Published:Updated:

அவள் அரங்கம்: ‘சின்னக்குயில்’ சித்ரா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அவள் அரங்கம்: ‘சின்னக்குயில்’ சித்ரா
அவள் அரங்கம்: ‘சின்னக்குயில்’ சித்ரா

அவள் அரங்கம்: ‘சின்னக்குயில்’ சித்ரா

பிரீமியம் ஸ்டோரி

`இந்திய சினிமாவின் மெலடி குயின்’, கேரளாவின் ‘வானம்பாடி’, கர்நாடகாவின் ‘கன்னட கோகிலே’, ஆந்திராவின் ‘சங்கீத சரஸ்வதி’ எனப் பல பட்டங்களைக் கொண்டிருப்பவர், தமிழகத்துக்கு ‘சின்னக்குயில்’ சித்ரா. குரலைப்போலவே குணத்திலும் இனிமையானவர். ‘அவள் அரங்க’த்தில் வாசகிகளின் கேள்விகளுக்கு இசைச்சாரல் பதில்களுடன் வருகிறார், 25,000 பாடல்களுக்கும் மேல் பாடி சாதனை படைத்த பாடகி சித்ரா!

அவள் அரங்கம்: ‘சின்னக்குயில்’ சித்ரா

உங்கள் இளமைக்கால இசை ஆர்வம் பற்றி...
- ஊர்மிளா நாராயணன், முசிறி


பெற்றோர் பள்ளி ஆசிரியர்கள். அப்பாவின் குடும்பத்தில் பலரும் இசைக் கலைஞர்கள். அப்பா, ஆல் இண்டியா ரேடியாவிலும் பாடிக்கிட்டிருந்தார். அக்கா, நான், தம்பினு மூணு பேருக்கும் அப்பா மியூசிக் சொல்லிக்கொடுப்பார். விடுமுறை நாள்களில், இசை ஆசிரியரான அத்தையின் வீட்டுக்குப் போகும்போது அவர்கிட்டயும் மியூசிக் கத்துக்கிட்டேன். நல்லா படிப்பேன்; மேடை நிகழ்ச்சிகள்ல பாடிப் பரிசுகளும் வாங்குவேன். எனக்குள் ஓரளவுக்கு இசைத்திறமை இருக்குனு தெரிஞ்சுகிட்ட அப்பா, எங்க ஊரில் பாட்டுச் சொல்லிக்கொடுக்கும் ஒரு பாட்டிம்மாகிட்ட மியூசிக் கத்துக்க என்னை அனுப்பினார். பிறகு, மத்திய அரசின் உதவித்தொகையில் திருவனந்தபுரத்தில் ஏழு வருஷங்கள் இசை கத்துக்கிட்டேன். ஸ்கூல் படிக்கும்போதே மேடைப் பாடகியா பிஸியாகிட்டேன்.

அவள் அரங்கம்: ‘சின்னக்குயில்’ சித்ரா

இளையராஜாவின் இசையில் முதல் பாடல் வாய்ப்புத் தருணம்..?
- பரிமளம் சிவசங்கர், ஆரணி


அப்போ கேரளாவில் எங்க வீட்டுக்குப் பக்கத்துல இருந்த தியேட்டர் ஒன்றில் பெரும்பாலும் தமிழ்ப்படங்கள்தான் ரிலீஸாகும். பெரும்பாலும் இளையராஜா சார் இசையமைத்தவை. தமிழ் தெரியலைன்னாலும் அவரின் பாடல்களை அதிகம் ரசிப்பேன். அப்போ மலையாள சினிமாக்களில் பாடிக்கிட்டிருந்தேன். இயக்குநர் பாசில் சாரின் ‘நோக்கேததூரத்து கண்ணும் நட்டு’ங்கிற மலையாளப் படத்தில் பாடியிருந்தேன். அந்தப் படத்தின் தமிழ் ரீமேக்தான் ‘பூவே பூச்சூடவா’. அதில் ‘சின்னக்குயில் பாடும் பாட்டு’ பாடலைப் பாட, குரல் தேர்வுக்கு வரச்சொல்லி ராஜா சார்கிட்ட இருந்து அழைப்பு வந்தது. அவர் பெரிய இசையமைப்பாளர்னு தெரியும். ஆனா, அவர் போட்டோவைக்கூட பார்த்ததில்லை. பயத்துடன் அவரைச் சந்திக்கப்போனேன். தியாகராஜர் கீர்த்தனைகள் சிலவற்றைப் பாடச் சொன்னார். பதற்றத்தில் பிழையுடன் பாடினேன். அதைச் சரிசெய்யச் சொல்லிக் கொடுத்தார். எதுவும் சொல்லாம, போகச் சொல்லிட்டார். அவரைச் சந்திச்ச மகிழ்ச்சியில் நானும் திரும்பிவந்துட்டேன். அடுத்த நாள் அவர்கிட்டயிருந்து பாட அழைப்பு வந்தது. ‘பூஜைக்கேத்த பூவிது’ (‘நீதானா அந்தக் குயில்’ படம்) பாடலைத்தான் அவர் இசையில் முதலில் பாடினேன். அடுத்துதான் ‘சின்னக்குயில்’ பாடலைப் பாடினேன். இந்த இரு படங்களின் டைட்டில்லயும் என் பெயர் வருவதைப் பார்க்கவே பலமுறை தியேட்டருக்குப் போய் படம் பார்த்தேன். பிறகு, ராஜா சார் மியூசிக்ல பல நூறு பாடல்களைப் பாடிட்டேன். இப்போ வரை அவரைப் பார்த்தாலும், அவர் இசையமைப்பில் பாடுறதுன்னாலும் பயம்தான். அதன் பெயர் மரியாதை!

படிப்பு..?
- தி.கல்பனா, சேலம்


ஒன்பதாவது படிக்கும் போது மலையாளத்தில் என் முதல் சினிமா பாடலைப் பாடினேன். பி.ஏ மியூசிக் படிச்சுட்டே பாடிக்கிட்டும் இருந்தேன். எம்.ஏ மியூசிக் படிச்சுட்டு இருக்கும்போதுதான், இளையராஜா சார்கிட்ட அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தன. செமஸ்டர் தேர்வுக்கு முதல் நாள், ‘சிந்து பைரவி’ படத்துல பாட அழைப்பு வந்தது. எக்ஸாம் இருக்கேனு தயங்கினேன். ஆனாலும், ராஜா சாரின் வாய்ப்பை மிஸ் பண்ணிடக் கூடாதுனு, சென்னைக்கு வந்தேன். ஒரு பாடலைப் பாடி முடிச்சதும், அடுத்த நாள் எக்ஸாமுக்காக உடனே கேரளாவுக்குக் கிளம்பத் தயாரானேன். ‘இன்னொரு பாட்டு இருக்கு, பாடணும்’னு ராஜா சார் சொன்னார். ‘பெரிய வாய்ப்பு, இதை மிஸ் பண்ண வேணாம். அரியர் எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணிடுறியா?’னு என் அப்பா என்கிட்ட கேட்டார். அப்படி நான் பாடியவைதாம் ‘நானொரு சிந்து’, ‘பாடறியேன்’ பாடல்கள். ரெண்டுமே பெரிய ஹிட். அதுக்குப் பிறகுதான் பல மொழி இசையமைப்பாளர்கள்கிட்ட இருந்தும் நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனா, எம்.ஏ மட்டும் முடிக்கவே இல்லை!

முதல் தேசிய விருது வென்ற தருணம்..?
- முல்லைக்கொடி, நாகர்கோவில்


அரேபியாவின் `ராஸ் அல் கைமாஹ்' என்ற இடத்துல நடந்த ஓர் இசை நிகழ்ச்சியில் பாடச் சென்றிருந்தேன். அப்போதான், ‘நானொரு சிந்து’ (சிந்து பைரவி) பாடலுக்காக எனக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டிருக்கு. அந்தச் செய்தியை மேடையில் பாடிக்கொண்டிருந்த ஜேசுதாஸ் அண்ணன்கிட்ட ஒருவர் சொல்லியிருக்கார். உடனே தாஸ் அண்ணன் என்கிட்ட செய்தியைச் சொன்னார். நம்ப மறுத்த நான், ‘வேறு ஒரு சித்ராவாகக்கூட இருக்கலாம், உறுதியா நம்ப முடியலை. இந்தச் செய்தியை யார்கிட்டயும் சொல்லிடாதீங்க’னு சொன்னேன். ‘சிந்து பைரவி படத்தில் பாடிய சித்ரா நீதானே?’னு அவர் என்கிட்ட உறுதிபடுத்திக்கிட்டு, அந்தச் செய்தியை மேடையிலேயே ரசிகர்கள் முன்னிலையில் சொல்லி, ஆசீர்வாதம் செய்தார். அடுத்த நாள் நியூஸ் பேப்பர்ல வந்த செய்தியைப் பார்த்த பிறகுதான் அதை நான் முழுமையா நம்பினேன். 21 வயசிலேயே தேசிய விருது கிடைச்சாலும், பெரிசா சந்தோஷப்பட முடியலை. ஏன்னா, அப்போ என் அப்பா வாய்ப்புற்று பாதிப்பில் இருந்தார். முதல் தேசிய விருதை வாங்கபோனப்போ, அவர் உயிருடன் இல்லை. என் அக்காவும் அவர் கணவரும்தான் துணையாக டெல்லிக்கு வந்தாங்க. பொதுவா என் வாழ்க்கையில எந்த ஒரு நல்ல விஷயம் நடக்கும்போதும், கூடவே ஒரு பெரிய சோகமான நிகழ்வும் நடக்கும். இப்போவரை அப்படித்தான். அதனால பெரிசா எந்த விஷயத்துக்கும் சந்தோஷப்படாம பேலன்ஸ்டாகதான் வாழ்ந்துகிட்டிருக்கேன்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அதிகமாகப் பாடியிருக்கிறீர்கள். அவருடன் பணியாற்றிய அனுபவம்...
- பிருந்தா பரசுராமன், சிதம்பரம்


எங்கள் இருவருக்கும் உள்ள ஒற்றுமை, அதிகம் பேசாத அமைதியான குணம். ரஹ்மான் சாரின் முதல் படமான ‘ரோஜா’வில் ‘ருக்குமணி’ பாடல் தொடங்கி, தொடர்ந்து அவரின் இசையமைப்பில் நிறைய படங்கள்ல பாடியிருக்கிறேன். ‘பம்பாய்’ படத்துல வரும் ‘கண்ணாளனே’ பாடல், அதில் ரொம்ப ஸ்பெஷல். அவர் இனிமையா பழகுவார்; வேலைவாங்குவார். பெரும்பாலும் இரவு நேரத்தில்தான் அவரின் ரெக்கார்டிங் நடக்கும். ‘தெனாலி’ படத்துக்குப் பாட இரவு 7 மணிக்குக் கூப்பிட்டிருந்தார். இரவு 10 மணிக்குள் என் பாடல் ரெக்கார்டிங் முடிஞ்சுடும்னு நினைச்சிருந்தேன். ரெக்கார்டிங் தியேட்டர்ல கமல்ஹாசன் சாரும் பாடலாசிரியர் தாமரை யும் இருந்தாங்க. ‘இஞ்சிரங்கோ’ பாடலில் சிங்கள மொழி வார்த்தைகள் அதிகம் இருக்கும். அதனால் இலங்கைக்குப் போன் பண்ணி பல வார்த்தைகளுக்கும் அர்த்தத்தை உறுதி செய்தாங்க. இப்படியே நேரமாகி, நான் பாடி முடிச்சு வீட்டுக்கு வரும்போது அதிகாலை 2 மணி. ஆனாலும், ஒரு பாடல் உருவாகப் பலரின் உழைப்பும் இருக்கும் என்பதற்கு அந்த ரெக்கார்டிங் நல்ல உதாரணம்.

என் வாழ்க்கையில் கலங்கி நின்ற ஒரு தருணத்தில் என் வீட்டுக்கு வந்து ரஹ்மான் சார் ஆறுதல் கூறினார். என்னால் எப்போதும் மறக்க முடியாத ஆறுதல் அது.

ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், மனோ ஆகியோருடன் அதிக டூயட் பாடல்கள் பாடியிருக்கிறீர்களே...
- கீர்த்தனா ராஜேந்திரன், மும்பை


ஆமாம்... இவங்க மூணு பேர்கூடதான் நான் அதிக டூயட் பாடல்களைப் பாடியிருக்கேன். என் ஸ்கூல் நாள்களிலேயே ஜேசுதாஸ் அண்ணன்கூட நிறைய மேடை நிகழ்ச்சிகளில் பாடினேன். பிறகு மலையாள சினிமாவிலும் அவருடன் டூயட் பாடல்களைப் பாடினேன். அப்போ அவர் பெரிய பாடகர்; நான் 17 வயசுப் பொண்ணு. ஆனாலும், என் மேல் அன்பு செலுத்தி, நிறைய ஆலோசனைகள் கொடுப்பார். ரெக்கார்டிங்ல நான் ஏதாவது தப்பா பாடினாலும், ‘ஒண்ணும் பிரச்னை யில்லை, இன்னொரு டேக் போகலாம்’னு ஊக்கப்படுத்துவார்.

‘காலம் காலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம்’தான், எஸ்.பி.பி சார்கூட நான் பாடிய முதல் டூயட். சரியான தெலுங்கு உச்சரிப்பில் பாட நிறைய உதவியிருக்கார். ஒரு பாடல் ரெக்கார்டிங் முடிந்ததும், உடனே அந்தப் பாடல் பத்தின எல்லா விஷயங்க ளையும் ஃபைல் செய்து வெச்சுப்பார். அந்த விஷயம் உட்பட, அவர்கிட்ட நிறைய நல்ல விஷயங்களைக் கத்துக்கிட்டு கடைப்பிடிச்சேன். ரெக்கார்டிங் தொடங்கும் முன்பு, ஏதாச்சும் காமெடி பண்ணி எல்லோரையும் சிரிக்க வைப்பார். அந்த உற்சாக மனநிலையால் சிறப்பா பாட முடியும்.

மனோ, எனக்குத் தம்பி மாதிரி. அவரும் நானும் ஒரே காலகட்டத்தில் ஃபீல்டுக்கு வந்தோம். ரெண்டு பேரும் அடுத்தடுத்து பல இசையமைப்பாளர்கள்கிட்ட பாடிகிட்டு இருந்ததால, நேர மேலாண்மையில் எங்களுக்குள் அன்புச் சண்டைகள் வரும். அதனால, ‘மனோ கிளம்பிட்டியா? நான் ரெக்கார்டிங்குக்குக் கிளம்பி வரட்டுமா?’னு போன்ல கேட்பேன். வீட்டில் இருந்துகிட்டே, ‘நானும் வந்துட்டிருக்கேன், வாங்க’னு சொல்லுவார். அதை நம்பி ரெக்கார்டிங் தியேட்டருக்குப் போய் நான் காத்திருக்க, அவர் நீண்ட நேரம் கழிச்சுதான் வருவார். உடனே அவர்கூட செல்லமா சண்டை போடுவேன்; கிண்டல் பண்ணுவேன்.

அவள் அரங்கம்: ‘சின்னக்குயில்’ சித்ரா

சீனியர் பாடகிகளிடமிருந்து கற்றுக்கொண்ட விஷயங்கள்..?
- ஆர்.கமலா தேவி, பாலக்கோடு


பி.சுசீலா அம்மா, எஸ்.ஜானகி அம்மா, வாணி ஜெயராம் அம்மா, எல்.ஆர்.ஈஸ்வரி அம்மா... இவர்களின் பாடல்களைப் பாடிப் பயிற்சி எடுத்துதான் என் இசைத்திறனை பலப்படுத்திகிட்டேன். நால்வருமே என்கிட்ட மகள்போல அன்பு காட்டுவாங்க. ஜானகி அம்மா பாடிய நிறைய பாடல்களை மேடை நிகழ்ச்சிகள்ல பாடி சந்தோஷப்படுவேன். அவங்க வீட்டுக்குப் போனால், திரும்பி வரவே மனம் வராது. என் சொந்த அம்மாவுக்கு இணையான அன்பை அவங்கமீது வெச்சிருக் கேன். அவங்க அளவுக்கு என்னால பாட முடியாது. நிறைய நுணுக்கங்களுடன் அசால்ட்டா பாடிட்டுப் போயிடுவாங்க. என் ஆரம்பக்கால மேடை நிகழ்ச்சிகளில் நுணுக்கங்களுடன் பாடக் கூச்சப்படுவேன். அதையெல்லாம் சரிசெய்ய ஜானகி அம்மா பெரிதும் உதவினார்.

நீங்கள் தமிழ் கற்றுகொள்ளப் பாடலாசிரியர் வைரமுத்து உதவினாராமே?
- ராணி மேரி, தேனி


நான் மலையாளி என்பதால், தமிழ் சினிமாவில் பாடத் தொடங்கிய ஆரம்பக் காலத்தில் தமிழ் பெரிதாகத் தெரியாது. ரெக்கார்டிங் நேரத்தில் வைரமுத்து சாரும் இருப்பார். எனக்குத் தமிழ் உச்சரிப்பு முறைகளைச் சொல்லிக்கொடுப்பார். ஒருநாள், சுசீலா அம்மாவின் பாடல்கள் அடங்கிய சி.டி-யை எனக்குக் கொடுத்து, ‘சுசீலா அம்மாவின் உச்சரிப்பு சிறப்பா இருக்கும். இந்தப் பாடல்களையெல்லாம் கேளுங்க. பின்னர் அவற்றையெல்லாம் சரியான உச்சரிப்புடன் உங்க குரலில் பாடி அதை ஒரு சி.டி-யா எனக்குக் கொடுங்க’னு சொல்லி ஊக்கப்படுத்தினார். அதன்படி என் குரலில் பாடிப் பதிவு செய்த சி.டி-யுடன், என் கைப்பட தமிழில் ஒரு நன்றிக் கடிதமும் எழுதி அவருக்குக் கொடுத்தேன். அவர் ரொம்ப சந்தோஷப்பட்டார். நான் தமிழ் உச்சரிப்புகளை முழுமையாகக் கற்றுக்கொள்ள இந்த நிகழ்வு முக்கியக் காரணம்.

பாடகியாக ஆகவில்லை எனில்?
- பார்வதி நாயர், திருவனந்தபுரம்


இளம் வயதில் இசைக் கற்றுக்கொள்ளும் போதே, இசைத்துறைதான் என் கரியர்னு முடிவு பண்ணிட்டேன். எதிர்காலத்தில் இசை ஆசிரியர் ஆகணும்னுதான், கல்லூரியிலும் மியூசிக் கோர்ஸைத் தேர்ந்தெடுத்தேன். எதிர்பாராத வகையில், பின்னணிப் பாடகி யானேன். பாடகி ஆகலைன்னா, நிச்சயம் இசை ஆசிரியையாகியிருப்பேன்.

அதிக சிரமத்துடன் பாடிய சில தமிழ்ப் பாடல்கள்?
- கி.மணிமாலா, தாம்பரம்


‘நான் ஒரு சிந்து (சிந்து பைரவி)’, ‘தத்தித்தோம் (அழகன்)’, ‘ஒரு தாலி வரம் (புருஷ லட்சணம்)’... இப்படி நிறையப் பாடல்கள் உண்டு.

மகள் நந்தனாவின் நினைவுகள், மறக்க முடியாத பாராட்டு, பிஸியான பாடகியானதால் இழந்த விஷயங்கள், குரல் வளத்துக்கான சீக்ரெட், எதிர்கால இலக்கு உள்ளிட்ட பல கேள்விகளுக்கும் சித்ரா பதில் இசைக்கிறார்...

அடுத்த இதழில்!

கு.ஆனந்தராஜ்,  படங்கள் : பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு