Published:Updated:

“70 அறை வாங்கினேன்!”

“70 அறை வாங்கினேன்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“70 அறை வாங்கினேன்!”

“70 அறை வாங்கினேன்!”

யக்குநராக, நடிகராக மிஷ்கின் ரொம்பவே பிஸி. அத்தனை பரபரப்புகளுக்கு மத்தியிலும் உதவி இயக்குநர்களோடு தீபாவளியைக் கொண்டாடித் தீர்த்திருக்கிறார்.

“70 அறை வாங்கினேன்!”

“ ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்துல நடிச்சிருக்கீங்க. மிஷ்கின் - தியாகராஜன் குமாரராஜா இணைப்பு எப்படி சாத்தியமாச்சு?”

“ ‘ஆரண்ய காண்டம்’ எனக்குப் பிடிச்ச படம்.  ஓர் இயக்குநரோட திறமையைப் படத்தின் போஸ்டர், டைட்டில் டிசைன், படத்துல அவர் பெயரை எப்படிப் போட்டிருக்கார்... இதை வெச்சே கண்டுபிடிச்சிடலாம்.

திடீர்னு ஒருநாள், ‘ஒரு கதை எழுதிக் கொடுங்க’ன்னு கேட்டான். இத்தனை வருடங்களுக்குப் பிறகு ஒரு படம் பண்றான். அதனால, ‘எழுதித் தர்றேன். ஆனா, அதுக்குப் பணம் வேணாம்’னு சொன்னேன். ‘அதை அப்புறம் பார்த்துக்கலாம்’னு சொல்லிட்டுப் போயிட்டான். கதையை எழுதி வாங்கிட்டு நல்லா இருக்குன்னு கட்டிப்பிடிச்சு முத்தமெல்லாம் கொடுத்தான். ‘எழுதிக் கொடுத்துட்டேன், நீங்களே நடிங்கன்னு வந்து நின்னுடாத’ன்னு அனுப்பி வெச்சேன். மூணுநாள் கழிச்சு, ‘நீங்கதான் நடிக்கணும்’னு சொன்னான். திரும்பவும், ‘நடிக்கிறேன். இத்தனை வருடம் கழிச்சுப் படம் பண்ற பெரும் கலைஞனுக்குப் பொருளாதார ரீதியா எந்தப் பிரச்னையும் வந்துடக்கூடாது’ன்னு சொன்னேன். ஆனா, படத்துல நடிச்சுக்கிட்டிருக்கும்போது அவசரமா மூணு லட்சம் ரூபாய் தேவைப்பட்டதுன்னு கேட்டு வாங்கினேன். சீக்கிரமே அதைத் திருப்பிக் கொடுக்கணும்.

 அற்புதம்ங்கிற பாதிரியார் கேரக்டர்ல நான் நடிச்சிருக்கேன். சின்ன வயசுல எனக்குச் சோறு ஊட்டி, எனக்காகப் பாட்டு பாடி வளர்த்த ஒரு சொந்தக்கார அம்மாவோட பெயர் இது. ‘சூப்பர் டீலக்ஸ்’ல நான் எழுதிய கதைக்கு, நானே நடிக்கவும் செஞ்சிருக்கேன். ஒரு லாங் ஷாட். நீரவ்ஷா கேமராமேனா இருக்கார், ஜெபம் பண்ற ஒரு காட்சியில நடிச்சுக்கிட்டிருக்கேன். என் பக்கத்துல வர்ற நதியா மேடம் என் கன்னத்துல அறையுற  காட்சி. நதியா மேடம்கிட்ட ஒரிஜினலா அடிச்சிடுங்கன்னு சொல்லிட்டேன். நான் பண்ணுன மிகப்பெரிய தப்பு அதுன்னு அப்புறம்தான் தெரிஞ்சது. ஏன்னா, காலையில 9. 30 மணிக்கு ஆரம்பிச்ச இந்த ஷாட், மாலை 5 மணி ஆகியும் முடியலை. மொத்தம் நான் வாங்கியது, 56 அறை. முதல்முறை அறைஞ்சப்போ ‘ஸாரி’ கேட்ட நதியா மேடம், பிறகு பழகிட்டாங்க. ‘ஓ... ரியலாவே அடிச்சுட்டீங்களா, சூப்பர்’னு தியாகராஜன் ஷாட்டை கவனிக்கிற வேலையில பிஸியாயிட்டான். நான் அடிவாங்கிக்கிட்டே இருக்கேனேன்னு அவன் நினைச்சிருந்தா, ஷாட் ஓகேன்னு சொல்லியிருக்கலாம். ஆனா, அதைப் பண்ணலை. நானெல்லாம் தப்பை வெச்சுக்கிட்டுதான் படம் பண்றேன், அவன் அப்படியில்லை. கற்பனையான காட்சியா இருந்தாலும், உண்மையா இருக்கணும்னு உழைக்கிறான். அவன் பெரிய கலைஞன்! திரும்ப மறுநாள் காலையில ஆரம்பிச்சு, மதியம் வரைக்கும் ஒரு 70 அறை.

ஆனா, படத்துல இருந்து சில காரணங்களால நதியா மேடம் விலகிட்டாங்க. அதற்கான காரணத்தைக் கேட்டிருக்கானே தவிர, சமாதானப்படுத்தி நடிக்க வைக்கலை. கேட்டா, ‘எனக்கு ஒருத்தரைக் கட்டாயப்படுத்தப் பிடிக்காது’ன்னு சொன்னான். ரெண்டுநாள் ஷூட்டிங்கிற்கு அவனுக்கு, குறைந்தபட்சம் எட்டு லட்சம் செலவாகியிருக்கும். ரெண்டாவது படம் பண்ற இயக்குநருக்கு இது சிரமமான விஷயம். படத்துல நடிக்காமப்போனதுக்கு, நதியாவுக்கு முக்கியமான காரணம் இருந்தி ருக்கலாம். ஆனா, ‘கட்டாயப்படுத்த மாட்டேன்’னு தியாகராஜன் சொன்னது, ரொம்பப் பிடிச்சிருந்தது. தியாகராஜனை நான் சினிமாவுக்குள்ள இயங்குற போராளின்னு சொல்வேன். பிறகு, நதியாவுக்குப் பதிலா வேறொரு நடிகை வந்தாங்க. அவங்க கையால சில அறை வாங்கினேன். என் வாழ்க்கைல யாரும் என்னை இப்படி அடிச்சதில்லை. ‘இப்படி ஒரு வாழ்க்கை தேவையா, தற்கொலை பண்ணிக்கலாமா?’ன்னுகூட யோசிக்க ஆரம்பிச்சுட்டேன். சரி, இப்போ இதையெல்லாம் ஏன் சொல்றேன்னா... இத்தனை சம்பவம் நடந்தும், தியாகராஜன் எதையும் கண்டுக்காம, ஷாட் ஓகே பண்ற முனைப்புல இருந்தான். ஒரு சின்னக் காட்சிக்கே இத்தனை மெனக்கெடல் அவன்கிட்ட இருந்தது. அப்படினா, படம் எப்படி இருக்கும்னு நீங்களே யோசிச்சுக்கோங்க.” 

“70 அறை வாங்கினேன்!”

“ஷூட்டிங் ஸ்பாட்ல நீங்க மட்டும்தான் அடிவாங்குனீங்களா... மத்தவங்களுக்கும் விழுந்ததா?”

“தியாகராஜன் மேல எனக்கொரு விமர்சனமும் உண்டு. உதவி இயக்குநர்கள்கிட்ட கடுமையா நடந்துக்குவான். நான் ஷூட்டிங் ஸ்பாட்ல கெட்ட வார்த்தைகளை அதிகமா பயன்படுத்துவேன், அவன் அடிக்கிறான். என் பக்கத்துல இருந்த உதவி இயக்குநர் ஒருத்தர் முதுகுல சடார்னு ஒரு போடு போட்டான். பார்த்த எனக்கு மனசு கேட்கலை. அவரைத் தனியா கூட்டுக்கிட்டுப் போய், ‘இதெல்லாம் மனசுல வெச்சுக்காத. அவன் ரொம்ப நல்ல மனுஷன்டா, நல்ல படைப்பாளி’ன்னு சொன்னேன். ‘எங்க டைரக்டரைப் பத்தி எனக்குத் தெரியாதா சார்...’னு கேஷூவலா போயிட்டான். ஒருநாள் ஷாட் பிரேக்ல எனக்குத் தோணுன ஒரு பாட்டை ஹம் பண்ணிக்கிட்டிருந்தேன். ‘எப்படிப் பாடுனீங்களோ, அதை அப்படியே திரும்பப் பாடுங்க’ன்னு பக்கத்துல உட்கார்ந்துக்கிட்டான். அதை ஒரு பாட்டா எழுதிக் கொடுக்கச் சொன்னான். படத்துல பயன்படுத்திக்கிட்டான். ஏன் சொல்றேன்னா, வேட்டைக்காரன் மாதிரி. ஏதாச்சும் மாட்டும்னு வலை விரிச்சுக் காத்துக் கிடக்கிற படைப்பாளி, தியாகராஜன்.”

“விஜய் சேதுபதி, பகத் ஃபாசில்... படத்துல இவங்களோட காம்பினேஷன் சீன்ஸ் இருக்கா உங்களுக்கு?”


“ஒரே ஒருநாள் விஜய்சேதுபதிகூட ஒரு காட்சி இருந்தது. அங்கே நான் விஜய் சேதுபதியைப் பார்க்கலை. சினிமாவைத் தெளிவா புரிஞ்சுக்கிட்டு நடிக்கிற ஒரு நடிகனைப் பார்த்தேன். திருநங்கை கேரக்டரை ஒரு நடிகன் பண்ணினா எப்படி இருக்கணுமோ, அந்த லெவல் தெரிஞ்சு நடிச்சார். ரொம்ப கிரியேட்டிவான நடிகன். படத்துல நான் அவரை கிராஸ் பண்ணிப் போறமாதிரி ஒரு காட்சி இருக்கு, அவ்வளவுதான்.”

“உங்க படங்கள்ல வர்ற சென்னை மட்டும் டிராஃபிக் இல்லாத, பரபரப்புகளுக்குள் அடங்காத சென்னையா இருக்கே... ஏன் எதார்த்தமான சென்னையை நீங்கள் காட்டுவதில்லை?” 

“70 அறை வாங்கினேன்!”

“நான் சென்னைக்கு வந்து 30 வருடம் ஆச்சு. சினிமாவுல இருக்கிற யாராவது, என் அளவுக்கு சென்னையைப் பார்த்திருப்பாங்களானு தெரியாது. இங்கே எட்டு வருடம் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவா வேலை பார்த்தேன். என்னைப் பொறுத்தவரைக்கும் சென்னைக் கதையில, சென்னை டிராஃபிக்கும் பரபரப்பும் இருக்கணும்னு அவசியம் இல்லை. காட்சிக்கு எது தேவையோ, அது இருந்தால் போதும்.”
 
“ஒடுக்கப்பட்ட மக்களுடைய வாழ்வியலையும், வலியையும் பதிவு செய்கிற படங்கள் தமிழ் சினிமாவில் அதிகமாகியிருப்பதை எப்படிப் பார்க்குறீங்க?”

“நான் அதிகமா தமிழ்ப் படங்களைப் பார்க்கிறதில்லை. ஆனா, இப்படி ஒரு படம் வந்தது, போனதுன்னு தெரிஞ்சுக்குவேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியலைப் பேசுற படங்களை மக்கள் வரவேற்கிறதைப் பார்க்கும்போது, மக்களோட முதிர்ச்சி தெரியுது. மதம், சாதியின் பெயரால் சக மனிதரைத் தனக்குக் கீழேன்னு நினைக்கிற மனநிலை லாஜிக் மிஸ்டேக் மட்டுமல்ல, மூளை முடங்கிப்போனதுக்கு சமம். சினிமா மிக முக்கியமான வெகுஜன மீடியா. இதன்மூலமா, மக்கள் எல்லோரும் சமம்னு பயப்படாம சொல்றதை நான் வரவேற்கிறேன்.” 

“பாரதிராஜா, வெற்றிமாறன், பா.இரஞ்சித்... இப்படிப் பல திரைப் படைப்பாளிகளை சமூகப் போராட்டங்களில் பார்க்க முடியுது. மிஷ்கின் அப்படியான போராட்டங்கள் எதிலும் இல்லையே, ஏன்?”

“அனிதா மரணம் உட்பட சில இடங்கள்ல ரொம்ப கம்மியா பேசியிருக்கேன். நான் ஒரு கதை சொல்லி. சமூகத்தை உள்வாங்கி, அதை ஒரு கதையா சொல்லணும். களத்தில் இறங்கிப் பேசக்கூடாதுன்னு நினைக்கிறேன். அதுக்காக, எனக்குக் கோபம் வராமலோ, உணர்வுகள் எழாமலோ இல்லை. வேணும்னேதான் என் வாய்க்குப் பூட்டு போட்டுக்கிறேன்.  அதுக்காக மற்ற இயக்குநர்கள் போராடுவது தப்பான்னு கேட்டா, இல்லைதான். அவங்க, அவங்க வேலையைச் செய்றாங்க; நான், என் வேலையைச் செய்றேன்.

அனிதா மரண நிகழ்வுக்குப் போய்ப் பேசுனதுக்குக் காரணம், அந்த மரணம் கொடுத்த அதிர்ச்சிதான். அவளை என் மகளா பார்த்தேன். படிக்க முடியலையேன்னு ஒரு குழந்தை செத்துப்போச்சேன்னு போனேன். தவிர, சினிமாக்காரங்க என்ன பண்ணாலும், அது அரசியலுக்காகப் பண்றான்னு சொல்வாங்க. நான் சினிமாக்காரங்க அரசியலுக்கு வர்றதை விரும்புறதில்லை. அதனால, நானும் போறதில்லை.”

“ ‘சைக்கோ’ என்ன மாதிரியான படம்?”

“கடந்த பதினொரு வருடமா சைக்கோ பேத்தாலஜி பற்றிப் படிச்சுக்கிட்டிருக்கேன். ‘சைக்கோ’ங்கிற வார்த்தைக்குயை தமிழில் தப்பா பயன்படுத்தியிருக்காங்க. சின்ன வயசுல அன்பு இல்லாமையும், பண்பைச் சொல்லிக்கொடுக்காத காரணமும் இருந்தா, குழந்தைகள் அதுவே வாழ்க்கையைப் புரிஞ்சிக்க ஆரம்பிக்கத் தொடங்கும். அதுக்குப் பிடிச்ச விஷயத்தைப் பண்ணும். அதுக்கு நாம பயங்கரமான தண்டனையைக் கொடுக்கும்போது, அதை எதிர்க்க முடியாம வேறு பக்கம் தன் எதிர்வினையைக் காட்டுவாங்க. இதை நாம சரி பண்ணலைனா, எதிர்காலத்துல அந்தக் குழந்தை அரக்கனா வளரும். இதுதான் சைக்கோ பேத்தாலஜி எதிர்வினை. இதைத்தான் ‘சைக்கோ’வா பண்ணியிருக்கேன். குழந்தைகளை எப்படிப் பார்த்துக்கணும், அன்பு செலுத்தணும், திறமையைக் கண்டுபிடிக்கணும்னு எல்லாம் சொல்லியிருக்கேன்.”

“மீண்டும் இளையராஜாவுடன் கைகோத்திருக்கீங்க... அந்த மேஜிக் மொமென்ட் எப்படின்னு சொல்லுங்களேன்?!” 

“70 அறை வாங்கினேன்!”

“ ‘சைக்கோ’ கதையை எழுதி முடிச்சதும் ராஜா சார்கிட்ட போனேன். இந்தப் படம் மனித அவலத்தைப் பற்றிய படம். அதுக்குள்ள ஓர் அழகான காதல் கதை இருக்கு. மனசை வருடக்கூடிய காட்சிகளும் இருக்கு, அதி பயங்கரமான காட்சிகளும் இருக்கு. சுருக்கமா, இதை ஒரு மல்டி எமோஷன் ஃபிலிம்னு சொல்லலாம். இப்படி ஒரு படத்துக்கு இளையராஜா சார்தான் வேணும். நான் சினிமாவில் இருக்கிறதுக்கே ராஜா சார்தான் காரணம்னு கொஞ்சம்கூட வெட்கப்படாம சொல்வேன்.  மீண்டும் ஒருமுறை போஸ்டரில் ராஜா சார் பெயரை முதலில் போட்டிருக்கேன். அதுக்குக் கீழே பி.சி.ஶ்ரீராம், அதுக்கும் கீழே சின்னதா என் பெயர்...அதுதான் இந்தப் படத்துக்கான அழகியலா நான் பார்க்கிறேன்”

“உதயநிதியை இந்தப் படத்துக்கு ஹீரோவா தேர்ந்தெடுத்த காரணம்?”

“பலபேர் இந்தப் படத்துக்காக ஆடிஷன் வந்தாங்க, செட் ஆகலை. உதயநிதி ‘நாம பண்ணலாமா?’ன்னு கேட்டார். அதுக்கு முன்னாடி அவர் மனைவி கிருத்திகா என்கிட்ட கேட்டுக்கிட்டே இருப்பாங்க. என்கூட ஒரு படத்துல உதவியாளரா வொர்க் பண்ணவங்க கிருத்திகா. என் சகோதரி. அதனால, அவரையே நடிக்க வெச்சுட்டேன். சொல்றதைக் கேட்டு சிம்பிளா, சூப்பரா நடிச்சுக் கொடுத்திருக்கார், உதய்.  படத்துல அவர் பெயர், ‘கெளதமன்.’ இது ஒரு புத்தனின் கதையும்கூட.” 

 ‘`சினிமாவில் இதுவரை மறைமுகமாக இருந்த கதைத் திருட்டுச் சம்பவங்களெல்லாம் இப்போ வெளிவரத் தொடங்கியிருக்கு. சமீபத்துல ‘சர்கார்’ சர்ச்சை. ஒரு இயக்குநரா இதையெல்லாம் எப்படிக் கடக்குறீங்க?” 

“என்னைக்கூட ‘நந்தலாலா’ படத்தைத் திருடி எடுத்துட்டார்னு சொன்னாங்க. ஆனா, வரலாறு அது திருட்டா, இன்ஸ்பிரேஷனான்னு சொல்லும். என்னால ஹிட்ச்காக், குரசோவா மாதிரியான இயக்குநர்களோட படைப்புகள் இல்லாம வாழவே முடியாது. எனக்கு சினிமா கத்துக்கொடுத்தது அவங்கதான். ‘நந்தலாலா’ பண்ணும்போது என் அண்ணனைத்தான் அந்தப் படத்துல பார்த்தேன். மனநோயால் பாதிக்கப்பட்டு என் அண்ணன் இறந்து போனார். அதைத்தான், படமா எடுத்தேன். என் ஆபீஸுக்குப் பலரும் கதைகளை அனுப்புறாங்க. அதையெல்லாம் நான் பிரிச்சுக்கூடப் படிக்காம, சம்பந்தப்பட்டவங்களுக்கே திருப்பி அனுப்பிடுவேன். என் உதவி இயக்குநர்கள்கிட்ட நான் என்னைக்கும் கதை கேட்டது கிடையாது. நானே அவங்ககிட்ட, ‘நீங்கெல்லாம் டைரக்டர் ஆயிட்டா, என்னை அசிஸ்டென்ட்டா சேர்த்துக்கோங்க’ன்னு சொல்வேன். ஏன்னா, என் குழந்தைகள் எங்கேயும் தோற்றுப்போயிடக்கூடாது. மத்தபடி, கதைத் திருட்டு என்பது மனித அவலம். இதுக்காக பரிதாபப்படுறேன். ஆனா, உண்மை என்னன்னு தெரியல. முருகதாஸ் கமர்ஷியல் இயக்குநர். ‘சர்கார்’ விஷயத்துல என்ன நடந்ததுன்னு எனக்கு முழுசா தெரியாது. உதவி இயக்குநர்கள் மூலமா தெரிஞ்சுக்கிட்டேன். கஷ்டமாதான் இருந்தது. என்கிட்டயே நிறைய கதைகள் இருக்கு. கேட்டா கொடுத்திருப்பேன். அதனால, இதைப் பற்றிப் பெருசா பேசத் தேவை யில்லை. ஏன்னா, மனிதர்கள் இருக்கிறவரைக்கும் திருட்டு நடக்கும். அதைத் தடுக்க முடியாது.” 

கே.ஜி.மணிகண்டன், சனா - படங்கள்: க.பாலாஜி