Published:Updated:

“என் கணவர்தான் எனக்கு அப்பாவா நடித்திருந்தார்” - சீக்ரெட் பகிர்கிறார் 'ஜோடி' அனிலா ஸ்ரீ

மு.பார்த்தசாரதி
“என் கணவர்தான் எனக்கு அப்பாவா நடித்திருந்தார்” - சீக்ரெட் பகிர்கிறார் 'ஜோடி' அனிலா ஸ்ரீ
“என் கணவர்தான் எனக்கு அப்பாவா நடித்திருந்தார்” - சீக்ரெட் பகிர்கிறார் 'ஜோடி' அனிலா ஸ்ரீ

நான், சின்னத்தம்பி சீரியல்ல நடிக்கிற தகவல் தெரிந்து கேரளாவிலுள்ள என் தோழிகள் எல்லோரும், 'தமிழர்கள் உன்னை ஏத்துப்பாங்களா. உன்னால அங்க நிலைச்சு நிற்க முடியுமா'ன்னு கேட்டாங்க. அப்போ, நான் அவங்களுக்கு எந்தப் பதிலையும் சொல்லலை. எனக்கு தமிழக மக்கள்மீது அதிகமான நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கைதான் என்னை 'சின்னத்தம்பி' சீரியல் தாண்டி 'ஜோடி சீசன் 10' - லும் என்னை நிலைக்க வெச்சிருக்கு. தமிழ் மக்கள் என்னை இருகரம் நீட்டி வரவேற்றிருக்காங்க” புன்னகையோடு பேசுகிறார் அனிலா ஸ்ரீ.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் 'ஜோடி சீசன் 10' அரை இறுதிச் சுற்றுக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறது. விறுவிறுப்பான சுற்றுகளோடு பார்வையாளர்களைக் கிறுகிறுக்கவைக்கும் நடனத்தின்மூலம் ஒவ்வொரு போட்டியாளரும் வெற்றியின் இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்திருக்கிறார், அனிலா ஸ்ரீ. 'சின்னத்தம்பி' சீரியலில் நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் இவர், 'ஜோடி சீசன் 10' ல் பிரிட்டோ குருவோடு அசத்திக்கொண்டிருக்கிறார். 

“ஒருபக்கம் 'சின்னத்தம்பி' சீரியல்ல சென்ட்டிமென்ட்டான அம்மாவா நடிச்சிட்டு இருக்கிறேன். செட்ல எல்லோரும் என்னை அம்மான்னுதான் கூப்பிடுவாங்க. என்னதான் எல்லோருக்கும் பிடிக்கிற மாதிரி நடிச்சாலும், எனக்குப் புடிச்ச மாதிரி டான்ஸ் பண்ணணும்னு நினைச்சுட்டே இருந்தேன். ஏன்னா, நான் சின்ன வயசுல இருந்தே கிளாசிக்கல் டான்சர். அந்த ஆசைக்கு 'ஜோடி' தான் ஒரு பிளாட்ஃபார்ம் அமைச்சுக்கொடுத்துச்சு. ஆரம்பத்துல ஒருசிலர் சின்னத்தம்பியோட நண்பரா நடிக்கிற பிரிட்டோ, உங்களையும் அம்மான்னுதான் கூப்பிடுறாரு. ஸோ, 'ஜோடி' யில உங்களுக்கு கெமிஸ்ட்ரி எப்படி ஒர்க் அவுட் ஆகும்னு கேட்டாங்க. போட்டின்னு வந்துட்டா எல்லாத்தையும் ஸ்போட்டிவ்வா எடுத்துக்கணும்னு முடிவு பண்ணி களத்துல இறங்கினோம். மக்கள் எங்களை ரொம்பவே பாராட்ட ஆரம்பிச்சிட்டாங்க. அதுமட்டுமில்ல, ஜோடி செட்லயே நான் மட்டும்தான் சீனியர். மத்த எல்லாருமே 25 வயசுக்குள்ளதான் இருப்பாங்க. அதுக்கேத்த மாதிரி என் மாஸ்டர் ஆனந்த் எங்களுக்கு கொரியோகிராஃப் பண்ணி கொடுக்கிறார்.  மாஸ்டருக்குப் பிறகு என் கணவர் ஸ்ரீகுமார்தான் எனக்கு ஃபுல் சப்போர்ட். எப்போதும் என்கூடவே இருந்து எனக்கு உதவி பண்றார். போன வாரம் பறை டான்ஸ் ஆடும்போது, எனக்கு அப்பாவா அவர்தான் நடிச்சிருந்தார். நான் என்ன கேட்டாலும் எனக்காகச் செய்துகொடுக்கிற கணவர் அவர். இந்தப் பாட்டு செலக்ட் பண்ணலாம், அந்தப் பாட்டை செலக்ட் பண்ணினா நீ நல்லா பெர்ஃபார்ம் பண்ணலாம்னு சின்னச்சின்ன அட்வைஸும் கொடுப்பார். அவர் என் வாழ்க்கையில் எனக்குக் கிடைச்ச பெரிய கிஃப்ட்டுன்னு சொல்லுவேன்” என்றவரிடம், ஜோடி ஃபைனலில் நீங்கள் ஜெயிப்பீர்களா... என்றதும்,

“அது எனக்குத் தெரியலை. ஆனா, திறமைக்கு நிச்சயமா அந்த மேடையில் அங்கீகாரம் கிடைக்கும்” என்கிறார்.