Published:Updated:

"வசனமில்லா `மெர்க்குரி', விண்வெளி சினிமா, 4டி சவுண்ட்... 2018-ன் `அட' சினிமாக்கள்!" #Rewind2018

"வசனமில்லா `மெர்க்குரி', விண்வெளி சினிமா, 4டி சவுண்ட்... 2018-ன் `அட' சினிமாக்கள்!" #Rewind2018
"வசனமில்லா `மெர்க்குரி', விண்வெளி சினிமா, 4டி சவுண்ட்... 2018-ன் `அட' சினிமாக்கள்!" #Rewind2018

கைச்சுவை, த்ரில்லர் படங்கள் தவிர்த்து, தமிழ் சினிமாவைத் தரத்திலும் சரி, தொழில்நுட்பத்திலும் சரி, புதுமையான முயற்சிகளால் தூக்கி நிறுத்தும்படியாக 2018-ஆம் வருடம் சில படங்கள் வந்தன. அப்படி, நம்மை எல்லாம் அசரவைத்த சில `வாவ்' சினிமாக்களின் தொகுப்பு இது!

மெர்க்குரி:

30 வருடங்களுக்கு முன்பு வந்த கமலின் `பேசும்படம்' படத்துக்குப் பிறகு, வசனமே இல்லாத மெளன மொழித் திரைப்படம், `மெர்க்குரி'. மெர்க்குரி ஆலை கசிவால் பாதிக்கப்படும் மனிதர்களின் கதையை, அவர்களுக்கு ஏற்படும் குறைபாடுகளை மையமாகக் கொண்டு பிரசாரத் தொனி இல்லாமல், சைலன்ட் த்ரில்லர் படமாக உருவாக்கி அசத்தியிருந்தார், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். `மெர்க்குரி' வசனம் இல்லையென்றாலும், இசையும், ஒலிப்பதிவும் படத்தைத் துல்லியமாக ரசிகர்களுக்குக் கடத்தியது.

சில சமயங்களில்:

தமிழ்நாட்டில் முதன்முறையாகத் திரையரங்குகளில் வெளியிடாமல், நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் இணையதளத்தில் வெளியானது, ப்ரியதர்ஷன் இயக்கிய `சில சமயங்களில்' திரைப்படம். ஒரே நாளில், எய்ட்ஸ் பரிசோதனை செய்துகொண்டு, அதன் முடிவுக்காகக் காத்திருக்கும் சில மனிதர்களின் பதற்றம், சிரிப்பு, அழுகை... என ஒரு லேப் ஒன்றில் நடக்கும் கதை. எய்ட்ஸ் குறித்த விழிப்பு உணர்வு பார்வையுடன், சுவாரஸ்யமாகவும் எமோஷனலாகவும் `சில சமயங்களில்' படத்தைக் கொடுத்திருந்தார்கள். முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த பிரகாஷ் ராஜ் மொத்தப் படத்தையும் தாங்கி நின்று சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். 

டிக் டிக் டிக்:

இந்தியாவின் முதல் விண்வெளிப் படம், இசையமைப்பாளர் இமானுக்கு 100-வது படம், நடிகர் ஜெயம் ரவியின் மகன் ஆரவ் அறிமுகம் ஆன படம்... எனப் பல சிறப்பம்சங்களுடன் இந்த ஆண்டு வெளியானது, `டிக் டிக் டிக்' திரைப்படம். விண்கல் ஒன்றை விண்வெளியில் வைத்தே அழிக்கும் கதை. லாஜிக்கை எல்லாம் ஸ்பேஸுக்குச் செல்லும் ராக்கெட்டில் ஓர் ஓரமாக மூட்டைக் கட்டி வைத்துவிட்டு, தமிழக மக்களைக் காப்பாற்ற போராடும் விண்வெளி வீரர்களின் சாகசப் பயணமாக இந்தப் படத்தை இயக்கியிருந்தார், சக்தி செளந்தர்ராஜன். 

2.0:

இந்தியாவிலேயே அதிக பொருள்செலவில் தயாரான திரைப்படம் என்ற பெருமையுடன், சுமார் 10,000 திரையரங்குகளில் வெளியானது, ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கிய `2.0' திரைப்படம். ஹாலிவுட் படங்களுக்கு இணையான தரம் மற்றும் தொழில்நுட்பத்தில் `2.0' படத்தைக் கொடுத்திருந்தது, படக்குழு. மேலும், `இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமானது கிடையாது' என்னும் அழகிய கருத்தை டெக்னாலஜி துணையோடு மிரட்டலாகப் பதிவு செய்திருந்தது, `2.0'. 3D எஃபெக்ட், முதல் முறையாகப் பயன்படுத்தப்பட்ட 4டி சவுண்ட் தொழில்நுட்பம்... எனப் படத்தின் புதுமைகள் ரசிகர்களைக் கட்டிப்போட்டன.

கனா:

ஆண்கள் கிரிக்கெட்டை மட்டுமே பதிவு செய்து வந்த தமிழ்த் திரையுலகில், முதன்முறையாகப் பெண்கள் கிரிக்கெட்டைப் பதிவு செய்த படம், `கனா'. ஸ்போர்ட்ஸ் படங்களுக்கே உரிய டெம்ப்ளேட்டில் படம் எடுக்கப்பட்டிருந்தாலும், அதை மட்டுமே வலிந்து திணிக்காமல், விவசாயிகள் நலனையும் முன்னிறுத்திப் பேசியதில், தனித்துத் தெரிந்தது இந்தக் `கனா'. 

மேலே சொன்ன படங்கள் மட்டுமல்லாது, காட்சிப்படுத்துதல் அடிப்படையிலும், வித்தியாசமான முறையில் ஸ்லாப்ஸ்டிக் காமெடியைச் சொன்ன `சவரக்கத்தி', புதுமையான கதையைக் கையில் எடுத்த `பஞ்சுமிட்டாய்' போன்ற படங்களும் கவனம் பெற்றது. இந்த ஆண்டு இதுபோன்ற புதுமைகள் உங்களையும் கவர்ந்திருந்தால், அந்தப் படங்களைக் குறித்து கமென்ட் பாக்ஸில் பகிர்ந்துகொள்ளலாமே!