Published:Updated:

"தமிழ்ச் சமூகத்தின் அத்தியாவசியக் கலைஞன்!" - பிறந்தநாள் வாழ்த்துகள் பாலாஜி சக்திவேல்

விகடன் விமர்சனக்குழு
"தமிழ்ச் சமூகத்தின் அத்தியாவசியக் கலைஞன்!" - பிறந்தநாள் வாழ்த்துகள் பாலாஜி சக்திவேல்
"தமிழ்ச் சமூகத்தின் அத்தியாவசியக் கலைஞன்!" - பிறந்தநாள் வாழ்த்துகள் பாலாஜி சக்திவேல்

இயக்குநர் பாலாஜி சக்திவேல் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை.

ரசியலைவிட இந்த உலகத்தில் பெரிதும் ஆதிக்கம் செலுத்திய ஒன்று கலை. அதை உணர்ந்தே அனைத்து கோட்பாட்டாளர்களும் அதை அரவணைத்துச் செல்லவே விரும்பினார்களின்றி, நிராகரிக்கவில்லை. காலத்தின் இயங்கியலையும், கலாச்சாரப் பண்புகளையும் முன்னே காட்டும் மாயப் பூதம் கலை. தன் சூழலின் பரிமாணங்களையும், அதன் விளைவுகளையும் கலையின் வழியே எவன் ஒருவன் சமரசமற்று வழங்குகிறானோ, அவனே 'கலைஞன்' எனப்படுகிறான். இதனுடன் அனைத்து விதங்களிலும் பொருந்திப்போகிறவர், இயக்குநர் பாலாஜி சக்திவேல். 

தமிழ் சினிமா காலத்திற்கேற்ப அப்போதைய பிரதான விஷயங்களில் கவனம் செலுத்தி வந்துள்ளது. விடுதலைக்கு முன்புவரை சுதந்திர வேட்கை. பிறகு அரசியல், பகுத்தறிவு சார்ந்த திரைப்படங்கள், 80-களில் கிராமம் மற்றும் நகரக் கட்டமைப்புகளின் யதார்த்தவியல்... என்றிருந்த சினிமா, 90-களுக்குப் பிறகு அதிகம் காதல், கல்லூரியைப் பற்றி பாடமெடுத்தது. இன்றுவரை, 'இது ஒன்னும் சினிமா இல்ல' எனப் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கண்டிக்கக் காரணமானது, சினிமாவில் உள்ள கல்லூரி மற்றும் மாணவர்களின் மாயத் தோற்றங்களே! பெரும்பாலானவை நாம் காணும் நடைமுறைக்கு முற்றிலும் நேர்மாறாகவே திரையில் தோன்றின. மேலும், கல்லூரி என்ற பதம் நகரம் மற்றும் அதைச் சார்ந்தவர்களானதே என்று இங்குக் காட்டப்பட்டது. அதையெல்லாம் உடைத்து, படத்தின் ஏதாவது ஒரு பாத்திரம் தானாகப் பொருத்திப் பார்க்கும் அளவிற்கு யதார்த்தைதைப் பிரதிபலித்தது, பாலாஜி சக்திவேல் இயக்கிய 'கல்லூரி'.  

2000-ஆம் ஆண்டு நடந்த தருமபுரி பஸ் எரிப்பு கலவரம் 'கல்லூரி' படத்தின் மையக்கரு. இறந்த மூன்று மாணவிகளுக்குப் பின் உள்ள கனவு, லட்சியம், நட்பு எனக் கற்பனையில் தனது சமூக சிந்தனையினால் கல்லூரியைக் கற்க வைத்திருப்பார், இயக்குநர் பாலாஜி சக்திவேல். 'பெண்களை மையமாக வைத்து எடுக்க வேண்டும் என்றுதான் நான் முதலில் நினைத்தேன். ஒரு நிர்பந்தத்தின் காரணமாக, 'சாமுராய்' இயக்கினாலும், அதிலும் பெண் பாத்திரத்தையே முதன்மைப்படுத்தியிருப்பேன்' என்று கூறும் பாலாஜி சக்திவேல், 'கல்லூரி' திரைப்படத்தின் மூலம் தன் விருப்பத்தை நிறைவு செய்தார். 

காதல் என்பதற்கு இங்குப் பல வரைமுறைகள் வழங்கப்பட்டிருக்கும்போது, காதல் மற்றும் அதன் சூழலின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தைப் பிரதிபலித்தது, 'காதல்' திரைப்படம். ஐஸ்வர்யா இல்லம், சென்னை நகரம், திருவல்லிக்கேணி மேன்சன், பதிவுத் திருமண வழிமுறைகள்... என அனைத்தும் கச்சிதமான யதார்த்தங்கள். 'நீ என்ன நிஜமாவே லவ் பண்றியா ஐஸு' என்று முருகன் பாவமாகக் கேட்பது முதல் 'ங்கெங்கே ங்கெங்கே' என்று திடுக்கிட வைக்கும் காட்சிவரை உருக்கங்களைக் கடத்தியது, 'காதல்'. கதை கேட்ட அனைத்துத் தயாரிப்பாளர்களும் இறுதிக்காட்சியை மட்டும் மாற்றச் சொன்னார்கள். இறுதியில் தயாரிப்பாளர் ஷங்கர் ஒப்புக்கொள்ள அது இருந்தே ஆகவேண்டும் என்ற பிடிவாதத்தில் அமைத்தேன். எது நடக்கக்கூடாது என்று 'காதல்' படம் எடுத்தேனோ, அது இன்றும் ஒழிந்தபாடில்லை என்று வருத்தப்பட்டுள்ளார், பாலாஜி சக்திவேல். 

இந்த சமூகக் கட்டமைப்பில் உயர் வகுப்புத் திமிரும், அதிகார வர்க்கமும் எந்தளவிற்கு உண்மையோடும் அப்பாவி மக்களின் வாழ்வியலோடு விளையாடுகிறது என்பதன் நேர்த்தியான படைப்பு, 'வழக்கு எண் 18/9'. கிராமத்தில் கடன்காரனிற்கு முன் ஒடுங்கி நிற்கும் மக்கள், குழந்தைத் தொழிலாளர்களை வதைக்கும் முறுக்குக் கம்பெனி, நாயகி அம்மாவின் கதறல் சத்தம், அமைச்சரின் மறைக்கப்பட்ட முகம்... என ஒவ்வொரு காட்சியும் யதார்த்தத்தின் விளிம்பில் அமைக்கப்பட்டன. அதை உணர்த்தியதில் மக்களின் பெரும் பாராட்டுடன், தேசிய விருதையும் பெற்றது, 'வழக்கு எண் 18/9'. பின்னணி இசையில்லாத பாடல், 5D கேமராவில் ஒளிப்பதிவு என்று திரைப்படம் ஆக்கிய விதத்திலும் புதுமையை நிகழ்த்தியது, இத்திரைப்படம். மேலும், தன் படங்களில் புதுப்புது நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களை அறிமுகப்படுத்துவது பாலாஜி சக்திவேலின் தனிச்சிறப்பு.

அரசியல் சிந்தனையற்ற சமூக அக்கரையற்ற கலை, மக்களின் கலையே அல்ல என்பார்கள். அந்த வகையில், தன்னுடைய அனைத்து படங்களிலும் சமூகத்தின் மீதான அக்கறையைப் பேசிய பாலாஜி சக்திவேலை, தமிழ் சினிமாவின் இயக்குநர் என்பதைவிட, தமிழ்ச் சமூகத்திற்குத் தேவையான அத்தியாவசியக் கலைஞன் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.

பிறந்தநாள் வாழ்த்துகள் பாலாஜி சக்திவேல்!

அடுத்த கட்டுரைக்கு