Published:Updated:

தன்மானம் அவமானம் வெகுமானம் - 5

தன்மானம் அவமானம் வெகுமானம் - 5
பிரீமியம் ஸ்டோரி
News
தன்மானம் அவமானம் வெகுமானம் - 5

தன்மானம் அவமானம் வெகுமானம் - 5

பிரபலங்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்த, கண்ணீரும் புன்னகையும் கலந்த சம்பவங்களைப் பகிரும் பகுதி இது. இந்த வாரம் நடிகை லட்சுமி

தன்மானம் 

தன்மானம் அவமானம் வெகுமானம் - 5

நான் ஒன்பதாம் வகுப்பு படிச்சுட்டிருந்தப்போ எங்க பள்ளி நாடகத்தில் எனக்கு சாவித்திரி வேடம். கணவர் சத்தியவான் இறந்துவிட, அவர் மேல விழுந்து அழணும். டீச்சர் எவ்வளவோ சொல்லிக்குடுத்தும் எனக்கு அழத்தெரியலை. ‘கதறி அழு’ன்னாங்க டீச்சர். “புருஷன் செத்துட்டா பொண்டாட்டி எப்படி அழுவாங்கன்னு தெரியாது டீச்சர். எங்க வீட்ல வளர்த்த நாய் போனவாரம் செத்துப்போச்சு. அதை நினைச்சுட்டு அழட்டுமா டீச்சர்?”ன்னு கேட்டேன். நெஜமாவே தெரியாமத்தான் கேட்டேன். டீச்சர் எல்லார் முன்னாடியும் என்னைத் திட்டி, “நீ டிராமா குரூப்ல வேணாம். டான்ஸ் குரூப்புக்குப் போ”ன்னு அனுப்பிச்சுட்டாங்க. அப்போ நடிப்பே வராதவங்களை அப்படி மாத்திவிடுவாங்க. நான் வீட்ல ஒரே பொண்ணுங்கறதால வைராக்கியம் ஜாஸ்தி. அதுக்கப்புறம் நடிப்பு சம்பந்தமா நிறைய கவனிக்க, படிக்க ஆரம்பிச்சேன். அதே வருஷம் ஆண்டுவிழா நாடகத்துல முக்கியமான கேரக்டர் பண்றேன்னு கேட்டு வாங்கி, நடிச்சேன்.

ஆர்.ஆர்.சபாவில் அந்த நாடகம் நடந்துச்சு. நான் நடிக்க வேண்டிய சீன் வந்ததும், என்னைத் திட்டின டீச்சர் என்னையவே பார்த்துட்டிருந்தாங்க. நான் போய் எதையும் யோசிக்காம நடிக்க ஆரம்பிச்சேன். அவ்ளோதான்... நான் நடிச்சதைப் பார்த்து, அந்த டீச்சர்ல இருந்து ஆடியன்ஸ் அத்தனை பேரும் எழுந்து நின்னு கைதட்டினது இப்பவரைக்கும் ஞாபகம் இருக்கு.

‘பாகுபலி’ இயக்கிய ராஜமெளலியோட குருநாதர் ராகவேந்தர் சார் இயக்கிய முதல்படத்தின் ஹீரோயின் நான்தான். மைசூரைத் தாண்டி ஜன நடமாட்டமே இல்லாத காட்டுக்குள்ளே ஷூட்டிங். படத்தோட தயாரிப்பாளருக்கு மனிதநேயம் மருந்துக்குக்கூடக் கிடையாது. பணத்தை மிச்சம் பண்ண என்ன வேணும்னாலும் பண்ணுவார். ஒருநாள் ஷூட்டிங், மதிய உணவுக்கு பிரேக்கே விடாம நடந்துட்டே இருந்தது. மதியம் மணி மூணுக்கு மேல ஆகியும் பிரேக் விடலை. என்கூட இருந்த டெக்னீஷியன்ஸ், ‘‘மேடம்... நீங்க ஹீரோயின். நீங்களாவது கேளுங்க. உங்களுக்கே சாப்பாடு இன்னும் வரலை”ன்னு சொன்னாங்க. எனக்கும் பசி. அப்போ அந்தத் தயாரிப்பாளர் ஒரு பையில வாழைப்பழமும், இன்னொரு பையில் நிலக்கடலையும் வெச்சுக்கிட்டு, அதைக் கொறிச்சுட்டே “மணி மூணுக்கு மேல ஆச்சு. இனிமே சாப்பாடு வராது. ஒரேடியா ஹோட்டலுக்குப் போய் ஏழு மணிக்கு மேல சாப்பிட்டுக்கலாம்”னார். எனக்குப் பசியோட உக்கிரம் தலைக்கேற, “என்ன சார்... இத்தனை பேர் பசில இருக்கோம். நீங்க எதையோ தின்னுகிட்டே இப்படி வேற சொல்றீங்களே... நியாயமா?’’ன்னு கேட்டுட்டேன். “நடிக்கறதுக்குத்தானே சம்பளம் வாங்கறீங்க? பசி, தாகம்லாம் பார்க்காம நடிச்சுட்டுப் பேசாம போய்ட்டே இருக்கணும்” அப்டின்னார் அவர்.

தன்மானம் அவமானம் வெகுமானம் - 5

அந்த வார்த்தைகள் என் சுயமரியாதையைச் சுட்டது. கையிலிருந்த விசிறியைத் தூக்கி எறிஞ்சுட்டு, கார்ல ஏறி சென்னைக்கு விடச் சொன்னேன். இரவு 12 மணிக்கு வீட்டுக்கு வந்த என்னை அம்மாவும் பாட்டியும் ஆச்சர்யமா பார்த்தாங்க. அப்போதிலிருந்து, இப்ப நிறைய டிவி ஷோ பண்ற இந்தக் காலம் வரைக்கும் என் தன்மானத்தைத் தொட்டுப்பார்க்கிற எதுவா இருந்தாலும் நான் பொறுத்துக்கிட்டது கிடையாது. 

அவமானம்

அவமானத்தின் சுவட்டைத் தொடாமல் ஒருத்தருக்கு வெகுமானம் கிடைப்பது அரிதுன்னு நம்பறேன். ஏழை, பணக்காரன்னு யாரா இருந்தாலும் அவமானத்தின் நிழல் அவங்க மேல ஒரு கட்டத்துல படியும். அதை, முறையா அணுகி மாத்தத் தெரிஞ்சவங்க வெகுமானத்தை ரசிக்கறாங்க.

பசி, உணவு விஷயத்துல அவமானத்தை எதிர்கொள்ளாத ஒரு சினிமாக்காரரைப் பார்ப்பது ரொம்ப அரிது. ஒருமுறை நானும் சோபன்பாபுவும் நடிக்கும் தெலுங்குப் படத்தில் ஷூட்டிங் வெளியூரில் நடந்துச்சு. அவுட்டோர் என்பதால் அதிகாலையிலேயே எழுந்து குளிச்சுக் கிளம்பிட்டேன். ஹோட்டல் வாசல்ல ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போற கார் வந்திருந்தது. எனக்குப் பசி. அவசரமா ஒரு சாண்ட்விச்சை கையில எடுத்துட்டே கார்ல ஏறப்போனேன். எங்கிருந்தோ வேகவேகமா வந்த தயாரிப்பாளர் என் கையில் இருந்த சாண்ட்விச்சைத் தட்டிவிட்டார். எனக்கு அவமானத்துல கண் கலங்கி அழுகை வர ஆரம்பிச்சது. கூடவே கோபமும். ஆனா, என் பக்கத்துல இருந்த சோபன்பாபு என்னைக் கவனிச்சு “நீ வருத்தப்படாதே... ஷூட்டிங் ஸ்பாட்ல பார்த்துக்கலாம்”னு சொல்லி என்னைக் காருக்குள்ள தள்ளி, டிரைவரை வண்டி எடுக்கச் சொல்லிட்டார். 

தன்மானம் அவமானம் வெகுமானம் - 5

அதைவிடக் கொடுமை என்னன்னா, அந்தப் படத்துல நடிச்சதுக்கு அந்தத் தயாரிப்பாளர் கொடுத்த காசோலை பவுன்ஸ் ஆகிருச்சு. அந்தத் தயாரிப்பாளர்னு இல்லை. பலர் கொடுத்த காசோலைகள், வெறும் காகிதமா வீட்டிலேயே இருக்கும். சிலர் காசோலைகூடத் தராம, கடைசி நாள் படப்பிடிப்பு முடிஞ்சதும், “காசா கொடுத்தனுப்பறேன் மேடம்”னு சொல்லி அனுப்பிடுவாங்க. அப்போவெல்லாம் நடிகைகள் உடைமாற்றிக்கக்கூட கேரவன் மாதிரி வசதிகள் கிடையாது. கிடைச்ச இடத்துல உடை மாற்றுவோம். மழை வெயில், ராத்திரி பகல்னு பார்க்காம நடிச்சுட்டு வர்ற எங்களுக்கு இந்த மாதிரி தயாரிப்பாளர்கள் கொடுக்கிற செல்லாத செக் எல்லாமே, எங்கள் உழைப்பை அவமதிக்கிற அவமானச் சின்னங்கள்தான்! 

வெகுமானம்

அப்போ தமிழ்சினிமாவில் இருந்த எல்லா நட்சத்திரங்களுக்குமே எழுத்தாளர் ஜெயகாந்தன்னாலே நிறைய அன்பும் மரியாதையும் இருந்தது. அவரோட பரம ரசிகை நான். அவர் எழுத்துல உருவான ஒரு கதையிலாவது நடிக்கணும்கறது பல நடிகைகளோட கனவா இருந்தது. அந்தச் சமயத்திலதான் அவரோட எழுத்தில் உருவான ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவல் திரைப்படமாகுதுன்னு பேசிட்டிருந்தாங்க. யார் நடிக்கப்போறாங்கன்னு சினிமா உலகமே எதிர்பார்த்திருக்க, அந்த வாய்ப்பு எனக்கு வந்தது.

அந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் நான் நடிக்கும் காட்சி படமாக்கப்படும்போது, ஜெயகாந்தன் படப்பிடிப்புத் தளத்துக்கு வந்திருந்தார். என்னோட ஒவ்வொரு நடிப்பு பாவத்தையும் உற்று  கவனித்துக்கொண்டே இருந்தார். எனக்கு ஒரு மாதிரி பயமாவே இருந்தது. கட் சொன்னதும் அவர் என்னை நோக்கி வந்தார். என்ன சொல்லப்போறாரோன்னு நின்னுட்டிருந்தேன்.  என் அருகில் வந்தவர்  ‘இப்படிலாம் எல்லோரையும் அழவெச்சா எப்படி? வெரிகுட் வெரிகுட்! என்னோட கங்காவ உன்னோட முகத்துல பார்த்துட்டேன்’ என்று அவர் சொல்லச் சொல்ல எனக்கு வார்த்தையே வரலை. ஒரு கட்டத்துல நெகிழ்ச்சி தாங்காமல், கண்ணில் நீர் பெருக்கெடுத்தது. ஷூட்டிங் ஸ்பாட்டில் சுத்தி இருக்கறவங்க கைதட்டினாலே அதை அவார்டா நினைக்கறவ நான். ஒரு படைப்பை உருவாக்கின பிரம்மாவே, அவருடைய கதாபாத்திரமா என்னை அங்கீகரிச்சுட்டார்ங்கறது எவ்வளவு பெரிய வெகுமானம்! ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைப்படத்துக்கு எனக்குத் தேசியவிருது கிடைச்சப்போ அதை அந்தப்பட யூனிட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் டெடிகேட் பண்ணினேன்.  வழக்கமா   விருதுகள் வாங்கும்போது சாதிச்சுட்டோம்னு மமதை எனக்கு வராது. இன்னும் நிறைய உழைக்கணும் என்கிற உத்வேகத்தைத்தான் கொடுக்கும்.  

தன்மானம் அவமானம் வெகுமானம் - 5

பல படங்கள்ல நடிக்கும்போது  ‘நான் எதிர்பார்த்த மாதிரி உங்களோட கேரக்டருக்கு உயிர் கொடுத்திருக்கீங்க’  என்று அந்த இயக்குநர்கள்கிட்ட பாராட்டு  வாங்கியிருக்கேன். ஆர்.சி.சக்தி இயக்கத்துல வெளிவந்த ‘சிறை’ படத்தில் நடிச்சது புது அனுபவம். தன்மானம், அவமானம் ரெண்டுலயுமே  பசி பற்றிய என்னோட உணர்வைச் சொல்லியிருக்கேன். வெகுமானமும் அது சம்பந்தமானதுதான்.  ‘சிறை’  படத்துல ஒரு காட்சியில் சாப்பாட்டுக்குக் கஷ்டப்படும் கேரக்டரில் நடிச்சிருப்பேன். அந்தக் காட்சியில  ராஜேஷோட அசிஸ்டென்ட்டாக நடிக்கும் ஐசரிவேலன் என்னிடம் வந்து  ‘ என்னம்மா பசிக்குதா? எப்போ சாப்பிட்டே?’ன்னு கேள்வி கேட்பார். அப்போ, ‘உங்க ஐயா என் உடம்பைச் சாப்பிட்டப்போ,  சாப்பிட்டேன்பா... அதுக்கப்புறம் இன்னும் சாப்பிடலை, பசிக்குது’ன்னு சொல்லிட்டு, கதறி அழுவேன். அப்போ  ஒரு ரொட்டியை எடுத்துவந்து என்னிடம் கொடுப்பார். அதைப் பிச்சுச் சாப்பிட்டுட்டே அழுவேன்.

டைரக்டர் ஆர்.சி.சக்திசார்  இயல்பாகவே எமோஷனலான மனிதர். சின்னச்சின்ன விஷயத்துக்கு எல்லாம் அழுதுடுவார். இந்தக் காட்சி நான் நடிச்சதும், அவர் ஓடிவந்து ‘லஷ்மிம்மா... சத்தியமா சொல்றேன்... இந்த பாகிரதி கேரக்டரை உன்னைத்தவிர வேறு யாராலயும் செய்யவே முடியாதும்மா...’ என்று கைகூப்பி என்முன்னாடி நின்னுட்டார்.

சமீபமா, பெரிய வெகுமானமா ஒண்ணை நினைக்கிறேன். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளான்னு எங்க போனாலும் ரொம்ப சின்ன வயசுப் பெண்கள் என்கிட்ட ஓடிவந்து “மேடம்... உங்க படங்கள் டிவில போடறப்பல்லாம் பார்த்து ரசிச்சிருக்கோம். நீங்க ஏன் நிறைய படங்கள்ல இப்ப  நடிக்க மாட்டீங்கறீங்க?”ன்னு கேட்பாங்க. அவங்க ஆதங்கம்தான் என்னை மாதிரி சீனியர் நடிகைக்கு வெகுமானம்!

எம்.குணா - படங்கள்: க.பாலாஜி