Published:Updated:

மாற்று சினிமாவுக்கான விதையை விதைத்தவர்... பெங்காலி சினிமாவின் சிகரம் மிருணாள் சென்னின் அறியாப் பக்கங்கள்!

மாற்று சினிமாவுக்கான விதையை விதைத்தவர்... பெங்காலி சினிமாவின் சிகரம் மிருணாள் சென்னின் அறியாப் பக்கங்கள்!
மாற்று சினிமாவுக்கான விதையை விதைத்தவர்... பெங்காலி சினிமாவின் சிகரம் மிருணாள் சென்னின் அறியாப் பக்கங்கள்!

மாற்று சினிமாவுக்கான விதையை விதைத்தவர்... பெங்காலி சினிமாவின் சிகரம் மிருணாள் சென்னின் அறியாப் பக்கங்கள்!

இந்திய சினிமாவின் பிதாமகர்களில் ஒருவரான மிருணாள் சென் வயது மூப்பு காரணமாக இன்று காலை கொல்கத்தாவில் மரணமடைந்தார். மிருணாள் சென் இந்திய திரையுலகின் தவிர்க்க முடியாத ஆளுமை. இதுவரை நான்கு மொழிகளில் 30 படங்களை இயக்கியுள்ளார். ஆனால், இந்தப் படங்களில் பெரிய நட்சத்திரங்கள் இருக்கமாட்டார்கள். கதை மட்டுமே ஹீரோ என்பதை ஆணித்தரமாக நம்பி பல உன்னதமான படைப்புகளை வழங்கியவர். பெண் விடுதலைக் குறித்து தற்போது அதிகமாகப் பேசப்பட்டு வரும் நிலையில், 1980-களிலேயே பெண்கள் மீது இந்தச் சமூகம் என்ன பார்வை கொண்டிருக்கிறது என்பதை அப்பட்டமாக எடுத்துரைத்து பெண்கள் கலாசரத்தை மாற்ற உதவிக்கரமாக இருந்தவர். 95 வயதான இவர் கடந்த சில நாள்களாகவே உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், இன்று காலை கொல்கத்தாவில் உள்ள தனது வீட்டில் மரணமடைந்தார். அவரது மறைவால் இந்திய திரையுலகம் சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்திய சினிமாவின் பிதாமகன் சென்னின் வாழ்க்கை வரலாற்றைப் பார்ப்போம்.

'மிருணாள் டா’ என்று அன்புடன் அழைக்கப்படும் மிருணாள் சென், கொல்கத்தா பல்கலைக்கழக மாணவராக இருந்த காலத்தில், கம்யூனிஸ்ட் கட்சியின் கலாசாரப் பிரிவில் தொண்டரும்கூட.

ஆரம்பத்தில் `மெடிக்கல் ரெப்’ ஆகச் சில காலம் அலைந்துவிட்டு, பிறகு ஆடியோ டெக்னீஷியனாக சினிமாவில் சேர்ந்தார் சென். 1955-ல் சாதாரண நடிகராக இருந்த உத்தம் குமாரை நாயகனாகக்கொண்டு,  'ராட்போர்’ என்ற படத்தை இயக்கினார் சென். படம் ஓடவில்லை. அடுத்து `நீல் ஆகாஷெர் நீச்சே’ என்ற படத்தை இயக்கினார். இந்தியாவின் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தின் இறுதித் தருணங்களில் ஓர் இந்தியப் பெண்ணுக்கும் புலம்பெயர்ந்த சீனக் கூலிக்கும் இடையிலான அன்பைச் சொல்லும் அந்தப் படத்தின் பின்னணியில் அரசியல் நெடி தூக்கலாக அமைந்திருந்தது. இதனாலேயே, இந்திய அரசாங்கம் தடை செய்த முதல் படமானது அந்தப் படம். இரண்டு வருடங்களுக்கு இந்தத் தடை நீடித்தது. அடுத்தடுத்தும் அரசியல் பேசும் படங்களையே இயக்கினார் சென்.

சென்னின் படத்தைத் தடை செய்த அதே இந்திய அரசுதான் 1964-ல் இந்தியாவின் 5,000 ஆண்டுக் கால வரலாற்றை ஆவணப் படமாக எடுக்கச் சொல்லி அவரிடமே வந்து நின்றது. `மூவிங் பெர்ஸ்பெக்டிவ்ஸ்’ என்று தலைப்பிட்டு, அந்தப் படத்தை இயக்கினார்.

`ஃபனா’, `தோபி காட்’, `கஹானி’ போன்ற சமீபத்திய படங்களில் கதை நிகழும் நகரங்களும் கதாபாத்திரமாகின. இப்படியான படங்களுக்குப் பாதை அமைத்தது சென்தான். அவருடைய `இன்டர்வியூ’, `பதாதிக்’, `மஹாபிரித்வி’ போன்ற பல படங்களில் கொல்கத்தா ஒரு கதாபாத்திரமாகப் படம் முழுக்க நிறைந்திருக்கும். சென்னின் முதல் படத்தில் நடித்த உத்தம் குமார், பிறகு வங்காள சினிமாவின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்தார். ஆனால், சென்னுக்கு எப்போதும் ஹீரோக்கள் தேவைப்பட்டதே இல்லை. கதைதான் அவருக்கு ஹீரோ!

தேர்ந்த வாசிப்பு அனுபவம் மிக்கவராக இருந்ததால்தான் புகழ்பெற்ற வங்காள எழுத்தாளரும் சென்னின் நண்பருமான சுபோத் கோஷின் `கோத்ரன்டா’ கதையை `ஏக் அதூரி கஹானி’ என்ற படமாக எடுக்க முடிந்தது.

இவரின் பல படங்கள் பெர்லின், வெனிஸ், மாஸ்கோ, சிகாகோ, கெய்ரோ எனப் பல உலக அளவிலான திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல்வேறு விருதுகளை வென்றிருக்கின்றன. இவருடைய `காந்தர்’ திரைப்படம் மட்டுமே 1984 மற்றும் 2010 ஆகிய வருடங்களில் கேன்ஸில் இரண்டு முறை திரையிடப்பட்டிருக்கின்றன. ஓர் இயக்குநரின் பெருமையை உணர்த்த இதைவிட வேறென்ன அங்கீகாரம் வேண்டும்.

`திரைப்பட இயக்குநர்கள் எல்லாம் சமூக விஞ்ஞானிகளாகவும் இருக்க வேண்டும்'' என்று எப்போதும் தன் மாணவர்களிடத்தில் சொல்வார் சென். சொல்வதோடு மட்டும் அல்லாமல், தன் சொற்களுக்கு ஏற்றபடியே வாழ்ந்துவந்தார் என்பதுதான் மற்றவர்களிடம் இருந்து இவரைத் தனித்துவப்படுத்துகிறது. மிருணாள் சென் இந்தியர் ஒவ்வொருவரும் அறியப்பட வேண்டிய மகாகலைஞர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

அடுத்த கட்டுரைக்கு