடுப்பது மட்டுமே எங்கள் காதல்! - நடிகை வித்யா

என் வாழ்க்கையில் இந்த உணர்வு ஒரே ஒருவரிடம் மட்டும்தான் தோன்றியிருக்கிறது. இதைத் தெய்வ காரியம் என்றுதான் நான் நினைக்கிறேன். என் வாழ்க்கையில் இனிமேல் இதுபோன்ற ஓர் உணர்வு வேறு யாரிடமும் தோன்றாது என்றும் நம்புகிறேன். இது வெறும் இனக்கவர்ச்சி கிடையாது. இதயத்துக்கு நெருக்கமான புனிதமான உணர்வு’’ என்று உணர்வும் சிலிர்ப்புமாகக் காதலை விவரிக்கும் வித்யா, தனது மனம்கவர்ந்த காதலன் பற்றியும் பகிர்ந்துகொள்கிறார்.

‘`வழக்கமானவர்களிலிருந்து வித்தியாசமானவர் என்னவர். ‘யாருப்பா இது... யாரையுமே சட்டை பண்ணாம போய்க்கிட்டே இருக்கிறாரே..?’ என்று என்னையும் திரும்பிப் பார்க்கவைத்தவர். பின்னாளில், பேசிப் பழகியபிறகு இதுகுறித்து நானே கேட்டிருக்கிறேன்... ‘அது எப்படி... யார் என்றுகூட திரும்பிப் பார்க்காமல் போய்க் கொண்டேயிருக்கிறீர்கள்?’ என்ற எனது கேள்விக்கு, சிறியதொரு புன்னகையை மட்டுமே பதிலாக்கிவிட்டு மௌனமாகக் கடந்துவிடுவார்.

மனம்விட்டுப் பேசும் தருணங்களிலும்கூட, ‘நாம காதலர்களாகப் போறோமா... கல்யாணத்தில் ஒன்றுசேரப் போகிறோமா என்பதெல்லாம் யாராலும் உறுதியாகச் சொல்லமுடியாத விஷயங்கள். அப்படி இருக்கும்போது, தேவையில்லாமல் யாருடைய மனதையும் இடறிவிடக் கூடாது இல்லையா...’ என்று ஒரு துறவியின் மனநிலையில் அவர் பேசுவதைக் கேட்டிருக்கிறேன்.

இதைப் படிக்கும்போது, ‘காதலர்கள் இப்படியா பேசிக்கொள்வார்கள்...’ என்ற ஆச்சர்யம் உங்களுக்கு மேலிடலாம். ஆனால், முதிர்ச்சியும் பக்குவமும் ஒருசேரக் கலந்திருக்கும் இந்தப் புரிதல்தான் எனக்கு அவரிடம் பிடித்திருக்கிறது.

கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது என்று காதலில் எல்லோரும் எதிர்பார்க்கிற கலர்ஃபுல் விஷயங்கள் எங்கள் காதலில் இல்லை. அதேநேரம், அன்பான குணம், ஒழுக்கமான நடத்தை, அக்கறையான கவனிப்பு... இப்படி ‘லவ்’வையே வேற லெவலில் எடுத்துச் செல்வதுதான் எங்கள் காதல்.

ஒரே வரியில் சொல்லணும்னா... ‘எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல், கொடுப்பது மட்டுமே காதல்’ என்று நினைக்கிற மனிதர் அவர். பெருமைக்காகச் சொல்லவில்லை... இதுவரை எங்களுக்குள் எந்தவிதப் பிரச்னையும் வரவில்லை. அந்தவகையில், கடவுள் எனக்குக் கொடுத்த கிஃப்ட் அவர்.

எந்த ஒரு காரியம் என்றாலும், அதில் நான் உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எந்தவொரு சூழலிலும் என்னை நான் மாற்றிக்கொண்டு பொய்யான பிம்பத்தைக் கொடுக்க விருப்பமில்லை. அது நியாயமும் இல்லை. 

இப்போது டி.வி சீரியலில், ஆனந்தியாக நடிக்கும்போதும் ஆனந்தியாக மட்டுமே இருக்க விரும்புகிறேன். ‘என் காதல் சொல்ல வந்தேன்’ பகுதிக்காக உங்களுடன் பேசும்போதும் நான் ‘வித்யா’வாக மட்டுமே இருக்க விரும்புகிறேன். அதனால்தான் இதுவரை நான் யாரிடமும் சொல்லாத என் காதல் பற்றியும் சொல்லியிருக்கிறேன்...’’

- உணர்ச்சிமயமாகிறார் வித்யா!

த.கதிரவன்

நீங்கள் விரும்பும் ஆண்கள்...

பெண்கள் மீது உண்மையான அக்கறை காட்டுபவர்.

நடிகர்...

சூர்யா

கனவு...

காதலருடன் நீண்ட நெடிய பயணம்.

நாவல்...

`Erich Segal' எழுதிய `லவ் ஸ்டோரி'.

பாடல்...

என்னவளே அடி என்னவளே...

திரைப்படம்...

டைட்டானிக், அலைபாயுதே.